Unordered List

10 நவம்பர் 2018

ராட்சஸன்

டெக்னிகலாக நல்ல கேமரா அங்கிள், சிறப்பான நடிப்பு, செம எடிட்டிங் பரபரப்பா போகுது படம் எனவே இது மிக நல்ல படம் என்றார் நண்பர். அந்தப் படம் இப்படி போகிறது

இந்தப் பட ஹீரோ ஒரு இயக்குனர், குழந்தையை வெட்டிக்கொல்வதைப் எப்படி டீடெய்லாக படமாக்குவது என்று கனவுகாண்பவர், அந்தக் கனவில் கூட குழந்தையை வெட்டும்போது அதில் ரத்தம் வடியவில்லையே என வருத்தம் கொள்பவர். நிறைய வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் படித்து தன் மனதில் உருவாக்கிக்கொண்ட இந்தக் கருவில்  படம் எடுக்கும் லட்சியத்துக்காக, தன் மாமாவால் மிக எளிதில் வாங்கிக்கொடுக்கமுடிந்த போலீஸ் வேலைக்குச் செல்லாமல் சினிமாவுக்கு முயற்சித்துக்கொண்டிருப்பவர்.

ஒருவழியாக அவர் போலீஸ் வேலைக்குச் சேர அங்கு ஒரு குழந்தையின் கொலை விசாரணைக்கு வருகிறது. இவர் வெளிநாட்டு செய்திகளைப் படித்து பேப்பர் கட்டிங் செய்து வைத்திருப்பதைப் போலவே, அந்தக் கொலையாளியும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான பொம்மையை வாங்கி ஸ்டாக் வைத்து கொலை செய்பவன். அந்த பொம்மையைக் குறியீடாக வந்த்துச் சென்றிருக்கிறான்.

கதை தமிழ்நாட்டில் நடப்பதால், அங்கிருக்கும் தமிழக போலீஸுக்கு அந்த பொம்மையின் அர்த்தம் தெரியாமலிருக்கிறது. ஆனால் வெளிநாட்டு செய்தி படித்து குழந்தைகளைக் கொல்லும் சினிமா எடுக்கும் ஆர்வம் இருக்கும் ஹீரோவுக்கு மட்டும் இறக்குமதி பொம்மை குறியீடு புரிந்துவிடுகிறது.

தன் மாமாவின் மகளான பெண்குழந்தை உட்பட இன்னும் பல குழந்தைகள் கொடூரமாக் கொல்லப்பட்டபின் அந்த வில்லனை ஹீரோ கொல்கிறான். இந்தச்  செய்தி பரபரப்பானதான் தன் கனவான அந்த சினிமா இயக்குனர் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியில் ஹீரோ சிரிக்க, டைரக்டரின் பெயர் போடப்படுகிறது. படம் சுபம்.

முன்னேறிய நாடுகளுக்கு சென்று திரும்பும்போது அது போன்ற முன்னேற்றங்கள் இங்கு நடந்தால் எப்படி இருக்கும் என கனவுகண்டு அதற்கான தங்களால் முடிந்த பணிகளைச் செய்வது இயல்பானது தான். ஆனால் அங்கு நடக்கும் குற்றம் இங்கு நடக்கவில்லையே என ஏங்கி கனவுகண்டு, அது நடந்தது இயக்குனர் மகிழும் இயக்குனர் கொஞ்சம் ஆபத்தானவராக தெரிகிறார், ஆனால் திரைக்கதையில் பரபரப்பில் என் நண்பர் போன்ற நம் மக்கள் அதை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.

குற்றங்களை வன்முறையை படம் எடுக்கக்கூடாதா என்று கேட்டால் Saving private Ryan, Gladiator, அஞ்சாதே போன்ற பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. வன்முறை காட்டப்பட்டாலும் அதன் மேல் வருத்தம் வெறுப்பு உருவாக்கும் இந்த படங்களில் இருந்து வெளிநாட்டு இறக்குமதி விஷயத்தை விரும்பி எடுத்து மகிழ்ச்சியுடன் முடியும் இந்தப் படம் எப்படி மாறுபடுகிறது எனபதில் இருக்கிறது வித்தியாசம்.

