Unordered List

27 ஜூன் 2012

ஒவ்வொரு நொடியும் ஹீரோ..

எல்லா கண்களும் அவனைப் பார்க்கின்றன. அவனை விரும்புபவர் பலர், அவன் பலரால் விரும்பப்படுவதாலேயே அவனை வெறுப்பவர்கள் சிலர். அவன் செய்யும் சாதனைகள் வரலாகின்றன. செய்யத்தவறிய செயல்கள் வசையாகின்றன. சிறு தவறும் கடுமையான விளைவுகளை உருவாக்குகின்றன  எப்படியோ எல்லாருக்கும் அவனைப் பற்றி சொல்ல ஏதாவது இருக்கிறது. அவனே ஒரு ஹீரோ.
 
போர்சுகல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அப்படியான ஒரு ஹீரோ.
 
அரங்கில் விளையாடும் அத்தனை பேரில், தன்மீதுதான் அதிகமான கவனம் உள்ளது என்பது அவருக்கு எப்போதுமே தெரிந்திருக்கிறது. அந்தக் கவனத்தை எந்தவித போலி அடக்கமும் இன்றி  அவர் மிக விரும்பி ஏற்றுக்கொள்கிறார் என்று எனக்குத் தெரிகிறது, அதுவே அவர் மீது அதிகமான மரியாதையைத் தருகிறது.
 
டிவியில் அவரைப் பார்ப்பது நல்ல பொழுதுபோக்கு.தலையலங்காரம் உட்பட தன் தோற்றத்துக்குத் தரும் கவனம், தான் சம்பத்தப் பட்ட முக்கிய தருணங்களில் அவர் முகத்தில் வரும் அபாரமான உணர்சிகளும் அதை அதிகப் படுத்தும்.  கோல் வாய்ப்பை தவறவிடும் சமயங்களில் ரொனால்டோவின் முகபாவம் ஒரு மூன்று மணிநேர சோக சினிமா கொடுக்கும் சோகத்தை நமக்குக் கொடுத்துவிடும்.
 
டிவி கேமராக்கள் எப்போதும் அவரை விட்டு விலகுவதில்லை. அவரும் தான் கோல் போட்டபின் கேமரா எங்கிருந்தாலும் தேடி அதன் முன் ஏதாவது சொல்லத் தவறுவதில்லை.
 
வெற்றியோ தோல்வியோ, ஒவ்வொரு நொடியும் கவனத்தைத் தன்னிடம் வைத்திருக்கும் ஹீரோ நம்ம ரொனால்டோ.
 
இன்று மிக நேர்த்தியான அணியான ஸ்பெயின் அணியை எதிர்த்து கிறிஸ்டியானோ ரொனால்டோ வெற்றிபெற எனது வாழ்த்துக்களும், எதிர்பார்ப்பும்.
 
Euro Cup 2012: Portugal vs Spain- Semi-final
27-Jul-2012

19 ஜூன் 2012

அழகு அறிவு மூடநம்பிக்கை

உங்களுக்கு புத்தகங்களின்மீது ஆர்வமிருந்தால்,இது உங்களுக்கான நிகழ்ச்சி என்ற அறிவிப்புடன் தொடங்கியது அந்த வானொலி நிகழ்ச்சி. புத்தகம் படிப்பதே அருகிவரும் நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று சற்று ஆர்வமடைந்தேன்.Hello FM என்று நினைக்கிறேன். நடத்தியவர் தீபா வெங்கட். அருமையான குரலுடன் கூடிய அழகான பெண். ஒரு பெண் நடத்தும் அறிவார்ந்த நிகழ்ச்சி என்பதே ஒரு ஆச்சர்யம்  தானே.
 
இருந்தாலும் இவர்கள் புத்தகம் புத்தகம் என்று சொல்வது ஆனந்தவிகடனைத் தானா என்ற பீதி லேசாகத் தலைதூக்கியது. "யாராவது பரிந்துரைத்து நீங்கள் ஏதாவது புத்தம் படித்தீர்களா?  அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வியைத் தொடங்கினார். சுவாரஸ்யமான கேள்விதான்.
 
