Unordered List

08 செப்டம்பர் 2012

இரவு, மழை மற்றும் வனம் -ஜெயமோகனுடன் மழைப்பயணம்



சிலவருடங்களுக்கு முன் தேக்கடியில் ஒரு யானைச்சவாரி செல்ல வாய்ப்புக்கிடைத்தது. நாம் வழக்கமாக ஊருக்குள் பார்க்கும் நோஞ்சான் யானைகள் போலல்லாமல் கொஞ்சம் புஷ்டியான யானை. யானைமேல் ஒரு சிறிய கைப்பிடி கம்பியுடன் கூடிய துணி மட்டுமே போடப்பட்டு அதன்மேல் அமர்ந்து மரங்களடர்ந்த காட்டு வழியில் சவாரி. யானைப் பாகன் கூடவே நடந்துவந்தாலும்,  தவறேதும் நடந்துவிடாது என்ற நம்பிக்கை இருந்தாலும், உடலும் மனமும் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருத்ததை உணர முடிந்தது. அந்த யானை அந்த பாகன் சொல்வதைக் கேட்பது போல தோன்றினாலும் அது அவன் பேச்சைக் கேட்காதது போலவும் தோன்றியது. என்னைச் சுமந்துகொண்டு நடந்துகொண்டே யானை ஒவ்வொருமுறை பிளிறியபோதும் எனது உடலின் ஒவ்வொரு அணுவும் அதை உணர்ந்தது.

இரவு,மழை மற்றும் வனம் ஆகியவையும் அப்படித்தானோ என நினைக்கத் தோன்றுகிறது.  என்னதான் நமது பாதுகாப்புகளோடும் நம்பிக்கைகளோடும் நாம் நம்மை சௌகர்யமாக உணர்ந்தாலும் அவை எந்நேரமும் தளைமீறி நம்மை அடித்துச்செல்லும் சாத்தியங்களுடனேயே உள்ளன. இதுவே நம் மனம் மழையிலும் இரவிலும் வனத்திலும் எப்போதும் எதிர்பாரா எதையோ எதிர்பார்க்கும்  உச்சகட்ட விழிப்புநிலையிலோ அல்லது எதற்குமே கலங்காத கனவு நிலையிலோ இருக்கவும், அந்த எதிர்பாராத்தன்மைதரும் கவர்ச்சியே மனித மனம் இரவையும் மழையையும் அல்லது காட்டையும் தேடியோடவும் காரணம் என நினைக்கிறேன்.



கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்பாகவே திட்டமிடப்பட்ட பயணம் அது. கோதாவரி நதியில் மூன்று நாட்கள் இலக்கிய கூடல் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. அலுவலகத்திலும் நண்பர்களிடமும் போதுமானவரை கோதாவரிப்புராணம் பாடியாகிவிட்டது. வனவெளி நோக்கி

புறப்படும் அந்த நாளும் வந்தது, ஒரு அதிரடி செய்தியுடன். பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக கோதாவரிப் பயணம் சாத்தியமில்லை என்பதால்  பெங்களூரு பக்கத்தில் எதோ ஒரு ஊருக்கு செல்வதாகச் செய்தி. எதிர்பாராத திருப்பங்கள் தானே ஒரு நல்ல பயணத்துக்கு அறிகுறி, அதனால் அதிகம் கவலையில்லை. அதுவுமிலாமல் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமொகனுடன் பயணம் எங்கு சென்றாலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. பயணத்தின் எல்லா சாத்தியங்களையும் அறிந்தவர் அவர். அவருடன் இருக்கும் எந்த நேரத்திலும் கற்றுக்கொள்ள ஏதாவது இருந்துகொண்டேயிருக்கும்.


*****

சென்னையிலிருந்து ஜெயமோகன் உட்பட பத்து பேர் ரயிலில் பெங்களூரு சென்றோம். ஈரோட்டிலிருந்து வந்தவர்களோடு இணைந்து அங்கிருந்து சிமோகா நோக்கிப் பயணம்.  வழியில் துங்கா நதியின் ஒரு கால்வாயைப் பார்த்ததும் ஒரு திடீர்க் குளியல். அங்கே உருவானது பயணத்தின் மனநிலை. அங்கே ஆரம்பித்து பயணம் முழுவதும் கூடவே வந்தது தண்ணீர். கழுத்தளவு தண்ணீரில் மூழ்கியபடி சுற்றியிருந்த மரங்களூடே பறந்த விதவிதமானப் பறவைகளைப் பார்த்தது மனத்தையும் பறக்கவைத்தது.

