காரைக்குடி பேருந்து நிலையத்தில் இரவு உணவுக்காக பேருந்து நின்றது. காரைக்குடியில் எப்போதுமே தரமான உணவுக்கு பிரச்சனையில்லை, அது பேருந்து நிலையமானாலும். உணவு முடித்தேன். மூன்று இட்டலி, சுவைக்குக் குறைவில்லை. பதினெட்டு ரூபாய். பேருந்தில் செல்லவேண்டுமே என பக்கத்துக் கடையில் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினேன். அதுவும் பதினெட்டு ரூபாய்.
எனக்கு என்னவோ இது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயமாகத் தெரிந்தது. இலைபோட்டு சட்னி சாம்பாருடன் பரிமாறப்படும் இட்டலிக்குத் தரும் அதே பணத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்குத் தருகிறோமா?
மூன்று இட்டலிகள், சாம்பார் மற்றும் சட்னிக்கு கண்டிப்பாக ஒரு லிட்டரை விட அதிகமாக தண்ணீர் செலவாகியிருக்கும். அதை நம்மால் சாப்பிட முடிகிறது. ஆனால் தனியாக தண்ணீருக்கு பெப்சி நிறுவனத்துக்கு பணம் தருகிறோம் என்பதே ஒரு சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதன் மூலம் அந்த இட்டலி வியாபாரியை, அவரது உழைப்பை அவமதிக்கிறோமா?
இதை அந்த இட்டலி வியாபாரி யோசிக்க ஆரம்பித்தால் நமக்கு அடுத்த தடவை இப்படி ஒரு விலையில் உணவு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
பேருந்தில் ஏறியபின் மற்ற பயணிகளையும் கவனித்தேன். பேருந்தில் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அந்தக் கடையில் தான் இட்டலி சாப்பிட்டாரா எனத் தெரியாது. ஆனால் நான் வாங்கிய அதே தண்ணீர் பாட்டிலைத் தான் வாங்கியிருந்தார்.
பொதுவாக இதுபோன்று பயணங்களில் தண்ணீர் பாட்டில் வாங்குபவர்கள் வீட்டில் சாதாரண தண்ணீரைத் தான் குடிக்கிறார்கள். வீட்டில் Aquafina தண்ணீர் குடிப்பவர்கள் அரிது. பயணத்தில் மட்டும் மிக மிகச் சுத்தகரிக்கப் பட்டநீரைத் தான் குடிக்கவேண்டும் என்பது எழுத்தப்படாத சட்டமா அல்லது பதினெட்டு இருபது எனபது மிக சாதரணமாக நினைக்கும் அளவுக்கு இதியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதா என்பது ஒரு ஆய்வுக்குரிய விஷயம்.
பேருந்து நிற்குமிடத்தில் எங்கும் சிதறிக்கிடக்கும் காலி தண்ணீர் பாட்டில்களைப் பார்க்கும்போது இதில் உள்ள பிரச்சனை பணம் மட்டுமல்ல இந்தக் கலாச்சாரம் உருவாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடும் தான் எனத் தோன்றுகிறது.