11 செப்டம்பர் 2018

எகிறும் பெட்ரோல் விலை, பறக்கவிடும் எலான் மஸ்க்

சில மாதங்களுக்கு முன் அமெரிக்கப் பத்திரிக்கைகள் எலான் மஸ்க் ஏன் ஒரு தோல்வியாளராக இருக்கிறார் என கட்டுரைகள் எழுதின. அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என அறிவுரை சொல்லிக்கொண்டிருந்தன. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை, அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர்களை டீல் செய்தவிதம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

”நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா?”.

சென்றவாரத்தில் பத்திரிக்கைகளில் மீண்டும் ஒரு பூகம்பம். புகை பிடிக்கும் இவரிடமா கார் வாங்குவீர்கள் என அவர் மீதான எதிர்ப்புப் பிரச்சாரம் சூடு பிடித்தது.பத்திரிக்கைகளின் எதிர்ப்புப் பிரச்சாரம்


நடுநிலையாளர்களும் பத்திரிக்கைகளும் நல்லவர்கள் தான்,  நல்லது என நினைப்பதைத்தான் சொல்கிறார்கள், ஆனால் என்ன பிரச்சனை என்றால், அவர்கள் எதிரி என நினைப்பவர்களை நாமும் எதிரியாக நினைக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள், இல்லை என்றால் நமக்கும் முத்திரையைக் குத்திவிடுவர்.  ஆனால் இந்த போலி தார்மீகக் கோபம் பெரும்பாலும் எதிர்மறை சக்தியாகவே இருப்பதையும் கவனிக்க முடியும்.


கடந்த சில வாரங்களாக பத்திரிக்கைகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளான நிலையில் நேற்றைய launch, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.  உலகத்தின் ஒரு பெரிய தகவல்தொடர்பு செயற்கைக்கோளை நேற்று வெற்றிகரமான விண்ணில் செலுத்தியுள்ள்ளது SpaceX.
சீறிப்பாய்ந்த Falcon 9


இவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள. ஒரு நிகழ்ச்சி.சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சி. SpaceXன் சாதனையான Falcon heavy என்ற ராக்கெட்டை உலகத்துக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அதன் திறனை மக்களுக்குக் காட்டவேண்டும். இதற்கு பல தரவுகள் கொடுத்திருக்கலாம். ஆனால் இவர் செய்தது யாரும் யோசிக்க முடியாதது. தனது இன்னொரு சாதனையான டெஸ்லா காரை அந்த ராக்கெட்டில் வைத்து அனுப்பினார். அதிலும் அந்தக் காரில் தான் விரும்பிப் படித்த, தனது கனவுக் உருவாகக் காரணமாக ஐசாக் ஹசிமோ கதைகளை வைத்து அனுப்பினார். சாதனையாளர்களை இயக்குவது கனவுகளே என உலகுக்குக் காட்டினார்.


விண்ணுக்குப் பறந்த கனவு: ஐசாக் ஹசிமோ கதைகள்

பெட்ரோல் விலை உயர்வு நம்மை பாதித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், நமது ஊடகங்களும் அறிவிஜீவிகளும் இதையும் தங்கள் வழக்கமான (மோடி ஆதரவு.எதிர்ப்பு) அரசியல் நிலையைத்தாண்டி யோசிக்க முடியாமல் அதே அரசியலில் உழன்றுக்கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற  கனவுகளும் சாதனைகள் நம் நம்பிக்கையை மீட்கின்றன.

பெட்ரோலியம் என்பது தீரக்கூடிய எரிபொருள் உலகைக்காப்பாற வேண்டுமானால் இதிலிருந்து மீள பெட்ரோலியம் இல்லாத காரை எல்லா வசதிகளுடம் கொண்டுவரவேண்டும் என்பது சில வருடங்களுக்கு முன் ஒருவரின் கனவு. எலெட்ரிக் கார் என்பது பொருட்காட்சியில் இருக்கும் விஷயம் என்ற நிலையை மாற்றி மார்கெட்டில் கடும் தேவை இருக்கும் விஷயமாக மாற்றி இருப்பது இந்த அரசியல் சரிகளில் மாட்டிக்கொள்ளாத கனவின் சாதனை.

