Unordered List

20 ஆகஸ்ட் 2011

அண்ணா வழி


அண்ணா ஹசாரே ஆதரவு கட்சி, எதிர்ப்புக் கட்சி, அவரை சந்தேகப் படும் கட்சி என்று இந்த மூன்றில் ஒரு கட்சியில் இல்லாத யாருமே இப்போது இல்லை போலிருக்கிறது.

எங்கும் அவர் பற்றிய பேச்சுதான்

ரஜினி படம் வரும் பொது எல்லோரும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பிடித்தவர்கள் ஒரு மணிநேரம் பேசினால், பிடிக்காதவர்கள் பலமணிநேரம் பேசுவார்கள். அதுபோல ஒரு பரபரப்பு ஆகிவிட்டது நம்ம அண்ணா ஹசாரே கதை.



இவர் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால். இவர் ஒரு மிகப்பெரிய விவாதத்தை நமக்கெல்லாம் மறு அறிமுகம் செய்து வைத்துவிட்டார் .அரசியல் கட்சி சார்பில்லாத ஒருவரால் மக்களை ஒரு விவாதம் நோக்கி திருப்பமுடியும் என்பதே ஒரு ஆச்சார்யமான நிகழ்வு தான்.

நாமெல்லாம் இவர் பெயரை கேள்விப்பட்டே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அதற்குள் நமது தினசரி அரட்டையில் (அல்லது விவாதத்தில்) இவர் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் என்பதே அவரது வெற்றி தான்.

சரி.. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால் உனக்கு முழு சம்மதமா என்று யாராவது என்னைக் கேட்டால் அல்லது யாருமே கேட்காவிட்டாலும், உண்மையில் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டுவருவது சரியல்ல என்பதே எனது கருத்து. நாட்டின் தலைவருக்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கவேண்டும். மற்றும் சில கருத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியென்றால் நானும் அவரை சந்தேகப் படும்கட்சியா? கண்டிப்பாக இல்லை.

ஊழலை நாமெல்லாம் நமது அன்றாட வாழ்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு பலகாலமானநிலையில், ஊழல் ஒரு குற்றமே என இவர் புதிதாக சொல்வது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது, நாமும் பங்குகொள்ளக் கூடியது என்பது தான் எனது கருத்து.

அவரைப் பற்றி கேலி செய்து திட்டிக் கொண்டாவது அவரைப் பிடிக்காதவர்களும் ஊழலைப் பற்றி விவாதிக்கட்டும். வேறு வழியில்லை. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணா உங்கள் சிந்தனையில் வந்துவிட்டார். அண்ணா ஹசாரே பற்றி பேசுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஊழல் பற்றி யோசித்தே ஆக வேண்டும். இது தான் புதிய அண்ணா வழி.



---------------------------------------------



ஒரு பன்ச் உடன் முடிக்கலாம் என்று யோசித்ததில் பல பன்ச்கள் இலவசமாகவே கிடைத்தன.

அண்ணா ஹசாரே பற்றியும், காந்திய போராட்டங்கள் பற்றியும் இந்தப் பரபரப்புகெல்லாம் முன்பிருந்தே தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன். அவரது பஞ்ச் சில..


" அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்."

"காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது."

"போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும்."

"சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான். எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது."

கடைசியாக..

"காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை"



சில இணைப்புகள்:

அண்ணா ஹசாரே-1
அண்ணா ஹசாரே-2

19 ஆகஸ்ட் 2011

கேணி சந்திப்பு - வண்ணநிலவன்

"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது.." என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.


வண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.
தனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.
பல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.
வண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.
ஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.
தன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.
தான் கிறித்துவனாக "கொஞ்ச காலம்" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்
சமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
சினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.

எழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.
வண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.
சில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
சில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.