Unordered List

13 ஆகஸ்ட் 2012

ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்


இவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.

சில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.

ஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா? காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது? இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா?
இந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன? அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

காட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்பயம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.

கொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.

அப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா?

அப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது?

குழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.

...


விளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா?


  • உடல் ஆரோக்யம்
  • மனதுக்கு மகிழ்சி
  • ஒற்றுமை உணர்வு


ஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.

இந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.

போட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது? அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.

பிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....உங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும்,  இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?