Unordered List

20 ஏப்ரல் 2024

ஆர்வக்கோளாறு வாக்காளர்களும் privacy இழப்பும்

சமீபத்தில் திருச்சியில் ஒரு கோவிலுக்கு சென்றிருந்தோம். சாமி தரிசனம் செய்யும்போது உள்ளே மொபைல் போன் கொண்டுபோகக்கூடாது என ஒரு அறிவிப்பு. செல்போன் அந்த 10 நிமிடம் வைத்திருக்க ஒரு போனுக்கு 30 ரூபாய், நாங்கள் கொடுத்த 4 போனையும் செங்கல் கட்டிபோல அடுக்கி ஒரு இரும்பு பொந்தில் வைத்தார்.

பார்த்துப் பார்த்து வாங்கிய, curved display இருக்கும் என்னுடைய புது விவோ போனை இப்படி செங்கல் போல இரும்பு பொந்தில் வைக்கிறாரே என சோகம் இருந்தாலும் கூட வந்த நண்பரின் ஐபோனுக்கே அதே ட்ரீட்மெண்ட் என்பது கொஞ்சம் ஆறுதல்.


என்ன கொடுமை இது பேசிக்கொண்டிருந்தோம், இந்த அளவு கூட மக்களின் sensibilityயை நம்ப முடியாதா என..
இது இப்போது ஏன் நினைவுக்கு வருது என்றால்



ஓட்டு போட போனவர்கள் ஓட்டு போடுவதை போட்டோ எடுப்பது, வீடியோ எடுப்பது facebook live போடுவது என செய்யும் விடலைத்தனங்களை பார்க்கும்போது அடுத்த தேர்தலில் இங்கும் ஒரு 30 ரூபாய் செலவு + இரும்பு பெட்டி உரசலுக்குத்தான் நம்ம மக்கள் தயார் செய்கிறார்கள் எனத் தெரிகிறது. ஒரு உரிமை கிடைக்கும்போது அதை முடிந்த அளவு கீழே கொட்டி வீணடிப்பது தான் இது.


ரகசிய ஓட்டுபோடும் முறையை போட்டொ எடுப்பது எந்த வகையிலும் பெருமைக்குறியது அல்ல. அது 100% முட்டாள்தனம்


ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், அல்லது மிரட்டுபவர்களுக்கு எதிராக எந்தக் குரலுமற்ற மக்களுக்கு இருந்த ஒரே பாதுகாப்பு இந்த ரகசிய வாக்கு முறை, இனிமே ஓட்டு போட்டு அதை வீடியோ எடுத்துக்காட்டு என அரசியல்வாதிகள் கேட்கவும் வழி உருவாகிறது. ஓட்டு போடும்போது செல்போன் தடுக்கப்பட்டே ஆகவேண்டும்.


முன்பெல்லாம் ஓட்டு ஸ்லிப் அதற்கு ஒரு க்யூ என்பதெல்லாம் இல்லாமல் செல்போனில் டீடெயில் காட்டி ஸ்டைலாக செல்லும் வசதி வழக்கம்போல நம் மக்களின் ஆர்வக்கோளாரால் பறிபோகிறது.


அரசியல் திருவிழாவில் வெற்றி, தோல்வி, மரியாதையான தோல்வி, வரலாறு எல்லாமே அரசியல் தரப்புக்குத்தான். மக்கள் தரப்புக்கு மிச்சம் இருப்பது இந்தச் சின்ன privacy இதை இழக்கக்கூடாது எந்த காரணத்துக்காகவும்.

19 ஏப்ரல் 2024

ஓட்டு சச்சரவு

ஏழேகால் மணிக்கு நான் சென்றபோது கிட்டத்தட்ட ஏழு பேர் ஓட்டளிக்க வரிசையில் நின்றார்கள், நானும் இணைந்துகொண்டேன், அங்கு ஒரு சின்ன சச்சரவு.

வரிசை நகரவே இல்லை, இன்னும் யாரும் ஓட்டுபோட்டு வெளியே வரவில்லை, என்னானு பாருங்க என முன்னால் நின்றவர் அங்கு நின்ற  போலீஸிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். அதானே என்ன லேட்டு என நானும் உரையாடலில் கலந்துகொண்டேன். நாங்கள் நிற்கும்போதே கிட்டத்தட்ட இருபேர் அளவு பெரிதாகியது அந்தக் க்யூ. என்ன சார் இப்படி பண்றாங்களே என க்யூ போலவே கலந்துரையாடலும் பெரிதாகியது.

பின்னர் தான் தெரிந்தது முதலில் சென்ற ஒரு பாட்டியிடம் அடையாள அட்டை இல்லை என விவாதம் உள்ளே நடந்துகொண்டிருந்தது தான் அங்கு இன்னும் வாக்குப்பதிவு ஆரம்பிக்காததற்குக்காரணம் என. பாட்டிக்கும் சட்டத்துக்கும் நடந்த விவாதத்தில் சட்டம் வென்று அடையாள அட்டை வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டார்கள்.

வெளியே வந்த பாட்டியைப் பார்த்தபோது சட்டம் இந்த வயதோரிடம் இவ்வளவு கடுமைகாட்டவேண்டியதில்லை எனத்தோன்றியது. வாக்களர் அட்டைக்கு போட்டோ எடுக்கும் அரசு, அதைவைத்தே வருபவர்களை அடையாளம் காணலாம். ஒட்டளிக்க வருபவர்களிடம் இவ்வளவு கடுமை தேவையில்லை.

நல்லவேளையாக அங்கு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி இருக்க அங்கு அந்த பாட்டி கம்பீரமாக அமர, அவரை அழைத்துவந்தவர் ஐடி கார்டு எடுக்க வீட்டுக்குச் செல்ல அங்கு ஒரு சமரச நிலை உருவானது.  வீட்டுக்கு சென்றவரிடம் மறுபடி போன் செய்து பீரோவில் இருக்கும் ப்ளூ கலர் பர்சில் இருக்கிறது என கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த விவாதத்திலும் இந்த அட்வென்சரிலும் பாட்டிக்கு ஒரு பெருமிதம் இருப்பதாகவே தோன்றியது. சும்மா வந்து ஓட்டுப்போட்டு செல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது, அதில் மற்றவர்களுக்கு சொல்ல என்ன கதை தான் இருக்கிறது.

நமக்கும் போனதற்கு கொஞ்சம் நேரம் க்யூ நகராதது பற்றி கொஞ்சம் உரையாடல், பாட்டியின் அட்வென்சர் வேடிக்கை பார்த்தது என சின்னச் சின்னச் சுவாரஸ்யங்கள்.

வேறன்ன வேண்டும், அரசியல்வாதிகளின் திருவிழாவான  தேர்தலில் குரலற்ற பொதுமக்களுக்கு கிடைப்பது இதுபோன்ற சின்னச் சின்னத் தருணங்கள் தானே