Unordered List

02 ஆகஸ்ட் 2020

ஆலன் டூரிங் - ஒரு விதியும் ஒரு சட்டமும்

டூரிங் விதி (turing test) என்ற பதத்தை இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பயன்பாடு நீங்கள் அனைவரும் உணராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. நாடுகளின் பாதுகாப்பில் இருந்து நாம் தினமும் எடுக்கும் செல்பி வரை செயற்கை அறிவு இல்லாத இடமே இல்லை என்ற நிலையில் அந்த செயற்கை அறிவுத் துறையின் தந்தை எனப்படும் ஆலன் டூரிங் உருவாக்கியது அந்த டெஸ்ட். செயற்கை அறிவுத்துறையின் வளர்ச்சியில் முக்கியமானது இது.

மனிதர்களை விட எந்திரங்கள் சிறப்பாக செயல்படும் இடங்கள் பல இருந்தாலும், அது வெறும் எந்திரச் செயல்பாடுகளாகவே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் செயற்கை அறிவு நிரல் மனிதரைப் போல செயல்படுவது தான் சாதனை. சமீபத்திய deep fake புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்து இது உண்மையான மனிதர் தானா என்ற திகைப்பை உருவாக்கியதும், சமீபகாலமாக வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் மறுமுனையில் நமக்கு பதில் அளிப்பவர் மனிதரா அல்லது செயறகை அறிவு நிரலியா எனத் தெரியாமல் நாம் உரையாடுவதும் இதில் வெளிப்படையாகத் தெரியும் சில விஷயங்கள்.


Deep fake. (பேசுவது யார், ஒபாமாவா?)

இதற்கான முதல்  சிந்தனையை உருவாக்கியவர் ஆலன் டூரிங். ஒருவர் ஒரே கேள்வியை ஒரு மனிதரிடமும் ஒரு கணிப்பொறியிடமும் கேட்கும்போது கணிப்பொறியின் அந்தப் பதில் மனிதரைப் போல இருந்தால் தான் அந்த செயற்கை அறிவு நிரல் டூரிங் டெஸ்ட் தகுதி பெறுகிறது. இன்றைய செயற்கை அறிவின் சாதனைகளுக்கு அது ஒரு முன்னோடி சிந்தனை. அதாவது கணிப்பொறி நிரையை மனிதராக்கும் முயற்சி.

டூரிங் விதி




    ஆலன் டூரிங்
 
ஆலன் டூரிங் தற்கொலை செய்துகொண்டபோது அவருக்கு வயது 41 தான். இவ்வளவு பெரிய சாதனையாளரின் தற்கொலைக்குக் காரணம் கணிப்பொறி நிரலுக்கு மனிதத்தை சிந்தித்த அவருக்கு அரசுகளின் சட்டங்களில் மனிதத்தை காணமுடியாமல் போனது  என்பது தான் நகை முரண்.

ஆலன் டூரிங் இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர். அவரின் பெரும்பாலான சாதனைகள் அவர் வாழும் காலத்தில் வெளியில் தெரியாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா (Enigma machine) என்ற மெஷினை டீகோட் செய்த அவரின் சாதனை அரச ரகசியம் என்பதால் தான்.

இரண்டாம் உலகப்போரில் கூட்டணிப் படைகள் ஜெர்மனியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது அவரது இந்தப் பணி. The Imitation Game என்ற பெயரில் அவரின் இந்தப் பணி இந்தத் திரைப்படத்தில் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க்கிறது, இந்தத் திரைப்படத்தில் அவரது தன்பால் ஈர்ப்பு சரியாக சொல்லப்படவில்லை என்ற விமர்சனமும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவரது கதை அதோடு முடிவதில்லை.


   

உலகை ஜெர்மனியிடம் இருந்து காப்பாற்றிய ஒரு போர் நாயகன், செயற்கை அறிவுத் துறையின் தந்தை, பொது கணிப்பொறியியலின் முன்னோடி என சாதனைகள் இருந்தாலும் அவர் ஒரு ஒருபாலின சேர்க்கையாளராக இருந்தது இங்கிலாந்தின் அப்போதைய சட்டப்படி குற்றமாக இருந்துள்ளது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கட்டாய கெமிக்கல் ஆண்மை குறைப்பு சிகிச்சை அளிப்பட்டு மனம் மற்றும் உடல் இரண்டும் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் 1954ல்  தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கான மனிதபிமான பார்வை கிடைக்காமலேயே தனது 41 வயதில் அந்தச் சாதனையாளர் அரச/சட்ட கெடுபிடியில் சிக்கி மரணத்தை நோக்கி சென்றிருக்கிறார். 

