Unordered List

14 டிசம்பர் 2014

மீண்டும் ரஜினி - டிக்கெட் எடு! கொண்டாடு!!

ராஜா லிங்கேஸ்வரன் எங்கே எனத் தேடிக்கொண்டிருக்கிறார்கள், அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பவர் திரும்பினால் அதுதான் அவர். அடிப்பில் பொறிவதென்னவோ அப்பளம் தான். ஆனால் நொறுங்குவது மக்களின் மனது. 

அந்த நெகிழ்ச்சியான காட்சிக்குப்பிறகு ரஜினி பேசும் ஒவ்வொரு வசனமும், வாழ்க்கையையின் சவால்களை சந்திக்க மக்களுக்கு அவர் கொடுக்கும் உற்சாக டானிக்.

ராஜா லிங்கேஸ்வரனின் ரயில் சண்டை தீவிரமான அதிரடி என்றால், இளைய லிங்காவின் கடைசி பாலூன் சண்டை நம்மை குழந்தைகளாக்குகிறது. அந்தந்த காட்சிகளுக்கான மனநிலையை வெகு இயல்பாக கொண்டு வருவதில் இயக்குனரின் காட்சியமைப்பும் தலைவரின் நடிப்பும் மிளிர்கின்றன. 

ரஜினியும் இளைய பாத்திரத்தை விட, லிங்கேஸ்வரனாக இருக்கும்போது மிக இயல்பாக இருக்கிறார். லிங்கேஸ்வரனாக பேசும் ஒவ்வொரு வசனமும் பட்டாசு தான்.
linga


தேசியம் ஒற்றுமை தியாகம் போன்ற விழுமியங்களை மக்கள் மனத்தில் பதிக்க எலோராலும் முடியாது, அதைச் செய்யமுடியும் ரஜினி, இந்தப்படத்திம் மிகச் சிறப்பாகச் செய்கிறார். நேர்நிலைக் கருத்துக்களை மக்கள் மனத்தில் விதைத்து அனுப்புகிறார்.

சமீபத்தில் வந்த சில படங்கள், ரஜினியின் முழு ஆளுமையைக் கொண்டு வர சற்று தவறியது நமக்கு கொஞ்சம் வருத்தம் தான். ஆனால் லிங்கா அனைத்துக்கும் சேர்த்த முழுமையான ரஜினி படம்.

இந்த லிங்கா ஒரு முழுமையான ரஜினி வெற்றி. டிக்கெட் எடு கொண்டாடு.




19 அக்டோபர் 2014

நூல் வேட்டை

ஒரு ஃபெவிகால் டுயூப் கேட்டேன். நியூஸ் பேப்பர், குச்சியெல்லாம் வீட்டிலேயே கிடைக்கும் எனவே அது தேவையில்லை, அப்புறம் ஒரு நூல்.

கடைக்காரத் தாத்தா எடுத்துக்கொடுத்தது ஒரு தையல்மெசின் நூல், அது இதற்கு வேலைக்காகாது எனத் தெரிந்தது, ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இந்த வயதில் இதைக் கேட்கிறானே என்று நினைத்துவிடுவாரோ என்று கொஞ்சம் தயக்கம்.

”இன்னும் கொஞ்சம் பெரிசா, கட்டுற மாதிரி” என்றேன்.

”சரி இது வேணுமா, அஞ்சு ரூபாய்” என்றார். அது பூ கட்டும் நூல். அது சரி.

“வேற இருக்கா” என்று கேட்டேன். வேறு கடைகள் இருக்குமா இந்தப் பகுதியில் என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. அதை எப்படியோ கண்டுகொண்டவர் போல

“வேற நூலா, இதுவே இங்கே போக மாட்டெங்குது, பெருமாள் கோவில் எதிர்த்தாப்புல இருக்கு நூல் கடை, அங்கே எல்லா நூலும் வச்சுருப்பான்” என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, வாங்கியதற்கு பணம் தந்துவிட்டு கிளம்பும்முன் கேட்டேன்.

“அந்தப் பெருமாள் கோவில் எங்க இருக்கு?”

