Unordered List

25 மே 2011

யாரோட காசு, இது நம்ம காசு!!

சட்டசபை பழைய கட்டடத்திலேயே நடப்பதினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பல குரல்கள்.

அரசு செலவழிப்பது மக்களின் வரிப்பணம் தான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்துகொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி.

மக்களின் வரிப்பணம் வேறு எப்படியெல்லாம் வீணாகிறது..


தமிழில் பெயர் இருந்தால் சினிமாவுக்கு கேளிக்கை வரிவிலக்கு. இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரில் தான் வருகின்றன. அப்படிஎன்றால் தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வரி இல்லை.


இந்தியாவில் நடத்திமுடிக்கப் பட்ட உலகக் கோப்பைக்கு வரி எதுவும் இல்லை. நமது அரசு அதை அத்தியாவசியமாக நினைத்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் அரசுக்கு எத்ததனை கோடி வருமான இழப்போ?


அப்படியென்றால் அரசு சலுகைகளே காட்டக் கூடாதா என்று கேட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். பொது நன்மை உள்ள விஷயங்களில் சலுகைகள் காட்டட்டும். விவசாயம், அடிப்படைத் தொழில்கள் போன்றவற்றில் சலுகைகள் அவசியம் தான்.

வருமானம் குறைவானவர்களுக்கு அரசு தரும் இலவச அரிசி போன்றவை இப்படிப் பட்டவை. உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் கிடக்கச் செய்யவது எந்த ஒரு அரசின் கடமை.

ஆனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் எதற்கு இந்தச் சலுகைகள்?

நானும் எனக்குப் பிடித்த படங்களை முதல் நாளே சென்று ரசிக்கும் சினிமா ரசிகன் தான், மணிக்கணக்காக கிரிக்கெட் பார்ப்பவன் தான். ஆனால் இவை கண்டிப்பாக விவசாயம் போல அத்தியாவசிய பொருள் அல்ல. இவற்றுக்குக் கண்டிப்பாக எந்தச் சலுகையும் தேவை இல்லை.

இவையிரண்டும் கண்டிப்பாக இந்தியாவில் வெற்றிகரமான தொழில்கள் தான். இந்தச் சலுகைகள் மூலம் பலன் பெறுவது வரிகட்டும் நம்மைவிட பெரிய புள்ளிகள் தான்.


இந்த சட்டசபை கட்டிடம் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது? உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும்? இருப்பதே பயன்படுத்திக் கொள்கிறோம் எனச்சொல்வது எப்படி வீண் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை.


இது போன்ற கட்டமைப்பு துறைகளில் வீணாவதை விட, இது போன்ற சலுகைகளால் தான் அதிகம் நமது வரிப்பணம் தொடர்ச்சியாக வீணாகிறது என்ற எண்ணம் மக்களிடமும், அரசின் செலவவுகளுக்கு மக்களிடம் கணக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் வரும் என எதிர்பார்க்கலாம்.

20 மே 2011

சொன்னபடி வந்த தேர்தல் முடிவுகள்..

தேர்தல்நாளைவிட முடிவுகள் வந்த நாளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். வேலை பார்ப்பதைவிட வேடிக்கை பார்ப்பது சுவையானது.

முடிவுகள் இப்படி வந்ததற்குக் காரணம் என்னவென்று கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும், எல்லாப் பதிவர்களும் சொல்லிவிட்டார்கள். நமக்குப் புரியாதது என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் முன்னரே தெரிந்திருந்தும் ஏன் இந்த தீர்க்கதரிசிகள் அப்போதே சொல்லவில்லை என்பது தான்.

போராட்டங்கள் மறியல்கள் என பல கலவரங்களை உருவாக்கி மம்தா பானர்ஜி வங்காளத்தில் வென்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எந்த பிரச்சனையும் அல்லது போராட்டமும் செய்யாத ஜெயலலிதாவும் வென்றிருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்..

பிரசாரத்தின் பொது அப்போதைய ஆளும் கட்சியால் அதிகம் முன்னிறுத்தப்பட்டவர் வடிவேலு தான். அவர் அதிகம் முன்னிறுத்தியது விஜயகாந்தை தான். அதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் அதிகம் பேசியது வடிவேலு பற்றி தான். எப்படியோ விஜயகாந்த் முன்னுக்கு வந்துவிட்டார்.

வடிவேலு தி.மு.க வின் பிரசார பலத்தை விஜயகாந்த் மீது திருப்பிவிட்டார் என்று தோன்றுகிறது. சன் டிவி உள்ளிட்ட அதன் பலம் வாய்ந்த ஊடகங்கள் விஜயகாந்தை மீது தான் அதிகம் நேரம் செலவழித்தன.

