Unordered List

19 ஆகஸ்ட் 2011

கேணி சந்திப்பு - வண்ணநிலவன்

"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது.." என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.


வண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.
தனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.
பல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.
வண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.
ஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.
தன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.
தான் கிறித்துவனாக "கொஞ்ச காலம்" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்
சமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
சினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.

எழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.
வண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.
சில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
சில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.