”என்னது பெருமாள் கோவில் தெரியாதா” என அதிர்ச்சியானார். அவர் முகத்தில் இருந்த நம்பிக்கை முழுவதும் சட்டென அணைந்ததைக் கவனித்தேன்

அவரது அதிர்ச்சியைப் பார்த்து எனக்கே கொஞ்சம் அதிச்சியாகத்தான் இருந்தது, பெருமாள் கோவில் பற்றி தெரியாமல் வாழ்ந்து வருகிறோமே என, தாத்தா மிகப்பெரிய பெருமாள் பக்தர்போல. பேசாமல் இவரிடம் கேட்காமல் இன்னொரு தீவிர பெருமாள் பக்தரான எனது நண்பரிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று கூட ஒரு கணம் யோசித்தேன். இருந்தாலும் அப்போது அந்தக் கடைகாரத் தாத்தாவின் நம்பிக்கையைப் பெறுவதே சவால் என்று தோன்றியது.

ஒரு வழியாக அவரிடமே வழியைத் தெரிந்துகொண்டு புறப்பட்டேன், ஒரு அம்மா உணவகம். ஒரு சிவன் கோவில் ஒரு பிரபல கடை என வழி துலங்கி வந்தது. அப்போது நூல் வாங்குவதை விட பெருமாள் கோவிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியே பிரதானமாக நோக்கமாக உருவாகி வந்துகொண்டிருந்தது.

அவர் சொன்ன வழியான சிவன் கோவில் மற்றும் வேறு அடையாளங்களைக் கண்டுபிடித்து நான் வந்து சேர்ந்த இடம்,  நான் பலமுறை வந்த இடம் தான். ஏற்கனவே தெரிந்த இடத்துக்கு தெரியாத அடையாளங்கள் வழியாக வந்து சேர்வதும் ஒரு அட்வென்சர் தான்.

அப்படியும் அந்த முக்கிய விஷயமான பெருமாள் கோவிலை தானாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருவழியாக அங்கே பக்கத்தில் சிலரிடம் கேட்டு பெருமாள் கோவிலையும் கண்டுபிடித்து, நூல்க் கடையையும் கண்டுபிடித்தேன்.

அவர் சொன்னது சரிதான். அங்கே எல்லாவிதமான நூற்களும் இருந்தன, ஆனால்.

“பட்டம் செய்யுற நூல் வேணும்”

உடனடியாக பதில் வந்தது,

“பட்டம் விட நூல் நாங்க விற்கிறதில்லை. காரணம் கேளுங்க”

நான் கேட்கவில்லை. அவரே தொடர்ந்தார். அதோ அவரைப்பாருங்க அவர் கழுத்துல மாட்டி, உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். அதுனால இந்த பாலிசி”

அவரால் சுட்டப்பட்ட அந்த நபர், இன்னொரு வாடிக்காளருக்கு ஏதோ நூலைக்காட்டிக்கொண்டிருந்தபோதும்,  கழுத்தைச் சாய்த்து என்னிடம் அந்த ஆதாரத்தைக்  காட்டத் தவறவில்லை. ஆனால் அந்தக் கழுத்தில் என்ன பார்பது என்று எனக்குத் தான் தெரியவில்லை/ நான் எதோ ஆப்கானிஸ்த்தான் சென்று ஏ.கே 47 கொள்முதல் செய்யப்போனவன் போல உணர்ந்த்தேன்.

சின்ன வயதில் மணிக்கணக்கில் பொட்டல் வெளிகளிலும், மொட்டை மாடியிலும் வெயிலைப் பொருட்படுத்தாமல் பட்டம் விட்டவர்கள்தாம் நாம். இருந்தாலும் அதில் வெயிலைத் தவிர எந்த ஆபத்தையும் பார்ததில்லை அப்போது. பட்டம் ஆபத்தானது என்று சென்னை வந்தபின்னர் தான் எனக்கெல்லாம் தெரியும். ஊர்ப்பக்கம் எல்லாம் இந்த மாஞ்சா வகையரா எல்லாம் கேள்விப்பட்டதுகூட இல்லை.

அவர் நினைப்பது போல நான் மாஞ்சா செய்து பட்டம் விடப்போவதில்லை. குழந்தைகளுக்கு மொட்டைமாடியில் பட்டம் விட்டுக் காட்டப்போகிறேன், அவ்வளவு தான் என விளக்க முடியும்தான், இருந்தாலும், விவாதம் இல்லாமல் இடத்தைக் காலிசெய்தேன்.