உலகின் வளங்களுமே தீரக்கூடியவை தான், மனிதம் செழிக்கவேண்டுமானால் பூமியைத்தாண்டிச் செல்லும் சக்தி வேண்டும் என இன்னொரு கனவு.  நேற்று நடந்திருக்கும் Falcon 9 வெற்றி அந்தக் கனவின் வழியில் இன்னொரு பாய்ச்சல்.

இவை அரசியலாளர்களுக்குப் புரிய வாய்ப்பில்லை, ஆனால் அந்தப் பிரச்சாரங்களுக்கு கனவுகளைத் தடுக்கும் சக்தியில்லை.

03 ஜூலை 2018

உலகநாயகர்கள்

கால்பந்து விளையாட்டு பார்க்க ஆரம்பித்த காலத்தில் எனக்கு முதலில் பிடித்த அணி அர்ஜெண்டைனா. எனக்கு மட்டுமல்ல அந்தக் காலத்தில் நம்ம ஊரில் கால்பந்து உலகக்கோப்பை பற்றி தெரிந்த அனைவருக்குமே பிடித்த அணி அதுவாகத்தான் இருந்திருக்கும். அதற்கு முக்கியக் காரணம் மாராடோனா. கால்பந்து உலகக்கோப்பை என்று ஒன்று இருக்கிறது என்ற செய்தி வந்து சேர்வதற்கு முன்னரே மாரானோடாவின் வீரதீர பிரதாபக் கதைகள் எங்களை வந்து சேர்ந்துவிட்டன. அவர் பந்தை எடுத்தால் கோல் போடாமல் விடமாட்டார் என்று உறுதியாக நம்பினோம். எனவே அவரது அணியான அர்ஜெண்டைனா நமக்கு பிடித்த அணியாக இருந்ததில் ஆச்சர்யமில்லை.

நான் பார்த்த 1998 உலகக்கோப்பையில் மாராடோனா இல்லாவிட்டாலும் அவரது அணி என்ற காரணமே அந்த அணியை ஆதரிக்கப் போதுமானதாக இருந்தது. அந்த அணியைப் பிடித்தற்கு எனக்கு மேலதிகமாக ஒரு தனிப்பட்ட டெக்னிகல் காரணமும் இருந்தது. அது எங்கள் வீட்டு சாலிடர் தொலைக்காட்சி. கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளைப் பார்ப்பது ஒரு சவால். அதிலும் இரு அணிகளும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்து வந்தால் ஒன்றுமே புரியாது, ஆனால் அர்ஜெண்டைனா உடை தனித்துவமானது; அந்த கோடுபோட்ட சட்டையை எந்த டிவியில் எளிதாகப் பார்க்க முடியும். எனவே அந்த அணியின் விளையாட்டுகளை விடுவதில்லை. இந்தக் கணக்கில் பார்த்தால் க்ரோஷியாவின் உடையும் தனித்துவமானது தான். அதன் கட்டம்போட்ட டிசைனும் கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியில் பார்க்க இனிமையானது. அந்த உலகக்கோப்பையில் ஆரம்பதிலேயே அந்த அணியின் ஷூக்கர் எங்களுக்குப் பிடித்த வீரராக ஆகி அமோக ஆதரவைப் பெற்றார். அவர் தான் அந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து கோல்டன் பூட் பரிசு பெற்றார் என்பது வரலாறு. அந்தச் சாதனைக்கு அதற்கு ஒரு முக்கிய காரணம் எங்கள் வீட்டு கருப்புவெள்ளைத் தொலைக்காட்சியும் அதனால் எங்களது ஆதரவும் என்பதை சோஷியல் மீடியா இல்லாத அந்தக் காலத்தில் அவர் அறிந்திருக்க நியாயம் இல்லை.
அந்த உலகக்கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி ப்ரேஸில். மாரொடானோ அளவுக்கு இல்லாவிட்டாலும் பீலே பற்றியும் வீரதீர தொன்மங்க்கள் நிறைய இருந்தால் ப்ரேஸிலும் நம் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அணியாக இருந்தது. அந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்பட்ட வீரர் ப்ரேஸிலின் ரொனால்டோ. அதுமட்டுமல்லாமல் போனிடெயில் ஸ்டையுடன் இருந்த இத்தாலியிம் ரொபெர்டோ பேஜியோ, ஸ்டெயிலான இங்கிலாந்தின் டேவிட் பெக்கம்,ப்ரேஸிலின் ரொனால்டோ, ரொபர்டொ கார்லோஸ் என பல அணிகளிலும் ஹிண்டு பேப்பரின் தயவால் பல பெயர்களைத் தெரிந்து வைத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் ஆதரவு ஸுக்கருக்குத்தான் இருந்தது