கணிப்பொறி என்ற கருத்து அவருக்கு முன்பே உருவாகியிருந்தாலும், இன்று நாம் பயன்படுத்தும் ப்ரோகிராம் செய்யப்படக்கூடிய,  எல்லா வேலைகளையும் செய்யும் (General purpose computing) கணிப்பொறி உருவாக்கத்தை இவர் தான் டூரிங் எந்திரம் (Turing Machine) கருதுகோள் வழியாக உருவாக்கினார்.  அதன்பின் செயற்கை அறிவுத்துறையின் சிந்தனையை வடிவமைத்த டூரிங் விதி, மற்றும் பையோடெக் துறையில் morphogenesis  என அவரது சாதனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவுத்துறைகளின் முதல் சிந்தனைகளாக அமைந்திருந்தன.

இப்படி இருந்தும் அவர் வாழும் காலத்தில் அவருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய புகழ் கிடைக்காமல் போனதற்குக் காரணம் அவர் செய்த தவறுகள் எவையும் அல்ல, ஆனால் அவர் தன் அரசுக்காக எனிக்மா விஷயத்தில் செய்த சாதனையால் உருவான ரகசியத்தன்மை தான் காரணம், நாட்டின் நன்மைக்காக அதை ஏற்றுக்கொண்ட அவருக்கு இத்தனைக்கும் பிறகும் அதே கெடுபிடி அவரின் அவமானத்துக்கும் மரணத்துக்கும் இட்டு சென்றிருக்கிறது. அவரது ஒருபாலின விருப்பம் அப்போதைய சட்டப்படி குற்றம் தான் என்றாலும் எந்திரத்தனமான நீதி முறை தான் இந்த முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அவருக்கு இழைப்பட்ட இந்த அநீதி ஒரு கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் முன்னெடுக்கும்வரை கவனத்துக்கு வராமல் இருந்தது. ஜான் கிரஹாம் கமிங் என்ற அந்த ப்ரோகிராமர் ஒரு ஆன்லைன்ட் பெட்டிஷன் உருவாக்கி மக்கள் மற்றும் மீடியாக்களின் கவனம் பெற்று அரசின் இதயத்தை நெருங்கினார். மீடியாக்களும் இதை புரிந்துகொண்டு கவனப்படுத்த மக்களின் பெரிய ஆதரவு கிடைத்தது.

மீடியா கவனமும் மக்கள் ஆதரவும் 


இதன் விளைவாக 2009ல் இங்கிலாந்து பிரதமர் கார்டன் ப்ரவுன் (Gordon Brown )அரசு சார்பாக ஆலன் டூரிங்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். 

அந்தக் குற்றத்தால் அப்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தவ்ர்களை மன்னிக்கும் விதமாக அரசு 2017ல் ஒரு சட்டம் இயற்றியது, அந்தச் சட்டத்தின் பெயர் ஆலன் டூரிங் சட்டம்.  

இவருக்கு நடந்தது வரலாற்றில் அநீதி என்றால் இன்றைய நிலையில் இப்படிப்பட்ட மனிதம் இல்லாத அநீதிகள் நடக்க சாத்தியங்கள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். உலகமெங்கும் கொரானா பரவியிள்ள இந்த நிலையில், அரசுகள் மேலும் தொழில்நுப்டம் வழியாக கண்கானிக்க முயலும் இந்த நேரத்தில் பல முடிவுகள் மனிதர்களே இல்லாமல் தன்னியங்கி முறை மூலம் நடப்பது அதிகரித்து வருகிறது. இது போன்ற முடிவுகளில் மனிதர்களின் தலையீடு இருக்கவேண்டும் எனவும் இவற்றில் தனிமனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.  

மனிதர்கள் இல்லா முடிவுகள்

வங்கிகளில் கடன் கொடுப்பதில் இருந்து, பங்குச்சந்தை, வேலைவாய்ப்பு, தீவிரவாத கண்காணிப்பு, நீதி பரிபாலனம் வரை செயற்கை அறிவின் பயன்பாடுகள் வளர்ந்து வருகின்றது, இவற்றில் மனிதர்களின் பங்கு குறைந்து வருகிறது. இன்றைய போர்க் கருவிகளின் முன்னேற்றத்தில் அடுத்த போரை முடிவு செய்வதும் நிகழ்த்துவதும் எந்திரங்களாக இருக்கக்கூடும் (autonomous war ) அப்போது மனிதத்துக்கு என்ன இடம், இவரைப்போன்ற இன்னும் எத்தனைபேர் இதற்கு பலியாகக்கூடும் என்ற கேள்விகளும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கும் ஆலன் டூரிங் பதில் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.