வெளியே வந்தபின்னர்தான் நினைத்துக்கொண்டேன், நான் முதலில்  கேட்டதுபோலவே கேட்ருக்கவேண்டும். பட்டத்துக்கு என்று சொல்லியிருக்கக்கூடாது என.

வரும் வழியில் கவனித்தேன்.ஒரு சின்னக் கடை. நின்றேன்.

“நூல் வேணும்”

“இல்ல இன்னும் பெருசா, கட்டுற மாதிரி..”

”இல்லையில்லை பூக்கட்டுற நூல் இல்லை. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா”

இப்படிக் நான் ‘விளக்கிக்’ கொண்டிருக்கையில், பின்னால் நின்றவர் கடைக்காரரிடம் சொன்னார்.

“அந்த பட்டம் விடுற நூலை எடுத்துக்கொடுப்பா. இவர் கேக்குறதுக்கு சரியா இருக்கும்”  என்று சொல்லியபடி என்னைப்பார்த்து “பட்டம் விடுற நூல் சார். நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும்” என்றார்.

---

அவர் ஏன் கொடுக்கவில்லை. இவர் ஏன் கொடுத்தார் என யோசித்தேன்.
அந்த நூல் கடை இருப்பது வியாபாரப் பகுதி. இன்னொன்றும் கவனிக்க வேண்டும் அந்தக்கடை நூலுக்கென்று உள்ளது, எனவே ப்ரொஃபெசனல் பட்டம் விடுவோர் தேடி வந்து அங்கு வாங்குவது இயல்பு. எனவே அவர் என்னையும் அப்படி நின்னைப்பதும் இயல்புதான்.

ஆனால் இந்தக் கடை இருக்கும் இடம் வீடுகள் இருக்கும் குடியிருப்புப்பகுதி, எனவே நான் பட்டம் செய்தாலும் ஆபத்திலாமல் விளையாடத்தான் எனக் கண்டுபிடிப்பது இவருக்கு கடினம் அல்ல. இன்கே நூலை எடுத்துக்கொடுக்கச் சொன்னவர் இன்னொரு வாடிக்கையாளர் தான். அந்த அளவுக்கு அவருக்கு அந்தக் கடைத் தெரிந்திருக்கிறது. என்னை அங்கே யாருக்ககோ தெரிந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

இருவருக்கும் தெரியாத ஒன்று உள்ளது, ஒருநாள் மொட்டை மாடியில் பறந்த அந்தப் பட்டமும், அந்த நூலும் இப்போது எனது படுக்கையறையில் தான் தூங்கிக்கொண்டுள்ளன.

18 அக்டோபர் 2014

மழை கவனிக்க வேண்டிய விஷயங்கள் மூன்று

சென்ற வியாழக்கிழமை இரவு, துணிகளை துவைத்துக் காயப்போட்டிருந்தேன், இரவில் துவைத்ததால் கொஞ்சம் அவசரமாகத்தான். இந்த மழை என்ன செய்திருந்தது தெரியுமா, நான் சரியாகத்துவைத்திருக்க மாட்டேன் என நினைத்துக்கொண்டு மொட்டைமாடியில் காயப்போட்டிருந்த துணிகளை மீண்டும் துவைத்திருந்தது. நல்ல வேளையாக காலையில் அடித்த வெயிலில் ஒன்பது மணிக்கெல்லம் காய்ந்து விட்டது, எனவே எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லாமல் போனது. இருந்தாலும் மழைக்கு ஏனிந்த தேவையில்லாத வேலை.

அப்படிதான் ஒருநாள், முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன். முடிவெட்டிக்கொண்டு வீட்டுக்குப் போனால் குளிக்க வேண்டும் என எனக்குத்தெரியாதா என்ன? அதற்குள் அவசரப்பட்டு தலையை நனைத்து பைக்கில் வரும்போதே குளிக்க வைத்து விட்டது. மழைக்கு ஏன் இந்த அவசர வேலை.

