Unordered List

23 ஆகஸ்ட் 2012

வனவெளி நோக்கி

பயணத்துக்கு முன்னால் உள்ள சில நாட்கள் மிகமுக்கியமானவை, சிலசமயம் பயண நாட்களை விடவும். அதுவும் தெரியாத இடத்துக்குப்பயணம் என்றால் இன்னும் சிறப்பு. செல்லவிருக்கும் இடங்களைப்பற்றிய தகவல்கள் மூலம் ஒரு சித்திரம் மனதுக்குள் உருவாகும் நேரம் அது.

அனுபவம் என்பது  நம் மனதில் உள்ள கடந்தகாலத்தின் பிம்பம் என்றால், எதிர்பார்ப்பு என்பது வருங்காலத்தின் பிம்பம். முக்கிய வித்தியாசம் என்னவென்றால் அனுபவம் சிலநேரம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாக இருக்கும், குரூப் போட்டொ போல. ஆனால் எதிர்பார்ப்பால் உருவாகும் சித்திரம் அப்படியல்ல அது தனியுடைமை.

பயணத்தின்போது  உண்மை அனுபவம் மனதில் உருவான அந்த சித்திரத்தை மாற்றி எழுதுகிறது, அது  ஆச்சர்யமாகவோ அல்லது ஏமாற்றமாகவோ. எப்படி இருந்தாலும் நம் நாமத்தில் உருவான அந்தச் சித்திரம் நமக்கே நமக்கானது. அது வேறு எங்கும் காணமுடியாதது வேறு யாரும் யோசிக்கக்கூட முடியாதது. அதுவே இந்த பயண எதிர்பார்ப்பை இன்னும் முக்கியமானதாக்குகிறது. அதுவே அதன் தனிச் சிறப்பு.ஆனால் எல்லோரும் செய்வது அனுபவத்தை அல்லது கடந்த காலத்தை நினைவில் நிறுத்தும் முயற்சிதான்.பொதுவாக சுற்றுலாத் தளங்களில் மக்கள் அந்த இடத்தை அனுபவப்பதைவிட அந்த அனுபவத்தை ஆவணபடுத்துவதில் காட்டும் முனைப்பை கவனிக்கலாம். முக்கியமான எல்லா இடங்களிலும் புகைப்படம்  எடுத்தால்தான் அந்தப் பயணம் நிறைவு. நான் முதன்முறை இங்கிலாந்து சென்றிருந்தசமயம் ஒரு வாரயிறுதி நாட்களில் லண்டன் செல்ல வாய்ப்பு இருந்தும் அந்தப் பயணத்தை ரத்து செய்தேன், கையில் காமெராவும் புகைப்படம் எடுக்க நண்பர்களும் இல்லாததால். புகைப்படம் எடுக்காமல் சுற்றிப்பார்த்து என்ன பயன்? அடுத்தமுறை பயணத்தில் சரியான ஏற்பாடுகளுடன் லண்டன் சென்றதெல்லாம் வேறு கதை.

யாருடன் செல்கிறோம் என்பதும் பயணத்தின் அனுபவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிக்கிறது. வழக்கமான மக்கள் கூடுமிடங்களை மட்டுமே பார்த்து, அதையே சுற்றுலா எனப் பழகியவர்களை இயற்கைப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்களைடையும் ஏமாற்றம் மற்றவர்களையும் பாதிக்கக்கூடும். எனவே பொருட்காட்சிகளை மட்டுமே பார்த்துப் பழகியவர்களை உண்மையான பயணத்துக்கு தவிர்த்துவிடுவது எல்லோருக்கும் நலம்.இயற்கைப் பகுதிகளில் நடக்கும் பயணத்தில் ஆக்கப்பூர்வமான உரையாடல்களும் சேர்ந்துகொண்டால் அது ஒரு வாழ்நாள் அனுபவமாகிறது. உரையாடிய விஷயங்களை யோசிக்கும்தோறும் இயற்கைப் பகுதிகளின் நினைவும், இயற்கையை நினைக்கும்போது உரையாடிய விஷயங்களின் நினைவுமாக கிடைக்கும் அனுபவம் விலைமதிக்க முடியாதது.

சரி ஒரு சிறப்பான பயணத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? சிறப்பான பயணத்தின் முக்கிய கூறு அதிலுள்ள unpredictableness. ஒரு மாதமாக திட்டமிட்டு, புறப்படும் தினமான  இன்று  எல்லாத் திட்டங்களையும் தகர்த்து எதிர்பாராத மாற்றங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த வனப் பயணம்.

வனவெளியில் பயணம் ஒரு வழிகாட்டியுடன் செல்லும்போது சிறப்படையும். ஆனால் இந்த வனப் பயணம் மனவெளியின் வழிகளைக் காட்டுபவருடன்.

13 ஆகஸ்ட் 2012

ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்


இவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.

சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.

ஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா? காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது? இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா?
இந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன? அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

காட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.

கொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.

அப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது?

குழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.

...


விளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா?


  • உடல் ஆரோக்யம்
  • மனதுக்கு மகிழ்சி
  • ஒற்றுமை உணர்வு


ஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.

இந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.

போட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது? அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.

பிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....உங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும்,  இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?