Unordered List

20 ஏப்ரல் 2011

நம்ம டீம்.. விசில் போடு..

ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு சின்ன கேள்வி கேட்டதற்காக என் நண்பன் என்னை கசமுசாவெனத் திட்டிவிட்டான்!


"இன்னிக்கு மேட்ச்ல நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்டா.." என்றான் என் நண்பன்.


அவனின் நம்பிக்கை எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், நான் எதுவும் எனக்குச் சின்ன சந்தேகம். நானா? விளையாடவா? விளையாடி ஜெயிக்கவா? ஹ.. ஹ.. ஹே...



"நாம ரெண்டுபேரும் ஏதாவது விளையாடப்போகிறோமா? எங்கேடா? நாம ஜெயிக்கிற அளவுக்கு யாருடா அந்த டுபாகூர் டீம் " உண்மையிலேயே ஆர்வத்துடன் தான் கேட்டேன்.



அதற்குத்தான் அவ்வளவு பிரச்சனை! கண்டபடி திட்டிவிட்டான். நான் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கிறேனாம்.






ண்மையில் அவன் சொன்னது ஐ பி எல் கிரிக்கெட் பற்றியாம். நாம விளையாடுகிறோம் என்று சொன்னால் அது சென்னை டீம் விளையாடுவது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்



இவர்களை என்ன நாமா தேர்ந்தெடுத்தோம்? உண்மையில் இதில் பாதிக்குமேல் தமிழ்நாட்டு பசங்களே இல்லை. இதை சென்னை டீம் என form பண்ணிவிட்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம்மைத் திட்டுகிறார்கள். என்ன கொடுமை சார்.



"தோனியை எல்லாம் சென்னை கேப்டனாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றேன்.



"அப்படின்னா ஆனால் முதலமைச்சர், பிரதமர் எல்லாம் நீ பிடிச்சா செலக்ட் பண்ணின?" என்றான்.



பிரதமர், முதலமைச்சர், கலெக்டர், போலீஸ் இவர்களெல்லாம் நம்முடைய பிரதிநிகள், நமது வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்று நமக்காக வேலை செய்பவர்கள். இவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ, இவர்கள் நம்ம ஆட்கள் தான்.



நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ நாம் தான் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.



இதையும் விருப்பத்திற்காக பார்க்கும் விளையாட்டையும் ஒப்பிடமுடியாது என்றேன்.



"அப்படியா? அப்படின்னா இந்த கிரிக்கெட்டில் இவ்வளவு பணம் விளையாடுகிறதே? இதெல்லாம் யாரு பணம்" என்றான்.



யோசிக்கவேண்டிய விஷயம் தான்.





கிரிக்கெட் இவ்வளவு பெரிய விஷயமானதற்கும் இந்தியா கிரிகெட்டின் தலைநகரமாக ஆனதற்கும் ஒரு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி.



இந்திய தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையே இப்போது கிரிகெட்டின் பொருளாதாரமாக உள்ளது.



எனவே இந்த சேனல்களுக்கு நாம் செலுத்தும் பணம் மற்றும் அதிலிருக்கும் விளம்பரங்கள் ஆகியவையே கிரிக்கெட் அரசாங்கத்தின் முக்கிய வரி வருமானம்.



அப்படிப்பார்த்தால் இவர்களும் நமது பிரதிநிதிகள் தான். இதுவும் ஒரு ஜனநாயகம் தான்.







விளக்கம் எல்லாம் சரிதான்.



"அப்படியென்றால் எல்லாமே என் விருப்பப்படிதான் நடிக்கிறதா? "



"ஆமா அதுதானே ஜனநாயகம். நீயும் மக்களில் ஒருவன்தானே. "



"எல்லாம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. ஆனால் எதோ தப்பு நடக்குறமாதிரி ஒரு உறுத்தல்
இருந்துகிட்டே இருக்கே?"



"ஹா ஹா.. அப்படின்னா கண்டிப்பா இது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் தான்." என்றான் உறுதியாக.


என்ன சொல்றீங்க?

16 ஏப்ரல் 2011

ரஜினி ரசிகனுக்கு சோதனை

பத்திரிக்கைச் சுதந்திரம் இருப்பது நல்லது தான். ஆனால்..

நமது பத்திரிக்கையாளர்கள் அந்தச் சுதந்திரத்தை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார்கள் போல.


ரஜினி ஓட்டுப் போட்டதைக்கூட உள்ளேசென்று எட்டிப்பார்த்துப் படம்பிடித்த பத்திரிக்கைகளின் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாகியுள்ளது.