இதுவாவது பரவாயில்லை, இன்று காலை மீன் வாங்கி வரலாம் என்று கிளம்பினேன். எங்கோ சென்று ஒளிந்து கொண்டிருந்தது இந்த மழை. கையில் மீன்களுடன் திரும்பும்போது சொல்லிவைதது போல வந்து விட்டது, அவ்வளவு தண்ணீருடன். அட ஆர்வக்கோளாரே என்று நினைத்துக்கொண்டேன். நான் கையில் வைத்திருந்தது கடல் மீன், அது இந்த மழைத்தண்ணீரில் நீந்த முடியுமா என்ன? அதுவும் வெட்டப்பட்ட மீன் எந்த ஊரிலாவது நீந்துமா. எனக்கு உதவி செய்ய நினைப்பது சரிதான், ஆனால் நான் மீனை நீந்தவைக்க வாங்கிச்செல்கிறேனா அல்லது சாப்பிடவா எனறு என்னைக்கேட்டால் சொல்ல மாட்டேனா என்ன? இதைக்கூட கவனிக்க முடியாமல் அப்படி என்ன ஆர்வக்கோளாரு என்று தான் கேட்கிறேன்.

07 அக்டோபர் 2014

நீ: தடயங்களைத் தெளிப்பவன்

எதிர்பாராமலோ அல்லது மிக மிக எதிர்பார்த்து திட்டமிட்டோ எப்படியோ நாம் மிகவும் எதிர்பார்க்கும் ஒருவரின் தனியறைக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது, அதுவும் அவரில்லாத நேரத்தில். என்ன செய்வோம்? நமக்கும் இருக்கும் துப்பறியும் சாம்பு வெளிவரும் நேரம் அதுவாகத்தான் இருக்கும். அங்கே இருக்கும் ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்துவிடுவோம் அல்லவா? உண்மையில் நாம் அங்கு பார்ப்பது அங்கே பரவியியிருக்கும் பொருட்களையல்ல, நாம் பார்ப்பது நமது உள்மனம் அங்கே அந்த பொருட்கள் தரும் தடயங்களை வைத்து அவரைப் பற்றி உருவாக்கிக்கொண்டிருக்கும் பிம்பத்தைத்தான்.

என்னைப்பத்து நானே சொல்லக்கூடாது, இருந்தாலும் சொல்றேன் என்று ஆரம்பித்து யாராவது எப்போதும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள், அதை நம்புவதற்குத்தான் யாரும் இல்லை. அவற்றை நம்ப வேண்டும் என்று முயற்சி செய்தாலும் முடிவதில்லை. அவரைப்பற்றி நமக்கும் உருவாகும் பிம்பம், அவரை பார்த்தும் அவரைப்பற்றி கேள்விப்பட்டதும் தான் இருக்கும்

காரணம், சொற்களால் உருவாகும் பிம்மத்தை விட காட்சியால் உருவாகும் பிம்பம் எப்போதும் பலம் வாய்ந்தது.  இரண்டாவது மனம் ஒரு வேட்டை மிருகம் போல, அது தானாக எடுத்துக்கொள்ளும் தகவல்கள் உருவாக்கும் தாக்கத்தை, அதற்கு கொடுக்கப்படும் தகவல்கள் உருவாக்க முடியாது. எனவே தான் அவர் தன்னைப் பற்றி சொல்வதைவிட அவரைப் பற்றி நாம் பார்ப்பதே அவரை உருவாக்குகிறது

சரி, அவர் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும், ஆனால் உங்களைப் பற்றி? உங்களைப் பற்றி உலகம் எப்படி கருத்து உருவாக்குகிறது? உங்களைப் பற்றி சொல்லச்சொன்னால் நீங்கள் சொல்லவிருப்பது என்ன? அதைத் தான் உங்கள்ச் சுற்றியிருப்பவர்கள் இப்போது சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? இல்லையென்றால், அது அவர்கள் தவறு இல்லை.





01 அக்டோபர் 2014

நீ : எப்படிக் கண்டுபிடிப்பது?

”வர வர நல்லவங்கள எப்படி கண்டுபிடிக்கிறதுனே தெரியல” என்று அலுத்துக்கொள்பவர்களா நீங்கள், நானும் அப்படித்தான் இருந்தேன், இந்த ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் வரை. சரி, கெட்டவர்களைக் கண்டிபிடிப்பது? அதுவும் அதே தான்.

