ஹாலிவுட்டில் முன்னரே வெளியாகியிருந்தாலும் இயக்குனர் டராண்டினோவின் “ஜாங்கோ அன்செயிண்ட்” (django unchained) இந்த இந்த வாரம் தான் இந்தியாவில் வெளியாகிறது. பாலாவின் “பரதேசி” உடன் இந்தப் படம் வெளியாவது ஒரு ஆச்சர்யமான coincidence தான்.
வரலாற்றில் இருப்பது பெருமிதம் மட்டும் அல்ல. அதில் இருப்பது நமது முன்னோர்களின் கண்ணீரும் தான் என்பதை புரிந்துகொண்டு, மற்றவர்கள் பேசக்கூட தயங்கும் வரலாற்றின் சில கருப்பு பக்கங்களைப் புரட்டுபவை என்பதே இந்த இரு படங்களுக்கு இடையே உள்ள பொது அம்சம்.
அமெரிகாவின் கருப்பு சரித்திரமான அடிமைமுறைபற்றி அதிரடியாகப் பேசும் படம் “ஜாங்கோ அன்செயிண்ட்”. இதில் ஒரு முக்கிய பாத்திரம் வில்லன் வீட்டில் தலைமை அடிமையாக இருக்கும் கருப்பின ஸ்டீபன். சாமுவேல் ஜாக்சன் மிக சிறப்பாக நடித்திருப்பார். அடிமைத்தனத்தின் முழு வடிவமான அவர் அடிமை முறைக்கு எதிரான ஒரு சிறிய செயலைக்கூட பொருத்துக்கொள்ள முடியாதவராக இருப்பார்.
கதையின் படி கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரொ, வெள்ளைக்கார வில்லனின் விருந்தாளியாக தங்க வருவார். வெள்ளையர்களுக்கும் அதில் சங்கடம் இருந்தாலும், வியாபார நிமித்தமாக அதை சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த ஸ்டீபனால் அதை சகித்துக்கொள்ளவே முடியாது. வெள்ளையர்களை விட அவரது பதட்டம் மிக அதிகமாக இருக்கும். ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவன் எப்படி விருந்தாளியாக இருக்க முடியும் என தனது வெள்ளைக்கார முதலாளியிடன் சண்டையிடும் அளவுக்குச் செல்வார்.
பரதேசி படத்தின் மத மாற்ற காட்சிகள் பற்றி பொங்குபவர்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. இவர்களது பதட்டம் ஆசர்யமளிக்கிறது. மற்றவர்கள் சொல்ல முடியாத வரலாற்றைச் சொல்ல ஒருவருக்கு தைரியம் இருக்கும்போது அதைப் பார்ப்பதற்கு எதற்கு நமக்கு இந்தப் பதட்டம்.
கொஞ்சம் நகைச்சுவையுடன் வரும் அந்தப்பகுதிதான் உண்மையில் மிக சோகமான செய்தியைத் தருகிறது. தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு என்று இருக்கும் இலக்கணத்தையே மாற்றியெழுதியிருக்கிறார் பாலா. அந்தப் பாடலில் காட்டப்படும் மக்களின் நிலையும் பாடலின் முடிவாக நீளும் சோக இசையும் மனத்தை உலுக்குபவை. தன் தாய் நோயால் இறக்கும் தருவாயில் ஏதும் புரியாமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தையின் கையில் இருப்பது ஒரு புதிய பொம்மை.
கொஞ்சம் நகைச்சுவையுடன் வரும் அந்தப்பகுதிதான் உண்மையில் மிக சோகமான செய்தியைத் தருகிறது. தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு என்று இருக்கும் இலக்கணத்தையே மாற்றியெழுதியிருக்கிறார் பாலா. அந்தப் பாடலில் காட்டப்படும் மக்களின் நிலையும் பாடலின் முடிவாக நீளும் சோக இசையும் மனத்தை உலுக்குபவை. தன் தாய் நோயால் இறக்கும் தருவாயில் ஏதும் புரியாமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தையின் கையில் இருப்பது ஒரு புதிய பொம்மை.
”ஒரு வக்கீலாக இருந்த்துகொண்டு காந்தி ஏன் சட்டத்தை மீறுகிறார்?” என ஆச்சர்யப்படுவார் ஒரு வெள்ளையர். ஆளும் வர்க்கத்தின் தரப்பை இந்த காட்சியே சொல்லிவிடுகிறது.
கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து செல்லும் ஆரம்பக்காட்சியிலேயே நாம் அந்தக்கால கட்டத்துக்குச் சென்று விடுகிறோம். நமது சந்தோஷம், துக்கம், பேராசை, ஏமாளித்தனம், கோழைத்தனம், சோகம் என அனைத்தையும் அனுபவிக்கிறோம்.
அந்த எளிய மக்களும், வறண்ட பூமியும், அந்த பஞ்ச காலத்திலும் மக்களின் இயல்பான குறும்பும் கொண்டாட்டமும் கலந்த வாழ்க்கையும் நம் கண்முன் விரிகின்றன.
இந்த மக்கள் கூட்டம் ஒரு கங்காணியிடம் ஏமாந்து, தன் கூட்டத்தில் ஒருவன் சாகும் தருவாயில்கூட குரலெழுப்பமுடியாமல் செல்வது தான் நமது நாடு அடிமைப்பட்டிருந்ததின் வரலாறு.
எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், நல்லது எதுவும் நடக்காது என்று தெரிந்திருந்தாலும் கணக்கு தீர்க்கும் அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் மக்கள் உணர்த்துவது எதை?
பேரனையும் அவனது காதலியையும் அவர்களது குழந்தயையும் கூட பாதுகாக்கும் அந்தபாட்டி, அந்த அடிமை வாழ்விலும்கூட தனது குழந்தையுடன் தன்மானத்துடன் வாழும் பெண், தனது மனைவி பாதிக்கப்பட்டாலும் அவளை விரும்பும் கணவன் என மனித மனத்தின் உயரங்களையும் பார்க்கிறோம்.
மனத்தைக் கனக்கச்செய்யும் இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும் என நான் கூட யோசித்ததுண்டு. ஆனால் உண்மையில் இந்தப்படம் பார்த்தபின் தான் மன பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கூட்டம் கூட்டமாக பக்கத்து நாட்டில் தமிழர்கள் கொல்லப்படும்போதும் ஏதும் செய்யமுடியாமல், அதைப் பற்றி பேசக்கூட முடியமல் இருந்த நமக்கும், இந்த படத்தின் பத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
கடைசியில் பரதேசியின் அந்தக்கதறல், நமது கதறல். நமக்காக பேச, நமக்காக வருத்தப்பட, நமக்காக கதற வந்தவன் இந்தப் பரதேசி.