புகழ் பெற்ற அணிகள் என்பதனால் வரும் ஆர்வம் எப்படியோ அதுபோல க்ரோஷியா போல சிறிய அணிகள் ஜெயிப்பதிலும் நமக்கு ஒரு ஆர்வம் உருவாகிவிடுவதுண்டு.  ஆனால் அந்த கோப்பையை வென்றது நாங்கள் சற்றும் விரும்பாத ஃப்ரான்ஸ். இறுதி ஆட்டத்தில் ஹீரோக்கள் நிரம்பிய ப்ரேஸிலை மூன்று கோல்கள் அடித்து எளிதாக வென்றது சிஸ்டமேடிக்கான ப்ரான்ஸ் அணி. எனக்கு தென்னமெரிக்க அணிகளைப் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் மிகவும் முறையாக விளையாடும் ஐரோப்பிய அணிகளைப் பார்ப்பதில் இருப்பதில்லை. இவர்களுக்கிடையில் விளையாடுவதிலும் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. 32 அணிகள் என்பதால் கிட்டத்தட்ட உலகத்தின் பல வேறுபட்ட நாடுகளின் விளையாட்டைப் பார்ப்பதும் இந்தக் கால்பந்து உலகக்கோப்பையின் ஒரு முக்கிய அம்சம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு ஸ்டைல்.

தென்னமெரிக்க அணிகள் ஸ்டைலாக விளையாடுவதில் புகழ் பெற்றவர்கள், அங்கு ஹீரோக்களுக்கு மதிப்பு அதிகம். ஐரோப்பிய அணிகள் மிக முறையாக சிஸ்டமேட்டிக்காக விளையாடுபவர்கள். தென்கொரியா, ஜப்பான் அணிகள் டீசண்டான விளையாடுபவர்கள், ஆப்ரிக்க அணிகளுக்கு நேர்மாறானவர்கள் இவர்கள்.

இந்தக் காரணத்தினால் தான், இந்த 2018 உலக்கோப்பையில், முதல் சுற்றில் ஜப்பானும் ஆப்பிரிக்க அணியான செனகலும் சம அளவு புள்ளிகள் பெற்றிருந்தாலும், டீசண்டா விளைடாடி குறைவான யெல்லோ கார்ட் வாங்கிய ஜப்பான் அடுத்தசுற்றுக்கு தகுதிபெற்றது.
ஆனால் யெல்லோ கார்ட் வைத்து மதிப்பிடுவது தவறு, விளையாட்டென்றால் இறங்கி விளைடாடுவதே சரி என செனகல் குற்றச்சாட்டு வைத்துள்ளது நல்ல விவாதம். இதை உலகில் மாறுபடும் மதிப்பீடுகளின் விவாதமாகக் கூடப் பார்க்கலாம்.