மிக எளிதான முறைதான். ஒருவரை பார்க்க்கும்போது நல்லவர் போலத் தெரிகிறதா? அவர் நடவடிக்கைகள் நல்லவர்போலத் தெரிகிறதா? அப்படியென்றால் அவர் நல்லவராக இருக்க வாய்ப்பு அதிகம். திறமையானவர்போலத் தெரித்தால், திறமையானவராக இருக்க வாய்ப்பு அதிகம். என்ன நான் சொல்வது மிகச் சாதாரணமாத் தெரிகிறதா, இருக்கலாம் ஆனால் இது தான் நடைமுறை.

நானெல்லாம் பெரிய திறமைசாலி, என்ன எனக்கு வாய்ப்பு தான் கிடைக்கவில்லை என்று தானே உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டிருகிறீர்கள், தவறு இல்லை. கிட்டத் தட்ட அணைவருமே அப்படித்தான் தங்களைப்பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சரி யார் தான் அப்பொது திறமைசாலி? திறமையை வெளிப்படுத்துபவர் மட்டுமே.

ஒருவர் என்ன நினைக்கிறார், அல்லது எதற்குத் தகுதியுடையவர் என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், உண்மையில் வெளிப்படுவது அவர் செய்யும் செயல்கள் மட்டுமே.

எதைச்செய்கிறீர்களோ அது தான் நீங்கள்.

28 செப்டம்பர் 2014

தீர்ப்பும் அதற்கு பின்னரும்

நேற்று காலை நூலகம் சென்று திரும்பும்போதுகூட ஏதும் வித்தியாசமாகத் தெரிய்வில்லை, கிண்டி ரயில்நிலையம் அருகில் வழக்கத்துக்கு அதிகமாக இருந்த காவல் துறையினரைத்தவிர.

மதியம் தொலைக்காட்சியைப் பார்த்தபோது தான் பரபரப்பு தெரிந்தது. பல செய்திச் சானல்கள் சென்னையில் கலவரம் வரும் என்று அடித்துச் சொல்லியபடியிருந்தன. தமிழில் பார்த்த தந்தி டிவி சற்று பரவாயில்லை, ஆங்கில செய்திச்சானல்களைப் பார்த்தபோது சற்று கலக்கமாகவேயிருந்தது. சென்னையே கலவரத்தில் மூழ்கிவிடும் என்று தோன்றியது. 

சனிக்கிழமை மதிய உறக்கத்தைக் கலைத்தது மதுரையிலிருந்த நண்பரிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு. மதுரையில் கேபிள், மின்சாரம் இல்லாததால் செய்தியைக் கேட்க என்னை அழைத்திருக்கிறார். உடனடியாக லேப்டாப்பை உயிர்ப்பித்தால் கிட்டத்தட்ட செய்தி உறுதியாகிவிட்டிருந்தது. தொலைகாட்சி சானல்கள் உச்சகட்ட பரபரப்பில் இருந்தன. தமிழ்நாட்டின் தலைமை மாற்றம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

மாலை ஏழுமணியளவில் எனது நகர் வலத்தைத் தொடங்கினேன். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆர்க்காடு ரோடு முழுவதிலுமே கட்சித்தலைகலோ அல்லது காவல்துறை தலைகளோ தென்படவில்லை. ஆங்காகே கொஞ்சம் மக்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். வளசரவாக்கதில் இருந்த சரவணபவன் மட்டும் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யம். ஆனால் பிரச்சனை ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. 

மாலையில் சில நண்பர்களிடம் தொலைபேசினேன். பல பகுதிகளில் இந்த நிலைதான் இருந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டிருந்தது, ஆனால் கலவரம் பெரிதாக இல்லை.

பேஸ்புக் சென்று பார்த்ததில் சில நண்பர்கள் ஜெ.-க்கு ஆதரவான நிலைத்தகவல்களை வெளியிட்டுந்தனர். உண்மையில் இப்போது நான் மகிழ்சியடைவதா அல்லது துக்கமா?

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது அந்த வருடம் 1996, ஜெ. எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நிலைமை. ரஜினி அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியென நாங்கலெல்லாம் உற்ச்சாகத்தில் திழைத்த நாட்கள். சோ சொல்வதெல்லாம் வேத வாக்கு என்ன நம்பியிருந்த நாட்கள்.  எங்கு பார்த்தாலும் யாரிடம் பேசினாலும் அந்த பரப்பரப்பு நம்மைத் தொற்றுக்கொண்டிருந்த நாட்கள். 

