இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் பலருக்கு ஏமாற்றம் தான். தோல்வியில் இருக்கும் பரபரப்பு வெற்றியில் இல்லை!
செய்தி தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.
இந்தியா மட்டும் தோற்று இருந்தால், தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியிருக்கலாம். சச்சினை அணியிலிருந்தே தூக்கியிருக்கலாம். பலரை பந்தாடியிருக்கலாம். எல்லாம் போச்சு..
இப்போது வரும் செய்தியெல்லாம் அவருக்கு ஒரு கோடி, இவருக்கு ரெண்டு கோடி என்பது தான். ஆடி கார், பெர்ராரி கார் என மற்றும் பல செய்திகள். இதில் என்ன சந்தோசம் நமக்கு?
யாருக்கு வேண்டும் இந்த செய்திகள்? கேட்கவே வெறுப்பாய் இருக்கிறதல்லவா?
இப்படிப் பட்ட நிலைமையில் வந்தது ஒரு பரபரப்பு..
கொடுக்கப் பட்டது உண்மையான உலகக் கோப்பையே அல்ல என்பது தான் செய்தி.
அப்படியென்றால் உண்மையான கோப்பையை வைத்திருப்பது யார்?
உண்மையான உலகக்கோப்பை மும்பை சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ளது எனவும் கொடுக்கப்பட்டது மாதிரி கோப்பை எனவும் செய்திகள் சொல்கின்றன.
கொடுக்கப் பட்டது தான் உண்மையான கோப்பை எனவும் சுங்கத்தில் இருப்பது தான் மாதிரி கோப்பை எனவும் ஐ சி சி சொல்லுகிறது. போலி பெட்டியை வில்லனிடம் சிக்க வைத்துவிட்டு கடத்தல் தங்கம் இருக்கும் பெட்டியுடன் எஸ்கேப் ஆகும் அந்தக்கால சினிமா போல ஹீரோ போல ஐ சி சி செய்துள்ளதாக சொல்லிக்கொள்கிறது. ஆனாலும் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.
எனவே உண்மையான உலகக் கோப்பை எங்குள்ளது என மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்தபடி உள்ளன.
இதைப் பற்றி தமிழக தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்..
இரண்டு கோப்பைகளுமே போலிதான் என தலைவர் கூறியுள்ளார். வடஇந்திய ஊடகங்களின் மாயையில் தமிழன் மயங்கிவிடக்கூடாது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் கூறியிள்ளார். தொலைந்த கோப்பையைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்று கூறிய அவர், தான் மறுபடி ஆட்சிக்குவந்தால் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பை இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
இது நாட்டுமக்களுக்கு மிகவும் தேவையான அறிவிப்பு. வெற்றி நிட்சயம் என்று கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தலைவரின் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் சதி என எதிர் தலைவி கருத்துகூறியுள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை கொடுக்கும் அவர் ஹாக்கி உலகக் கோப்பையை கொடுக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கால்பந்து உலகக் கோப்பை இரண்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அதனுடன் ஹாக்கி உலகக் கோப்பையும் கொடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
ஹாக்கி உலகக் கோப்பை அறிவித்ததன் மூலம் தலைவியின் தேசபக்தி நிருபிக்கப் பட்டுள்ளது என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் கருத்துக் கூறியுள்ளார்.
கோப்பைப் பற்றி புது கட்சி தலைவரிடம் தான் கேட்கவேண்டும் என சிரிப்பு நடிகர் கூறினார். அவர் கோப்பையை பல ரவுண்டுகளுக்கு பயன்படுத்துவார் எனக் கூறினார்.
கேப்டன் என்றால் அது ஒருவர் மட்டும் மட்டும் தான். எனவே தோணியே ஒரு போலி கேப்டன் என்று கேப்டன் கட்சியினர் கருத்துக் கூறியுள்ளனர். எனவே டோனி வாங்கிய கோப்பை செல்லாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ் நாட்டு தேர்தலின் முடிவே தங்களுக்கு உண்மையான உலகக் கோப்பை என்று கூறினார்.
இது இப்படியிருக்க மும்பையில் இருந்து ஒரு அவசர செய்தி வந்துள்ளது..
"செல்லாது செல்லாது... எல்லாத்தையும் நிறுத்துங்க.. நான் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்..." என்று சச்சின் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் மேற்க்கண்டவாறு பதிலளித்தார்.
2015 இல் நடக்கும் உலகக் கோப்பையை வென்று உண்மையான கோப்பையை கைப்பற்றுவேன் என அவர் பேட்டியளித்துள்ளார். இதனால் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரரப்பு ஏற்பட்டுள்ளது..