Unordered List

02 ஜூலை 2013

இலக்கிய தீபாவளி 2013

"நீங்க சொல்லுங்க” என்று ஜெயமோகன் என்னைப் பார்த்தார். அதை எதிர்பார்த்துதான் கையுயர்த்தியிருந்தேன் என்றாலும், வாய்ப்பு வந்தவுடன் சட்டென கொஞ்சம் பதட்டமும் தோன்றியது. அப்போது விவாதத்திலிருந்த கதையைப் பற்றி எனது கருத்தை ஒரு கேள்வியாக முன் வைத்தேன்.

விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் படைப்புகள் பங்கேற்பாளர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருந்ததால், தகுந்த தயாரிப்புகளுடனேதான் நான் சென்றிருந்தேன். அப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது பாரதியின் துள்ளல் நடையில் மொழிபெயர்க்கப்பட்ட தாகூரின் ஆசாபங்கம். படித்தவுடனே பிடித்த மிகவும் பிடித்த படைப்பு. சமீபத்தில் வாசித்த சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ கொடுத்த ஆர்வத்தில் சிப்பாய்க் கலகம் பற்றி மேலதிகமாகப் படித்த தரவுகளையும் சேர்த்து எனக்கு இந்தக்கதையைப் பற்றிய ஒரு கருத்து உருவாகியிருந்தது.

பொறுமையாகக் கேட்ட ஜெயமோகன், “இது இக்கதையின் மிக குறுக்கப்பட்ட வாசிப்பு. இதில் இந்தச் சம்பவங்கள் இருக்கலாம் ஆனால் கதையின் மையம் வேறு” என்றபடி விவாதத்தை வேறுதிசை நகர்த்தினார். எனது அம்பு சுட்டு வீழ்த்தப்பட்டது என்றுண்ர்ந்தேன். விவாதம் செல்லும் திசையை இன்னும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தேன். விவாதத்தின் போக்கில் இன்னும் பலரின் கருத்துக்களும் சில கட்டுரைகளும் கூட சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தேன்.

வருடாந்திர விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு மிகவும் எதிர்பார்க்கப்படும் இலக்கிய தீபாவளி போலாகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த வருடம் fireworks கொஞ்சம் அதிகம் தான்.சென்ற வருடம் சில மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய வாசிப்பு மற்றும் விவாதம் என்று அதிகரித்த வாசகர் பங்களிப்பு இந்த வருடம் இன்னும் வளர்ந்து கால வரிசையில் வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில படைப்புகளைப் பற்றிய விவாதம் என்று வளர்ந்துள்ளது. கொடுக்கப் பட்ட காலத்தின் முக்கிய படைப்பு என்று தாங்கள்  கருதுவதை ஒரு காலகட்டத்துக்கு ஒருவர் என்ற முறையில் பங்கேற்பாளார்களே தேர்ந்தெடுத்து, அதன் நியாயங்களை விளக்கி திறனாய்வை வழங்கினர். அதன் பின் அப்படைப்புகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

சில கட்டுரைகள் வரவேற்கப்பட்டன, சில அவதானிப்புகள் பாராட்டப்பட்டன. கட்டுரைகளோ அல்லது கருத்துக்களோ, கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தாலும் சந்தேகமின்றி நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் எப்போதும் நகைச்சுவைக்கும் வெடிச்சிரிப்புகளுக்கும் இடம் இருந்துகொண்டேயிருந்தது. எல்லோருமே படைப்புகளைப் படித்திருந்தாதால் அனைவருக்குமே சொல்ல ஏதாவது இருந்தது, எல்லாக் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டன. படைப்புகள் அதிகம் இருந்ததினால் நேரம் மிகக் கச்சிதமாக கையாளப்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாசகர்களின் தரம் பற்றி நம்பிக்கை அதிகரித்து வருவதின் அறிகுறியாகவே இந்தக் கறாரான அணுகுமுறையைப் பார்க்கிறேன். அடுத்தமுறை பங்கேற்பாளர்கள் இன்னும் அதிக தாயாரிப்புகளுடனும் தரவுகளுடனும் வரவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது, கூடவே உண்மையை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும்.

இந்தக் கூடலின் முக்கிய அடையாளமாகிவிட்ட கம்பராமாயண வாசிப்போடு துவங்கியது கூடல். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் ஜடாயு இருவரும் கம்பராமாயணத்தின் மிக சுவையான மற்றும் ஆழமான வாசிப்பை வழங்கினர். ஜெயமோகன் அவ்வபோது தொட்டுக்காட்டும் உச்சங்கள் செரிவைக் கூட்டின. பிறகு நடந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் பற்றிய விவாதம்.

கடைசிநாள் பேராசிரியர் ஞானசம்பந்தன், வில்லிபாரதம் பற்றி ஒரு சொற்பொழிவை வழங்கினார். ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை திறனாய்வு செய்யும் இந்தக் கூட்டத்தின் முறைக்கு நேரெதிராக பல கருத்துக்களை ஒன்றுடோன்று இணைத்து நகைச்சுவை கலந்து சரவெடி போல் பேசும் முறை அவருடையது. இருப்பினும் இதுவும் மிகவும் ரசிக்கும்படிதான் இருந்தது.

முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாக பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் நமது ஸ்பீக்கரின் தரத்தை பொருத்ததுதான் இல்லையா, மனித குரலை விட சிறப்பான ஸ்பீக்கர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நான் நம்புகிறேன். அந்தக் குளிர் இரவில் நெருப்பு வெளிச்சத்தில் சில உன்னத குரல்கள் தரும் உணர்வில் இருந்த நேரத்துக்கு நன்றி சொல்லி முடியாது.


இந்த முறை சென்ற கூட்டங்களைவிட அதிகமான வாசகர்கள் பங்கேற்றனர். கூட்டம் மிக நேர்த்தியாக நடந்தது. அருமையான சூழல், உணவு மற்றும் மிக நட்புணர்வோடு நண்பர்கள் என மூன்று நாட்களும் மிக அருமையாக நடந்தன. ஈரோட்டில் நடந்த அறம் வெளியீட்டு விழாவில் விஜயராகவன் சாரை முதலில் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் அவரது நல்லெண்ணம் கொண்ட உழைப்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் நிறைவுவரை அவரே தொகுத்து வழங்கினார், கூடவே ஒரு சிறப்பான திறனாய்வையும். இம்முறை நண்பர்  சேலம் பிரசாத் எடுத்துக்கொண்ட பொறுப்புகளும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுபுரம் குழுவின் ஒரு முக்கிய அம்சம் அதன்  diversity. புதிய நட்புகளும் உருவாகவும், வெவேறு துறைகளிலிருந்து வந்திருந்த பலரின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் இடைவெளிகளும் நடைகளும் மிக உதவியாக இருந்தன.

வாழ்க்கையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும், இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என கலந்துகொண்டேன். இது நல்ல முடிவாக அமைந்துவிட்டது.  எல்லா முறையிலும் புத்துணர்ச்சியளித்த நாட்கள் இவை.

சில படைப்புகளைப் பற்றி நான் எடுத்த குறிப்புகளையும், விவாத்தில் நான் எடுத்துக்கொண்ட அவதானிப்புகளையும் சேர்த்து குறிப்புகளாக எழுதவேண்டும் என்ற திட்டம், படிக்கவேண்டிய சில புத்தகங்கள், தொடரவேண்டிய சில விவாதங்கள் என இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவை உற்சாகமாக உருவாகிவந்தவண்ணம் இருக்கின்றன.