Unordered List

03 ஜூலை 2018

உலகநாயகர்கள்

கால்பந்து விளையாட்டு பார்க்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு முதலில் பிடித்த அணி அர்ஜெண்டைனா. எனக்கு மட்டுமல்ல அந்தக் காலத்தில் நம்ம ஊரில் கால்பந்து உலகக்கோப்பை பற்றி தெரிந்த அனைவருக்குமே பிடித்த அணி அதுவாகத்தான் இருந்திருக்கும். அதற்கு முக்கியக் காரணம் மாராடோனா. கால்பந்து உலகக்கோப்பை என்று ஒன்று இருக்கிறது என்ற செய்தி வந்து சேர்வதற்கு முன்னரே மாரானோடாவின் வீரதீர பிரதாபக் கதைகள் எங்களை வந்து சேர்ந்துவிட்டன. அவர் பந்தை எடுத்தால் கோல் போடாமல் விடமாட்டார் என்று உறுதியாக நம்பினோம். எனவே அவரது அணியான அர்ஜெண்டைனா நமக்கு பிடித்த அணியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.

நான் பார்த்த 1998 உலகக்கோப்பையில் மாராடோனா இல்லாவிட்டாலும் அவரது அணி என்ற காரணமே அந்த அணியை ஆதரிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த அணியைப் பிடித்தற்கு எனக்கு மேலதிகமாக ஒரு தனிப்பட்ட டெக்னிகல் காரணமும் இருந்தது. அது எங்கள் வீட்டு சாலிடர் தொலைக்காட்சி. கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது ஒரு சவால். அதிலும் இரு அணிகளும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து வந்தால் ஒன்றுமே புரியாது, ஆனால் அர்ஜெண்டைனா உடை தனித்துவமானது; அந்த கோடுபோட்ட சட்டையை எந்த டிவியில் எளிதாகப் பார்க்க முடியும். எனவே அந்த அணியின் விளையாட்டுகளை விடுவதில்லை. இந்தக் கணக்கில் பார்த்தால் க்ரோஷியாவின் உடையும் தனித்துவமானது தான். அதன் கட்டம்போட்ட டிசைனும் கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியில் பார்க்க இனிமையானது. அந்த உலகக்கோப்பையில் ஆரம்பதிலேயே அந்த அணியின் ஷூக்கர் எங்களுக்குப் பிடித்த வீரராக ஆகி அமோக ஆதரவைப் பெற்றார். அவர் தான் அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் பூட் பரிசு பெற்றார் என்பது வரலாறு. அந்தச் சாதனைக்கு அதற்கு ஒரு முக்கிய காரணம் எங்கள் வீட்டு கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியும் அதனால் எங்களது ஆதரவும் என்பதை சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்தில் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை.
அந்த உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ப்ரேஸில். மாரொடானோ அளவுக்கு இல்லாவிட்டாலும் பீலே பற்றியும் வீரதீர தொன்மங்க்கள் நிறைய இருந்தால் ப்ரேஸிலும் நம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அணியாக இருந்தது. அந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட வீரர் ப்ரேஸிலின் ரொனால்டோ. அதுமட்டுமல்லாமல் போனிடெயில் ஸ்டையுடன் இருந்த இத்தாலியிம் ரொபெர்டோ பேஜியோ, ஸ்டெயிலான இங்கிலாந்தின் டேவிட் பெக்கம்,ப்ரேஸிலின் ரொனால்டோ, ரொபர்டொ கார்லோஸ் என பல அணிகளிலும் ஹிண்டு பேப்பரின் தயவால் பல பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் ஆதரவு ஸுக்கருக்குத்தான் இருந்தது

புகழ் பெற்ற அணிகள் என்பதனால் வரும் ஆர்வம் எப்படியோ அதுபோல க்ரோஷியா போல சிறிய அணிகள் ஜெயிப்பதிலும் நமக்கு ஒரு ஆர்வம் உருவாகிவிடுவதுண்டு.  ஆனால் அந்த கோப்பையை வென்றது நாங்கள் சற்றும் விரும்பாத ஃப்ரான்ஸ். இறுதி ஆட்டத்தில் ஹீரோக்கள் நிரம்பிய ப்ரேஸிலை மூன்று கோல்கள் அடித்து எளிதாக வென்றது சிஸ்டமேடிக்கான ப்ரான்ஸ் அணி. எனக்கு தென்னமெரிக்க அணிகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் மிகவும் முறையாக விளையாடும் ஐரோப்பிய அணிகளைப் பார்ப்பதில் இருப்பதில்லை. இவர்களுக்கிடையில் விளையாடுவதிலும் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 32 அணிகள் என்பதால் கிட்டத்தட்ட உலகத்தின் பல வேறுபட்ட நாடுகளின் விளையாட்டைப் பார்ப்பதும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பையின் ஒரு முக்கிய அம்சம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.

தென்னமெரிக்க அணிகள் ஸ்டைலாக விளையாடுவதில் புகழ் பெற்றவர்கள், அங்கு ஹீரோக்களுக்கு மதிப்பு அதிகம். ஐரோப்பிய அணிகள் மிக முறையாக சிஸ்டமேட்டிக்காக விளையாடுபவர்கள். தென்கொரியா, ஜப்பான் அணிகள் டீசண்டான விளையாடுபவர்கள், ஆப்ரிக்க அணிகளுக்கு நேர்மாறானவர்கள் இவர்கள்.

