Unordered List

08 மார்ச் 2012

தடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி

மெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் திட்டத்தால் என்னென்ன பலன்கள் வரப்போகிறதோ அது வந்தபின்தான் தெரியும். ஆனால் இந்தத் திட்டம் இதுவரை பல முக்கிய சாலைகளில் வெற்றிகரமாக கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியுள்ளது. இந்தநிலையில் அண்ணாசாலை ஒருவழிச் சாலையாக மாறப்போகிறது என்ற அறிவிப்பு வந்தது. இதுவும் இன்னொரு கடுமையான நெரிசலை உருவாக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வமும் நமக்கு இருந்தது.






மாற்றத்துக்கு முன் GB Road சந்திப்பு

ஆனால் உண்மையில் இந்த மாற்றத்தால் இந்தப்பகுதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறைந்துள்ளது என்பதே மக்கள் கருத்து . புதிய முறைப்படி பல சிக்னல்கள் எடுக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட சிக்னல் நிறுத்தங்களே இல்லாமல் பயணம் செய்வது உணர்வே கிடைக்கிறது. ஒரு மிகப்பெரிய மாற்றத்தை சிறப்பாக செய்த அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஆனால் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சிறிய தூரத்தைக் கடப்பதற்குக்கூட பெரிய சாலைகளைச் சுற்றிவரவேண்டிய கட்டாயத்துக்கு பலர் ஆளாயிருக்கக் கூடும். ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக நாம் நினைப்பது சில கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தான்.





மாற்றத்துக்குப் பின் GB Road சந்திப்பு

பல கடைகள் தங்கள் வியாபாரத்தை இழந்துள்ளன. பல கடைகள் மொத்தமாகவே மூடப்பட்டும் உள்ளன. உதாரணமாக ஜி.பி ரோடு. வாகன அலங்காரப் பொருட்கள் விற்கப்படும் கடைகள் நிரம்பியுள்ள இந்தத் தெரு எப்போதுமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஆனால் இந்த போக்குவரத்து மாற்றங்களால் கார்களை கடைமுன் நிறுத்தி வேலைசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வியாபரத் தளமான இந்தத் தெரு களையிழந்து தான் இருக்கிறது.

சென்னையில் சமகாலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பணி இந்த மெட்ரோ ரயில். சென்னைவாசிகளான நமக்கு இது தற்காலிகமாக பல வசதிக்குறைவுகளைத் தந்தாலும் ஒரு மிகப்பெரிய பணி நம் கண்முன்னால் நடப்பது நிறைவளிப்பதாகவே இருக்கிறது.