Unordered List

27 அக்டோபர் 2023

சினிமா என்ற அலையும் அதன் மையமும்

லியோ பற்றிய முந்தைய பதிவைப் பார்த்த ஒரு நண்பர் இது வெறும் சினிமா தானே இதில் எதற்கு அறம் எல்லாம் எதிர்பார்க்கிறீர்கள், அதோடு பழைய படங்களில் insensitive விஷயங்களே இருந்ததில்லையா என்று கேட்டார், நல்ல கேள்வி அது.

சமூகத்தின் அறம் என்பது உருவாகி வருவது. பத்து வருடங்களுக்கு முன் கமெர்ஷியல் படங்களில் மிக இயல்பாக நடந்த பல "insensitive" விஷயங்களை இப்போது அவர்களை வைக்கத் தயங்க வைப்பது மட்டுமல்ல, நம் வாழ்விலேயே நம் முன்னோர்கள் இயல்பென செய்த பல விஷயங்களை, நாமே முன்பு செய்த பல insensitive விஷயங்களை தவறென தெரிந்து அதிலிருந்து இருந்து மாறச் செய்வது தான் சமூகத்தின் முன்னகர்வு. இது ஒரு தொடர் செயல்பாடு.

தனது ஹீரோ செய்தால் எதுவும் தவறல்ல என என நடிகர்களைக்கொண்டாடும் ரசிகர்கள் சொல்வது பற்றி பிரச்சனையில்லை, அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் ஆனால் அவர்கள் எந்த friction இல்லாமல் காலமாற்றத்தோடு மாறியும் விடுவார்கள். ஆனால் இதெல்லாம் தவறல்ல என வெளியில் இருந்து சிந்திப்பவர்கள் நம்பினால் அது அபத்தமாகிவிடும்.

பல வருடங்களுக்கு முன் சிவகாசி படத்தில் பெண்களை உடையை வைத்து விஜய் கிண்டல் செய்யும்போது ரசித்த ரசிகர்களே, பின்னர் அவர் பெண்ணுரிமை பேசுவேன் என சிங்கப்பெண்ணே என்று பாடுவதையும் ஏற்றுக்கொண்டு எந்த பிரச்சனையுமின்ரி ஏற்றுக்கொண்டார்கள், "no means no" என அஜித் சினிமாவில் பேசியதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அந்த ரசிகர்கள் கஞ்சா வியாபாரத்தை glorify செய்வதும், கடமையைச் செய்யும் போலீஸை கொன்று வீசுவது ஹீரோயிசம் என்று சொல்வதையும், பள்ளிச் சிறுவர்கள் அப்பாவிடம் சிகரெட் அடிக்கும் உரிமை பற்றி பேசுவதும் தவறு என்ற இடத்துக்கு விரைவாகவே வந்துவிடுவார்கள். குழப்பம் அவர்களுக்கு இல்லை.

பொதுதளத்தில் இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது? உதாரணமாக சில வருடங்களுக்கு முன் வனவிலங்கைக்கொல்வது ஹீரோயுசம் என்ற நிலையில் இருந்து இப்போது அதைக் காப்பது ஹீரோயுசம் என்று சமூகம் மாறுவது எங்கே? இலக்கியம், பத்திரிகைகள், சிந்தனையாளர்கள் அனைவருக்கும் இதில் பங்குண்டு.

இதைப்பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதிய கடிதம் இப்படி முடிந்திருந்தது.

//சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.///

-----

2021 ல் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வந்த என் கடிதம் இது

அன்புள்ள ஜெ,

சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் ஒரு இலக்கிய உலக சர்ச்சையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் நினைத்தோம். இந்த இலக்கிய விஷயத்தைப் பேசிக்கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான் சினிமாவும் அரசியல் சர்ச்சைகளும் மாபெரும் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கின்றன.

இணையத்தில் ஒரு சின்ன குமிழியில் ‘சிலர்’ இந்த இலக்கியம் முக்கியமானதாகப் பேசிக்கொண்டிருக்கும்போது அதே இணையத்தில் மாபெரும் அலைகளாக சினிமாவும் அரசியலும் ட்ரென்ட் ஆகிக்கொண்டிருக்கிறது என்று நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.இப்போது டி 23 ஆட்கொல்லி புலி பற்றிய செய்தி வந்திருக்கின்றது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த நீலகிரிப் பகுதியில் மட்டும் மூன்று புலிகள் இதே மனிதர்களைத் தாக்கிய காரணத்துக்குக்கான சட்டப்படி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றன. அந்தப் புலி கொல்லப்படாமல் உயிரோடு பிடிக்கப்பட்டது பற்றி இன்று பொதுவெளியில் மகிழ்ச்சி தெரிகிறது.

அதே சமயம் புலி, சிங்கம் யானைகளை கொன்றால் வீரம் என்ற நிலையில் இருந்து சமூகம் இப்படி மாறுவது உண்மையிலேயே மகிழ்ச்சி. புலிகளைக் கொல்லும் புலிமுருகன் மாஸ் வெற்றிகரமான என்ற சினிமா கூட சமீபத்தில் தான் வந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொதுச்சமூகம் மாறுவது ஆச்சர்யமளிப்பது.

சில வருடங்களுக்கு முன் நம் விஷ்ணுபுர விழாவில் வெளியிட்ட, ஜேனிஸ் பரியட் அவர்களிடன் சிறுகதைத் தொகுப்பான “நிலத்தில் படகுகள்” புத்தகத்தில் ஒரு கதை “ஆகாய சமாதிகள்”, இதைப் போன்ற ஆட்கொல்லி புலியைப் பற்றியது. அந்தக் கதையை நான் தமிழில் மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்திருந்தது. காட்டோடு இயைந்த வாழ்வில் இருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு ஆட்கொல்லி புலி கொல்லப்படுவதின் துயரம் அந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

வெண்முரசில் கர்ணன் அறிமுகப்படுத்தப்படும்போது வரும் ஒரு காட்சியும் இன்றும் என் நினைவில் இருக்கின்றது. கர்ணன் பல சிங்களோடு சண்டையிட்டு அவரது வீரம் நிறுவப்படும் காட்சியில் ஒரு சிங்கம் கூட கொல்லப்படுவதில்லை. சிங்கத்தோடு சண்டையிடுகிறான், வெல்கிறான் ஆனால் அதை அவன் கொல்லமாட்டான் என்பதில் வீரமும் அதே சமயம் பொறுப்புணர்வும் தெரிகின்றது.

சின்ன வட்டத்தில் பேசப்படுகிறது என்று சொல்லப்படும் இந்த இலக்கியம் தான் தான் பொதுவெளியில் இந்த விழுமியங்களை கொண்டு சேர்க்கிறது என்று நினைக்கிறேன். இலக்கியம் சின்ன குமிழி அல்ல அது சிறிய சுழல். இந்தச் சுழலே இருந்தாலும் அதுவே சமூக ஏற்பு என்ற பெரும் அலைகளை உருவாக்குகின்றது என்று தோன்றுகிறது.