பறவைகள் மற்றும் சில


அடுத்தது சென்றது துங்கா மற்றும் பத்ரா நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை. தண்ணீருக்குள் ஒரு தெய்வம், வேண்டுதலுடன் கொஞ்சம் மக்கள். சற்று அருகில் துணிதுவைக்கும் சிலர். அந்த பின்னணியில் படித்துறையில் ஜெயமோகனின் பேச்சு. கள்ளி யட்சி கதை மற்றும் சில.
குட்லி - கூடுதுறை

சிமோகாவை விட ஆகும்பே செல்வது சரியாக இருக்கும் என்று அங்கு முடிவெடுக்கப்பட்டு ஆகும்பே நோக்கி பயணம் தொடந்தது. ஆகும்பே செல்லும்வழி மிக அழகானது சாலையின் இருபுறமும் நிறைந்திருந்த நீர்நிலைகள், அடர்ந்த மரங்கள்  மற்றும் பறவைகள். வேனிலிருந்து பார்ப்பது போதவில்லை, இறங்கி நடக்க ஆரம்பித்தோம், இருட்டும்வரை நடந்தோம். பிறகு மீண்டும் வேன் பயணம். 

ராஜ நாகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று ஆகும்பே பற்றி எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டிருந்தன. இரவில் வேனிலிருந்து இறங்கிய எங்களை மழை வரவேற்றது. எதிர்பார்ப்பில் ஒரு பகுதி உண்மையானது. ராஜநாகம் எதுவும் எங்களை வரவேற்றதா என்று அந்த இருட்டில் தெரிய நியாயமில்லை தான்.

வழியில்..

அந்த இரவு, நண்பர்களுடன் பேசலாமே என்று அந்த அறைக்குச் சென்றேன். வெளிச்சமில்லை. முழு இருட்டு. சில குரல்கள் கேட்டன, அமைதியாக வந்து அமரும்படி. அமானுஷ்ய அனுபவங்களின் கலந்துரையாடல் அது. சற்று நேரத்தில் ஜெயமோகனும் இணைந்துகொள்ள சபை இன்னும் தீவிரமடைந்தது. அமானுஷ்ய கனவுகளுக்கான உடல்நிலை மற்றும் சூழ்நிலைக் காரணங்கள் என சற்று அறிவியல்பூர்வமாக ஆரம்பித்த அந்த உரையாடல் இலக்கியத்தில் பேய்கள்,  குழந்தை ஆவிகள் பற்றிய கதைகள் அதன் பின்னுள்ள மனநிலை என பலபுறமும் சுற்றியடித்தது. வாழ்கையில் வைத்துப்பார்க்க முடியாத சில உணர்சிகளை வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பாக்கும் பழங்குடிமனத்தின் தொடர்ச்சியாக பேய்க்கதைகளை பார்க்கலாம் என்ற அவரின் மேற்கோள் நினைவுக்கு வந்தது. அந்த இருளில் அவர் சொன்ன  அந்த மோதிரவிரல் கதை அனைவரின் இதயத்துடிப்பின் எல்லைகளை சோதித்துப்பார்த்தது.

அடுத்தநாள் அதிகாலை நடைக்கு ஜெயமோகன் உடன் செல்லும் குழுவை தவறவிட்டுவிட்டேன். எந்நேரமும் பெய்யும் மழையால் வீடுகளின் ஓடுகளில் கூட புல்செடிகள் வளர்ந்துள்ள அந்த ஊரில் தனியாக கொஞ்சம் நேரம் தெருக்களில் அலைவதும் நல்ல அனுபவம். பிறகு சிறிதுநேரம் நண்பர்களுடன் அரட்டை.
ஆகும்பே 


காலையில் அருவிப் பயணம். எங்களைத் தவிர வேறு யாரும் அப்போது அங்கு வந்ததாகத் தெரியவில்லை.  அடர்ந்த காட்டுவழியே சில கிலோமீட்டர்கள் நடை. தரையெங்கும் இலைகள் சருகுகள் அதில் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். சற்றுநேரம் அட்டைகளை நினைத்துக்கொண்டே தரையை பார்த்தே நடந்தபின் நிமிர்ந்து பார்த்ததில் அந்தக் காட்டின் பிரமாண்டம் அதிரவைத்தது. கண்ணை மறைக்கும் பனிமூட்டத்தினூடே உருவாகிவந்த காட்டுப்பாதையில் அருவியை நோக்கி அந்த நடைப்பயணம்.