கோஸ்டாரிக்காவுடன் ப்ரேஸில் விளையாடிய மேட்ச் இன்னொரு உதாரணம். நன்றாக விளையாடினாலும் கிட்டத்தட்ட ஆட்ட முடிவு வரை ப்ரேஸிலால் கோல் அடிக்க முடியவில்லை. அப்போது ஒரு பெனல்டி வாய்ப்பு ப்ரேஸிலின் ஹீரோவான நெய்மாருக்குக்  கிடைத்தது. ஆனால் டிவியில் ரிவியூ செய்த நடுவர், ரெம்ப நடிக்காதீங்க பாஸ் என்று சொல்லி அதை ரத்து செய்துவிட்டார். அடுத்த சில நிமிடங்கள் நடந்தது ப்ரேஸிலின் வெறியாட்டம், விளைவுகளைப் பற்றி கவலைப் படாமால் நெய்மர் யெல்லோ கார்ட் வாங்கினார். மொத்த அணியே ஒரு முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பலர் விமர்சித்தாலும் அது தான் அந்த அணியின் குணம். கடைசி நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து ப்ரேஸில் வெற்றியடைந்தது. இதை ஒரு ஐரோப்பிய அணியிடம் பார்ப்பது முடியாது.

இந்த உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வீட்டுக்கு அனுப்பிய அணி நம் ஆசியாவின் தென்கொரியா. இந்த அணியும் கடுமையாகப் போராடுதல் பவுல் செய்தல் எல்லாம் உண்டு, ஆனால் எதிரணி வீரரை வீழ்த்தி யெல்லோ கார்ட் வாங்கினாலும், அவர் எந்திரிக்கும் வரை பக்கத்திலேயே இருந்து தலை குனிந்து மன்னிப்பும் கேட்டு ரெம்ப நல்லவங்களாக இருப்பது இந்த அணியின் சிறப்பு.

கிரிக்கெட் பார்க்கும் நம் மக்களுக்கு கால்பந்து பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம் குறைவு. அதற்கு ஒரு காரணம், பலருக்கும் அதன் ஹீரோக்கள் பற்றி அறிமுகம் இல்லாதது தான். விளையாட்டு வீரர்கள் மீது ஆர்வம் வரமால் விளையாட்டின் மீது ஆர்வம் வர வாய்ப்பிலை. விளையாட்டுன் மீது ஆர்வம் வருவதற்கும் விளையாட்டு வீரர்கள் மீது ஒரு நெருக்கம் வருவதற்கும் மீடியாவும் அவை உருவாக்கும் கதைகளும் தொன்மங்களும்  மிக முக்கியம். அந்தக் காலத்தில் வீட்டில் வாங்க்கிய ஹிண்டு பேப்பர் அந்த வகையில் மிகவும் உதவியது.

இன்னொரு காரணமும் உண்டு. கிரிக்கெட்டில் ஆரம்பம், நடுப்பகுதி முடிவு என்ற சீரான திரைக்கதை போன்ற வடிவம் உண்டு. ஆனால் கால்பந்தில் அப்படி முறைப்படி எதுவும் நிகழ்வதில்லை. கால்பந்தில் முழு ஆட்டத்திலும் எந்த கோலும் போடாத ஆட்டங்க்களும் உண்டு. சில நிமிடங்கள் முழு ஆட்டத்தை நிர்ணயிக்கும் நிலையும் உண்டு. மிக நன்றாக விளையாடும் அணியை, எதிரணியின் மிக கடுமையான தடுப்பாட்டத்தின் மூலம் டிரா செய்யும் ஆட்டங்களும் உண்டு. என்னதான் ஒருவர் பெரிய வீரராக இருந்தாலும் கால்பந்துபோட்டியில் அந்த அணியின் தன்மையே வெற்றியை நிர்ணயிக்கிறது.  களத்தில் வீரர்கள் ஆடும் விளையாட்டை கவனிப்பதோடு, வீரர்களை மாற்றி பயிற்சியாளர் அணியின் தன்மையையே மாற்றும் விளையாட்டையும் சேர்ந்து கவனிப்பது முக்கியம்.

