Unordered List

04 அக்டோபர் 2012

ஒரு தண்ணீர் உடன்பாடு


"மனிதன் என்பவன் தரையில் வாழவேண்டும், கிடைக்கும் நேரத்தில் சிந்திக்கவேண்டும். அது மனிதனின் வேலை. தவளை வேண்டுமானால் தரையில் இருக்கும் நேரம்போக மற்ற நேரத்தில் தண்ணீரில் குதித்து மிதக்கலாம், ஏனென்றால் அதற்கு வேறு வேலை இல்லை. ஆனால் மனிதனாகப் பிறந்தவர்கள்  முதலில் மனிதனுக்கு தேவையான வேலைகளையே செய்து முடிக்காமல், தவளைகளின் வேலைகளைச் செய்வது வீண் வேலை இல்லையா? முதலில் மனிதன் செய்யவேண்டிய  வேலைகளைச் செய்யனும் தம்பிகளா .. அப்புறம் தவளையின் வேலைகளைச் செய்யலாம்,"  ஒரு நண்பனின் தோட்டத்து கிணற்றில் நண்பர்கள்  எல்லோரும் மிதந்துகொண்டிருக்க, கிணற்றின் படிகளில் பத்திரமாக  உட்கார்ந்துகொண்டு நான் உதிர்த்த 'அறிவுரைகள்'  தான் அவை. ஆனாலும் நான் கொஞ்சம் தைரியசாலி, நான் உட்கார்ந்த்திருந்தது எனது கால் தண்ணீரில் படும்படி இருந்த, தண்ணீருக்குள் மேலிருந்த கடைசிப்  படிக்கட்டு. என்னைபோலவே நீச்சல் தெரியாத இன்னொரு நண்பன் இருந்தது இன்னும் உயரமான படிக்கட்டு. அவனுக்கு என் அளவுக்கு தைரியம் பத்தாது.

நீச்சல் தவளைகளின் வேலை என்று நான் ஐயம் திரிபர நிறுவிக்கொண்டிருந்தாலும், அருவிக்குளியல் மனிதர்களுக்கானது என்பதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை, அருவிக்குளியல் வாய்ப்பை எப்பொதும் தவறவிடுவதில்லை.


இப்படியாக இயற்கையுடனான ஒரு உடன்பாட்டை நான் கடைப்பிடித்து வந்தாலும், இயற்கை என் அளவுக்கு உடன்பாட்டை மதிப்பதில்லை என்று எனக்கு மெல்ல மெல்ல தெரியவந்தது. சில அருவிகளை, அதுவும் காட்டுக்குள் இருக்கும் அருவிகளை நீந்தித் தான் அடையவேண்டும் என்ற கட்டாயத்துடன் அமைத்திருந்தது இயற்கை. கொல்லி மலையில் பல கிலோமீட்டர்கள் கீழே இறங்கி அடைந்த ஆகாய கங்கையில் இந்த நிலை. பிறகு சென்ற பர்கூர் காட்டருவியிலும் அதே நிலை, இங்கே சென்னைக்கு அருகிலுல்ல தடாவிலும் கூட.இயற்கையின் சதியை மீண்டும் மீண்டும் சந்தித்தது எனக்கு எதையொ உணர்த்தியது. அந்தக் காலத்து படங்களில் மூன்றுமுறை அடிவாங்கி, வாயில் கசியும் ரத்தத்தை தொட்டுப் பார்த்தபின் வீரம் வரும் ஹீரோ போல உணர்ந்தேன். ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலைமை. இயற்கையானது எப்போதும் இயங்கும் மகாதர்மத்துக்குக்  கட்டுப்பட்டது. என்னை நீச்சல் அடிக்கவைத்தே தீருவது என்று எங்கும் பரவியிருக்கும் அந்த மகாதர்மம் முடிவு செய்துவிட்டால் அதற்கு ஒரு நோக்கம் இருக்கத் தானே செய்யும். அந்த நோக்கத்தை யாரறிவார்? இயற்கையை அதன் வழியிலேயே எதிர்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

இயற்கையின் சதி


உடனடியாக செயலில் இறங்கினேன். நமக்கு எந்த விஷயம் தெரியவேண்டுமானாலும் முதலில் யாரைக் கேட்பது. ஆம் நான் முதல் செயல் நமது கூகிள் அண்ணாவிடம் கேட்டது தான். கூகிள் என்னை youtube-க்கு அனுப்பி வைத்தது. சிலமணிநேரங்கள் அதில் செலவழித்து கிட்டத்தட்ட ஒரே இரவில் நீச்சலைக் கற்றுக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும். இவ்வளவு எளிதான ஒரு விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்களாக செய்யவில்லை என்ற வியப்பும் உருவாகியது. இதிலும் அந்த மகா தர்மத்தின் விளையாட்டு இருக்கக்கூடுமென உணர்ந்தேன்.