ஆலன் டூரிங் உருவாக்கிய டூரிங் விதி  (Turing test) செய்றை அறிவை உருவாக்கத்தில் பாய்ச்சலை உருவாகியது என்றால் இறந்த பின்னரும் அவரால் உருவான ஆலன் டூரிங் சட்டம் (Alan Turing Law),  அவருக்கான நீதி என்பதோடு நிற்காமல் சட்டம் என்பது மாறக்கூடியது,  சட்டமோ, தொழில்நுட்பமோ அது மனிதத்தோடு அணுகப்படும்போது தான் அது உருவாக்கப்பட்ட உண்மையான இலக்கை அடையும் என்ற அறத்தின் குரலாக ஒலிக்கிறது. 






தொடர்புடைய வீடியோ:





சமீபத்தில் மன்செஸ்டர் சென்றபோது கவனித்தது..


வழக்கமான மான்செஸ்டர் தேனியுடன்

ஆலன் டூரிங் தனது தன்பாலின விருப்பத்துகாக தண்டனை அளிப்பட்ட அதே மான்செஸ்டர் நகரம் இப்போது அந்த விருப்பத்தில் பெருமை கொள்வதாக கொண்டாடுகிறது என்பது மதிபீடுகளும் சட்டங்களும் எப்படி மாற்றத்துக்க வாய்ப்புள்ளவை என்பதன் சாட்சியாக இருக்கிறது



கொண்டாடும் மான்ஸெஸ்டர்


08 ஜூலை 2020

அல்காரிதத்தில் அர்ஜுனன்

கலைகளில் கணினி பயன்பாடு என்பது கணிப்பொறி அறிமுகமாதில் இருந்து வரும் விவாதம் என்றாலும் அதன் பயன்பாடு தொகுத்துக்கொள்ள உதவுகிறது என்ற அளவில் தான் இருக்கின்றது. பல புத்தகத்த் தொகைக்குப் பதிலாக கூகிளில் தேடுவதும் பேப்பருக்கு பதிலாக கணினியில் எழுதுவதும் கணினியின் உதவிதான். இருந்தாலும் அது புதிய சிந்தனைகளைத் தரமுடியுமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டுதான் இருக்கின்றது.

செயற்கை அறிவு சார்ந்த முன்னேற்றத்தில்,  துறை சார்ந்த செயற்கை அறிவில் குறிப்பிட்டதக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் இவற்றுக்கு மனிதருக்கு இருக்கும் பிரஞ்ஞை இல்லை. அவற்றுக்கு பிரஞ்ஞை உருவாக்குவது சாத்தியமா, அப்படி நடந்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது இப்போது பிரபலமான விவாதமாக இருக்கின்றது. சமீபத்தில் பார்த்த வேஸ்ட் வேர்ல்ட் தொடர் இந்தப் பிரச்சனையை அழகாகக் கையாண்டுள்ளது.




இன்று படித்த ஒரு சிறுகதை இன்னும் முக்கியமானது கனடாவைச் சேர்ந்த நாவலாசிரியரான Stephen Marche, இந்தக் கருவில் ஒரு சிறுகதை எழுதியுள்ளார். ஆனால் அந்தக் கதையை எழுத உதவியது ஒரு செயற்கை அறிவு மென்பொருள். 

இந்தக் கதை, அறிவியல் கட்டுரைகளை வெளியுடும் மிக முக்கியமான தளமான MIT Technology Review என்ற தளத்தில் வந்துள்ளது. அதனால் இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.



 

எழுத்தாளரின் படைப்பு என்பது அவரது அனுபவம் மற்றும் வாசிப்பில் இருந்து வருவதென்றால் ஒரு செயற்கை அறிவு நிரலுக்கு இதுவரை வெளிவந்துள்ள மீபுனைவு கதைகளின் தொகுதிகளைக் கொடுத்து அதனிடம் புதிய சிந்தனையை பெரும் முயற்சி இது. அந்தக் கதையின் தலைப்பு கிருஷ்னனும் அர்ஜுனனும்.

இவை வெறும் பெயர்களாக மட்டும் இல்லாமல் அர்ஜுன் என்பது கிருண்னன் எழுதிய ஒரு மென்பொருள் நிரல் என்று இந்தக் கதையில் வருகிறது. கிருண்னனின் சிந்தனையின் விளைவு அர்ஜுனன் என்பது சுவாரஸ்யமான கருவாக இருக்கின்றது. 

