துள்ளலாக போய்க்கொண்டிருக்கும் காதல் கதையில் படத்தின் முதல் அரை மணிநேரத்திலேயே ஹீரோ கொல்லப்பட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சி இல்லை என்பதே ஒரு அதிர்ச்சி தான். ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஈ இனிமேல்தான் வரப்போகிறது என்பதால் சிலர் கை தட்டுவதைக் கூட கவனிக்க முடிந்தது.
பென்சிலை சீவும் பெண் சிலையாக வரும் சமந்தா சிறிய புன்னகைகளில் வசீகரிக்கிறார். சமந்தா போல ஒரு தேவதைக் கவர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அனைத்தையும் அழகாகச் செய்கிறான் நம்ம ஹீரோ. குட்டி குட்டி குறும்புகளில் பட்டையைக் கிளப்புகிறார். அவனுக்கு வரும் முதல் பிளான்க் எஸ்.எம்.எஸ். அதற்கு அவனது ரீயாக்சன்.. இதுதாண்டா யதார்த்தப் படம் என சொல்ல வைக்கிறது. நமது மனம் பட்டாம்பூச்சியாகப் பறக்கிறது
சின்ன சின்ன வெற்றிகளை அடுத்து, நமது ஹீரோ அந்த தேவதையின் மனதை முழுவதும் வெல்லும் நேரம். சட்டென கொல்லப்படுகிறான். அங்கே முடிகிறது காதல் கதை.
அப்புறம் ஈ கதை.
...........
உண்மையில் எனக்கும் அந்த முதல் அரைமணிநேர கதையின் முடிவு திருப்தியே. ஆனால் அது அடுத்து வரும் ஈ-யை எதிர்பார்த்து இல்லை.
தேவதையின் மனத்தைக் கொள்ளைகொண்ட பிறகு அவன் செய்யக்கூடியது என்னவாக இருந்திருக்கும்? கடலை போடுவதும், ஏன் பேசவில்லை என்று தினமும் சண்டை போடுவதும் அல்லது கல்யாணம் செய்து அவளை சமைக்க வைத்து சாம்பார்சாதம் சாப்பிடுவதும் தானா?
இதற்கு எதற்கு தேவதையும் ஹீரோவும். எல்லா சாமானியர்களும் செய்வது இதைத் தானே?
இதற்கு எதற்கு தேவதையும் ஹீரோவும். எல்லா சாமானியர்களும் செய்வது இதைத் தானே?
தேவதைகளை அறிந்தவர்களுக்கும், தேவதையாக இருந்தவர்களுக்குமே இது தெரியும், ஒரு தருணத்தில் தேவதையும் ஹீரோவும் சட்டென சாதாரண மனிதர்கள்ஆகிறார்கள். நினைத்தை அடைந்த மகிழ்ச்சியும், ஏதோவொன்றை இழக்கும் சோகமும் ஒன்றுசேரும் மாய கணம் அது.
இந்தப்படத்தில், அந்த இடத்தில் காதல் கதை சட்டென முடிகிறது, நிறைவாக.
.....
சினிமாவில் தான் எவ்வளவு வசதி நினைத்த நேரத்தில் முடித்துக்கொள்ள முடிகிறது. வாழ்க்கையை அப்படி எல்லோருக்கும் முடிவதில்லையே.