தேர்தல்நாளைவிட முடிவுகள் வந்த நாளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். வேலை பார்ப்பதைவிட வேடிக்கை பார்ப்பது சுவையானது.
முடிவுகள் இப்படி வந்ததற்குக் காரணம் என்னவென்று கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும், எல்லாப் பதிவர்களும் சொல்லிவிட்டார்கள். நமக்குப் புரியாதது என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் முன்னரே தெரிந்திருந்தும் ஏன் இந்த தீர்க்கதரிசிகள் அப்போதே சொல்லவில்லை என்பது தான்.
போராட்டங்கள் மறியல்கள் என பல கலவரங்களை உருவாக்கி மம்தா பானர்ஜி வங்காளத்தில் வென்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எந்த பிரச்சனையும் அல்லது போராட்டமும் செய்யாத ஜெயலலிதாவும் வென்றிருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்..
பிரசாரத்தின் பொது அப்போதைய ஆளும் கட்சியால் அதிகம் முன்னிறுத்தப்பட்டவர் வடிவேலு தான். அவர் அதிகம் முன்னிறுத்தியது விஜயகாந்தை தான். அதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் அதிகம் பேசியது வடிவேலு பற்றி தான். எப்படியோ விஜயகாந்த் முன்னுக்கு வந்துவிட்டார்.
வடிவேலு தி.மு.க வின் பிரசார பலத்தை விஜயகாந்த் மீது திருப்பிவிட்டார் என்று தோன்றுகிறது. சன் டிவி உள்ளிட்ட அதன் பலம் வாய்ந்த ஊடகங்கள் விஜயகாந்தை மீது தான் அதிகம் நேரம் செலவழித்தன.
திருநீறு, குங்குமம் வைத்த அமைச்சர்களும், அவர்கள் ஆண்டவன் மீது ஆணையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பார்பதற்கு கொஞ்சம் இயற்கையாக இருந்தது. (முந்தைய அரசு இயற்கை மீது ஆணையாக பிரமாணம் எடுத்துக் கொண்டது அவ்வளவு இயற்கையாக தோன்றவில்லை)
பழைய சட்டமன்றமே போதும் என ஜெயலலிதா தனது பாணி அதிரடியை ஆரம்பித்துள்ளார். அப்படியே தமிழ் புத்தாண்டையும் பழையபடியே சித்திரைக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். (விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பண்டிகை தினங்களை மாற்றுவது பற்றி சிந்திப்பதற்கும் தடை வரும் என எதிர்பார்க்கலாம். )
வாக்குப் பதிவு எந்திரத்தில் செயற்கை இதயம் உள்ளது என நம்பவேண்டியிருக்கிறது. தலைவர்களுக்கு பிரச்சனை என்றால் (தோற்கும் நிலையில்) இருந்தால் மட்டும் அவை வேலை நிறுத்தம் செய்கின்றன. (பத்திரிக்கைக்காரர்களுக்கு இல்லாத இதயம் எந்திரத்துக்கு இருக்கிறதே !!)
கருணாநிதியின் படைப்புகளுக்காக இனிமேல் பாராட்டு விழாக்கள் நடந்தால் அது சரியானதாக இருக்கும். அவரது தமிழால் கவரப்பட்டவர்கள் இனிமேல் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.