எழுத்தாளர் ஜெயமோகனுடன் இந்தவாரம்  வெண்முரசு நிறைவு விழாவை முன்னிட்டு நடந்த சந்திப்பின்போது ஒரு கேள்விக்கு பதிலில் மகாபாரத சிந்தனை அரசுகள் நிலையில் இல்லாமலிருந்தாலும் gross root level ல் இந்தியாவில் பல்லாண்டுகாலமாக இருப்பதை குறிப்பிட்டிருந்தார். அது இந்தியாவையும் தாண்டி அறிவுலக சிந்தனையில் இருப்பதையே இது காட்டுகிறது. 

இந்திய அறிவுலகத் தொகுப்பாக இருக்கும் வெண்முரசு கொண்டாட்ட சமயத்தில் உலகத்தின் அத்தனை மீபுனைவு சிந்தனைகளின் இருந்து உருவான ஒரு கதைக்கு கிருண்னனும் அர்ஜுனனனும் என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.








03 ஜூலை 2020

சீனாவின் உலகப்போர்

சமீபத்திய இந்திய சீன எல்லைப் பதற்றம் உருவாவதற்கு முன்னரே அமெரிக்க சீன வியாபாரப் பதற்றம் நடந்துகொண்டிருந்தது . அந்தப் பிரச்சனை கொரானாவிலும் தொடர்ந்தது, அமெரிக்க அதிபர் "சைனா வைரஸ்" என்று சொன்னது பெரிய சர்ச்சையானது. அதற்கான எதிர்ப்பு இந்தியவில் கூட உருவானது.

இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கது. கொரானா சீனாவில் இருந்தவரை அது வெறும் தகவலாக இருந்தது. ஆனால் அமெரிகாவிலும் இத்தாலியும் இறப்புகள் நடக்க ஆரம்பித்ததும் தான் இந்திய மக்கள் உண்மையில் பயப்பட ஆரம்பித்தனர். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மரணங்கள் நடந்தபோது இந்தியாவிலுல் பாதிப்பு வரத்தொடங்கிவிட்டது என்பது ஒரு காரணம் என்றாலும், இன்னும் முக்கியகாரணமாக நான் நினைப்பது நாம் சீனாவில் இருந்து வரும் செய்திகளை அப்படியே நம்புவதில்லை என்பதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிந்து வரும் செய்திகளை நமது மனம் நம்புகிறது என்பதும் தான். இந்த மனநிலை ஏன் இருக்கிறது என்பதை  இந்த நாடுகளைத் தொடர்ச்சியாக இவற்றை கவனித்து வருபவர்கள் உணர முடியும்.

இப்போது சீனா இந்திய எல்லைப் பதற்றம் உருவாயுள்ளதான் கொரானாவால் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நமக்கு இன்னொரு அடியாக இருக்கிறது.  உலகமே கொரானோவோடு போராடிக்கொண்டிருக்கும்போது இந்தியா மட்டும் தான் கொரானாவோடு போராடுவதோடு அதை உருவாக்கிய (உருவான) நாட்டோடும் போரடவேண்டிருக்கிறது என்பது இன்றைய நிலையாக இருக்கிறது.

இந்த சமயத்தில் நமக்கு வரும் செய்திகளுக்கும் பல மாறுபட்ட கோணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அரசு தரப்பு செய்திகளும் மோடியின் கருத்தும் பலத்த விமர்சங்களை சந்தித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையானது தான். ஆனால் இவற்றில் எதை நாம் நம்புகிறோம் என்பது முக்கியமானது. நண்பர்கள் பலரும் இன்றைய நிலையில் சீனாவில் க்ளோபல் டைம்ஸ் பத்திரிகை படித்து கருத்து உருவாக்கிக்கொள்வது கவனிக்க முடிகிறது.



போர் நேரங்களிம் முழு ஒளிவுமறைவற்ற செய்திகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், இந்த மோதலில் இந்திய தரப்பில் உயிர்நீத்த ராணுவவீரர்களின் விபரங்கள் புகைப்படங்களுடம் வெளிவந்துவிட்டன. ஆனால் சீன தரப்பில் என்ன ஆனது என்று சீனா சொல்லப்போவதில்லை என்பது ஆச்சர்யம்ல்ல, நாமும் எதிர்பார்க்கப்போவதில்லை என்பது தான் ஆச்சர்யம்.

ஆம் சீனா அப்படித்தான் இருக்கும், கோரோனா கூட சீனாவில் இருந்தவரை அது எப்படிப்பரவுகிறது என்று கூட வெளியேசொல்லாமல் சீனா மறைத்ததையும் அதனால் அது பல நாடுகளுக்கு பரவியதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் நாம் அதை நோக்கி அமெரிக்கா "சீன வைரஸ்" என விமர்சனம் வைத்ததும் அதை கடுமையாக எதிர்தோம் என்பதும் இதே நோக்கில் தான்.