இன்றைய நிலையில் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது. சூப்பர் ஸ்டார்களான க்ரிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் போர்சுகலும் அர்ஜெண்டைனாவும் இன்னொரு முக்கிய அணியான ஸ்பெயினும் இரண்டாம் சுற்றில் வெளியேறி அதிர்ச்சியளித்துவிட்டன. இருந்தாலும் ப்ரேஸில் மெக்ஸிகோவை வென்று காலிறுதிக்குச் தகுதிபெற்றிருக்கிறது. ஒரு கோல் போட்டும் இன்னொரு கோலுக்கு உதவியும் அந்த அணியின் நெய்மார் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். இருந்தாலும் இன்றைய ஆட்டத்திலும் அவரது ஓவர் நடிப்பும் அவர் மீதான விமர்சங்களை உருவாக்க்காமல் இல்லை, கால் பட்டதற்கு தரையில் விழுந்த மீன் போல அவர் துள்ளியது அவரது வெறுப்பாளர்களுக்கு இன்னும் வெறுப்பை உருவாக்கும். ஆம் பாராட்டும் எதிர்ப்பும் இருந்தால் தான் அவர் ஸ்டார். இந்த உலகக்கோப்பையில் இன்னும் சுவாரஸ்யம் இருக்கிறது.

31 மே 2018

”நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா?”. பத்திரிகையாளர் சந்திப்பின் பரபரப்பு

முட்டாள்த்தனமான கேள்வி இது.,என்றார் எலான் மஸ்க். அவர்  “நெக்ஸ்ட்... வேற கேள்வி இருக்கா””  என்றதும் அந்த மூத்த  நிருபர்கள் அதிர்ச்சயடைந்தனர். அதிஷ்டவசமாக வழக்கமான மீடியா கூட்டத்தைச் சேராத ஒரு யுடியூப் சானல் நடத்துபவர் ஒருவரும் அங்கிருந்தார், அவர் சுவாரஸ்யமான பல கேள்விகள் கேட்க பரபரப்பாக கூட்டம் நடந்தது.

ஆனால் அடுத்தநாள் முக்கிய ஊடகங்களில் அந்த சுவாரஸ்யமான கேள்விகள் பற்றி ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தால் அது தவறு.  எலான் மஸ்க் மீடியா மீது கோபப்பட்டார்  மீடியாவைத் திட்டிவிட்டார் என்பதே முக்கியச் செய்தி.

எலான் மஸ்க் என்பவர் உலகின் அதி வசதிகள் கொண்ட டெஸ்லா காரை தயாரிக்கும் நிறுவனம் மட்டுமல்லாது விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் நிறுவியவர். விண்வெளியில் மனிதர்கள் குடியேற்றம் அமைக்கும் கனவுகொண்டவர்.  அந்த சந்திப்பில் அவரது நிறுவனத்தின் நிலைப்பாடு என்ன, அடுத்து என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதை அறிய மக்கள் ஆர்வமான இருந்தனர். ஆனால் அவர்களுக்குக் பல ஊடகங்கள் மூலம் கிடைத்தது அவர் தங்களை மதிக்கவில்லை என்பதற்கான கோபம் மட்டுமே.

எலான் மஸ்க் அந்த நிருபரை மதிக்காமல் இருந்தது பற்றி ஊடகங்கள் வருத்தமடைய நியாயம் உண்டா என்றால் உண்டு. ஆனால் அது அவர்களுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை. பொதுமக்களுக்கு அதை விட டெஸ்லா பற்றியே ஆர்வம் அதிகம். செய்திவாசிப்பவர் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்றால் அதுவும் பிர்ச்சனை தான், அதை அவர் சரி செய்துகொள்ளவேண்டும். ஆனால் அது மக்கள் பார்க்கும் செய்தியில் சொல்லிக்கொண்டிருப்பது நியாயம் இல்லை. பொதுமக்களின் பிரச்சனையைச் சொல்லவே செய்தி பார்க்கிறார்கள் மக்கள்.