அவர் ஓட்டுப்போட்டதை எட்டிப்பார்த்துவிட்டு அதற்கும் பல கருத்துக்கள் சொல்லலும் பத்திரிக்கைகளை என்ன சொல்வது?


பத்திரிக்கை சுதந்திரம் என்பது மற்றவர்களின் சுதந்திரத்தை பறித்து உருவாவது தான் போல..





........................


காதல் கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் தப்பு இல்லை. நல்லது தான். ஆனால்..


காதல் கல்யாணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வம்பிழுத்துக் கொண்டாலும்கூட பரவாயில்லை.


ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்தபின் மானாரை டார்ச்சர் செய்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.


ரஜினிபட ரீமேக், ரஜினி பாடல்கள் ரீமிக்ஸ், ரஜினிபட பெயர்கள் என தனுஷ் பண்ணும் அட்டகாசம் நிஜமாகவே தாங்கமுடியவில்லை.


"என்னோட ராசி நல்ல ராசி" என்ற ரஜினியின் பாடலில் தனுஷ்!!


ரஜினி ரசிகனுக்கு சோதனைமேல் சோதனை!!

14 ஏப்ரல் 2011

தேர்தலில் முதல் வெற்றி..

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், தமிழக தேர்தலில் முதல் வெற்றியாளர் யாரென்று தெரியவந்துள்ளது.

அந்த வெற்றியாளர் யார். வேறு யார்? அது தேர்தல் ஆணையம் தான்.

தேர்தல் நேர்மையாகத்தான் நடக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்கள் ஜனநாயத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தும். அந்த நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்படுவதாகத் தெரிகிறது.



சில குறைபாடுகள் இருந்தாலும், இன்னும் சில தேர்தல்களில் இன்னும் பல முன்னேற்றங்கள் வரலாம் என்றும் நம்பிக்கை வருகிறது.

கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் சொந்தஊருக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.


ஆனால் சொந்த ஊருக்குச் சென்றால் தான் வாக்கு என்ற நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்குமா?

வாக்குப் பதிவு எந்திரம், வெப் காம் கண்காணிப்பு, SMS tracking என தொழில்நுட்பத்தில் விளையாடும் ஆணையத்திற்கு இதுஒன்றும் பெரிய வேலை இல்லை.

பாஸ்போர்ட், வருமான வரி என்று பல விஷயங்களை நாம் இருக்கும் இடத்திலேயே செய்யமுடியும்போது ஒட்டு மட்டும் ஏன் முடியாது?

இதன்மூலம் வாக்கு சதவீதமும் அதிகமாகும், போக்குவரத்து செலவுகளும் குறையும்.

இதுபோன்ற பல முன்னேற்றங்கள் நமது தேர்தல் முறையில் வந்து நமது பங்களிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு நாம்.

06 ஏப்ரல் 2011

உலகக் கோப்பை எங்கே?

இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் பலருக்கு ஏமாற்றம் தான். தோல்வியில் இருக்கும் பரபரப்பு வெற்றியில் இல்லை!


செய்தி தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.


இந்தியா மட்டும் தோற்று இருந்தால், தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியிருக்கலாம். சச்சினை அணியிலிருந்தே தூக்கியிருக்கலாம். பலரை பந்தாடியிருக்கலாம். எல்லாம் போச்சு..


இப்போது வரும் செய்தியெல்லாம் அவருக்கு ஒரு கோடி, இவருக்கு ரெண்டு கோடி என்பது தான். ஆடி கார், பெர்ராரி கார் என மற்றும் பல செய்திகள். இதில் என்ன சந்தோசம் நமக்கு?


யாருக்கு வேண்டும் இந்த செய்திகள்? கேட்கவே வெறுப்பாய் இருக்கிறதல்லவா?



இப்படிப் பட்ட நிலைமையில் வந்தது ஒரு பரபரப்பு..


கொடுக்கப் பட்டது உண்மையான உலகக் கோப்பையே அல்ல என்பது தான் செய்தி.


அப்படியென்றால் உண்மையான கோப்பையை வைத்திருப்பது யார்?


உண்மையான உலகக்கோப்பை மும்பை சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ளது எனவும் கொடுக்கப்பட்டது மாதிரி கோப்பை எனவும் செய்திகள் சொல்கின்றன.


கொடுக்கப் பட்டது தான் உண்மையான கோப்பை எனவும் சுங்கத்தில் இருப்பது தான் மாதிரி கோப்பை எனவும் ஐ சி சி சொல்லுகிறது. போலி பெட்டியை வில்லனிடம் சிக்க வைத்துவிட்டு கடத்தல் தங்கம் இருக்கும் பெட்டியுடன் எஸ்கேப் ஆகும் அந்தக்கால சினிமா போல ஹீரோ போல ஐ சி சி செய்துள்ளதாக சொல்லிக்கொள்கிறது. ஆனாலும் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.




