கதவைத்
திறந்ததும் காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்தது அந்த நாய்க்குட்டி, கண்களில் ஒரு கேள்விக்குறியுடன். புதிதாக ஒரு வீட்டுக்குச்
செல்லும்போது அங்கிருக்கும் நாய் பார்க்கும் விரோதப் பார்வையோ, அல்லது தனது சொந்தக்காரனைப் பார்த்தவுடன் பார்க்கும் அன்புப்
அல்லது அடிமைப் பார்வையோ அல்ல அது. அந்தப் பார்வையில் இருந்தது அப்பழுக்கற்ற
கேள்வி மட்டுமே.
அந்த
அதிகாலையில் அந்த நாய்க்குட்டியின்
அமைதியைக் குலைத்துவிட்ட குற்றவுணர்வு கொஞ்சமிருந்தாலும், எனக்கு வேறு வழியில்லை. அங்கே தான் நான் சென்றாக வேண்டும். அது
எனது வீடு, அதாவது நான் வாடகை தந்து
குடியிருக்கும் வீடு. முடிந்தவரை நாயை தொந்தரவு செய்யாமல் வீட்டைத் திறந்து உள்ளே
சென்றேன். காருக்குக் கீழிருந்து எட்டிப்பார்த்த நாய் தலையை உள்ளிழுத்துக்கொண்டது.
நான்
வீட்டைவிட்டுக் கிளம்பி நான்கு நாட்களாகிவிட்டிருந்தது, நான்கு நாட்களாக நண்பர்களுடன் கர்னாடக காட்டுப்பகுதிகளுக்கு
ஒரு பயணம். நான்குநாட்கள் பயணம் முடிந்து அந்த அதிகாலையில் தான் ஊர்திரும்பினேன்.
இதற்குமுன்பு இந்த நாயைப் பார்த்தமாதிரி ஞாபகமில்லை. இந்த நான்கு நாட்களுக்குள்
தான் இந்த நாய் இங்கு வந்திருக்கவேண்டும். எனது வீடும் காரும்தான் நான்கு நாட்களாக
அதன் இருப்பிடமாக இருந்ததா, அல்லது இன்று தான் அது அந்த
இடத்தைக் கண்டடைந்து இருக்குமா. அந்த போர்டிகொவும் எனது சிவப்பு ஸ்விஃப்ட் காரும்
நாய் வசிக்க வசதியான இடம் தான், அதுவும் இந்த மழைக்காலத்தில்
மிகவும் கதகதப்பாகவே இருக்கக்கூடும்.
எனது
கார் என்று சொல்லிக்கொண்டாலும் அந்தக் கார் ஒரு வங்கியின் கடன் பணத்தில்
வாங்கியது. இந்த வருடம் முடிவில்தான் கடன் தவணை முடிகிறது. அத்ன்பின் தான் அது
எனக்கு முழு சொந்தம் என்று சொல்ல முடியும். இந்த வீடும் வீடு என எனது நண்பர்களால்
அறியப்பட்டு இருக்கிறது. அனால் இதை எனது வீடு என்று சொல்வதில் வீட்டின்
சொந்தக்காரருக்கு ஆட்சேபனை
இருக்கக்கூடும். எனினும் இந்த
வீட்டுக்கு நான் வாடகை கொடுப்பதால் எனது வீடு தான் இது. வீட்டுக்காரக்கு
சரியென்றால் இந்த வீட்டை வாங்கிவிடலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. ஆனால்
அதைக் கேட்கபோய் என்னை காலி செய்ய சொல்லிவிட்டால் இது போல ஒரு வீடு அலுவலகம்
பக்கத்திலேயே கிடைக்காது என்ற பயம் அந்த யோசனையைத் தடுத்தபடியே உள்ளது. அலுவகம்
மாறும்போது கேட்கலாம், காலிசெய்ய சொல்லிவிடுவாரே
என்ற பயம் இருக்காது. ஆனால் வேறு ஊருக்கு மாறும்போது இந்த வீட்டைக் கேட்டு என்ன
பயன். நானும் வேறு யாருக்காவது வாடகைக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்காரனாக
இருப்பதற்கு அவரே வீட்டுக்காராக இருப்பது அந்த வீட்டுக்கு எந்த வித்தியாசத்தையும்
ஏற்படுத்தப் போவதில்லை.
கார்
வாங்கிவிட்டேனே தவிர அதை இந்த ஊரில் ஓட்டுவது அவ்வளவு மகிழ்ச்சியான செயலில்லை.
பைக் போதும் இந்த ஊருக்கு. பைக் தான் எனது உற்ற தோழன். இருந்தாலும் கார் ஒரு
அவசியத் தேவையாகிவிட்டது. ஏனென்றால் தோழியுடன் பயணிக்க கார் தான் ஒரே வழி.
தோழியுடன் பைக்கில் செல்வது இந்த சமுதாயத்துக்கும் அல்லது தோழிக்கும் கூட உவப்பான
செயலில்லை. இந்த சமுதாயக் கட்டாயங்கள்தான் கார் விற்பனைக்கு காரணம் என நினைக்கத்
தோன்றுகிறது. ஆட்டோவே உரசாமல் செல்ல முடியாத குறுகிய மற்றும் நெரிசல்மிக்க சாலைகள்
உள்ள சென்னையில் விலையுயர்ந்த கார்கள் இவ்வளவு விற்பனையாவதன் மூலம் இதை
புரிந்துகொள்ளமுடிகிறது.
