Unordered List

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு மற்றும் குண்டு வெடிப்பு போன்ற லிபிய ஜனநாயக ஆதரவுப் படையின் ஜனநாயக செயல்பாடுகளைக் காட்டிவந்த ஊடகங்களுக்கு சென்ற வாரம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு படக்காட்சி கிடைத்தது.கடாபியை தெருவில் பலர் தாக்கி அடித்துக் கொல்லுவதுபோன்ற காட்சி உலகமெங்கும் உள்ள எல்லாத்தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியானது. பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தியும் வந்தது. இணையம் மூலமும் அக்காட்சி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் காட்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஒபாமா அறிவித்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அறிந்துகொண்டனர்.

இது இப்படி இருக்க, கடாபியின் மனதில் உள்ள மர்மங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரின் கார் மீது பிரான்ஸ் விமானம் குண்டு வீசியிருந்தாலும் பலர் அவரை தாக்கியிருந்தாலும், அவரது மரணத்துக்கு காரணம் என்னவென்பது புதிராகவே இருந்துவந்தது.

கடாபி மரணத்துக்குக் காரணம் என்ன அல்லது யார் எனபதே உலகின்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. போர்க்குற்றங்கள் செய்தார் என அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளால் எதிர்க்கப்பட்ட கடாபி இதுபோல் நிராயுதபாணியாக இருக்கும்போது மேற்குநாடுகள் ஆதரவுபெற்ற புரட்சிப்படையால் கொல்லப்பட்டது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு போர்க் குற்றம் இல்லையா என சிலர் கேள்விஎழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ஒரு முக்கிய 'நடுநிலை' ஊடக ஆய்வாளர் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.

அந்தப் படத்தை உற்றுநோக்கினால் ஆரம்பத்திலிருந்தே அவர் முகத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்க்கமுடியும். எனவே ரத்தம் புரட்சிப் படையினர் அடித்ததினால் வந்தது என சொல்ல முடியாது.

ஆனால் புரட்சி படையினர் அவரை அடிப்பது அந்த படக்காட்சியில் தெரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அடி கூட ரத்தம் வருவதற்கு உண்மைக் காரணம் இல்லை. உடம்பில் ரத்தம் இருப்பதே அது வருவதற்குக்காரணம் என்று விளக்கியுள்ளார்.

ரத்தம் இல்லாத ஒரு உடம்பிலிருந்து யாராலும் ரத்தம் வரவைக்க முடியாது என்று தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல இதுவரை வெளிவராத பல உண்மைகள் தெளிவடைகின்றன.

கடாபி உயிரிழந்ததுக்குக் காரணம் கூட அவரிடம் உயிர் இருந்தது தான் என இதன் மூலம் தெரிந்துள்ளது. புரட்சிப் படையினர்வசம் சிக்குவதற்கு முன்னரே அவர் இறந்திருந்தால் அவர் புரட்சிப் படையினரிடம் மாட்டிக்கொண்டபின் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அதே ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கடாபியின் மரணத்துக்குக்காரணம் அவரிடம் உயிர் இருந்ததே, அதாவது அவரது மரணத்துக்கு பொறுப்பு அவரே என்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது.