Unordered List

04 ஜனவரி 2011

நாஞ்சில் நாடன் விழா - எனது பார்வை

வாசகனுடன் எழுத்தாளன் நடத்தும் உரையாடலே அவன் படைப்பு. எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது நம்மனதில் அவர்களின் குரலைக் கேட்கமுடியும். அப்படிப்பட்டவர்களின் குரல்களை நான் நேரடியாக கேட்ட அனுபவம் இன்று.

ஜெயமோகனின் "விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்" மூலம் நடந்த, சாகித்ய அக்காடமி விருதுபெற்றுள்ள நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா.

இது நான் கலந்துகொண்ட முதல் இலக்கிய நிகழ்வு. மிகவும் இயல்பான, நட்பான சூழலில் கலகலப்பான விழாவாக அமைந்தது.



நான் கதவைத்திறந்து உள்ளே  செல்லும்போது எஸ்ரா உட்பட பலர் பேசி முடித்திருந்தனர். பாலு மகேந்திரா பேசிக்கொண்டிருந்தார்.
அரங்கு நிரம்பியிருந்தது. பலர் நின்றுகொண்டிருந்தனர். இருந்தும் எனக்கொரு நல்ல இருக்கை கிடைத்தது. இலக்கியத்தில் உனக்கும் ஒரு இடம் இருக்குடா" என்று என்னக்குள் சொல்லிக்கொண்டு பாலு மகேந்திராவை கவனிக்க ஆரம்பித்தேன்.

மிக இயல்பான பேச்சு அவருடையது. விருதின்மூலமாக கிடைத்த மகிழ்ச்சியை நாஞ்சில் நாடனும் அவரின் வாசகர்களும் பகிர்ந்துகொள்ளும் தருணம் என்று விழாவை வரையறுத்தார்.

ஞாநியின் பேச்சில் வழக்கம் போல் சற்று அனல் பறந்தது. சாகித்ய அகாடமி பற்றி பல செய்திகளைச் சொல்லி இந்த விஷயத்திலும் அவருக்கு அரசுமீது உள்ள விமர்சனத்தை முன்வைத்தார். அவர் சொல்லியதில் என்னைக் கவர்ந்த கருத்து அரசு விருது பற்றியது.

அரசின் மீது அதன் நடுநிலைத்தன்மை மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தபோதிலும் அரசும் அது தரும் அங்கீகரங்களும் நியாமானதாக இருக்கவேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பையும் அதற்க்கான நமது போராட்டங்களையும் எப்போதும் கைவிடக்கூடாது என்று கூறினார். உண்மைதான், நடக்கும் தவறுகளை பார்த்து அவநம்பிக்கை அடையாமல் விட, நம்பிக்கையோடு போராடித்தான் பல நன்மைகள் விளைந்துள்ளன.

எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் பேச்சு மிகவும் கலகலப்பானது. நம் பண்பாட்டு வேர்களை இழந்து தமிழ் சமூகம் செல்வதைப் பற்றிய தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.

பினாயக்  சென்னுக்கு  கிடைத்துள்ள தண்டனைபற்றிய தனது எதிர்ப்பையும் பலத்த கரகோஷத்தினிடையே பதிவு செய்தார். என்னைபொருத்தவரை அந்தக் தண்டனை அவரது தீவிரவாத ஆதரவுக்காக நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். இதில் கண்டிக்க என்ன இருக்கிறது என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இதைப் பற்றி மேலும் செய்தி அறியவேண்டும் என முடிவுசெய்துகொண்டேன்.

கணீர்க் குரலுக்கும் கலகப்பான பேச்சுக்கும் சொந்தக்காரர் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். நிறைய சிரிக்க வைத்தார். எழுத்தாளர்களை சட்டசபையில் பேச அழைக்கவேண்டும் என்ற அவர் கருத்துக்கு அரங்கு முழுவதும் சிரிப்பொலி எழுந்தது. உண்மையில் அது மிக சிறந்த கருத்தாக எனக்குத் தோன்றுகிறது. ஆள்பவர்கள் கண்டிப்பாக எழுத்தாளர்களின் குரலைக் கேட்கவேண்டும்.

ஜெயமோகனின் எழுத்துகளை தொடர்ந்து வாசித்துவந்தாலும், இன்று தான் அவரின் பேச்சை முன்தான் முறையாகக் கேட்டேன். எதிர்பார்த்ததை விட மென்மையான குரல். அவரது பேச்சின் உள்ளடக்கமும் அப்படியே, மென்மையாகத் தெரிந்தாலும் பல விஷயங்களை உள்ளடக்கிப் பேசினார்.

"இடியட் என்ற நாவலில், மிஷ்கின் என்ற பாத்திரம்" என்று பேசியவர், "இடியட்... மிஷ்கின்.. இந்த வார்த்தைகளைப் வைத்து நீங்கள் எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள் என்று கலகலப்பை ஆரம்பித்தார். ரசிக்கும்படி இருந்தது அவரது பேச்சு. மேடையில் இருந்தவர்களை அவர் பெயரை வைத்து விளித்து ஆரம்பித்தது நன்றாக இருந்தது. திராவிட மேடைகளில் நாம் வழக்கமாக கேட்கும் "அவர்களே... அவர்களே" பட்டம் இல்லாமல் பேசியது நன்றாக இருந்தது.

நாஞ்சில் பேச்சு மிகவும் கலகப்பாக இருந்தது. தற்புகழ்ச்சியும் இல்லாமல், அதே சமயம் மிக முக்கியமாக வெற்று பணிவும் இல்லாமல் வெகு இயல்பாக இந்த விருது பற்றி பேசினார்.

இயக்குனர் மணிரத்னமும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவரையும் பேச வைத்திருக்கலாம்.

இங்கு பேசிய அனைவருமே இன்னும் பல விஷயங்கள் சுவையாகப் பேசக்கூடியவர்கள். நேரம் இல்லாமையால் மிக சுருக்கமாகப் பேசினார்கள் என்பது உண்மை. தொகுத்து வழங்கியவரும் மிக இயல்பாக கலகலப்புடன் வழங்கினார்.


இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் மற்றும் அறிமுகம். இரு புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டும்..

இந்தக்  கூட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினால், இதுபோன்ற கூட்டங்களும், கருத்தரங்குகளும் தொடர்ந்து நடந்தால் நல்லது.