Unordered List

28 டிசம்பர் 2010

தீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய?

நேற்று இரவு தொலைக்காட்சி செய்திகள் பார்த்ததில் இருந்து ஒரே யோசனையாக இருக்கிறது..

செய்தி இது தான்... "பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்கக்கூடும்.. அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.. ".

இந்த எச்சரிக்கையை வைத்துக் கொண்டது நான் என்ன செய்வது என்று ஒரே யோசனை.
மழை வரும் என்று எச்சரிக்கை செய்தால் குடை கொண்டுபோகலாம்.. (எச்சரிக்கை செய்தபின் மழை வருவதில்லை என்பது வரலாறு...இருந்தாலும் ஒக்கே)

எதாவது சாலையில் அரசியல் கூட்டம் என்று எச்சரிக்கை செய்தால் வேறு வழியாக போகலாம்..

சுனாமி என்று எச்சரிக்கை செய்தால் கடற்கரையை தவிக்கலாம்..

புயல் என்று எச்சரிக்கை செய்தால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவிர்க்கலாம்..

இந்த தீவிரவாதி எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நாம் என்ன  செய்வது?

...........................
நம்மை என்ன செய்ய சொல்கிறார்கள்? துப்பாக்கி எடுத்துக்கொண்டு தீவிரவாதியோடு சண்டை செய்ய சொல்கிறார்களா?

இது நம்மை ஆயத்தப் படுத்துவதற்க்காகவா இல்லை பயப்பட செய்வதற்கா?

ஆயத்தப்படுத்த என்றால், எதுமாதிரியான ஆயத்தம்?

பயம் கொள்ள செய்ய என்றால், அது தானே தீவிரவாதிகளும் ஆசைப் படுகிறார்கள்?

......................


எனக்குத் தெரிந்தவரை தீவிரவாதிகள் செய்யும் எல்லா கொடுமைகளின் நோக்கம், மக்களிடம் ஒரு பயத்தை உருவாக்குவது தான்.மக்களிடம் ஒரு பதட்டத்தை உருவாக்கி அமைதியில்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கத்தான் அவர்கள் இவ்வளவு பாடுபடுகிறார்கள்.


இப்போது நமது அரசே அவர்களின் வேலையை பாதி எடுத்துக்கொண்டதாக தோன்றுகிறது. 

ஒரு வேலை இது நமது அரசின் ஒரு புதிய வழியோ? தீவிரவாதிகள் உருவாக்குவதை விட அரசே அதிகமான பீதியை உருவாக்கிவிட்டால், ஒருவேளை அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தீவிரவாதத்தை விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்களோ என்னவோ?


எவ்வளவு விளம்பரம் அவர்களுக்கு பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும்.


தீவிரவாதிகளுக்கு சிறந்த விளம்பரம் கொடுப்பதற்கு ஒரு விருது கொடுத்தால் அது நமது அரசுக்கும் பத்திரிக்கைகளுக்கும் தான் கொடுக்க வேண்டும்..

உண்மையில் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும்  எதாவது ஒரு செய்தி வந்தால் அரசும் அதற்கென உள்ள அமைப்புகளும் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.



அரசு இந்த எச்சரிக்கையை ராணுவத்திருக்கும், காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் கொடுக்க வேண்டும்.. மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் அல்ல

நம் நாட்டின் காவல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இதற்கு முழு தகுதி உடையவை என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே அவர்களே தீவிரவாதிகளை சமாளித்தால் நல்லது.. இல்லாவிட்டால் இந்த எச்சரிக்கையை வைத்துக்கொண்டு நான் என்ன செய்ய?

20 டிசம்பர் 2010

வாழும் வரலாறே!!

வாழும் வரலாறே!!" என்று அரசியல் கோஷங்கள் பல பார்த்துள்ளோம்.


கிடைக்க வேண்டிய புகழ் பலருக்கு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காமலே இருந்திருக்கிறது.  இதற்கு உதாரணங்கள் பல..