ஆனால் அந்தப்பரபரப்பு அப்படியே சென்று விட்டது, சிலபல அரசியல் விளையாடுகளுக்குப்பிறகு திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. நாங்கலெள்லாம் எதிர்பார்த்த ரஜினியில் பங்களிப்பு திமுகவுக்கான தொலைக்காட்சி பிர்ச்சாரமாக இனிதே நிறைவடைந்தது.

நிற்க,

இப்போது பல வருடங்கள் கழித்து இன்னொரு வரலாற்றுத் தருணம். இப்போது நான் யார் பக்கம். சட்ட நுணுக்கள் பற்றி பேசுவற்கான தகுதியான ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால், இப்போத நிலைமையில் ஜெ, தான் தழிழ்நாட்டிக்கான தகுதியான முதல்வர் என்பது எனது எண்ணம். மிக உறுதியான, சட்டம் ஒழுங்கு பற்றி மிக அக்கறை கொண்ட, தான் நினைப்பதை நிறைவேற்றும் திறமைகொண்ட, மக்களின் நம்மிக்கையை முழுவதுமாகப் பெற்ற முதல்வர் ஜெ. இதை கட்சி சார்பின்றியே சொல்ல முடியும்.

இந்த நிலைமை எப்படி அவருக்கு பின்னடைவோ, அதேபோல் தமிழ்நாட்க்கும் ஒரு பின்னடைவுதான். ஆனால் இது முடிவு இல்லை.

இதை ஜெ. மற்றும் தமிழகம் எப்படி எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள். ஒரு வெற்றிடம் உருவாகையில் ஒரு தலைமையும் உருவாகிவிடும் என்ற வரலாற்று விதியின்படி ஒரு புதிய சக்தி உருவாகுமா அதை வெற்றிடம் உருவாவதி ஜெ. தடுக்க முடியுமா என்பது கவனிக்கவேண்டிய கேள்வி.






01 செப்டம்பர் 2014

உலகெலாம் புகழ் நம்ம ஏரியா VIP

நம்ம வீட்டுக்கு பக்கத்துல யாராவது வீ.ஐ.பி வீடு இருந்தால் இரு பெருமை தானே. எங்க வீட்டுக்கு பக்கத்துல இருப்பது சேக்கிழாருடையது, பெரியபுராணம் எழுதியவர். பெரியவரைப் பார்த்து ஒரு வணக்கம் வைக்காமல் இருக்கலாமா? சென்ற வாரயிறுதியில் கிளம்பிவிட்டேன்.

குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்வழியில் வலதுபுறம் செல்லும் ஒரு சிறிய சாலையில் சென்றால் இருக்கிறது அவரது வீடு, சரி கோவில்.




சிறிய கோவில்தான், ஆனால் சுத்தமாக பராமரிக்கப் படுகிறது. அதிக கூட்டமில்லை. உண்மையைச் சொன்னால் எங்களைத் தவிர யாருமில்லை அப்போது. சரிதான் இந்தக் கோவிலுக்கு எந்தப் பரிகாரமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை போல. அமைதியே சிறப்புதான் இப்படிப்பட்ட நினைவிடங்களுக்கு.

காலையிலும் மாலையிலும் ஒவ்வொரு மணி நேரம் தான் பூஜை நேரம் என்றாலும், கோவில் எப்போதும் திறந்திருக்கிறது. பக்கத்திலயே அவர் வழிபட்டதாகச் சொல்லப்படும் ஒரு சிவன் கோவிலும் பக்கத்திலேயே இருப்பது போனஸ்.






உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்


நிலவு உலாவிய நீர்மலி வேணியன்



அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்



மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

பெரியபுராணம் இங்கே படிக்கக் கிடைக்கிறது..


நம்ம புராணமே பெரிய புராணமாக இருக்கே இதுல இது வேறயா என்று சலித்துக்கொள்கிறீர்களா? இதையும் படியுங்கள்  :-)




31 ஆகஸ்ட் 2014

பிள்ளையாருக்கு எந்த ஊரு?

