நமக்குப் பிடித்த ஆட்டக்காரன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகும்போது நாம் வருத்தப் படுவது இயல்பானது மற்றும் புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் அவர் பந்தை அடிப்பதற்கும், எதிராளி பிடிப்பதற்கும் இடையே உள்ளது ஒரு கால இடைவெளி, அதை அவதானிப்பவர்களுக்கு சில புரிதல்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேட்சுக்கு அடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகன், எதிராளி பிடிக்கும்பொழுது வருத்தப்படும் ரசிகனிடமிருந்து வித்தியாசமானவன்.
அடிக்கும்பொழுதே வருத்தப்பட்டுவிட்டவன் பிடிக்கப்படும்பொழுது வருத்தப்படத் தேவையில்லை. பிடிப்பவன்மீது வருத்தப்படுபவன், தனது பிரச்சனைக்கு மற்றவரைக் காரணம்கூறி, உண்மையான பிரச்சனையைச் சந்திக்கப் பயப்படுபவனாக இருக்கலாம்.
------------
கம்பீர் ஜெயிப்பது மகிழ்ச்சிதான், ஆனால் அதற்காக சேவாக் தோற்கவேண்டியிருக்கிறது என்பதிலிருக்கிறது இந்த விளையாட்டின் அவலம். நல்ல வேளையாக நிஜ வாழ்க்கையானது இந்த விளையாட்டு அளவுக்கு சிக்கலானதாக இல்லை.
எந்த இரு மனிதருக்கும் உண்மையில் ஒரே தேவை இருக்கவே முடியாது. எனவே இன்னொருவரை தோற்கடிக்காமலெயே இயல்பான வெற்றிகளை அடையமுடிகிறது.
விளையாட்டு களத்தில் வெற்றியை மற்றோருவரிடமிருந்து மோதி பறிக்கவேண்டியிருக்கிறது. ஆனால் வாழ்கையில் வெற்றி எதிராளி இல்லாத வழியை கண்டடைவதில் இருக்கிறது. எதிராளியோடு மோதுவதில் நேரத்தை இழப்பவன், தனது வாழ்கையை இழக்கிறான்.