ஆனால் புகழ் கிடைப்பதும் எவ்வளவு பெரிய சுமை என்று சிலருக்குத் தான் தெரியும்.
"கிரிக்கெட்டின் கடவுள்" சச்சின், "இசைக் கடவுள்" இளையராஜா, "இந்திய சூப்பர் ஸ்டார்" ரஜினி ஆகியோர் இந்த சிலரில் சிலர்.


எனக்கும் இவர்களை மிகப் பிடிக்குமென்றாலும், இந்த அதீதப் பட்டங்கள்  கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது..

"இசை ஞாநி" , "master balster" போன்றவை பரவாயில்லை.. 

"இசைக் கடவுள்" என்று இளையராஜவையோ "கிரிக்கெட் கடவுள்" சச்சின்-னையோ ஊடகங்கள்  புகழும் போது "அவர்களை வேலையைச் செய்ய விடுங்கப்பா.." என்று எனக்கு சொல்லத் தோன்றுகிறது.

இந்த அதீத புகழ்ச்சியினால் அவர்களுக்கு கொஞ்சம் நன்மை போலத் தோற்றமளித்தாலும்  ஊடகங்களின் நோக்கம் பரபரப்புத் தான் (Sensationalism)
அடுத்த முறை ஒரு சின்ன தவறு என்றாலும் இதே ஊடகங்கள் இன்னொரு அதீதமான முறையில் வசைபாடவும் தயங்குவதில்லை. அதுவும் ஒரு sensation. 



இந்தப் பிரச்சனைக்குப் பயந்தே பல பிரபலங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் வேலையே குறைத்துக் கொள்கிறார்கள் அல்லது பத்திரிக்கைகள் விரும்பும்படி மாற்றிக் கொள்கிறார்கள்.  ரஜினி இதற்கு ஒரு நல்ல உதாரணம்.



இப்போதிருக்கும் சூழலில் பொறுப்பான அணுகுமுறையை ஊடகங்களிடிடமிருந்து எதிர்பார்ப்பது வீண்தான். 

பாராட்டினாலும் அல்லது திட்டினாலும் எல்லாமே ஒரு extreme தான்..

ஊடகங்கள் எவ்வளவு பாராட்டினாலும், திட்டினாலும் தன வேலையைச் தான் விரும்பும்படி செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால், அதை ஒவ்வொரு முறையும் சிறப்பாகச் செய்யவது சச்சின்.


புகழ்வதோ அல்லது விமர்சிப்பதோ அது விமர்சகர்களின் வேலை. ஒரு சாதனையாளர் அதைப் பார்க்க தேவையில்லை..


ஊடகங்கள் தான் பிரபலங்களைத் தொடரவேண்டும்,  பிரபலங்கள் ஊடகங்களை ஊடகங்களைத் தொடரக் கூடாது. இதை நடைமுறையில் காட்டி வெற்றி மேல் வெற்றி படைக்கும் சச்சினுக்கு வாழ்த்துக்கள்..


5 நாள் கிரிக்கெட் போட்டியில் 50-வது சதத்தை நிறைவு செய்துள்ள master blaster  சச்சின்-னுக்கு வாழ்த்துக்கள், வரலாறாக இல்லை. ஒரு சிறந்த விளையாட்டு வீரராக. 



17 டிசம்பர் 2010

தமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்

முன்பெல்லாம் ஒரு படம் வந்தவுடன்,  அந்தப் அந்தப்படத்தின் திருட்டு பிரதி  (pirated DVD) பரபரப்பாக தயாராகும்.  ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் ஒரிஜினல் DVD தான் வாங்குகிறார்கள்.

ஒரிஜினல் என்றால், உண்மையான ஒரிஜினல்.  ஆங்கிலம், ஜப்பான், கொரியா மற்றும் பல படங்கள்.

இதில் பெரிய வேடிக்கை விமர்சகர்கள் தான்.

எல்லா  படங்களும் விமர்சகர்களால் காப்பி என நிறுவப்படுகிறது. எல்லா விமர்சகர்களும் காப்பி என நிறுவுகிறார்கள்.

ஆனால், எல்லா படங்களும் எல்லா விமர்சகர்களாலும் காப்பி என  நிறுவப்படுவதில்லை.

உதாரணமாக எந்திரனை காப்பி என்று சொல்பவர்கள் நந்தலாலாவை ஒரிஜினல் என்று கொண்டாடுவார்கள். நந்தலாலாவை காப்பி என்பவர்கள் எந்திரன் ஒரு புத்தம் புதிய சிந்தனை என்று மனமார நம்புவார்கள்.


கமலஹாசன் ஆதரவு/எதிர்ப்பு, ஷங்கர் ஆதரவு/எதிர்ப்பு, 'யதார்த்த படம்' ஆதரவு/எதிர்ப்பு என்ன பல வகையான விமர்சகர்கள். இவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது படம் வரும் முன்னாலேயே நமக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு குஷி.


ஏன் இங்கே புது சிந்தனைக்கே வழியில்லாமல் ஆகிவிட்டது. ஏன் எல்லோரும் DVD மாயையில் உழல்கிறார்கள்?


கவுண்டமணி ஸ்டைலில் கேட்பதென்றால்,
"எவனை பார்த்தாலும் கதை அமெரிக்கால இருந்து வருது, ஜப்பான்ல இருந்து வருது, கொரியால இருந்து வருதுன்னு சொல்றானுக.. அப்போ இந்தியால இந்தியால கதையே இல்லையா.. இருந்த கதையெல்லாம் எங்கேடா போச்சு?"

அப்படிஎன்றால் நாம் உலகப்படம் பார்க்க கூடாதா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். அங்கிருந்து வரவேண்டிய தொழில்நுட்பம் இன்னும் நிறைய இருக்கிறது.

James Cameron -னின் இந்த பேட்டியைப் பார்க்கும் போது இது தான் தோன்றுகிறது. அவர் நமது மகாபாரத ராமாயண கதைகளை படமாக்க மிகவும் விருப்பம் கொண்டுள்ளார்.  
முக்கயம்மாக இந்திய இயக்குனர்களுக்கு தேவைப்பட்டால் "அவதார்" உருவாகப் பயன்பட்ட 3D தொழில்நுட்பத்தை தரவும் தயாராக உள்ளார்.


உள்ளூர் சரக்கு, வெளிநாட்டுக்கு இணையான தொழில்நுட்பம் என்பது அருமையாக இருக்கும்.  தெலுங்கில் வந்த "மகாதீரா", என்னை  பொருந்தவரை அப்படி ஒருபடம் தான்.  

நான் ஒரு ரஜினி ரசிகன் தான் என்றாலும் எந்திரன் படத்தில் ஒன்றமுடியாமல் போனதற்கு காரணம், அந்த படமே எங்கோ லண்டனில் நடப்பது போலிருக்கிறது. சென்னை தெருக்கள், மின்சார ரயில் என்று காட்டினாலும் சுத்தமாக நேடிவிடி மிஸ்ஸிங்.


மக்களே, தொழில்நுட்பத்தை உலகிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். சிந்தனை இந்தியாவிலேயே இருக்கிறது. கொஞ்சம் சுற்றிப்பாருங்கள்.

12 டிசம்பர் 2010

ரஜினியாக..

எப்போதும் பின்தொடரும் ஊடகங்களின் camera கண்கள்,

சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் வைத்து சர்ச்சையைக் கிளப்பப் காத்திருக்கும் கூட்டம். ஏதும் சொல்லாமலிருக்கும் போதும் சுழற்றியடிக்கும் வதந்திகள்,

ஒவ்வொரு அசைவையும் கவனித்துவரும் அரசியல் கட்சிகள், 

நேரடியாக வெறுப்பைக் கக்கும் சிலர். நண்பர்களென சொல்லிக்கொண்டு மறைமுகமாக  வெறுப்பைக் கக்கும் பலர்.

எல்லாவற்றையும் மெளனமாக சமாளிக்கும் ரஜினியின் வழியும் ஒரு ஆச்சர்யம் தான்.


ஒன்று எல்லோருக்கும் பதில் சொல்லலாம்.. அல்லது வேலையைச் சரியாகச் செய்யலாம். ரஜினி செய்வது இரண்டாவது வழி. அவரது வெற்றியே எல்லோருக்குமான பதில்.

வெற்றிகளும் சாதனைகளும்  தொடர அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

08 டிசம்பர் 2010

பூனை ராஜ்யமா?

ரூபாய் 300-க்கு ஒரு ஹெல்மெட் வாங்கிவிடலாம்.  

ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால், ஓட்டிப் பிடிபட்டால், ருபாய் 100 அபராதம்.

இது என்ன மாதிரியான சட்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஹெல்மெட் என்பது மற்ற சாலை விதிகளைப் போல் மற்றவர்களை பாதிக்கும் விஷயம் இல்லை. மக்கள்  மீது கொண்ட   அக்கறையினால்  கொண்டுவந்த  சட்டம் போல  தோற்றமளிக்கும் இந்த விஷயத்தினால் உண்மையில் பலன் அடைபவர் யார்?

நாம் மீது அக்கறை கொண்டவர்கள் நம்மை கண்டிப்பது இல்லையா? அதுபோல அரசு பொறுப்பாக மக்களை அபராதம் மூலம் கண்டிக்கிறது என நினைக்கலாமா? இச்சட்டத்தை  கொண்டு வரக்கோரி ஒரு பொதுநல வழக்கு கூட நடந்தது அல்லவா? எனவே இது ஒரு பொறுப்பான சட்டம் தானா?

எனக்கு சின்ன வயதில் படித்த பூனை ஆப்பத்தை பங்குவைக்கும் கதைதான் ஞாபகம் வருகிறது. (இந்த கதை தெரியாதவர்கள் இருந்தால் சொல்லுங்கள் :) )

நாம் கொடுக்கும் அபராத பணம் உண்மையில் எங்கு தான் போகிறது?

நாம் கொடுக்கும் பணம் எங்கு போகிறது என்று அறிவது நமது உரிமையாக இருக்க வேண்டும். அதை அபராதமாக கொடுத்தாலும்.. 

இப்படி யோசிக்கலாம்.. உண்மையில் அக்கறை என்றால்,   ஹெல்மெட் போடுவதை  ஊக்குவிக்க என்ன விஷயங்கள் நடந்தது?

மானிய விலையில் ஹெல்மெட்?

ஏழை மக்களுக்கு இலவச ஹெல்மெட்? .எனக்குத் தெரிந்து TV விலையை விட இந்த விலை குறைவு தான்.. 

எதாவது சலுகை? மக்கள் என்ன சினிமா முதலாளிகளா, வரிச் சலுகைகளை எதிர்ப்பார்பதற்கு.. :)

சரி.. இலவசமாக கொடுக்க வேண்டாம். அரசே சரியான விலையில் தரமான ஹெல்மெட் விற்கலாமே

முக்கியமாக மூன்று முறை ஒருவர் அபராதம் கட்டினால் அவருக்கு ஒரு ஹெல்மெட் இலவசமா தரலாமே. அதாவது ஒருவர் ஹெல்மெட்டின் விலையை அபராதமாகவே கட்டியபிறகு. 

இந்தமுறையில் யாருக்கும் நஷ்டம் இல்லை. நோக்கமும் நிறைவேறிவிடும். 

இது எப்படி இருக்கு? 






20 நவம்பர் 2010

வா.... டக்குன்னு டக்குன்னு டக்குன்னு டக்குன்னு

விஜய் ஆண்டனி-இன் லேட்டஸ்ட் அதிரடி இந்த "டக்குன்னு டக்குன்னு" பாடல். (உத்தமபுத்திரன் படம்). இன்று டிவி-இல் பாடலை பார்க்கும்போது மிகச் சாதாரணமாக தெரிகிறது... பாடலில் இருந்த அந்த துள்ளல், காட்சியில் இல்லையே..

இப்போதெல்லாம் கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் ஒரு பாடலாவது வெளிநாட்டு தெருவில் பாடுகிறார்கள். அகலமான அழகான தெருக்கள். நம்ம சென்னை ரோட்ல எடுத்தா romance ஏதாவது வருமா என்ன?

முன்பெல்லாம் நம்ம ஊரில் ambassador கார் மட்டுமே இருந்தபோது சினிமாவில் வெளிநாடுபோய் விதவிதமான கார்களை காட்டுவார்கள். அந்த கார்கள் எல்லாம் இப்போ நம்ம ஊருக்கே வந்துவிட்டது.

அதுபோல வெளிநாடு போன்ற தெருக்களும் நம்ம ஊருக்கு சீக்கிரம் வந்துவிடும் என்று நம்பலாமா? (ஒபாமாவே இந்திய ஒரு வளர்ந்த நாடுன்னு Certificate கொடுத்துட்டுபோனாறு இல்ல?)

எனக்கென்னவோ சென்னை ரோடெல்லாம் இப்போ இருக்கிற நிலைமையைப் பார்த்தால், இதெல்லாம் அதற்கான ஏற்பாடு தானோ என்று தோன்றுகிறது.

எதாவது கட்டிட வேலை நடக்கும் கட்டடத்திற்குள் போனால், எந்த நேரத்தில் எது தலையில் விழுமோ என ஒரு பதட்டத்தோடு போவோம் இல்லையா? அப்படித்தான் இருக்கு நம்ம சென்னை ரோடு இப்போ.


இதையெல்லாம் சகித்துக்கொண்டு ஏன் சென்னை மக்கள் இருக்கோம்? வேற எதுக்கு? NO PAIN.. NO GAIN. இந்த ரோடு வேலையெல்லாம் முடிச்சபிறகு நம்ம ரோடும் வெளிநாடு ரோடு போல மாறிவிடும்.

அப்புறம் நாம போகலாம், டக்குன்னு டக்குன்னு

நடக்குமா? :)


19 நவம்பர் 2010

நீங்க எந்தப் பக்கம்?


"அப்படின்னா உனக்கு Airtel-இன் புது ரிங் டோன் பிடிக்கணுமே ?" என்று அருகிலுருந்த நண்பன் வேகமாக கேட்டான்.

"நான் இன்னும் கேக்கலையே.. எப்படி கருத்து சொல்வது? என்னடா இவன் " என்று யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் அடுத்த கொக்கியைப் போட்டான்.

"உனக்கு அது பிடிக்கும்னா, அதுவும் பிடிக்கணும். ஏன்னா  அது ரஹ்மான் மியூசிக்!!!"
....
"எனக்கு AR Rahman music ரெம்பப் பிடிக்கும்.." டிவி-இல் வந்த ஒரு பாடலைப் பார்த்தபடியே ஒரு கமெண்ட் அடித்திருந்தேன். அதற்குத் தான் மேற்கண்ட கொக்கி கேள்வி.

அவன் இன்னும் விடுவதாக இல்லை. ரஹ்மானின் சில பாடல்களை சொல்லி, "இது பிடிக்குமா.. அது பிடிக்குமா.." என்று ஆரம்பித்து விட்டான். அதில் எனக்கு பிடிக்காத பல பாடல்களும் இருந்தன.

"அதெப்படி சொல்ல முடியும். எனக்கு அவர் இசை பிடிக்கும். ஆனால் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்று சத்தியமெல்லாம் செய்ய முடியாது.."

"அப்படின்னா நீ சொன்ன statement தப்பு!"  

"சரி டா.. எனக்கு இதுவரை நான் கேட்ட ரஹ்மான் பாடல்களில் பெரும்பாலனவை பிடித்தது"  என்று சொல்ல தப்பி வந்தேன் :)


அவன் பேசியது ரெம்பவே ஓவர் தான் என்றாலும் நாம்  அபிமானத்தினால் கொஞ்சம் கருத்து சொல்லும் உரிமையை விட்டுக்கொடுத்து விடுகிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. 
இப்படி ஆரம்பிகிறது விஷயம்.. 

நமக்குப் பிடித்த விஷயங்களால் (ரசனை/இசை/திறமை) சிலரை நமக்கு பிடிகிறது.
பிறகு அதை பெருமையாக வெளியே சொல்ல ஆரம்பிக்கிறோம். நமக்கு பிடித்த பிரபலத்தை விளம்பரம் செய்வதுகூட நல்லது தான். நல்ல விஷயங்களை பரப்புவதும் நல்ல பணியே.

ஆனால் இங்கு கொஞ்சம் பின்விளைவுகள் இருக்கிறது. அந்த பிரபலத்தின் எந்த பிரச்சனைக்கும் நம்மிடம் நண்பர்கள் கருத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். நாமும் அவர்கள் எதிபார்ப்புப்படியே, நமது பிரபலத்தை ஆதரித்தே பேச ஆரம்பிக்கிறோம். என்ன இருந்தாலும் நம்ம மானம் முக்கியம் இல்லையா?

ஆக,  வேறு வழியின்றி, பிடித்தோ பிடிக்காமலோ, வலையில் விழுந்துவிடுகிறோம்.  இனி அந்த பிரபலம் என்ன செய்தாலும் அதை ஆதரித்தே தீர வேண்டும். என்ன கொடுமை இது?
எந்தவொரு நண்பர் வட்டாரத்திலும், இதுபோல தன் உயிரை விட்டு(பேச்சில் மட்டும் தான்) , தனது தலைவனை காக்கும் விவாதங்களைப் பாக்கலாம். 

எனினும்.  சினிமா மற்றும் இலக்கியத்தில் இது கொஞ்சம் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது.
"எனக்கு ரஜினி பிடிக்கும்.. ஆனால் எந்திரன் பிடிக்கவில்லை.." என்று எளிதாக சொல்ல முடிகிறது. அல்லது நமக்கு பிடித்த எழுத்தாளருடைய மொக்கை படைப்புகளையும் எளிதாக விமர்சித்து போகமுடிகிறது.
அரசியல் சார்பாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசம். ஒவ்வொரு ஊழல்கள் வெளிவரும்போதும் இவர்கள் படும் கஷ்டம். அட ஆண்டவா..
கொடுக்காத காசுக்கு இவர்கள் கூவுவது இருக்கே, அது ரெம்ம்ம்ப ஓவரா இருக்கும்.
ஆனால், சார்புநிலை எடுக்காவிட்டாலும் விவாதங்களில் சுவை கம்மி தான். சபையில் நமக்கு ஒரு இடம் கிடைக்காது. ஆனால் இப்போதுள்ள எந்த கட்சியைப் பார்த்தாலும் எதாவது ஒரு ஊழலை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.
அதனால் தான் எதாவது ஒரு புதிய கட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சரி.. ரஜினி எப்போ கட்சி ஆரம்பிக்கிறாரு?

10 நவம்பர் 2010

ENCOUNTER - நேர்மையான சிந்தனை...

கோவை encounter-க்கு அதரவகம் எதிர்ப்பாகவும் பல குரல்கள்.
மக்கள் எப்படி ஊடகங்களினால் ஆட்டுவிக்கபடுகிறார்கள் என்பதை பார்க்ககூடிய இன்னொரு வாய்ப்பு.

நமக்கும் உணர்சிகள் இருக்கிறது என்பதை காட்ட இது போன்ற சில விஷயங்கள் நடக்கிறது.

Encounter-இ ஆதரித்தும் எதிர்த்தும் பல ஆக்ரோஷ கருத்துக்கள். ஆனால் உண்மையில் இதில் ஆதரிக்கவோ இல்லை எதிர்க்கவோ எதாவது இருக்கிறதா?

செய்தி 1 : இரு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
நமது கருத்து: குற்றம். நாமெல்லாம் இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டியதை உணர்த்தும் செய்தி.

செய்தி 2 : இருவர் கொலை தொடர்பாக கைது செய்யபட்டனர்.
நமது கருத்து: கடமை. பாராட்டலாம்.

செய்தி 3: ஒருவர் போலீஸ் உடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
நமது கருத்து: விபத்து. இதில் பாராட்டவோ அல்லது கண்டிக்கவோ எதுவும் இல்லை.

இந்த encounter-ஐ ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் இருவருக்கும் சில கேள்விகள்.

எதிர்பவர்களுக்கு,
உங்கள் கருத்துப்படி குற்றம் நிருபிக்கபடும் வரை ஒருவர் குற்றவாளி இல்லை. எனவே நீங்கள் போலீஸ் செய்ததையும் எதுவும் சொல்ல முடியாது. அந்த என்சௌண்டேர் ஒரு திட்டமிட்ட கொலை என்று எதாவது ஒரு நீதிமன்றத்தில் நிருபிக்கபடும் வரை. (மற்றும் எல்லாம் மேல் முறையீடுகளும் முடியும் வரை)


ஆதரிபவர்களுக்கு,
நீங்கள் police செய்தது திட்டமிட்ட கொலை என்று நம்புகிறீர்கள். இதன் உங்களிம் நமது சட்டத்தை பற்றியும் நீதி முறையை பற்றியும் உள்ள அவ நம்பிக்கை தெரிகிறது.
இது ஆதரிக்க வேண்டிய வேண்டிய விஷயம் அல்ல. மிக மிக மிக வருத்ததோடு யோசிக்க வேண்டிய விஷயம்... :(



விவாதமெல்லாம் சரி,
கொஞ்சம் உணர்ச்சியோடு யோசித்தால், நடந்தது மிகப்பெரிய மனதை உலுக்கும் குற்றம். இது போன்ற குற்றங்கள் தடுக்கபடவேண்டியவை.
நாம் நமது வேகத்தை இந்த திசையில் செலுத்தினால், நன்மை விளையலாம். முடித்த விஷயத்துக்கு கோஷம் போட்டு அல்ல.

02 அக்டோபர் 2010

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி - தன்னை நம்பிய மனிதன்


காந்தியின் சுயசரிதையை படிக்கும்போது ஒன்று தெளிவாகிறது, இவர் ஒன்றும் ஒரு குறைகளே இல்லாத ஒருவர் அல்ல. காந்தியும் பலவிதமான பலவீனங்களைக்கொண்டிருந்தவர்தான்.

ஆனால் எது அவரை ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தலைவனாகியது?

தான் தனக்கு எப்போதும் உண்மையாக இருப்பதும், எந்த நிலையிலும் பயமற்று இருப்பதும், தனக்கு சரியென்றுபடுவதை தானும் செய்து, அதை வெளிப்படையாக விளக்கி பிறரையும் செய்தவைப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதை காந்தி எப்போதும் மிக விழிப்புணர்வுடன் செய்திருந்திருக்கிறார்.

காந்தியை நினைக்கும் இத்தருணத்தில், நமது மனதின் உண்மையான வலிமையையும் அதன் ஆற்றலையும் எண்ணிபார்க்கலாம்.

08 ஆகஸ்ட் 2010

வழிகளினூடே பயணம்

வழிகள் நிறைய இருக்கின்றன. தேவையானவை சில, அல்லாதவை சில. விருப்பமானவை சில, விருப்பம் இல்லாதவை  சில,  விரும்பினாலும் முடியாதவை சில. வழியென்று அறியப்பட்டவை சில,  அறிந்தாலும் முயலாதவை சில.

இன்று இங்கு ஒரு வழியில் ஒரு முயற்சி தொடங்குகிறது. இந்த பயணத்திற்கு எதுவும் இலக்கு இருப்பதாக தெரியவில்லைஎன்றலும் வழியை ரசிக்கலாம் என்றே இந்த பயணம்.  பயணிக்கலாம்.