திருநீறு, குங்குமம் வைத்த அமைச்சர்களும், அவர்கள் ஆண்டவன் மீது ஆணையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பார்பதற்கு கொஞ்சம் இயற்கையாக இருந்தது. (முந்தைய அரசு இயற்கை மீது ஆணையாக பிரமாணம் எடுத்துக் கொண்டது அவ்வளவு இயற்கையாக தோன்றவில்லை)

பழைய சட்டமன்றமே போதும் என ஜெயலலிதா தனது பாணி அதிரடியை ஆரம்பித்துள்ளார். அப்படியே தமிழ் புத்தாண்டையும் பழையபடியே சித்திரைக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். (விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பண்டிகை தினங்களை மாற்றுவது பற்றி சிந்திப்பதற்கும் தடை வரும் என எதிர்பார்க்கலாம். )

வாக்குப் பதிவு எந்திரத்தில் செயற்கை இதயம் உள்ளது என நம்பவேண்டியிருக்கிறது. தலைவர்களுக்கு பிரச்சனை என்றால் (தோற்கும் நிலையில்) இருந்தால் மட்டும் அவை வேலை நிறுத்தம் செய்கின்றன. (பத்திரிக்கைக்காரர்களுக்கு இல்லாத இதயம் எந்திரத்துக்கு இருக்கிறதே !!)

கருணாநிதியின் படைப்புகளுக்காக இனிமேல் பாராட்டு விழாக்கள் நடந்தால் அது சரியானதாக இருக்கும். அவரது தமிழால் கவரப்பட்டவர்கள் இனிமேல் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

10 மே 2011

தண்டனையா அல்லது தண்ட செலவா.. ஒரு பார்வை

உலகளாவிக கொண்டாட்டங்கள். பல அரசாங்ககளின் நிம்மதிப் பெருமூச்சுக்கள், மகிழ்ச்சி அறிக்கைகள், மற்றும் எண்ணிலடங்கா சர்ச்சைகள்.

ஒரு 54 வயது மனிதர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இந்தத் தண்டனை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இது அமெரிக்கா பாதுகாப்புத் துறைகளின் மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டப் படுகிறது.



ஒசாமா மிக கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக பல வருடங்கள் முன்பே செய்திகள் வந்திருந்தன. அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகத் தெரிகிறது. உடலின் பல பகுதிகளில் பல கடுமையான காயங்கள் இருந்துள்ளன.

அந்தச் செய்திகளை உண்மையென எடுத்துக் கொண்டால் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் அவரது மரணம் சமீபத்தில் தான் இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கொல்ல ஏன் அமெரிக்க இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்? ஏன் இவ்வளவு செலவளித்திருக்க வேண்டும்?

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் உடல் நிலையோடுதான் அவர் இருந்தாரா என்பதும் ஒரு பதிலறியமுடியாத ஒரு கேள்வி. அவர் அப்படி அறியமுடியாத மன/உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தத் தண்டனை என்பதே கேள்விகுறியதாய் ஆகிவிடாதா?

இணையம் மற்றும் தொடர்பு கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து அவர் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தாரா என்பதும் நம்முன் இருக்கும் அடுத்த கேள்வி.

அப்படியென்றால், இதில் ஒரு சிலரின் மரணம் என்பதைவிட பெரிய விஷயம் ஒன்றும் இல்லையென்று முடிவுசெய்துவிடலாமா?

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு தேவையில்லாத நடவடிக்கை எனலாமா?


அப்படி செய்யமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏன்.

இதற்கு கிடைத்துள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டையும் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. இருவரும் அவரை ஒரு தனி மனிதராகப் பார்க்கவில்லை.

அவர் ஒரு உணர்ச்சியின், ஒரு இயக்கத்தின் குறியீடு. அவரே ஒரு இயக்கம். அவர் தனிமனிதன் என்ற நிலையை எப்போதோ கடந்துவிட்டார்.

மனிதர்கள் சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். சித்தாந்தங்களுக்கு சீடர்கள் உருவாகிறார்கள். உருவாக்கியவர் ஒரு அமைப்பாக/ குறியீடாக ஆகிறார். அந்தக் குறியீடு உருவாக்கியவரைவிட பெரிதாக ஆகிறது.

இனிமேல் அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் பெயரே போதும் எல்லா செயல்களும் செய்ய. உண்மையில் அவரே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்த அமைப்பின் மீதுதான்.

இந்த அளவில் அமெரிக்க தண்டனை கொடுத்தது அமெரிக்காவுக்கு வெற்றிஎனவே கொள்ளவேண்டும், தண்டனை பெற்றவர் அதை முழுவதும் அறியும் நிலையில் இல்லாமல் இருந்திருந்திருந்தாலும்.