Unordered List

10 மார்ச் 2012

தகுதியானவர் தானா இந்த டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சாப்பெல் சமீபத்தில் ஒரு தத்துவ முத்தை உதிர்த்தார். அதாவது "இந்தியர்களுக்கு தலைமைப் பண்பு என்பதே இல்லை. யார் என்ன சொன்னாலும் தலையாட்டும்படி அவர்களை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஆக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுவே அவர்களின் தோல்விகளுக்குக் காரணம்." என்பதே அது.

அவருக்கு எப்படி இந்த மனப்பதிவு உருவானது என்று யோசித்தபொழுது, தான் பார்த்த டிராவிட் ஒருவரை வைத்து மொத்த இந்தியாவையும் மதிப்பிட்டு விட்டாரோ என்று நினைக்கத் தான் தோன்றுகிறது.


டிராவிட்டின் திறமை பற்றியோ, பல முக்கிய விளையாட்டுகளில் அவரது பங்களிப்பு பற்றியோ நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பங்களிப்புதான் அது. ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அவரது இடம் என்ன?

கிரிக்கெட் விளையாட்டில் அவரது முழுப் பங்களிப்பை ஆராயும்பொழுது, அவரிடம் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தபொழுது என்ன செய்தார் என்பதையும், அது இந்திய அணிக்கு நன்மை பயத்ததா எனபதையும் ஆராயாமல் இருக்க முடியாது.

பிக் த்ரீ சொல்லப்படும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மூவருமே இந்திய அணி வரலாற்றில் முக்கியமானவர்கள். இம்மூவரிடமுமே அணித் தலைமை மாறி மாறி வந்ததுண்டு. அணித் தலைவராக இல்லாத காலத்தில் கூட சச்சினின் கருத்து முக்கிய முடிவுகளில் கேட்கப்படுவதுண்டு என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

சச்சின் தலைவராக இருந்தபொழுது கங்குலி மற்றும் டிராவிட்டின் வளர்ச்சிக்கு அவரது ஆதரவு இருந்தது. உண்மையில் டோனி அணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்டக் கூட சச்சினின் பங்களிப்பு இருந்தது.

கங்குலி தலைவராக இருந்தபொழுதும் அவர் அணிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தார். சின்னச் சின்ன சச்சரவவுகள் இருந்தபோதிலும். இந்திய அணியின் நலன்களுக்காக பல சர்ச்சைகளில் கங்குலி சிக்கினாலும், அவையெல்லாம் இந்திய அணிக்ககாகத் தான் என்பதால் ரசிகர்களுக்கு அவரது அந்தச் செயல்பாடுகள் மகிழ்ச்சியே அளித்தன.

ஆனால் டிராவிட் வசம் அதிகாரம் வந்துடனேயே, சச்சின் மற்றும் கங்குலிக்கு மிகப் பெரிய நெருக்கடி உருவாக்கப் பட்டது. சச்சின் இருநூறு அடிக்கக் கூடாது என்பதற்காகவே டிக்ளேர் செய்த காமெடி எல்லாம் நடந்தது.

இவர்கள் ஒருவர் மட்டுமேல்லாமல் மொத்தமாக இந்திய அணியே மிக நம்பிக்கையற்ற நிலையை அடைந்தது. இந்திய அணியை ஒழிக்கும் நோக்கத்துடன் வந்தோரோ என நாம் நினைக்கும் சாப்பெல் செய்த அனைத்து செயல்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவியவர் டிராவிட். சச்சின் மற்றும் கங்குலியை ஓரம்கட்டும் தன் தனிப்பட்ட நோக்க்கதுக்காக அணியின் நலன்களைக் கூட பலியிட்டவர் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உண்டு.


திறமை மற்றும் அர்ப்பணிப்பு மட்டுமே அளவுகோல்கள் என்றால் டிராவிட் ஒரு திறமையாக வீரர் தான். ஆனால் ஒரு மூத்த வீரர் என்றமுறையில் தன் தனிப்பட்ட விளையாட்டு மட்டுமல்லாமல் அணியின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும் என்பது எதிர்பார்ப்பு என்றால், டிராவிட்டின் பங்கு நிச்சயம் கேள்விக்குரியதே.