எனவே உண்மையான உலகக் கோப்பை எங்குள்ளது என மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்தபடி உள்ளன.

இதைப் பற்றி தமிழக தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்..

இரண்டு கோப்பைகளுமே போலிதான் என தலைவர் கூறியுள்ளார். வடஇந்திய ஊடகங்களின் மாயையில் தமிழன் மயங்கிவிடக்கூடாது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் கூறியிள்ளார். தொலைந்த கோப்பையைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்று கூறிய அவர், தான் மறுபடி ஆட்சிக்குவந்தால் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பை இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இது நாட்டுமக்களுக்கு மிகவும் தேவையான அறிவிப்பு. வெற்றி நிட்சயம் என்று கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தலைவரின் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் சதி என எதிர் தலைவி கருத்துகூறியுள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை கொடுக்கும் அவர் ஹாக்கி உலகக் கோப்பையை கொடுக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கால்பந்து உலகக் கோப்பை இரண்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அதனுடன் ஹாக்கி உலகக் கோப்பையும் கொடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.


ஹாக்கி உலகக் கோப்பை அறிவித்ததன் மூலம் தலைவியின் தேசபக்தி நிருபிக்கப் பட்டுள்ளது என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் கருத்துக் கூறியுள்ளார்.


கோப்பைப் பற்றி புது கட்சி தலைவரிடம் தான் கேட்கவேண்டும் என சிரிப்பு நடிகர் கூறினார். அவர் கோப்பையை பல ரவுண்டுகளுக்கு பயன்படுத்துவார் எனக் கூறினார்.

கேப்டன் என்றால் அது ஒருவர் மட்டும் மட்டும் தான். எனவே தோணியே ஒரு போலி கேப்டன் என்று கேப்டன் கட்சியினர் கருத்துக் கூறியுள்ளனர். எனவே டோனி வாங்கிய கோப்பை செல்லாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ் நாட்டு தேர்தலின் முடிவே தங்களுக்கு உண்மையான உலகக் கோப்பை என்று கூறினார்.



இது இப்படியிருக்க மும்பையில் இருந்து ஒரு அவசர செய்தி வந்துள்ளது..



"செல்லாது செல்லாது... எல்லாத்தையும் நிறுத்துங்க.. நான் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்..." என்று சச்சின் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சர்ச்சை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் மேற்க்கண்டவாறு பதிலளித்தார்.


2015 இல் நடக்கும் உலகக் கோப்பையை வென்று உண்மையான கோப்பையை கைப்பற்றுவேன் என அவர் பேட்டியளித்துள்ளார். இதனால் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரரப்பு ஏற்பட்டுள்ளது..

01 ஏப்ரல் 2011

அந்தத் தேர்தல் எப்போ?

தேர்தல் வந்துவிட்டது என்று சொல்லிக்கொள்கிறார்கள்..

தலைவர்கள் பிரச்சாரம்.. பல வாக்குறுதிகள் என எங்கும் பரபரப்பு.


சரி.. அப்படி என்ன தான் சொல்கிறார்கள் சில நாட்களாக செய்திகளில் கவனிக்கும்போது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.


மிக்சி, கிரைண்டர், பேன், கலர் டிவி என பல வாக்குறுதிகள். இதில் யார் சொன்னதெல்லாம் சரியாக கொடுப்பார்கள், யார் சரியாக கொடுக்கமாட்டார்கள் என பரபரப்பான விவாதம்.


இதில் என்ன சந்தேகம்?


இதை சரியாக கொடுப்பார்களா என்றா? இல்லை.. அது இல்லை நமது சந்தேகம்.



இது எல்லாம் விவரம் இல்லாமல் அவசரப்பட்டு முன்னாடியே வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது? வீட்டில் இரண்டு மிக்சி வைத்து என்ன பண்ணுவது?



வேலை தேடும் பசங்க எல்லாம் என்ன பண்ணுறது? அடுப்பே இல்லாத அறையில் வாழும் அவர்கள் இதை வைத்து என்ன என்ன செய்வார்கள்?


இது அல்லாமல் விலைவாசி போன்ற பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் மற்றவர்கள் என்ன செய்வது?



ஒருவேளை இது அவர்களுக்கான தேர்தல் இல்லையோ? விலைவாசி பிரச்சனை, வேலை வாய்ப்பு, பெட்ரோல் விலை, சாலைகள், மருத்துவம், கல்வி போன்ற பிரச்சனை எல்லாம் பேசுவது வேற தேர்தலோ?



அந்தத் தேர்தல் எப்போ வருது?