இது நேயர்கள் தொலைபேசி உரையாடும் நிகழ்ச்சி. முதலில் ஒரு பெண் அழைத்தார்.
 
"நானெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்து விடுவேன்" என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
 
"தினமும்  ஒரு புத்தகமா?அப்படின்னா வீட்லயே ஒரு சின்ன லைப்ரரி இருக்கணுமே" என்றார் தீபா
 
"லைப்ரேரி வீட்ல இல்லை. வீட்டு பக்கத்துல இருக்கு!!"
 
இதை கேட்டதும் எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது, புத்தகங்களைப் பற்றி உரையாடும் 'அறிவார்ந்த' ஒரு வானொலி நிகழ்ச்சி. அதை நடத்தும் ஒரு பெண். அதில் பங்குகொள்ளும் தினமும் படிக்கும் ஒரு பெண். இது உண்மை தானா என்று.
 
பெண்கள் எல்லாம் தொலைகாட்சியின் ஆபாசமான மெகா தொடர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே நடப்பது என்ன?
 
"சரி உங்களுக்கு புத்தகங்கள் பரிந்துரை செய்தது யாருங்க.."
 
"அதாவது நான் எப்போதுமே டீவீல பட்டி மன்றம் தவறாமல் பார்ப்பேன். அதுல சொல்ற புக்கெல்லாம் தவறாம படிப்பேங்க என்றார்.."
 
டிவியில் வரும் பட்டிமன்றங்கள் மூலம் அறிவு வளர்கிறதா. இது இவ்வளவு நாள் நமக்குத் தெரியாமல் போச்சே.  அட ஆண்டவா..
 
இதற்க்கு தீபா வெங்கட்டின் பதில்.. "ரெம்ப நல்ல சொன்னீங்க..ரெம்ப நல்ல பழக்கம். இதை இப்படியே தொடருங்கள்.  இப்போ இந்த பாட்டைக் கேளுங்க.."
 
அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல்.. எவண்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்..
 
--
 
புத்தகம் படிப்பதே ஒரு அறிவார்ந்த விஷயம் என்று பரவிவரும் மூடநம்பிக்கையை தகர்க்க சேவைசெய்யும் முறையில், இதுபோன்ற நிகழ்சிகளின் சேவை நாட்டுக்குத் தேவைதான்.

04 ஜூன் 2012

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச் செய்தி!

ரேடியோவில் கேட்ட ஒரு வாழ்த்துச்  செய்தி..
 
".... இந்த நாள். இன்று அவர் பிறந்தநாள் என்பது நாம் அனைவரும் மகிழ்ச்சியடையவேண்டிய திருநாளாகும். இந்த வானொலி மூலம்  அவருக்குப்  பிறந்தநாள் வாழ்த்துக்கூற விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரும் பங்களிப்பற்றிய அவருடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட நாமெல்லாம் கடமைப்பட்டுளோம். அவர் வாழும் இந்த .........."
 
இப்படி போகிறது அந்த வாழ்த்து செய்தி நானும் உன்னிப்பாக கேட்டுக்கொண்டே இருந்தேன். இவர் அவரை ஒரு தடவையாவது வாழ்த்துவாரா என்று. இல்லையே.. ஒரு தடவை கூட இல்லையே.. வாழ்த்த விரும்புகிறேன், ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறாரே தவிர கடைசி வரை வாழ்த்து மட்டும் சொல்லவில்லை,
 
இது வாழ்த்து அல்ல, வாழ்த்துக்கான திட்டமிடலோ?  இதெல்லாம் முடிந்தபின் தனியாக வாழ்த்துவாரோ தெரியவில்லை. இருந்தாலும் இது இது என்ன டைப் வாழ்த்து என்று  யோசிக்க நாமெல்லாம் கடமைப்பட்டுள்ளோம்..இல்லையா?