Unordered List

02 ஆகஸ்ட் 2020

ஆலன் டூரிங் - ஒரு விதியும் ஒரு சட்டமும்

டூரிங் விதி (turing test) என்ற பதத்தை இதுவரை நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் அதன் பயன்பாடு நீங்கள் அனைவரும் உணராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. நாடுகளின் பாதுகாப்பில் இருந்து நாம் தினமும் எடுக்கும் செல்பி வரை செயற்கை அறிவு இல்லாத இடமே இல்லை என்ற நிலையில் அந்த செயற்கை அறிவுத் துறையின் தந்தை எனப்படும் ஆலன் டூரிங் உருவாக்கியது அந்த டெஸ்ட். செயற்கை அறிவுத்துறையின் வளர்ச்சியில் முக்கியமானது இது.

மனிதர்களை விட எந்திரங்கள் சிறப்பாக செயல்படும் இடங்கள் பல இருந்தாலும், அது வெறும் எந்திரச் செயல்பாடுகளாகவே கருத்தில் கொள்ளப்படும். ஆனால் செயற்கை அறிவு நிரல் மனிதரைப் போல செயல்படுவது தான் சாதனை. சமீபத்திய deep fake புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வந்து இது உண்மையான மனிதர் தானா என்ற திகைப்பை உருவாக்கியதும், சமீபகாலமாக வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் மறுமுனையில் நமக்கு பதில் அளிப்பவர் மனிதரா அல்லது செயறகை அறிவு நிரலியா எனத் தெரியாமல் நாம் உரையாடுவதும் இதில் வெளிப்படையாகத் தெரியும் சில விஷயங்கள்.


Deep fake. (பேசுவது யார், ஒபாமாவா?)

இதற்கான முதல்  சிந்தனையை உருவாக்கியவர் ஆலன் டூரிங். ஒருவர் ஒரே கேள்வியை ஒரு மனிதரிடமும் ஒரு கணிப்பொறியிடமும் கேட்கும்போது கணிப்பொறியின் அந்தப் பதில் மனிதரைப் போல இருந்தால் தான் அந்த செயற்கை அறிவு நிரல் டூரிங் டெஸ்ட் தகுதி பெறுகிறது. இன்றைய செயற்கை அறிவின் சாதனைகளுக்கு அது ஒரு முன்னோடி சிந்தனை. அதாவது கணிப்பொறி நிரையை மனிதராக்கும் முயற்சி.

டூரிங் விதி
    ஆலன் டூரிங்
 
ஆலன் டூரிங் தற்கொலை செய்துகொண்டபோது அவருக்கு வயது 41 தான். இவ்வளவு பெரிய சாதனையாளரின் தற்கொலைக்குக் காரணம் கணிப்பொறி நிரலுக்கு மனிதத்தை சிந்தித்த அவருக்கு அரசுகளின் சட்டங்களில் மனிதத்தை காணமுடியாமல் போனது  என்பது தான் நகை முரண்.

ஆலன் டூரிங் இங்கிலாந்தைச் சேர்ந்த கணிதவியலாளர். அவரின் பெரும்பாலான சாதனைகள் அவர் வாழும் காலத்தில் வெளியில் தெரியாமல் இருந்ததற்கு முக்கிய காரணம் இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா (Enigma machine) என்ற மெஷினை டீகோட் செய்த அவரின் சாதனை அரச ரகசியம் என்பதால் தான்.

இரண்டாம் உலகப்போரில் கூட்டணிப் படைகள் ஜெர்மனியை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது அவரது இந்தப் பணி. The Imitation Game என்ற பெயரில் அவரின் இந்தப் பணி இந்தத் திரைப்படத்தில் அருமையாக காட்சிப்படுத்தப்பட்டிருக்க்கிறது, இந்தத் திரைப்படத்தில் அவரது தன்பால் ஈர்ப்பு சரியாக சொல்லப்படவில்லை என்ற விமர்சனமும் சொல்லப்படுகிறது. இருந்தாலும் அவரது கதை அதோடு முடிவதில்லை.


   

உலகை ஜெர்மனியிடம் இருந்து காப்பாற்றிய ஒரு போர் நாயகன், செயற்கை அறிவுத் துறையின் தந்தை, பொது கணிப்பொறியியலின் முன்னோடி என சாதனைகள் இருந்தாலும் அவர் ஒரு ஒருபாலின சேர்க்கையாளராக இருந்தது இங்கிலாந்தின் அப்போதைய சட்டப்படி குற்றமாக இருந்துள்ளது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கட்டாய கெமிக்கல் ஆண்மை குறைப்பு சிகிச்சை அளிப்பட்டு மனம் மற்றும் உடல் இரண்டும் சிதைக்கப்பட்ட நிலையில் அவர் 1954ல்  தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கான மனிதபிமான பார்வை கிடைக்காமலேயே தனது 41 வயதில் அந்தச் சாதனையாளர் அரச/சட்ட கெடுபிடியில் சிக்கி மரணத்தை நோக்கி சென்றிருக்கிறார். 

கணிப்பொறி என்ற கருத்து அவருக்கு முன்பே உருவாகியிருந்தாலும், இன்று நாம் பயன்படுத்தும் ப்ரோகிராம் செய்யப்படக்கூடிய,  எல்லா வேலைகளையும் செய்யும் (General purpose computing) கணிப்பொறி உருவாக்கத்தை இவர் தான் டூரிங் எந்திரம் (Turing Machine) கருதுகோள் வழியாக உருவாக்கினார்.  அதன்பின் செயற்கை அறிவுத்துறையின் சிந்தனையை வடிவமைத்த டூரிங் விதி, மற்றும் பையோடெக் துறையில் morphogenesis  என அவரது சாதனைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அறிவுத்துறைகளின் முதல் சிந்தனைகளாக அமைந்திருந்தன.

