Unordered List

19 அக்டோபர் 2014

நூல் வேட்டை

ஒரு ஃபெவிகால் டுயூப் கேட்டேன். நியூஸ் பேப்பர், குச்சியெல்லாம் வீட்டிலேயே கிடைக்கும் எனவே அது தேவையில்லை, அப்புறம் ஒரு நூல்.

கடைக்காரத் தாத்தா எடுத்துக்கொடுத்தது ஒரு தையல்மெசின் நூல், அது இதற்கு வேலைக்காகாது எனத் தெரிந்தது, ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. இந்த வயதில் இதைக் கேட்கிறானே என்று நினைத்துவிடுவாரோ என்று கொஞ்சம் தயக்கம்.

”இன்னும் கொஞ்சம் பெரிசா, கட்டுற மாதிரி” என்றேன்.

”சரி இது வேணுமா, அஞ்சு ரூபாய்” என்றார். அது பூ கட்டும் நூல். அது சரி.

“வேற இருக்கா” என்று கேட்டேன். வேறு கடைகள் இருக்குமா இந்தப் பகுதியில் என்று மனம் யோசிக்க ஆரம்பித்தது. அதை எப்படியோ கண்டுகொண்டவர் போல

“வேற நூலா, இதுவே இங்கே போக மாட்டெங்குது, பெருமாள் கோவில் எதிர்த்தாப்புல இருக்கு நூல் கடை, அங்கே எல்லா நூலும் வச்சுருப்பான்” என்றார்.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, வாங்கியதற்கு பணம் தந்துவிட்டு கிளம்பும்முன் கேட்டேன்.

“அந்தப் பெருமாள் கோவில் எங்க இருக்கு?”

”என்னது பெருமாள் கோவில் தெரியாதா” என அதிர்ச்சியானார். அவர் முகத்தில் இருந்த நம்பிக்கை முழுவதும் சட்டென அணைந்ததைக் கவனித்தேன்

அவரது அதிர்ச்சியைப் பார்த்து எனக்கே கொஞ்சம் அதிச்சியாகத்தான் இருந்தது, பெருமாள் கோவில் பற்றி தெரியாமல் வாழ்ந்து வருகிறோமே என, தாத்தா மிகப்பெரிய பெருமாள் பக்தர்போல. பேசாமல் இவரிடம் கேட்காமல் இன்னொரு தீவிர பெருமாள் பக்தரான எனது நண்பரிடமே கேட்டுக் கொள்ளலாம் என்று கூட ஒரு கணம் யோசித்தேன். இருந்தாலும் அப்போது அந்தக் கடைகாரத் தாத்தாவின் நம்பிக்கையைப் பெறுவதே சவால் என்று தோன்றியது.

ஒரு வழியாக அவரிடமே வழியைத் தெரிந்துகொண்டு புறப்பட்டேன், ஒரு அம்மா உணவகம். ஒரு சிவன் கோவில் ஒரு பிரபல கடை என வழி துலங்கி வந்தது. அப்போது நூல் வாங்குவதை விட பெருமாள் கோவிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியே பிரதானமாக நோக்கமாக உருவாகி வந்துகொண்டிருந்தது.

அவர் சொன்ன வழியான சிவன் கோவில் மற்றும் வேறு அடையாளங்களைக் கண்டுபிடித்து நான் வந்து சேர்ந்த இடம்,  நான் பலமுறை வந்த இடம் தான். ஏற்கனவே தெரிந்த இடத்துக்கு தெரியாத அடையாளங்கள் வழியாக வந்து சேர்வதும் ஒரு அட்வென்சர் தான்.

அப்படியும் அந்த முக்கிய விஷயமான பெருமாள் கோவிலை தானாகக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒருவழியாக அங்கே பக்கத்தில் சிலரிடம் கேட்டு பெருமாள் கோவிலையும் கண்டுபிடித்து, நூல்க் கடையையும் கண்டுபிடித்தேன்.

அவர் சொன்னது சரிதான். அங்கே எல்லாவிதமான நூற்களும் இருந்தன, ஆனால்.