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு மதிப்பீடுகள் கொண்டவை அவை அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் சரியாக இருக்கும். ஆனால் போர் என்பது இன்னொரு நாட்டோடு நடப்பது அங்கும் இந்த நிலைப்பாட்டைக் கொண்டு வருவது சரியல்ல. போர்த்தளவாடங்கள் வாங்குவது நமக்குப் பிடித்தது என்பதை விட எதிரியைப்பொருத்தது என்பதை நாம் அறிவோம் இல்லையா.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இன்ந்நிலையில், உள்ளூர் விவகாரங்களுக்கும் வெளிநாட்டுடன் தொடர்புடைய விவகாரங்களுக்கும் இருக்கும் இடைவெளி குறைகிறது. ஆனால் இவற்றில் தெளிவாக இருக்கவேண்டியது மிக முக்கியம். உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ளூர் வழியில் செல்வது நல்லது என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடம் உருவாகியுள்ளது நல்ல விஷயம் அதே சமயம், இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உலகலாவியவை இவற்றுக்கு உலகலாவிய தீர்வு மட்டுமே சாத்தியம்.  நமக்கு நல்ல காற்று வேண்டுமானால் நமது கார் மட்டும் புகையில்லாமல் இருந்தால் முடியாது நமது ஊரில் அனைத்துக் கார்ககளுக்கும் மாசுக்கட்டுப்பாடு வைக்கிறோமே அதுபோல.

தகவல் தொழில்நுட்பம், நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள், வேலைவாய்ப்பு எல்லாம் இப்படிப்பட்ட உலகலாவிய பிரச்சனைகள் தான் அதை இப்போது வந்துள்ள கொரானா இன்னும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சமீபகாலமாக பலம் அதிகரித்து வருவது வெளிப்படை என்றாலும் அதன் சர்வாதிகார முகத்தை நாடுகள் இப்போது வெளிப்படையாக பார்க்க ஆரம்பிததிருக்கின்றன.

கொரானா வைரஸ் உலகத்தையே முடக்கியிருந்தாலும் அதில் ஜனநாயக நாடுகள் அதிகம் பாதிப்படைந்ததையும் பார்துகொண்டிருக்கிறோம். சீனாவின் பாதிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் சிறியது. இது மட்டுமல்லாமல் அமெரிக்காவிடம் வெளிப்படையான வியாபார போர், மேலும் பல ஐரோப்பிய நாடுகளில் வர்த்தகப் போர் என இருக்கும் சீனாவுடன் இந்தியா நேரடியான எல்லைப் போரில் ஈடுபடுகிறது.

ஐரோப்பா மீது நமது வலராற்றில் பல குற்றச்சாட்டுகள் உண்டு, ட்ரம்ப் நடவடிக்கைகள் மீது நமக்கு விமர்சனங்கள் இருக்காலாம், நம் நாட்டு மோடியின் அரசியில் மீது ஒவ்வாமை இருக்கலாம்.  அதை நாம் மிக காத்திரமாக முன்வைக்கலாம். ஆனால் ஒவ்வாத கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிந்ததற்காக மக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் நாடுகளுக்கும், தனது மக்களுக்குக்கே உண்மையைச் சொல்லாத சீனா போன்ற நாடுகளையும் புறங்கையால் தள்ளுபவற்களுக்கே அந்தத் தார்மீகம் இருக்கமுடியும். அவற்றின் இந்த நடவடிக்கைகளை ஒரு சொல் ஆதரித்தாலும் ஜனநானக நாடுகளை விமர்சிக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.

இங்கு ஜன்நாயக நாடுகளை மட்டும் விமர்சிப்போம் மற்ற நாடுகளை அவை சொல்லும் செய்தியை நம்பி அமைதியாக இருப்போம் என்பது பொருந்தாது ஏனெனில் இவை உள்ளூர் விவகாரங்கள் அல்ல உலகலாவிய பிரச்சனை

இன்று சீனா இப்போது ஜனநாயக நாடுகளுக்கு இந்த உலகாவிய பிரச்சனைகளில் முதலாவதாக இருக்கிறது.