பரவசமாகத் தான் இருக்கிறது, இவ்வளவு வரலாற்றாய்வாளர்களை ஒருசேரப்பார்பதற்கு. எங்கு இருந்தார்களோ தெரியவில்லை வரவேண்டிய நேரத்துக்கு, அது தான் இந்த விநாயகர் சதுர்த்திக்கு சரியாக ஆஜராகிவிட்டனர்.

இந்த விநானகர் எங்கே இருந்து வந்தார் என்பதே கேள்வி. இவர்களெல்லாம் தமிழ் நாட்டைவிட்டு வேறு எங்கிருந்து வந்த நம்பிக்கைகளையும் பொருத்துக்கொள்ள மாட்டார்கள் போல.  வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு? இருக்கட்டும், நமக்கு வேண்டாம் இந்தப் பிரச்சனை.
நமக்கு தெரிந்தவரை பெரும்பாலான வீடுகளில் இருந்த பிள்ளையார்கள் அந்தந்த தெருமுனைகளிலோ அல்லது கடை வீதிகளிலோ தான் உருவானவர்கள். 

இன்னும் சில வீடுகளில், குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கொழுக்கட்டையில் உருவான பிள்ளையார்கள் பல. 

இதோ வீட்டில் உருவான ஒரு பிள்ளையார்.


09 ஜூன் 2014

திடுமென வந்த மழை

திடுமென இடியிடிக்க விழித்துப் பார்த்தேன். அங்கே பார்க்க ஏதுமிருக்கவில்லை. இருந்தது இருட்டுதான். உண்மையான இருட்டு. முழுமையான இருட்டைப் பார்ப்பதென்றால் அது மின்சாரம் இல்லாமலிருந்தால் தான் முடியும், இல்லையெனில் எங்கிருந்தாவது ஒளி கசிந்துவந்து  இருட்டைக் கெடுத்துவிடும். அதேபோல் முழுமையான இருட்டை அனுபவிக்கவேண்டுமெனில் அது மழைபெய்யும்போது தான் முடியும். கோடையில் உடல் தகிக்கும்  வெப்பமும் இருட்டின் அனுபவதைக் கெடுத்துவிடும்.

ஆர்வத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல பாய்ந்துவந்து அணைத்துக் கொண்டது  மழைச் சாரல். இறுக மூடியிருந்த அறையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குளிர்சதனம் வேலைசெய்யாமலிருந்ததால் கொஞ்சமாக வேர்க்கத் தொடங்கியிருந்த உடலில் சட்டென சாரல் பாய திடுக்கிட்டு நின்றேன், சிறு திடுக்கிடலுக்குப் பின்பு அனிச்சையாக  தடாலென ஜன்னல் கதவுகளை மூடினேன். ஓரிரு விநாடிகளில் சற்று சுதாரித்து ஜன்னலின் ஒரு கதவை மட்டும் திறந்தேன்.

வழக்கமான மழையில் இவ்வளவு சாரல் இந்த அறையில் வந்ததில்லை. மழையுடன் வந்த பெரும் காற்றின் துணைகொண்டு சாரல் உள்ளே பாய்ந்து வந்தது. கொஞ்சம் முயற்சியுடன் கட்டிலை கொஞ்சம் தள்ளி வைத்தேன்.

மழையைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு குழப்பம், இது உண்மையா அல்லது கனவா, இரவு தூங்கப்போவதற்கு முன் துவைத்துக் காயப்போடும்போதுகூட மழை வரும் எந்த அறிகுறியும் இருக்கவில்லையே. இதெப்படி இவ்வளவு பெரிய சாத்தியம், நேற்று ஜெயமோகன்  தளத்தில் படித்த "இடவப்பாதி" கட்டுரையைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கிறேனா என்ற நினைவும் வராமலில்லை.

கலையில் விழிப்புவந்தபோது  மழை பற்றிய எந்த சந்தேகமும் இருக்கவில்லை. மிக இயல்பான விழிப்பு அது. உடலும் மனமும் எப்போதையும் விட மிகப்   புத்துணர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. திறந்திருந்த ஜன்னலில் ஒரு குருவி அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்தக் குருவி எனக்கு  முன்பாக எழுந்து என்னைவிட உற்சாகமாக இருந்தது. அந்தக் குருவியின் வீட்டில் எத்தனை ஜன்னல் கதவுகள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும்.