அடுத்த கட்டமாக youtube மூலம் ’கற்றுக்கொண்ட’ வித்தையை ஒரு நீச்சல் குளத்தில் காட்டுவது என்று முடிவு செய்தேன். ஒரு விஷயம் தெரிந்தபின் அதை சந்தேகப்படுவது தவறு என்று தெரிந்திருந்தாலும், காலத்தின் கட்டாயத்தால் நீச்சல் குளத்துக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது. காலாண்டு விடுமுறை காரணமாக என்ன செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவனுடன் கூட்டணி அமைத்து நீச்சல்குளம் சென்றேன்.

பல வருடங்களாக நீச்சல் அடித்துவந்தாலும், நான் படித்தறிந்த பல நுணுக்கங்கள் அவனுக்குத் தெரியவில்லை எனபது மிக ஆச்சர்யம் தான். போகும் வழியில் அந்த நுணுக்கங்களை அவனுக்குக் சொல்லிக்கொடுத்தபடியே சென்றேன். அதில் அவ்வப்போது சில சந்தேகங்களையும் கேட்டு அவனது ஆர்வத்தைப் பறைசாற்றிக்கொண்டு வந்தான் அவன். அந்த ஆர்வத்துக்குக் காரணம் வீட்டில் என்ன செய்வதுஎன்று தெரியாமல் இருந்த அவனை நீச்சல் குளம்  கூட்டிச்சென்று வருகிறேன் என்று கொடுத்த வாக்குறுதியா அல்லது உண்மையான ஆர்வமா என்றறியேன். அனால் குளத்தில் இறங்கியவுடன் அவன் சொன்னது "அங்கிள், நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க ஆனால், ரெம்ப ஆழம் போயுடாம, இந்த சுவத்தைப் பிடித்தபடி பண்ணுங்க" என்றான். அவனும் கவனிக்கிறான் போல.

ஆனால் அந்தத் நீச்சல் குளம், youtube போல அந்த அளவுக்கு எளிதல்ல என்று தோன்றியது. நீச்சல் அவ்வளவு எளிதாக வரவில்லை அங்கு. காரில் வந்த  நேரம் முழுவதும் நான் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த அவன் இப்போது பேச ஆரம்பித்தான், நீச்சல் அடிப்பதைப் பற்றி. சிறிது நேரத்தில் அங்கு இருந்த பல சிறுவர்கள் மிக உற்சாகமாக எனக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். நேரம் தான்.

அப்புறம் இரு நாட்கள் முயற்சிகளுக்குப் பின் நீச்சல் ஒருமாதிரியாக பிடிபட ஆரம்பித்தது வேறு கதை.ஆனால் நீச்சலை இதுமாதிரியாக ‘பார்த்துக்' கற்றுக்கொள்வதை பலரால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.தண்ணீரில் தள்ளிவிட்டால் தானாக வந்துவிடப்போகிறது என்பது தான் பலரது கருத்து. ஆனால் அது அப்படியில்லை.

நீச்சல் மனித உடலின் ஒரு இயற்கையான செயல்பாடுதான் என்றாலும், மனிதர்கள் எல்லோருமே ஒரே மாதிரி நீச்சல் அடிப்பதில்லை என்பதை நாம் உணர வேண்டும். அதற்குக் காரணம், பெரும்பாலானவர்கள் தாங்கள் முதலில் குத்துமதிப்பாக கற்றுக்கொண்ட முறையையே மீண்டும் மீண்டும் செய்துவருவது தான். எல்லா கற்றலும் போல இதிலும், உள்நோக்கிய அல்லது வெளிநோக்கிய கற்றல் சாத்தியம். தங்கள் உடலைக் கவனித்து, அதன் இயல்பை உணர்ந்த்து அதைச் செய்வது உள்நோக்கிய கற்றல், அல்லது மற்றவர்களையும் youtube வீடியோ போன்றவற்றை கவனித்து அதை முறையாக பயிற்சி செய்து, அவற்றை நமது உடலின் தசை நினைவிலேற்றும் வெளிநோக்கிய கற்றல். இந்த இரண்டு முறைக்கும் வராமல் தனக்குத் தெரிந்த ஒரே முறையில் நீந்துவது கற்றலில் வராது.

தெரியாது என்று என்று தெரிந்துகொள்வதுதான் அறிதலின் இரண்டாம் நிலை என்று சொல்வார்கள் , அதுதான் முக்கியமான நிலையும் கூட. இந்த இரண்டாம்  நிலைக்கு வந்துவிட்டால் சிலபல முயற்சிகள் மற்றும் பயிற்சிகள் மூலம் அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்று விற்பன்னராகிவிடலாம். ஆனால் நீச்சல் கற்றுக்கொள்வதில் ஒரு ஆச்சர்யம் இருக்கிறது. கற்றுக்கொண்ட பிறகுதான் தெரிகிறது, இது நமக்கு முன்னரே தெரியுமென்று. தெரிந்ததை தெரியும் என்று தெரிந்துகொள்ளத்தான் இத்தனை ஆர்ப்பாட்டங்களும்.