Unordered List

02 பிப்ரவரி 2018

படைவீரன்



கிரிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தில் ஒரு காட்சி. உடனடி மறதி கொண்ட ஹீரோ ஒரு பரபரப்பான சேஸிங்கில் இருக்கிறான். தான் துரத்திக்கொண்டிருப்பதாக நினைக்கிறான். வேகமாக ஓடி இன்னொருவனை நெருங்க, அவன் துப்பாக்கியால் சுடும்போது தான் அவனுக்கேத் தெரிகிறது, ஹீரோ அந்தச் சேஸிங்கில் துரத்தப்பட்டுக்கொண்டிருக்கிறான் என. ஒருவேளை அவனுக்கு அப்போதைய சூழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்?


சூழலின் பரபரப்பில் திக்குத்தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவனின் உலகத்தை அப்படியே ப்ரீஸ் செய்து மொத்த நிலைமையையும் ஒருவர் விளக்கினால் எப்படி இருக்கும், படைவீரனில் அப்படி ஒரு தருணம், ஆனால் மிலிட்டரி மாமாவான பாரதிராஜா ஹீரோவுக்கு சொல்வது அப்போது இருக்கும் சூழல் மட்டுமல்ல, மனிதத்தின் வரலாறு. அதன்பின் இந்த படைவீரன் அதை எதிர்கொள்ளும் முறை எதிர்பார்ப்பை மிஞ்சுவது.







பெரும்பாலும் நாம் சினிமாவில் பார்ப்பது சினிமாவைப் பார்த்து எடுக்கப்படும் சினிமாக் கிராமங்கள். ஆனால் உண்மையான கிராமத்தில் அதை விட கலகலப்பு அதிகம். படைவீரனில் உண்மையான கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது.  போலீஸ் ஸ்டேஷனில் அட்டகாசம் செய்ய்யும் பாட்டி, கூடவே இருந்து பணத்தை ரெடி செய்ய உதவும் நண்பர்கள், ஊர்க்காரர்கள் மற்றும்  ஊர்த்திருவிழா என கிராமத்து கலகலப்பு அப்படியே வந்துள்ளது. படம் முடிந்தது யோசித்துப் பார்த்தால், நகைச்சுவை காட்சிகளில் இருந்து திருவிழா வரை ஒவ்வொன்றும் படத்தின் உச்சத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக  இயல்பாக நகர்த்திச் செல்வதை உணர முடியுவது ஆச்சர்யம். அதுவும் தொடக்கப் பாடலில் வரும் ஊர்த்திருவிழா கடைசியில் இன்னொன்றாக உருவெடுப்பது  உச்சம்


முழுப்பாவாடை, ஆண் சட்டை போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊருக்குள் பறக்கும் மலர் மிக இயல்யான கிராமத்துப்பெண்ணாக இருக்கிறாள். அழுத்தமான பெண்ணான அவளது மாற்றங்கள் சில அதிர்ச்சியளித்தாலும் அதுவே அவளை நமக்கு மிகவும் பிடிக்கச்செய்கிறது.முனி மீண்டும் கிராமத்துக்கு போலீஸாக வந்த பின்னர், அவர்களுக்குள்  மாலையில், விளக்கொளியில் நடக்கும் அந்த சந்திப்பு நிஜமான காதல் தருணம்.

முனியின் அக்கா, கைகுழந்தையுடன் இருக்கும் அவள் நண்பனின் அக்கா என பெண் பாத்திரங்கள் மிக உறுதியாவனவர்களாக இருக்கிறார்கள். இவர்களே இந்த கிராமத்தில் நம்மை வாழச்செய்கிரார்கள். கதையும் அவர்கள் வழியாகவே நடக்கிறது,


தண்ணியப்போட்டு வந்து உங்களை கவனிச்சிக்கிறேன் என்று சைகையில் சொல்லும் மிலிட்டரி மாமா நம் மனத்தை ஆக்ரமிக்கிறார். பின்னர் கையறு நிலையில் போலிஸிடம் அழும்போதும், இறுதியில் முனியை உறுதிப்படுத்தும்போதும் அவரது இடத்துக்கு நியாயம் செய்கிறார், அதற்கானக் காரணங்களும் கதையில் உறுதியாக இருக்கின்றன. மிலிட்டரி பெருமை ஊர்ப்பெருமை என ஜாலியாக இருக்கும் மிலிட்டரி மாமா தான் தங்கள் மீதான ஒரு நிஜமான விமர்சனத்தை வைக்கிறார்.


கவலையில்லாத இளைஞனாக அறிமுகமாகும் நாயகன் போலீஸ் பயிற்சிக்கு பயந்து ஊருக்கு வந்து, அவனது உலகமான வீட்டார், நண்பர்கள், மிலிட்டரி மாமா அனைவராலும் பிடிக்கப்பட்டு போலீஸிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் அதே கலகலப்பில் இருக்கிறான். அவனை மாற்றும் அந்த முடிச்சு இடைவேளையை சுவாரஸ்யப்படுத்துகிறது.

அவன் கேட்காமலே வந்த காதல், அவன் விட்டு விட நினைத்த போலீஸ் வேலை, தன் ஊருக்கு நண்பனுடன் விடுமுறையில் போக நினைத்த நேரத்தில் அங்கே போலீஸாக போக வேண்டிய நிர்பந்தம். தனக்காக எதையும் செய்யும் ஊர் நண்பர்கள் ஒரு முக்கிய இழப்புக்கு காரணமாவது என சக்ரவியூகத்தில் இருக்கும் அபிமன்யுவாக முனி தவித்தாலும் ஒவ்வொரு சோதனையும் அவனை அடுத்த நிலைக்கு உயர்த்தவே செய்கிறது. அனைத்தையும் வென்ற அவனுக்கு கடைசியில் வரும் உச்சகட்ட சோதனையில் யாரும் எதிர்பார்க்காத முறையில் வென்று நிஜமான வீரனாக ஒளிர்கிறான்.

கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் சரியாகப் பொருந்தியுள்ளன. தனுஷ் பாடல் செம.

கிராமத்துக்களத்தில் கலகலப்பாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இந்தப்படம் கிராமத்துக்கானது மட்டுமல்ல. உண்மையான கிராமத்தில் முளைத்த இந்த நிஜ வீரன் உலக மனங்களை வெல்பவன்.