“பட்டம் செய்யுற நூல் வேணும்”

உடனடியாக பதில் வந்தது,

“பட்டம் விட நூல் நாங்க விற்கிறதில்லை. காரணம் கேளுங்க”

நான் கேட்கவில்லை. அவரே தொடர்ந்தார். அதோ அவரைப்பாருங்க அவர் கழுத்துல மாட்டி, உயிர் பிழைத்ததே பெரிய விஷயம். அதுனால இந்த பாலிசி”

அவரால் சுட்டப்பட்ட அந்த நபர், இன்னொரு வாடிக்காளருக்கு ஏதோ நூலைக்காட்டிக்கொண்டிருந்தபோதும்,  கழுத்தைச் சாய்த்து என்னிடம் அந்த ஆதாரத்தைக்  காட்டத் தவறவில்லை. ஆனால் அந்தக் கழுத்தில் என்ன பார்பது என்று எனக்குத் தான் தெரியவில்லை/ நான் எதோ ஆப்கானிஸ்த்தான் சென்று ஏ.கே 47 கொள்முதல் செய்யப்போனவன் போல உணர்ந்த்தேன்.

சின்ன வயதில் மணிக்கணக்கில் பொட்டல் வெளிகளிலும், மொட்டை மாடியிலும் வெயிலைப் பொருட்படுத்தாமல் பட்டம் விட்டவர்கள்தாம் நாம். இருந்தாலும் அதில் வெயிலைத் தவிர எந்த ஆபத்தையும் பார்ததில்லை அப்போது. பட்டம் ஆபத்தானது என்று சென்னை வந்தபின்னர் தான் எனக்கெல்லாம் தெரியும். ஊர்ப்பக்கம் எல்லாம் இந்த மாஞ்சா வகையரா எல்லாம் கேள்விப்பட்டதுகூட இல்லை.

அவர் நினைப்பது போல நான் மாஞ்சா செய்து பட்டம் விடப்போவதில்லை. குழந்தைகளுக்கு மொட்டைமாடியில் பட்டம் விட்டுக் காட்டப்போகிறேன், அவ்வளவு தான் என விளக்க முடியும்தான், இருந்தாலும், விவாதம் இல்லாமல் இடத்தைக் காலிசெய்தேன்.

வெளியே வந்தபின்னர்தான் நினைத்துக்கொண்டேன், நான் முதலில்  கேட்டதுபோலவே கேட்ருக்கவேண்டும். பட்டத்துக்கு என்று சொல்லியிருக்கக்கூடாது என.

வரும் வழியில் கவனித்தேன்.ஒரு சின்னக் கடை. நின்றேன்.

“நூல் வேணும்”

“இல்ல இன்னும் பெருசா, கட்டுற மாதிரி..”

”இல்லையில்லை பூக்கட்டுற நூல் இல்லை. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா”

இப்படிக் நான் ‘விளக்கிக்’ கொண்டிருக்கையில், பின்னால் நின்றவர் கடைக்காரரிடம் சொன்னார்.

“அந்த பட்டம் விடுற நூலை எடுத்துக்கொடுப்பா. இவர் கேக்குறதுக்கு சரியா இருக்கும்”  என்று சொல்லியபடி என்னைப்பார்த்து “பட்டம் விடுற நூல் சார். நல்ல ஸ்ட்ராங்கா இருக்கும்” என்றார்.

---

அவர் ஏன் கொடுக்கவில்லை. இவர் ஏன் கொடுத்தார் என யோசித்தேன்.
அந்த நூல் கடை இருப்பது வியாபாரப் பகுதி. இன்னொன்றும் கவனிக்க வேண்டும் அந்தக்கடை நூலுக்கென்று உள்ளது, எனவே ப்ரொஃபெசனல் பட்டம் விடுவோர் தேடி வந்து அங்கு வாங்குவது இயல்பு. எனவே அவர் என்னையும் அப்படி நின்னைப்பதும் இயல்புதான்.

ஆனால் இந்தக் கடை இருக்கும் இடம் வீடுகள் இருக்கும் குடியிருப்புப்பகுதி, எனவே நான் பட்டம் செய்தாலும் ஆபத்திலாமல் விளையாடத்தான் எனக் கண்டுபிடிப்பது இவருக்கு கடினம் அல்ல. இன்கே நூலை எடுத்துக்கொடுக்கச் சொன்னவர் இன்னொரு வாடிக்கையாளர் தான். அந்த அளவுக்கு அவருக்கு அந்தக் கடைத் தெரிந்திருக்கிறது. என்னை அங்கே யாருக்ககோ தெரிந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

இருவருக்கும் தெரியாத ஒன்று உள்ளது, ஒருநாள் மொட்டை மாடியில் பறந்த அந்தப் பட்டமும், அந்த நூலும் இப்போது எனது படுக்கையறையில் தான் தூங்கிக்கொண்டுள்ளன.