"அப்படின்னா உனக்கு Airtel-இன் புது ரிங் டோன் பிடிக்கணுமே ?" என்று அருகிலுருந்த நண்பன் வேகமாக கேட்டான்.
"நான் இன்னும் கேக்கலையே.. எப்படி கருத்து சொல்வது? என்னடா இவன் " என்று யோசித்துகொண்டிருக்கும்போதே அவன் அடுத்த கொக்கியைப் போட்டான்.
"உனக்கு அது பிடிக்கும்னா, அதுவும் பிடிக்கணும். ஏன்னா அது ரஹ்மான் மியூசிக்!!!"
....
"எனக்கு AR Rahman music ரெம்பப் பிடிக்கும்.." டிவி-இல் வந்த ஒரு பாடலைப் பார்த்தபடியே ஒரு கமெண்ட் அடித்திருந்தேன். அதற்குத் தான் மேற்கண்ட கொக்கி கேள்வி.
அவன் இன்னும் விடுவதாக இல்லை. ரஹ்மானின் சில பாடல்களை சொல்லி, "இது பிடிக்குமா.. அது பிடிக்குமா.." என்று ஆரம்பித்து விட்டான். அதில் எனக்கு பிடிக்காத பல பாடல்களும் இருந்தன.
"அதெப்படி சொல்ல முடியும். எனக்கு அவர் இசை பிடிக்கும். ஆனால் எல்லா பாடல்களும் பிடிக்கும் என்று சத்தியமெல்லாம் செய்ய முடியாது.."
"அப்படின்னா நீ சொன்ன statement தப்பு!"
"சரி டா.. எனக்கு இதுவரை நான் கேட்ட ரஹ்மான் பாடல்களில் பெரும்பாலனவை பிடித்தது" என்று சொல்ல தப்பி வந்தேன் :)
அவன் பேசியது ரெம்பவே ஓவர் தான் என்றாலும் நாம் அபிமானத்தினால் கொஞ்சம் கருத்து சொல்லும் உரிமையை விட்டுக்கொடுத்து விடுகிறோம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
இப்படி ஆரம்பிகிறது விஷயம்..
நமக்குப் பிடித்த விஷயங்களால் (ரசனை/இசை/திறமை) சிலரை நமக்கு பிடிகிறது.
பிறகு அதை பெருமையாக வெளியே சொல்ல ஆரம்பிக்கிறோம். நமக்கு பிடித்த பிரபலத்தை விளம்பரம் செய்வதுகூட நல்லது தான். நல்ல விஷயங்களை பரப்புவதும் நல்ல பணியே.
ஆனால் இங்கு கொஞ்சம் பின்விளைவுகள் இருக்கிறது. அந்த பிரபலத்தின் எந்த பிரச்சனைக்கும் நம்மிடம் நண்பர்கள் கருத்து கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். நாமும் அவர்கள் எதிபார்ப்புப்படியே, நமது பிரபலத்தை ஆதரித்தே பேச ஆரம்பிக்கிறோம். என்ன இருந்தாலும் நம்ம மானம் முக்கியம் இல்லையா?
ஆக, வேறு வழியின்றி, பிடித்தோ பிடிக்காமலோ, வலையில் விழுந்துவிடுகிறோம். இனி அந்த பிரபலம் என்ன செய்தாலும் அதை ஆதரித்தே தீர வேண்டும். என்ன கொடுமை இது?
எந்தவொரு நண்பர் வட்டாரத்திலும், இதுபோல தன் உயிரை விட்டு(பேச்சில் மட்டும் தான்) , தனது தலைவனை காக்கும் விவாதங்களைப் பாக்கலாம்.
எனினும். சினிமா மற்றும் இலக்கியத்தில் இது கொஞ்சம் பரவாயில்லையோ என்று தோன்றுகிறது.
"எனக்கு ரஜினி பிடிக்கும்.. ஆனால் எந்திரன் பிடிக்கவில்லை.." என்று எளிதாக சொல்ல முடிகிறது. அல்லது நமக்கு பிடித்த எழுத்தாளருடைய மொக்கை படைப்புகளையும் எளிதாக விமர்சித்து போகமுடிகிறது.
அரசியல் சார்பாளர்களின் நிலைமை கொஞ்சம் மோசம். ஒவ்வொரு ஊழல்கள் வெளிவரும்போதும் இவர்கள் படும் கஷ்டம். அட ஆண்டவா..
கொடுக்காத காசுக்கு இவர்கள் கூவுவது இருக்கே, அது ரெம்ம்ம்ப ஓவரா இருக்கும்.
ஆனால், சார்புநிலை எடுக்காவிட்டாலும் விவாதங்களில் சுவை கம்மி தான். சபையில் நமக்கு ஒரு இடம் கிடைக்காது. ஆனால் இப்போதுள்ள எந்த கட்சியைப் பார்த்தாலும் எதாவது ஒரு ஊழலை நாம் ஆதரித்தே ஆகவேண்டும்.
அதனால் தான் எதாவது ஒரு புதிய கட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
சரி.. ரஜினி எப்போ கட்சி ஆரம்பிக்கிறாரு?