15 ஜூன் 2020

சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் யுத்தம்

பொதுவாக மக்கள் அதிகம் பேசுவது அரசியலும் சினிமாவும். மக்களிடம் இவை பேச எளிது என்பதால் சமுதாயத்தில் உரையாடலுக்கு இவற்றின் கொடை மிகப்பெரியது. ஆனால் ஒன்று கவனம் கொள்ள வேண்டும், பொதுவாக மீடியாவில் உருவாக்கப்பட்ட கருத்துகளையும், கடந்த ஓரிரு நாட்களில் பரபரப்பாக இருக்கும் விஷயங்களையும் மட்டுமே பேச வேண்டும். உங்களுக்கு என்று தனியாக ஒரு கருத்து இருந்தால் அவற்றை பேசுவது புயலுக்கு முன்னால் பொறிகடலை சாப்பிடுவது போல. மீடியா உருவாக்கும் புயலுக்கு முன் நாம் தனியாகப் பேசுவது என்றும் செய்யக்கூடாதது.

அப்படி கருத்து சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் தனது அனுபவம் தனது வாசிப்பு என்று பேசுவதும் எழுதுவதும் நல்லது ஏனென்றால் மக்களுக்கு மீடியா செய்திகள் இவற்றில் இல்லாததால் நாம் பேசுவதை கவனிக்க கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்போது சென்னைவாசிகளுக்கு தங்கள் அனுபவங்களைச் சொல்வதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கோவிட் புயல் சீனா, டெல்லி என பல மையங்களைக் கடந்து சென்னையை மய்யம்கொண்டுள்ளது, பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஊடுருவிய இருபதாயிரம் பேர் என சன் டிவி பரபரப்பு செய்தி ஒளிபரப்புகிறது. சென்னையில் இருந்து மூன்று மாதத்துக்கு முன் வந்தவர்கள் கடைக்கு வரதீர்கள் என கடைகளில் அறிப்புகள் தொங்கவிடப்படுகின்றன. பல கிராமங்களில் சென்னை மக்கள் மீது கடும் வெறுப்பு உருவாகியுள்ளது.



சென்னையை செய்திச் சேனல்கள் சார்ஜ் எடுத்துக்கொண்ட இந்நிலையில் சென்னையில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி என்ன சொல்வது என்ற சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆர்வத்துடனும் அக்கறையுடனும் வெளியூர்களில் இருந்து கேட்பவர்களிடம் என்ன சொல்வது. மீடியா சொல்வதை திரும்ப நாம் சொல்வோம் என்று எதிர்பார்க்கும் மக்களிடம் அதற்கு மாறாக சென்னால் ஏமாற்றம் அடைவதோடு அதை அவர்கள் நம்பவும் தயாராக இருப்பதில்லை.  அவர்கள் படித்த பார்த்த செய்திகளை ஆமோதிக்கும் வகையில், ஆமாங்க எங்க பக்கது தெருவுல அதே மாதிரி என்று ஒரு கூடுதல் தகவல் சொன்னால் மட்டுமே நிறைவாக இருக்கும் அந்த உரையாடல்.

இது எப்போதுமே இப்படித்தானா என்றால் இதற்கும் ஒரு விதிவிலக்கு இருந்தது. அது சென்னை வெள்ளம்.

இந்த கான்டெக்ஸ்டில் சென்னையின் பொற்காலம் என்றால் அது சென்னை வெள்ளம் தான். அந்த நேரத்தில் மீடியா கிட்டத்த செயலிழுந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் எல்லாம் கண்டுகொள்ளாத நிலையில் சென்னையைப் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு இருந்த ஒரே சோர்ஸ் சென்னை மக்கள் தான். அப்போது சென்னையைப் பற்றி சென்னை மக்களே சொல்லமுடிந்த ஒரு நிலை இருந்தது. அப்போது நம்மால் சொல்ல முடிந்தது, சென்னை என்பது மிகப்பெரிய பகுதி. ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கியபோது கோடம்பாக்கம் போன்ற இடங்களில் பவர்கட்கூட இல்லாத பகுதிகள் இருந்தன என்றெல்லாம்.

அரசு கூட அவ்வளவாக செயல்படமுடியாத நிலையில் மக்கள் காட்டிய மனிதாபிமான முகம் ஆச்சர்யமானது. பண உதவி, செய்திகளை கொண்டு செல்லும் உதவி எல்லாம் தாண்டி பலர் தங்கள் வீடுகளில் கூட அடைக்களம் கொடுத்தது எதிர்பாராதது. அவை மீடியாக்களால் பெரிதும் சொல்லப்படாதவை.