இவ்வளவு
இருந்தாலும், இந்த வீடு அல்லது கார் உன்னுடையதா
என்று யாரும் கேட்டால், சற்றும் யோசிக்காமல் அல்லது சற்றே யோசித்து நான் சொல்லும் பதில்,ஆம் என்பது தான். இந்த பின்னணிக் கதைகள் கேட்க அவர்களுக்கு
பொறுமை இருக்குமா என்று தெரியாது, கேட்டால் கண்டிப்பாக
புரியும். அனால் இதை தெரிந்து அவர்களுக்கு ஆகப் போவது ஏதுமில்லை என்பதால்
அவர்களுக்குச் சொல்வதுமில்லை. ஆனால் இந்த நாய்குட்டிக்கு? அதற்கு
இந்த விஷயம் தெரிந்தே ஆகவேண்டுமல்லவா? நான் தான் இந்த வீட்டுக்காரன்
என்று அந்த நாய் தெரிந்துகொள்வது மிக்க அவசியம் அல்லவா? அந்த நாய் அங்கு தங்க எனது அனுமதிதான் தேவை என்று அதற்க்குத்
தெரியவேண்டுமல்லவா? அந்த நாய்க்குட்டியின் கண்களிலிருந்த
கேள்வி அது தானே? அதற்கு எப்படி இதைச் சொல்லி புரியவைக்கப்போகிறேன் என்று
யோசித்தபடி அந்த அதிகாலை நேரத்தில் ஒரு குட்டித் தூக்கத்துக்கு இருந்த சாத்தியத்தை
பயன்படுத்திக்கொண்டேன்.
பத்துமணிக்கு
அலுவலகம் செல்லும்போது காருக்குக்கீழ் மறக்காமல் எட்டிப்பார்க்க அந்த
நாய்க்குட்டியைக் காணோம். என்னைப் பார்த்ததும் ஓடியிருக்கலாம். ஆனால் அந்த
விஷயத்தை என்னால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை, அந்த நாய் சென்றது கூட எனக்குப் பிரச்சனையில்லை. இந்த ஊரில்
நம்மைவிட நாய்க்கு பல இடங்கள் எளிதாகக் கிடைக்கும். ஆனால் அந்த நாய் என்ன
நினைத்துக்கொண்டு ஓடியிருக்கும் என்றகேள்விதான் என் மனத்தைக்குடைந்தபடியிருந்தது.
அதை எப்போதும் அதற்கு புரியவைக்கமுடியாதபடியாகிவிட்டதே என்ற சோகமும்.
இரு
நாட்கள் கழித்து ஒரு நடுஇரவில் மழை சத்தம் கேட்டு விழித்தேன். வெளியில் காயும்
எனது ஜட்டிகள் ஞாபகம் வந்தது. என் வழக்கப்படி
எல்லா ஜட்டிகளயும் ஒரே நாளில் துவைத்து காயபோடிருந்தேன். நாளை கண்டிப்பாக
தேவைப்படும். எனவே உடனடியாக இறங்கி ஓடி
அதை மழையில் நனையாமல் எடுத்தேன். எதேச்சையாக பார்வை கார் பக்கம் திரும்பியதில்
நாய்க்குட்டி காருக்கு அடியிலிருந்து எட்டிப்பார்த்தது. அதே நாய்க்குட்டி.
அந்த
நாய்க்குட்டி உண்மையில் ஓடிப்போகவில்லை போல,
நான் வழக்கமாக
பார்க்கும் நேரத்தில் அது இல்லை என்பதால் அது அந்த வீட்டில் இல்லை என்று சொல்ல
முடியாதில்லையா. நான் கூடத்தான் அது பார்க்கும் நேரத்தில் வழக்கமாக அந்த வீட்டில்
இல்லை. எது எப்படியிருந்தாலும் ஜட்டியை மழையிலிருந்து பாதுகாத்துவிட்ட
திருப்தியுடன் தூங்கச் சென்றேன்.
அப்படியானால்
அந்த நாய் அதற்க்குத் தேவைப்படும் நேரத்தில் அங்கு வருகிறது, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் நான் வருவது போல, எனக்குத் தேவைப்படும் நேரத்தில் எனது காரை நான் எடுப்பது போல.
எனவே அந்த வீடும் காரும் எனது என்பது எந்த அளவு உண்மையோ அதே அளவு உண்மை அந்த
நாயுடையதும் என்பது தானே?
இதில்
எனக்குப் பிரச்சனை இல்லையென்றாலும் இருந்தாலும் ஒரு கேள்வி என் மனத்தை
சுற்றியபடியேயிருந்தது. தனக்கு சொந்தமான வீட்டுக்கு வந்துசெல்லும், அந்தக் காரை அவ்வப்போது எடுக்கும் என்னைப்பற்றி அந்த நாய் என்ன
நினைத்துக்கொண்டிருக்கும்?