இப்படி இருந்தும் அவர் வாழும் காலத்தில் அவருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய புகழ் கிடைக்காமல் போனதற்குக் காரணம் அவர் செய்த தவறுகள் எவையும் அல்ல, ஆனால் அவர் தன் அரசுக்காக எனிக்மா விஷயத்தில் செய்த சாதனையால் உருவான ரகசியத்தன்மை தான் காரணம், நாட்டின் நன்மைக்காக அதை ஏற்றுக்கொண்ட அவருக்கு இத்தனைக்கும் பிறகும் அதே கெடுபிடி அவரின் அவமானத்துக்கும் மரணத்துக்கும் இட்டு சென்றிருக்கிறது. அவரது ஒருபாலின விருப்பம் அப்போதைய சட்டப்படி குற்றம் தான் என்றாலும் எந்திரத்தனமான நீதி முறை தான் இந்த முடிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அவருக்கு இழைப்பட்ட இந்த அநீதி ஒரு கம்ப்யூட்டர் ப்ரோகிராமர் முன்னெடுக்கும்வரை கவனத்துக்கு வராமல் இருந்தது. ஜான் கிரஹாம் கமிங் என்ற அந்த ப்ரோகிராமர் ஒரு ஆன்லைன்ட் பெட்டிஷன் உருவாக்கி மக்கள் மற்றும் மீடியாக்களின் கவனம் பெற்று அரசின் இதயத்தை நெருங்கினார். மீடியாக்களும் இதை புரிந்துகொண்டு கவனப்படுத்த மக்களின் பெரிய ஆதரவு கிடைத்தது.

மீடியா கவனமும் மக்கள் ஆதரவும் 


இதன் விளைவாக 2009ல் இங்கிலாந்து பிரதமர் கார்டன் ப்ரவுன் (Gordon Brown )அரசு சார்பாக ஆலன் டூரிங்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். 

அந்தக் குற்றத்தால் அப்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தவ்ர்களை மன்னிக்கும் விதமாக அரசு 2017ல் ஒரு சட்டம் இயற்றியது, அந்தச் சட்டத்தின் பெயர் ஆலன் டூரிங் சட்டம்.  

இவருக்கு நடந்தது வரலாற்றில் அநீதி என்றால் இன்றைய நிலையில் இப்படிப்பட்ட மனிதம் இல்லாத அநீதிகள் நடக்க சாத்தியங்கள் இன்னும் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். உலகமெங்கும் கொரானா பரவியிள்ள இந்த நிலையில், அரசுகள் மேலும் தொழில்நுப்டம் வழியாக கண்கானிக்க முயலும் இந்த நேரத்தில் பல முடிவுகள் மனிதர்களே இல்லாமல் தன்னியங்கி முறை மூலம் நடப்பது அதிகரித்து வருகிறது. இது போன்ற முடிவுகளில் மனிதர்களின் தலையீடு இருக்கவேண்டும் எனவும் இவற்றில் தனிமனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாக இருக்கின்றது.  

மனிதர்கள் இல்லா முடிவுகள்

வங்கிகளில் கடன் கொடுப்பதில் இருந்து, பங்குச்சந்தை, வேலைவாய்ப்பு, தீவிரவாத கண்காணிப்பு, நீதி பரிபாலனம் வரை செயற்கை அறிவின் பயன்பாடுகள் வளர்ந்து வருகின்றது, இவற்றில் மனிதர்களின் பங்கு குறைந்து வருகிறது. இன்றைய போர்க் கருவிகளின் முன்னேற்றத்தில் அடுத்த போரை முடிவு செய்வதும் நிகழ்த்துவதும் எந்திரங்களாக இருக்கக்கூடும் (autonomous war ) அப்போது மனிதத்துக்கு என்ன இடம், இவரைப்போன்ற இன்னும் எத்தனைபேர் இதற்கு பலியாகக்கூடும் என்ற கேள்விகளும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கும் ஆலன் டூரிங் பதில் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம்.


ஆலன் டூரிங் உருவாக்கிய டூரிங் விதி  (Turing test) செய்றை அறிவை உருவாக்கத்தில் பாய்ச்சலை உருவாகியது என்றால் இறந்த பின்னரும் அவரால் உருவான ஆலன் டூரிங் சட்டம் (Alan Turing Law),  அவருக்கான நீதி என்பதோடு நிற்காமல் சட்டம் என்பது மாறக்கூடியது,  சட்டமோ, தொழில்நுட்பமோ அது மனிதத்தோடு அணுகப்படும்போது தான் அது உருவாக்கப்பட்ட உண்மையான இலக்கை அடையும் என்ற அறத்தின் குரலாக ஒலிக்கிறது. 


தொடர்புடைய வீடியோ:

சமீபத்தில் மன்செஸ்டர் சென்றபோது கவனித்தது..


வழக்கமான மான்செஸ்டர் தேனியுடன்

ஆலன் டூரிங் தனது தன்பாலின விருப்பத்துகாக தண்டனை அளிப்பட்ட அதே மான்செஸ்டர் நகரம் இப்போது அந்த விருப்பத்தில் பெருமை கொள்வதாக கொண்டாடுகிறது என்பது மதிபீடுகளும் சட்டங்களும் எப்படி மாற்றத்துக்க வாய்ப்புள்ளவை என்பதன் சாட்சியாக இருக்கிறதுகொண்டாடும் மான்ஸெஸ்டர்