Unordered List

19 ஏப்ரல் 2024

ஓட்டு சச்சரவு

ஏழேகால் மணிக்கு நான் சென்றபோது கிட்டத்தட்ட ஏழு பேர் ஓட்டளிக்க வரிசையில் நின்றார்கள், நானும் இணைந்துகொண்டேன், அங்கு ஒரு சின்ன சச்சரவு.

வரிசை நகரவே இல்லை, இன்னும் யாரும் ஓட்டுபோட்டு வெளியே வரவில்லை, என்னானு பாருங்க என முன்னால் நின்றவர் அங்கு நின்ற  போலீஸிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார். அதானே என்ன லேட்டு என நானும் உரையாடலில் கலந்துகொண்டேன். நாங்கள் நிற்கும்போதே கிட்டத்தட்ட இருபேர் அளவு பெரிதாகியது அந்தக் க்யூ. என்ன சார் இப்படி பண்றாங்களே என க்யூ போலவே கலந்துரையாடலும் பெரிதாகியது.

பின்னர் தான் தெரிந்தது முதலில் சென்ற ஒரு பாட்டியிடம் அடையாள அட்டை இல்லை என விவாதம் உள்ளே நடந்துகொண்டிருந்தது தான் அங்கு இன்னும் வாக்குப்பதிவு ஆரம்பிக்காததற்குக்காரணம் என. பாட்டிக்கும் சட்டத்துக்கும் நடந்த விவாதத்தில் சட்டம் வென்று அடையாள அட்டை வரும்வரை காத்திருக்க சொல்லிவிட்டார்கள்.

வெளியே வந்த பாட்டியைப் பார்த்தபோது சட்டம் இந்த வயதோரிடம் இவ்வளவு கடுமைகாட்டவேண்டியதில்லை எனத்தோன்றியது. வாக்களர் அட்டைக்கு போட்டோ எடுக்கும் அரசு, அதைவைத்தே வருபவர்களை அடையாளம் காணலாம். ஒட்டளிக்க வருபவர்களிடம் இவ்வளவு கடுமை தேவையில்லை.

நல்லவேளையாக அங்கு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி இருக்க அங்கு அந்த பாட்டி கம்பீரமாக அமர, அவரை அழைத்துவந்தவர் ஐடி கார்டு எடுக்க வீட்டுக்குச் செல்ல அங்கு ஒரு சமரச நிலை உருவானது.  வீட்டுக்கு சென்றவரிடம் மறுபடி போன் செய்து பீரோவில் இருக்கும் ப்ளூ கலர் பர்சில் இருக்கிறது என கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். உண்மையில் அந்த விவாதத்திலும் இந்த அட்வென்சரிலும் பாட்டிக்கு ஒரு பெருமிதம் இருப்பதாகவே தோன்றியது. சும்மா வந்து ஓட்டுப்போட்டு செல்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது, அதில் மற்றவர்களுக்கு சொல்ல என்ன கதை தான் இருக்கிறது.

நமக்கும் போனதற்கு கொஞ்சம் நேரம் க்யூ நகராதது பற்றி கொஞ்சம் உரையாடல், பாட்டியின் அட்வென்சர் வேடிக்கை பார்த்தது என சின்னச் சின்னச் சுவாரஸ்யங்கள்.

வேறன்ன வேண்டும், அரசியல்வாதிகளின் திருவிழாவான  தேர்தலில் குரலற்ற பொதுமக்களுக்கு கிடைப்பது இதுபோன்ற சின்னச் சின்னத் தருணங்கள் தானே