ஒரு நாள் நடந்த ஒரு நிகழ்வில் ஒரு சின்ன விஷயத்தை மட்டும் எடுத்து மீண்டும் மீண்டும் பேசி எழுதி, அது மட்டுமே நடந்தது போல நிறுவ முயற்சிப்பது உண்மையற்றது எனத்தெரிந்தாலும் அது செய்யப்படுகிறது. இதற்க்குக் காரணம் துருவப்பட்டிருக்கும் (polarized) மனங்கள், எவ்வளவு வாசிப்பு இருந்தாலும் துருவப்பட்ட மனம் தன் நிலைக்கு மாறான ஒரு விஷயத்தை ஏற்றுக்கொள்ள தயங்கும், நேரடியான தகவல்கள் இருந்தாலும் எப்படியாவது நியாயப்படுத்த முடியுமா என தவிப்பு இருக்கும்.  இன்றிருக்கும் நிலையில் இது ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது என்றாலும் மக்களுக்குச் செய்தியைக் கொண்டு செல்லக் கடமை இருக்கும் மீடியா நிருபர்கள் இந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் இந்தத் துருவப்படுத்தல்களுக்கு ஆளாகாமல் இருப்பது முக்கியம்.

என்ன நடந்தது என்பதை செய்தியாகச் சொல்லுங்கள் அது முக்கியம். அது சரியா தவறா என மக்கள் முடிவு செய்ய ஒரு வாய்ப்பும் இருக்கவேண்டும் .என்ன நடந்திருக்கவேண்டும் என்பது பற்றிய உங்கள் ஆதங்கம், நடந்தது பற்றிய உங்கள் கருத்து இவையெல்லம் தனியாக கட்டுரையாகச் சொல்லுங்கள் ஆர்வமிருப்பவர்கள் அதையும் படிப்பார்கள்.

இந்தப் பிரச்சனை காரணமாக எலான் மஸ்க் நேரடியாக ட்விட்டரில் கடுமையான போரில் இறங்கியுள்ளது பரபரப்பாகியிருக்கிறது. இந்நிலையில் செய்திகளில் நிருபரின் கருத்தை திணிப்பதோ, அல்லது பேட்டியின்போது பேட்டி கொடுப்பவர் யார் தரப்பைப் பேசவேண்டும் என இவர்கள் எதிர்பார்ப்பதோ, உண்மையை அறிய ஆர்வம் உள்ள மக்களுக்குச் செய்யும் நியாயம் ஆகாது என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

மக்கள் பிரச்சனையைப் பேசவே மீடியா... வேறுமாதிரி இல்லை. மீடியா பிர்ச்சனையை பேசுவதைத் தவிர மக்களுக்கு வேறு வேலைகளும் இருக்கின்றன.

02 பிப்ரவரி 2018

படைவீரன்கிரிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தில் ஒரு காட்சி. உடனடி மறதி கொண்ட ஹீரோ ஒரு பரபரப்பான சேஸிங்கில் இருக்கிறான். தான் துரத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறான். வேகமாக ஓடி இன்னொருவனை நெருங்க, அவன் துப்பாக்கியால் சுடும்போது தான் அவனுக்கேத் தெரிகிறது, ஹீரோ அந்தச் சேஸிங்கில் துரத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என. ஒருவேளை அவனுக்கு அப்போதைய சூழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்?


சூழலின் பரபரப்பில் திக்குத்தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனின் உலகத்தை அப்படியே ப்ரீஸ் செய்து மொத்த நிலைமையையும் ஒருவர் விளக்கினால் எப்படி இருக்கும், படைவீரனில் அப்படி ஒரு தருணம், ஆனால் மிலிட்டரி மாமாவான பாரதிராஜா ஹீரோவுக்கு சொல்வது அப்போது இருக்கும் சூழல் மட்டுமல்ல, மனிதத்தின் வரலாறு. அதன்பின் இந்த படைவீரன் அதை எதிர்கொள்ளும் முறை எதிர்பார்ப்பை மிஞ்சுவது.பெரும்பாலும் நாம் சினிமாவில் பார்ப்பது சினிமாவைப் பார்த்து எடுக்கப்படும் சினிமாக் கிராமங்கள். ஆனால் உண்மையான கிராமத்தில் அதை விட கலகலப்பு அதிகம். படைவீரனில் உண்மையான கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது.  போலீஸ் ஸ்டேஷனில் அட்டகாசம் செய்ய்யும் பாட்டி, கூடவே இருந்து பணத்தை ரெடி செய்ய உதவும் நண்பர்கள், ஊர்க்காரர்கள் மற்றும்  ஊர்த்திருவிழா என கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது. படம் முடிந்தது யோசித்துப் பார்த்தால், நகைச்சுவை காட்சிகளில் இருந்து திருவிழா வரை ஒவ்வொன்றும் படத்தின் உச்சத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக  இயல்பாக நகர்த்திச் செல்வதை உணர முடியுவது ஆச்சர்யம். அதுவும் தொடக்கப் பாடலில் வரும் ஊர்த்திருவிழா கடைசியில் இன்னொன்றாக உருவெடுப்பது  உச்சம்