இயல்புநிலை திரும்பி பத்திரிகைகள் நிகழ்வுகளைச் சொல்லும் பொறுப்பெடுத்துக்கொண்டதும், மக்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்காமலாகினர் என்பதும், அப்படியே அந்த மனிதாபிமான முகங்கள் மாயமாக மறைந்ததும் வரலாறு. பத்திரிகைகளின் பணி வரலாற்றில் மிக முக்கியமானது தான் என்றாலும் அவையும் வழக்கமான லாபமீட்டும் தொழில் என்பதும்,  முன்னணி செய்தி நிறுவங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதும் கவனிக்கத்தக்கது. அவற்றை விட மனிதர்கள் நேரடியாக அறிவதை விட மூன்றாம் நபர் மூலம் அறிவதை விரும்புபவர்கள் என்பதும் முக்கியமானது.

இயற்கை கொடுக்கும் சோதனைகள் ஒவ்வொருமுறையும் வெவ்வேறானவை, ஒருமுறை பயன்படுத்திய முறைகள் மற்றோருமுறை பயன்படுத்த முடியாதவை. அவற்றை நாம் ஒவ்வொருமுறையும் ஒவ்வொருமாதிரி எதிர்கொள்ள வேண்டும். ஆனால் எப்போதும் மாறாதது மீடியாவின் பரபரப்பு. எனவே சென்னைவாசிகள்  இந்நிலையைப் பற்றி பேச நேரம் இருக்கிறது, மீடியா வெளிச்சம் அடுத்த விஷயத்துக்கு செல்லும்வரை சென்னை மக்கள் நெட்பிளிக்க்சஸுக்கு மாறுவதாக செய்திகள் வருகின்றன.




13 ஜூன் 2020

இரு 'முதல்வன்'கள்

முதல்வன் படத்தின் தெலைக்காட்சி பேட்டி காட்சி இன்றும் மறக்க முடியாதது. அதே போன்ற ஒரு காட்சி சமீபத்தில் வந்த ஒரு விஜய் சேதுபதி படத்தில் கூட முயற்சி செய்திருப்பார்கள். சினிமாவை மீறி பல டிவி பேட்டியாளர்களுக்கு அப்படி ஒரு பேட்டி எடுப்பது இன்னும் கனவாக இருக்கிறது, இன்றைய யுடியூப் காலத்தில் கூட பேட்டி எடுப்பவர்களின் உடல்மொழியில் அந்தக் காட்சியின் சாயலைக் காண முடியும். ஆனால் அந்தக் காட்சியில் அர்ஜூனின் உடல்மொழி ரபி பெர்னாடின் உடல்மொழியின் சாயலில் இருந்தது. 

தமிழ்நாட்டில் தனியார் டிவிக்கள் வந்த புதிதில் உருவான ஆளுமையான ரபி பெர்னாட், நிதானமான குரலில் அறிவார்ந்த முறையில் பரபரப்பான பேட்டி எடுப்பவராக இருந்து, தனியாக ஒரு டிவி சேனல் ஆரம்பிக்கும் அளவுக்கு பிரபலமானவராக இருந்தார். அதன் பின் அவரது பயணம் ஜெயா டிவி, அதிமுக எம்பி என மாறி பரபரப்பில் இருந்து விலகிவிட்டார்.




சேட்டலைட் என்று தொடங்கிய தனியார் ஊடகங்கள் இன்று யுடியூப் வழியாக இன்னும் விரிவடைந்திருக்கிறது. இன்று வருபவர்கள் பின் தொடர இன்று இரண்டு ஆளுமைகள் அதாவது இரண்டு முதல்வன்கள் நம்முன் இருக்கின்றார்கள், ஒன்று உண்மையான ரபி பெர்னாட், இன்னொன்று அவர் சாயலில் வந்த முதல்வன் புகழேந்தி.

ஆனால் இன்று பொது மக்களும், ஊடகத்தில் இருப்பவர்களும் தான் பின் தொடரா யாரும் இல்லாத நிலையில் ஒரு உச்சம் தொட்ட ரபி பெர்னாட்டை மறந்துவிட்டனர், ஆனால் அவரது சாயலைக் கொண்ட முதல்வன் பேட்டி இன்றும் நினைவில் இருப்பதோடு அவர்களின் உடல்மொழியிலும் வாழ்கிறது.  ஒரு காலகட்டத்து ஆளுமையை காட்டும் புனைவு நிஜ வாழ்க்கையை வெல்லும் இடம் இது. ஏன்னெறால் அது ஒரு காலகட்டத்தின் ஸ்னாப்ஸாட். ஆனால் நிஜ வாழ்க்கை ஒரு உச்சத்துடன் நிறைவடைவதில்லை, அது தொடர்ந்துவரும் வரும் நிதர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

இப்போதைய ரபிபெர்னார்ட், தனது உச்சத்தை காட்சிப்படுத்தியிருக்கும் முதல்வன் காட்சியை இப்போது பார்த்தால் என்ன நினைப்பார் என்று யோசிப்பது ஒரு புனைவுக்கான களம்.

