Unordered List

14 ஏப்ரல் 2017

சாகசம் என்றால்

சாகசம் என்றால்  துப்பறிதலும்,  கடுமையான ஆயுதமும் மற்றும் திட்டமிட்டு தாக்குதலும் இருந்தால் தான் சுவாரஸ்யம். இவை கொஞ்சமும் குறையாமல் இருந்த ஒரு சாகசத்தை நான் சிறுவயதில் செய்வதுண்டு. 

சணல் கயிற்றில் கட்டிய பேப்பரில் இருந்து அந்தப்பொடியை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்துக்கொள்வதில் துவங்குகிறது அந்த சாகசம். அதை மெல்லிதாக தூவ ஒரு கெட்டியான பேப்பர் அல்லது அட்டையை எடுத்துக்குக்கொள்ளலாம். ஆயுதம் தாயார். இப்போது எதிரியை தேடவேண்டும். 

இதுவரை செய்தது கூட வேறு யாரும் செய்துவிடக்கூடிய செயல் தான், ஆனால் இந்த எதிரி நுழையும் இடங்களைக் கண்டுகொள்ள ஒரு ஒரு சிறுவனால் மட்டும்தான் முடியும்,  எறும்பு நுழையும் வீட்டின் எல்லா மூளை முடுக்குகளும் அவனுக்கு மட்டுமே தெரியும்.

முதலில் எறும்புகளின் ஒரு வரிசையைக் கண்டுகொள்ள வேண்டும். 
கண்டுகொண்ட பின் , கொஞ்சம் கொஞ்சமாக பொடியைத் தூவிக்கொண்டே செல்லவேண்டும். அந்த விஷப்போடி பட்டதும் சிறிது குழம்பி எறும்புகள் வரிசைவிட்டு விலகி சுற்றும். நாம் வரிசையைத் தொடர வேண்டும். தரை, சுவர், ஜன்னல் என பல வழிகளைத் தாண்டி அது அனேகமாக வீட்டுக்கு வெளியே மண்ணில் இருக்கும் ஒரு புற்றை சென்றடையும். 

எறும்புகள் வரிசையாகச் செல்வதை அதன் நல்லியல்பாகச சொல்வதுண்டு. ஆனால் அந்த நல்லியல்பு தான் அதன் புற்றை நமக்கு காட்டிக் கொடுக்கிறது. 

புற்றின் மீது கொஞ்சம் பொடியைக் கொட்டி, ஒரு சிறிய குச்சியை வைத்து கொஞ்சம் உள்ளேயும் இறக்கிவிட்டால் அந்த பணி இனிதே நிறைவடையும். 

சிவப்பாக இருக்கும் எறும்புகள் போடிதூவப்பட்டதால் சம்பல் நிறத்தில் இருக்கும். மரணத்துகமுன் அவற்றின் இன்னொரு நல்லியல்பான சுறுசுறுப்பைக் கைவிட்டு தூக்க கலக்கத்துடன் நடந்து கொண்டிருக்கும். சத்தமில்லாமல் அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் நடந்து முடியும் அழித்தல் பணி அது.

அன்றும் அப்படித்தான் சாகசத்தை ஆரம்பித்திருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஜன்னல் வழியாக வரிசை வெளியே சென்றது. நானும் வீட்டைச் சுற்றி வெளியே வந்து  தொடர்ந்தேன். இம்முறை வரிசை மாடிப்படியை ஒட்டியிருந்த ஒரு பயன்பாட்டில் இல்லாத அறையை அடைந்தது. 

எறும்புகளின் வரிசை ஒரு பழைய பலகையின் அடியில் சென்றது. பல சுவர்கள், ஜன்னல்கள் தாண்டி வந்த நமக்கு அந்தப் பலகை ஒரு தடையா என பலகையை நீக்கிய எனக்கு ஒரு அதிச்சி காத்திருந்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள். 

அந்த பழைய பலகை வெகு நாட்களாக அங்கு இருந்திருக்கவேண்டும். பலகையின் கீழே குருனையான மண் கொண்டு கட்டப்பட்ட பாளம் பாளமான எறும்பு கோட்டைகள் அங்கே ஏராளமான எறும்புகள். வெள்ளை நிறமான குட்டி எறும்புகள். 

வழக்கமாக அமைதியாக முடியும் பணி அன்று அதிரடியாக ஆனது. எதிர்பாராமல் கிடைத்த அவ்வளவு பெரிய வேட்டையால் பரபரப்பு அடைந்தேன்.

எறும்புகளை கொல்வது வாடிக்கை தான் என்றாலும் அவை வெளியே வந்து நமது வீட்டுக்குள் வருபவை, வெளியே வரும்போது அவை ஆபத்தை எதிர்கொள்வதில் தவறேதும் இல்லை. ஆனால் இவை ஆபத்தை எதிர்பார்காதவை.  ஆனால் வீட்டின் கதகதப்பிலும் வசதியிலும் இருந்த அந்த எறும்புகள் என்னை அந்த பலகை நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை. 

ஒரு புற்றை எதிர்பார்த்த நானும் அவ்வளவு பெரிய எறும்பு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவ்வளவு எறும்புகளையும் கொல்லத் தேவையான அளவு எறும்பு பொடியும் என கைவசம் இருந்தது. அந்த எதிரிகலைக்  கொல்லத்  தேவையான நியாயமும் என்னிடம் இருந்தது. 

அந்தக் பரபரப்பு  கணம் வெகு நாட்களாக என் நினைவில் இருந்தது. அவ்வளவு பெரிய இரும்புக் கூட்டத்தை பார்த்ததும் உண்மையில் நான் அடைந்தது மகிழ்சியா? எனது நோக்கம் எறும்புகளின் தொல்லையிலிருந்து தப்பிப்பது என்றால் அந்த மகிழ்ச்சியின் பொருள் என்ன.


சமீபத்தில் கவிஞர் இசையின் இந்தக் கவிதையைப் படித்தேன்.


புதிதாக ஒரு கொசுமட்டை வாங்கியதிலிருந்து

நிம்மதியாக இருக்கிறேன்.

கொசு விரட்டிகள்

கொசுக்களை விரட்டி விடுகின்றன.

ஆனால் மட்டை அவைகளை கொன்றுதீர்க்கிறது.

ஒரு கொசு பறந்து போக

நானும் பறந்து போய்

சரியான வாகில் வைத்து ஒரே சாத்து…

இன்பம் என் உள்ளத்தில் "பட்" என்றுதெறிக்கிறது.

" பட்…  பட்…  பட்பட்பட்…."

  இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு கோடாரி

  ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து

  "தயை"…  "தயை".. என்று கதறும்.

  கதறலின் மண்டையில் ஓங்கி ஒருபோடு

 " பட்..பட்..பட்பட்…. "  " பட்பட்..பட்"

 பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவதுபோலே

மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.

என் வீட்டின் முன்னே

குளம் போல தண்ணீரைத் தேக்கிவைத்திருக்கிறேன்.

கொசுவீர் !

பிறந்து எழுந்து திரண்டு வருக !


கவிதையின் தலைப்பு "எனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்".



கவிதையின் கடைசியில் "தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன், கொசுவீர், பிறந்து எக்ஷுது திரண்டு வருக" என்ற வரி

என்னால் தண்டனைப் பெறக்கூடிய ஒரு உலகம். என்னிடம் மன்றாடும் ஒரு உலகம், இரக்கமில்லாத ஒரு தண்டனைக் கடவுளாக இருக்கமுடியும் ஒரு உலகத்தை இந்த கொசு மட்டை உருவாக்கித் தருகிறது