முழுப்பாவாடை, ஆண் சட்டை போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊருக்குள் பறக்கும் மலர் மிக இயல்யான கிராமத்துப்பெண்ணாக இருக்கிறாள். அழுத்தமான பெண்ணான அவளது மாற்றங்கள் சில அதிர்ச்சியளித்தாலும் அதுவே அவளை நமக்கு மிகவும் பிடிக்கச்செய்கிறது.முனி மீண்டும் கிராமத்துக்கு போலீஸாக வந்த பின்னர், அவர்களுக்குள்  மாலையில், விளக்கொளியில் நடக்கும் அந்த சந்திப்பு நிஜமான காதல் தருணம்.

முனியின் அக்கா, கைகுழந்தையுடன் இருக்கும் அவள் நண்பனின் அக்கா என பெண் பாத்திரங்கள் மிக உறுதியாவனவர்களாக இருக்கிறார்கள். இவர்களே இந்த கிராமத்தில் நம்மை வாழச்செய்கிரார்கள். கதையும் அவர்கள் வழியாகவே நடக்கிறது,


தண்ணியப்போட்டு வந்து உங்களை கவனிச்சிக்கிறேன் என்று சைகையில் சொல்லும் மிலிட்டரி மாமா நம் மனத்தை ஆக்ரமிக்கிறார். பின்னர் கையறு நிலையில் போலிஸிடம் அழும்போதும், இறுதியில் முனியை உறுதிப்படுத்தும்போதும் அவரது இடத்துக்கு நியாயம் செய்கிறார், அதற்கானக் காரணங்களும் கதையில் உறுதியாக இருக்கின்றன. மிலிட்டரி பெருமை ஊர்ப்பெருமை என ஜாலியாக இருக்கும் மிலிட்டரி மாமா தான் தங்கள் மீதான ஒரு நிஜமான விமர்சனத்தை வைக்கிறார்.


கவலையில்லாத இளைஞனாக அறிமுகமாகும் நாயகன் போலீஸ் பயிற்சிக்கு பயந்து ஊருக்கு வந்து, அவனது உலகமான வீட்டார், நண்பர்கள், மிலிட்டரி மாமா அனைவராலும் பிடிக்கப்பட்டு போலீஸிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் அதே கலகலப்பில் இருக்கிறான். அவனை மாற்றும் அந்த முடிச்சு இடைவேளையை சுவாரஸ்யப்படுத்துகிறது.

அவன் கேட்காமலே வந்த காதல், அவன் விட்டு விட நினைத்த போலீஸ் வேலை, தன் ஊருக்கு நண்பனுடன் விடுமுறையில் போக நினைத்த நேரத்தில் அங்கே போலீஸாக போக வேண்டிய நிர்பந்தம். தனக்காக எதையும் செய்யும் ஊர் நண்பர்கள் ஒரு முக்கிய இழப்புக்கு காரணமாவது என சக்ரவியூகத்தில் இருக்கும் அபிமன்யுவாக முனி தவித்தாலும் ஒவ்வொரு சோதனையும் அவனை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது. அனைத்தையும் வென்ற அவனுக்கு கடைசியில் வரும் உச்சகட்ட சோதனையில் யாரும் எதிர்பார்க்காத முறையில் வென்று நிஜமான வீரனாக ஒளிர்கிறான்.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சரியாகப் பொருந்தியுள்ளன. தனுஷ் பாடல் செம.

கிராமத்துக்களத்தில் கலகலப்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தப்படம் கிராமத்துக்கானது மட்டுமல்ல. உண்மையான கிராமத்தில் முளைத்த இந்த நிஜ வீரன் உலக மனங்களை வெல்பவன்.