அந்தப் பேட்டியின் சாயல் ரபி பெர்னார்ட் என்றாலும் முதல்வன் புகழேந்தி  என்பவர் அன்றைய பேட்டியில் ரபி பெர்னார்ட், அரசியல் எதிர்பார்ப்பில் ரஜினி , அதன்பின் தங்களது அரசியல் பார்வை என அப்போது இருந்த சூழ்நிலையில் சுஜாதா மற்றும் ஷங்கர் உருவாக்கிய புனைவு. 

இது இப்படி இருக்க, புகழேந்திக்கு கச்சாப்பொருள் தந்த இன்னொருவரான ரஜினி,  அதன்பின் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அதே துறையில் இன்னும் இயங்கிக்கொண்டிருப்பதும் , இன்றும் அவர் வருவாரா என்ன கொள்கை சொல்வார் என மக்களை யோசிக்க வைப்பதும், எதிரிகளை எரிச்சலடையச் செய்வதும், கட்சிகளை பதட்டத்தில் வைத்திருப்பதும் மெயின்டெயின் செய்துகொண்டிருப்பதும் இன்னொரு சுவாரஸ்யம்.

29 மே 2020

கரோனா கீபோர்டு

பில்கேட்ஸ் ஒருமுறை சொன்னார், கம்பூட்டர்கள் நமக்கு வேலை செய்வதை விட, நாம் தான் கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும்படி அதிகமாக பழகுகிறோம் என்று. மவுசை அசைப்பதும் கீபோர்டை தட்டுவதும் மனிதர்களின் இயல்பான செயல்பாடா என்ன? இப்போதெல்லாம் மக்களின் முக்கிய வெளிப்படே ஸ்மார்ட்போன் திரையைத் தடுவுவதுதான் இல்லையா.

நமது சிந்தனையின் வெளிப்பாடு கீபோர்டும் ஸ்மார்ட்போன் திரையும் என்று ஆகிவிட்டதால் அவற்றின் வேகமே நமது வேகம் என்றாகிறது. லேப்டாப் இருந்தாலும் கீபோர்டுக்கு எனது சாய்ஸ் டிவிஸ் கோல்ட் கீபோர்ட், அது பழுதானதும் அதே ப்ராண்ட் வாங்கலாமா அல்லது வேறு வாங்கலாமா என்ற யோசனைக்கு அமேஸான் இல்லாத இந்த கொரானா காலகட்டம் கொஞ்சம் நேரம் தருகிறது. இதே பிராண்ட் வாங்குவதற்கு காரணம் ஒன்றுதான் இது மெகானிகல் கீபோர்ட். அதனால் டைப் வேகம் அதிகம் மற்றும் ஒவ்வொன்றும் தனித்தனி பட்டன்கள்.


கீபோர்டில் மொத்தம் மூன்று எழுத்துக்கள் வேலை செய்யவில்லை, E, R மற்றௌம் எண் எட்டு. அதனால்  இதே பிராண்ட் வாங்குவதை விட இருக்கும் கீபோர்டையே சரி செய்துவிடலாம் என முடிவு செய்தேன்.  ஒரு ஸ்க்ரூட்ரைவர் மற்றும் வெகுநாட்களுக்குப் பின் பயன்படுத்தும் சால்டரிங் ராட் துணையுடன். 


கீபோர்டிலிருந்து சில பட்டன்களை உருவி இதில் போட்டால் வேலை செய்தது ஆனால் எதிர்பார்த்த அளவு இல்லை. ஓடும்போது சகதியில் கால் வைப்பதைப்போன்று இந்த மாற்றப்பட்ட கீக்கள் வேகத்தை தடை செய்தன, அவ்வளவு பழையவை. 

மீண்டும் திறந்து மிக குறைவாக பயன்படுத்தும் கீக்கள் எது என ஆராய்ச்சி செய்து சில பங்ஷன் கீக்களை இவற்றில் பொருத்தி, இந்த பழைய கீக்களை குறைவான பயன்பாடுடைய அவற்றைல் பொருத்தியபின் வேலை முடிந்தது, கீபோர்ட் சரியான பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.


வீக்கெண்டில் ஒரு மாறுபட்ட வேலை, தவிற்கப்பட்ட ஒரு அமேஸான் பர்சேஸ் உடன் வேகமான டைப்பிங் என கரோனா கால நடவடிக்கை சிறப்பாக முடிந்தது.