திடுமென இடியிடிக்க விழித்துப் பார்த்தேன். அங்கே பார்க்க ஏதுமிருக்கவில்லை. இருந்தது இருட்டுதான். உண்மையான இருட்டு. முழுமையான இருட்டைப் பார்ப்பதென்றால் அது மின்சாரம் இல்லாமலிருந்தால் தான் முடியும், இல்லையெனில் எங்கிருந்தாவது ஒளி கசிந்துவந்து இருட்டைக் கெடுத்துவிடும். அதேபோல் முழுமையான இருட்டை அனுபவிக்கவேண்டுமெனில் அது மழைபெய்யும்போது தான் முடியும். கோடையில் உடல் தகிக்கும் வெப்பமும் இருட்டின் அனுபவதைக் கெடுத்துவிடும்.
ஆர்வத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல பாய்ந்துவந்து அணைத்துக் கொண்டது மழைச் சாரல். இறுக மூடியிருந்த அறையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குளிர்சதனம் வேலைசெய்யாமலிருந்ததால் கொஞ்சமாக வேர்க்கத் தொடங்கியிருந்த உடலில் சட்டென சாரல் பாய திடுக்கிட்டு நின்றேன், சிறு திடுக்கிடலுக்குப் பின்பு அனிச்சையாக தடாலென ஜன்னல் கதவுகளை மூடினேன். ஓரிரு விநாடிகளில் சற்று சுதாரித்து ஜன்னலின் ஒரு கதவை மட்டும் திறந்தேன்.
வழக்கமான மழையில் இவ்வளவு சாரல் இந்த அறையில் வந்ததில்லை. மழையுடன் வந்த பெரும் காற்றின் துணைகொண்டு சாரல் உள்ளே பாய்ந்து வந்தது. கொஞ்சம் முயற்சியுடன் கட்டிலை கொஞ்சம் தள்ளி வைத்தேன்.
மழையைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு குழப்பம், இது உண்மையா அல்லது கனவா, இரவு தூங்கப்போவதற்கு முன் துவைத்துக் காயப்போடும்போதுகூட மழை வரும் எந்த அறிகுறியும் இருக்கவில்லையே. இதெப்படி இவ்வளவு பெரிய சாத்தியம், நேற்று ஜெயமோகன் தளத்தில் படித்த "இடவப்பாதி" கட்டுரையைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கிறேனா என்ற நினைவும் வராமலில்லை.
கலையில் விழிப்புவந்தபோது மழை பற்றிய எந்த சந்தேகமும் இருக்கவில்லை. மிக இயல்பான விழிப்பு அது. உடலும் மனமும் எப்போதையும் விட மிகப் புத்துணர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. திறந்திருந்த ஜன்னலில் ஒரு குருவி அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்தக் குருவி எனக்கு முன்பாக எழுந்து என்னைவிட உற்சாகமாக இருந்தது. அந்தக் குருவியின் வீட்டில் எத்தனை ஜன்னல் கதவுகள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும்.