"சத்தமில்லாமல் நடங்க.. அதிர்வு உணர்ந்து ராஜநாகம் வரலாம் என நண்பர்கள் பீதியூட்டியபடியே வந்தனர். என்ன நடக்குமோ எனற அந்த பயம் தான் பயணத்தை இன்னும் சிறப்பாக்குகிறது. ஒரு முகட்டிலிருந்து வீழும் அருவியில் அது வீழ்வதற்கு சற்றுமுன் ஒரு குளியல். கூட்டம் ஏதுமில்லாமல் குளிக்க முடிந்ததற்காக எங்கள் நல்ல நேரத்துக்கும், தண்ணீருக்குள் அட்டைகளை அனுமதிக்காத இயற்கைக்கும் நன்றி சொல்லிக்கொண்டே ஒரு குளியலை அனுபவித்தோம். கைகெட்டும் தூரத்தில் அருவியாக வீழவிருக்கும் நீரில் குளிப்பது ஒரு அனுபவம்.
வனம்

அன்று இரவு நடையும் ஜெ. யின் பேச்சைக் கேட்டுக்கொண்டே நடக்கும் வழக்கமான நடைதான். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் அந்த இரவில் பெய்த நல்ல மழை. நான் உட்பட பலபேர் ரெயின்கோட் எல்லாம் ஏதும் அணியவில்லை. கடும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே நடை.

நடை சற்று நேரத்தில் ஒரு காட்டு வழிக்குள் திரும்பியது. எந்த வெளிச்சமும் அங்கில்லை, அங்கு அதிகம் இருந்தது ராஜநாகம் மற்றும் யானைகள் பற்றியும் இருந்த பயம். அந்த இரவில் முகத்திலிருக்கும் பயம் யாருக்கும் தெரியாதென்றாலும் இன்னும் தைரியமாக காட்டிக்கொள்ள நகைச்சுவை உரத்த சிரிப்பு என நடை அந்த காட்டுவழியில் தொடர்ந்தது. நேயர் விருப்பமாக யட்சிகதைகள் கேட்கப் பட்டது. ஜெயமோகனும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தை அதிகரிக்கும் விதமாக சில யட்சிக்கதைகளைத் தந்தார். எட்டாவது கை கதை கேட்டு எங்களை நாங்களே ஒரு முறை எண்ணிப்பார்த்துக்கொண்டோம்,  வந்த தலைகள் எல்லாம் இருக்கிறதா, எதாவது குறைகிறதா அல்லது எதாவது புதிய தலைகள் சேர்ந்துகொண்டதா என்று. இரவு, மழை மற்றும் காடு என எல்லாமுமே உச்சத்திலிருந்த உச்ச தருணம் அது.

ஞாயிறு காலை நடையிலும் மழை எங்களுடன் இணைந்துகொண்டது. மொழி, இலக்கியம், தத்துவம், கலை என பல தளங்களைத் தொட்ட உரையாடல் அது.

பெங்களூரு திரும்பும் வழியில் பேலூர் கோட்டை. இதுபோன்ற ஒரு சிற்பக்கலையை முதன்முறையாகப் பார்க்கிறேன். அங்கிருந்த அவ்வளவு நேரமும் ஒரு கனவு போல்த்தான் இருந்தது. யாரோ எப்போதோ உருவாகிய அந்தக் கனவு இப்போது நமக்கேயான கனவாகத் தோன்றும் அதிசயத்தை உணர முடிந்தது. ஒவ்வொரு சிலைக்கும் ஜெயமோகன் தரும் விளக்கங்களுடன் அந்தக் கனவு இன்னும் விரிவடைந்தது.  இந்தப்பயணத்தின் முக்கிய பங்காளியான மழை அங்கும் கூடவே வந்து அந்த சூழ்நிலைக்கு இன்னொரு பரிணாமம் தந்தது.
பேலூர்


கிட்டத்தட்ட திட்டமிட்டபடி எதுவுமே நடக்காத பயணம் இது. மழையையும் இரவையும் துணையாகக்கொண்ட இந்த பயணம் அப்படித்தானே இருக்கமுடியும். மழையும் இரவும் காடும் யாருக்கு கட்டுப்படுகின்றன?

தொடர்புடையவை:
ஜெயமோகன் தளத்தில் - மழைக்கோதை
வனவெளி நோக்கி