இந்தக் காரணத்தினால் தான், இந்த 2018 உலக்கோப்பையில், முதல் சுற்றில் ஜப்பானும் ஆப்பிரிக்க அணியான செனகலும் சம அளவு புள்ளிகள் பெற்றிருந்தாலும், டீசண்டா விளைடாடி குறைவான யெல்லோ கார்ட் வாங்கிய ஜப்பான் அடுத்தசுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆனால் யெல்லோ கார்ட் வைத்து மதிப்பிடுவது தவறு, விளையாட்டென்றால் இறங்கி விளைடாடுவதே சரி என செனகல் குற்றச்சாட்டு வைத்துள்ளது நல்ல விவாதம். இதை உலகில் மாறுபடும் மதிப்பீடுகளின் விவாதமாகக் கூடப் பார்க்கலாம்.

கோஸ்டாரிக்காவுடன் ப்ரேஸில் விளையாடிய மேட்ச் இன்னொரு உதாரணம். நன்றாக விளையாடினாலும் கிட்டத்தட்ட ஆட்ட முடிவு வரை ப்ரேஸிலால் கோல் அடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பெனல்டி வாய்ப்பு ப்ரேஸிலின் ஹீரோவான நெய்மாருக்குக்  கிடைத்தது. ஆனால் டிவியில் ரிவியூ செய்த நடுவர், ரெம்ப நடிக்காதீங்க பாஸ் என்று சொல்லி அதை ரத்து செய்துவிட்டார். அடுத்த சில நிமிடங்கள் நடந்தது ப்ரேஸிலின் வெறியாட்டம், விளைவுகளைப் பற்றி கவலைப் படாமால் நெய்மர் யெல்லோ கார்ட் வாங்கினார். மொத்த அணியே ஒரு முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலர் விமர்சித்தாலும் அது தான் அந்த அணியின் குணம். கடைசி நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து ப்ரேஸில் வெற்றியடைந்தது. இதை ஒரு ஐரோப்பிய அணியிடம் பார்ப்பது முடியாது.

இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய அணி நம் ஆசியாவின் தென்கொரியா. இந்த அணியும் கடுமையாகப் போராடுதல் பவுல் செய்தல் எல்லாம் உண்டு, ஆனால் எதிரணி வீரரை வீழ்த்தி யெல்லோ கார்ட் வாங்கினாலும், அவர் எந்திரிக்கும் வரை பக்கத்திலேயே இருந்து தலை குனிந்து மன்னிப்பும் கேட்டு ரெம்ப நல்லவங்களாக இருப்பது இந்த அணியின் சிறப்பு.

கிரிக்கெட் பார்க்கும் நம் மக்களுக்கு கால்பந்து பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம் குறைவு. அதற்கு ஒரு காரணம், பலருக்கும் அதன் ஹீரோக்கள் பற்றி அறிமுகம் இல்லாதது தான். விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் வரமால் விளையாட்டின் மீது ஆர்வம் வர வாய்ப்பிலை. விளையாட்டுன் மீது ஆர்வம் வருவதற்கும் விளையாட்டு வீரர்கள் மீது ஒரு நெருக்கம் வருவதற்கும் மீடியாவும் அவை உருவாக்கும் கதைகளும் தொன்மங்களும்  மிக முக்கியம். அந்தக் காலத்தில் வீட்டில் வாங்க்கிய ஹிண்டு பேப்பர் அந்த வகையில் மிகவும் உதவியது.

இன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட்டில் ஆரம்பம், நடுப்பகுதி முடிவு என்ற சீரான திரைக்கதை போன்ற வடிவம் உண்டு. ஆனால் கால்பந்தில் அப்படி முறைப்படி எதுவும் நிகழ்வதில்லை. கால்பந்தில் முழு ஆட்டத்திலும் எந்த கோலும் போடாத ஆட்டங்க்களும் உண்டு. சில நிமிடங்கள் முழு ஆட்டத்தை நிர்ணயிக்கும் நிலையும் உண்டு. மிக நன்றாக விளையாடும் அணியை, எதிரணியின் மிக கடுமையான தடுப்பாட்டத்தின் மூலம் டிரா செய்யும் ஆட்டங்களும் உண்டு. என்னதான் ஒருவர் பெரிய வீரராக இருந்தாலும் கால்பந்துபோட்டியில் அந்த அணியின் தன்மையே வெற்றியை நிர்ணயிக்கிறது.  களத்தில் வீரர்கள் ஆடும் விளையாட்டை கவனிப்பதோடு, வீரர்களை மாற்றி பயிற்சியாளர் அணியின் தன்மையையே மாற்றும் விளையாட்டையும் சேர்ந்து கவனிப்பது முக்கியம்.

இன்றைய நிலையில் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. சூப்பர் ஸ்டார்களான க்ரிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் போர்சுகலும் அர்ஜெண்டைனாவும் இன்னொரு முக்கிய அணியான ஸ்பெயினும் இரண்டாம் சுற்றில் வெளியேறி அதிர்ச்சியளித்துவிட்டன. இருந்தாலும் ப்ரேஸில் மெக்ஸிகோவை வென்று காலிறுதிக்குச் தகுதிபெற்றிருக்கிறது. ஒரு கோல் போட்டும் இன்னொரு கோலுக்கு உதவியும் அந்த அணியின் நெய்மார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இருந்தாலும் இன்றைய ஆட்டத்திலும் அவரது ஓவர் நடிப்பும் அவர் மீதான விமர்சங்களை உருவாக்க்காமல் இல்லை, கால் பட்டதற்கு தரையில் விழுந்த மீன் போல அவர் துள்ளியது அவரது வெறுப்பாளர்களுக்கு இன்னும் வெறுப்பை உருவாக்கும். ஆம் பாராட்டும் எதிர்ப்பும் இருந்தால் தான் அவர் ஸ்டார். இந்த உலகக்கோப்பையில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது.