பிடித்த நடிகர் படம் என்றால் முதல் நாள் பார்த்து அதையும் பேஸ்புக்ல ஸ்டேடஸ் வைக்கிற ஆளுதானே, அரசியல் ஆதரவு ஸ்டேடஸ் வைத்தால் மட்டும் என்ன பிரச்சனை என்று என்று கேட்கிறார்கள் சில நண்பர்கள். நம் வீட்டுக் குழந்தைகள் சினிமா பாடல்கள் எல்லாம் பார்க்கத்தானே செய்கிறார்கள், அப்படியே அவர்கள் அரசிலையும் ஆதரித்தால் என்ன என்றும் கேட்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சோஷியல் மீடியாவில் ரசிக விவாதம் செய்பவர்கள் பொறுப்பற்ற தற்குறிகளாகவும் அரசியல் சண்டை போடுபவர்கள் பொறுப்பான அறிவுஜீவிகளாவும் பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது
சரி, என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.
சின்ன வயதில் க்ரிக்கெட் பார்க்கும்போது சொல்வார்கள், நீ க்ரிக்கெட் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க, அங்க சச்சின் விளையாடி கோடி கோடியா சம்பாரிக்கிறான் என. எனக்கு க்ரிக்கெட் பார்க்கபிடிக்கிறது அதனால் பார்க்கிறேன், சச்சின் பணக்காரராக இருப்பதில் எனக்கு பொறாமை ஏதும் இல்லை என்று நினைத்துக்கொள்வேன்.
சினிமாவுக்கும் இது பொருந்தும். இப்போ கூட கேட்கிறார்கள், நீ டிக்கெட் வாங்கி படம் பார்த்து நடிகர்கள் கோடி கோடியா சம்பாதிக்கிறார்களே என்று. நான் கவனிப்பது அந்த டிக்கெட் பணம் கஷ்டப்படாமல் செலவளிக்கமுடிகிறதா மற்றும் க்ரிக்கெடோ சினிமாவோ பார்க்க நன்றாக இருக்கிறதா என்பது மட்டுமே. அவர்கள் சம்பாதிப்பதில் நமக்கு கமிஷன் கிடைக்கிறதா என்று அல்ல.
ஆனால் அரசியல் கட்சி ஆதரவு நிலையே வேறு, அங்கு ஆதரவளிப்பவர்களுக்கு பணம் கொடுப்படுகிறது என்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது. நேரடியாக ஓட்டுக்குப் பணம் என்பதைத்தாண்டி தேர்தல் அறிக்கைகளில் பணம் என்பதும் புதிய இயல்பாக இருக்கிறது.
ஆனால் அரசியலில் முக்கிய பிரச்சனை பணமாக கொடுக்கப்படுவது அல்ல, அதைவிட முக்கிய பிரச்சனை அதிகாரமாகவும் செல்வாக்காகவும் கொடுக்கப்படுவது. தான் ஆதரிக்கும் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் அதற்குக் கிடைக்கும் அதிகாரத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற நம்பிக்கை பலருக்கும் இருப்பதை கவனிக்க முடிகிறது.
நீங்கள் ரஜினி அல்லது விஜயின் சினிமாவை பார்த்தாலோ அல்லது கோலி ரோஹித் ரசிக சண்டை போட்டாலோ அவர்களின் வருமானமோ அல்லது சொல்வாக்கோ உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசியலில் அந்த வாய்ப்பு என்றும் இருக்கிறது. சினிமா ரசிகர்களிலும் சிலர் மன்றப் பொறுப்பாளார்களாக இருப்பவர்கள் பொதுமக்கள் அல்ல, அவர்கள் கட்சி நிர்வாகிகள் போலத்தான்.
மார்கெட்டிங்கில் ஒரு விஷயம் இருக்கிறது.இன்னொருவர் நமக்கு நேரடியாக உதவுவது எளிது ஆனால் நமக்காக பிறரிடம் பேசுவது கடினம்,
உங்கள் நெருங்கிய நண்பரிடம் பணம் உதவியாகக் கேட்டால் கூட தந்துவிடுவார்கள். ஆனால் உங்களுக்காக ஒன்னொருவரிடம் பேசவேண்டும் என்று அழைத்தால் பலர் தவிர்த்துவிடுவர். நீங்கள் தயாரிக்கும் பொருளை உங்கள் நண்பரிடம் வாங்கச்சொன்னால் பணம் கொடுத்துக்கூட வாங்கிவிடுவார், ஆனால் இன்னொருவருக்கு பரிந்துரைக்கச் சொன்னால் தயங்குவார், இரண்டாவதில் அவருக்கு செலவு இல்லை என்றால் கூட.
ஏன் என்றால் இங்கு அவர்களில் ரெபுடேஷன் கவனிக்கப்படுகிறது. அதை பணயம் வைக்கும் அளவுக்கு நாம் வெர்த்தா என்ற கேள்வி தான் முதலில் எழும். ஆனால் அரசியல் விஷயத்தில் நம் மக்கள் மிக எளிதாக தங்கள் ரெபுடேஷனை பணயம் வைத்து பிரச்சாரத்தில் இறங்குவதுதான் ஆச்சர்யமானது.
ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. அரசியலை பொதுமக்களாக பார்பதற்கும் அரசியல் கட்சியில் வெளிப்படையாக தங்களை இணைத்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்க்கிறது. அப்படி இணைத்துக்கொண்டவர்கள், கட்சியில் தங்களது செல்வாக்கை விசுவாசத்தை வெளிப்படையாக முன்வைப்பவர்களுக்கு நண்பர்களிடம் ஓட்டுக்கேட்க முழு உரிமை இருக்கிறது. அவர்கள் மீது நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. தான் தொண்டராக இருக்கும் கட்சிக்காக ஒருவர் ஓட்டுக்கேட்பது மிக நேர்மையானது.
அப்போ பொதுமக்களின் அரசியல் ஆதரவு நிலைப்பாடு தவறா, நட்ட நடுநிலைதான் சரியா என்று கேட்கலாம், அப்படியல்ல. நானும் இந்த தேர்ததில் ஓட்டுப்போடுவேன், எதற்கு அப்படி போடுகிறேன் என்பதற்கான காரணமும் என்னிடம் உண்டு ஆனால் அதை பொதுவெளியில் பிரச்சாரமாக வைக்கமுடியாது என்பது மட்டுமே எனது கருத்து.
தேர்தல் சமயத்தில் பணம் வாங்கும் எளிய மக்களை குறைசொலவது எளிது. ஆனால் கட்சிகளால் செல்வாக்காகவோ அதிகாரமாகவோ நமக்கு ஒரு கட்சியால் பலன் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்வதும் பணம் வாங்குவதற்கு குறைவானதல்ல என்பதை மட்டும் நினைவில் வைப்பது நல்லது.