Unordered List

16 டிசம்பர் 2013

இவன் வேற மாதிரி - இவன் வேற மாதிரி அரசியல்வாதி

ஒரு அமைச்சர் இருக்கிறார், அதுவும் அவர் சட்ட அமைச்சர். அவருக்கு சட்ட கல்லூரியில் சில மாணவர்களைச் சேர்க்கவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன நினைப்பீர்கள், அவர் தனது பதவியை பயன்படுத்தி ஏதாவது செய்வார் என்றுதானே. ஆனால் அவர் அப்படியல்ல, மாறாக அவர் அந்த கல்லூரி முதல்வரை கல்லூரியிலேயே சந்தித்து வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால் அந்த கல்லூரி முதல்வர், அமைச்சரை உதாசீனமாகப் பேசி மறுத்து அனுப்பி விடுகிறார்.

இப்போதே தெரிந்துவிடுகிறது, இதுஒரு வித்தியாசமான படம் என்று.

சரி.. இப்போது அந்த அமைச்சர் என்ன செய்வார் என்று எதிர்பார்க்கிறீர்கள், தனது அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று தானே, அதுதான் இல்லை,  தனக்குத் தெரிந்த சில மாணவர்களிடம் சொல்கிறார். அவர்கள் மற்ற சில மாணவர்களை  தாக்குகிறார்கள். அது எதற்க்கென்று தெரியவில்லை. எந்த அடிப்படையில் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் அந்த அமைச்சருக்கு எந்த பலனும் இருப்பதாகத் தெரியவில்லை. (செய்தியில் பார்த்த சட்ட கல்லூரிப் பிரச்சனையை படத்தில் வைக்க விரும்பியது நல்லது தான். ஆனால் அதன் பிண்ணனியை கொஞ்சமாவது இயக்குனர் ஆராய்ச்சி செய்திருக்கலாம்.)

இது இப்படி இருக்க அந்த அமைச்சருக்கு இன்னொரு பிரச்சனை. அவரது தம்பி சிலரைக் கொலை செய்து  விடுகிறார்.இப்போது என்ன நினைப்பீர்கள், அமைச்சர் தனது பதவியை பயன்படுத்தி தம்பியை கைது செய்யவிடாமல் செய்துவிடுவார் என்று தானே, அப்படியே கைதானாலும் சாட்சிகளைக் கலைத்து விடுதலை ஆக்கிவிடுவார் என்று தானே. அதுவும் இல்லை, அந்தத் தம்பி கைதும் ஆகி, தண்டனையும்  பெற்றுவிடுகிறார்.என்ன அதிசயம், தமிழ் நாட்டில் இப்படி நடக்குமா என்று ஆச்சர்யத்துடன் நாம் பார்க்கிறோம்.

வாழ்க்கை முழுவதும் சிறையிலிருக்கப்போகும் தம்பியை பதினைந்து நாள்  பரோலில் மட்டுமே எடுக்கிறார் அந்த அமைச்சர், இதுவே அதிகபட்சமாக அவர் செய்யக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் அந்த அப்பாவி அமைச்சரின் அவல வாழ்க்கையில் இன்னும் சில பிரச்சனைகளும் வருகின்றன.

----------

அதே ஊரில் தமிழ் சினிமாவின் பார்முலா படி வேலைக்குப் போகாமல் ஒருவர் சுற்றிக்கொண்டு இருக்கிறார், எனவே அவர் தான் ஹீரோ என்று நமக்கு புரிகிறது.

ஹெல்மெட் கூட போடாமல் ஊரெல்லாம் பைக்கில் சுற்றி வருகிறார்.
ஒருநாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார் மீது உச்சா போகிறார். அதை மாடியிலிருந்து ஹீரோயின் பார்த்து கண்டிக்க, அவர் நேராக ஹீரோயின் வீட்டுக்குள் சென்று உச்சா அடிக்கிறார், பாத்ரூமில் தான். இதைக் கண்டு ஹீரோயின் இம்ப்ரெஸ் ஆகி காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். வாவ்.

பிறகு அவர் ஒரு இடத்தில வேலைக்கு போய், முதல் நாளே ஒரு போட்டோ எடுத்து ஒரு விளம்பர ஐடியா கொடுக்கிறார், உண்மையிலேயே அது மிக மொக்கையாக இருக்கிறது என்பது நமக்கே தெரிகிறது. அதை அந்த மேனேஜர் பக்குவமாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல், அங்கிருத்து சில அழகு மீன்களை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்.

இப்படிப்பட்ட பொறுப்பான ஹீரோவுக்கு, அந்த அப்பாவி அமைச்சர் மீது கோபம் ஏற்படுகிறது. ஆனால் அமைச்சர் எந்த தப்புமே செய்யவில்லையே என்ன செய்வது என்று யோசித்து,  பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை சட்டவிரோதமாக கடத்தி அமைச்சரை சிறை செல்ல வைக்கிறார். போலீசும் அமைச்சரைக் கடுமையாக நடத்தி அவரை சட்ட விரோதமாக கொலை செய்கிறது.

அடுத்தடுத்த பிரச்சனைகளில் அமைச்சரின் தம்பியை ஹீரோ கொலை செய்ய அதையும் போலீஸ் சட்டவிரோதமாக  மறைக்கிறது.

---

எந்த நிலையிலும் பதவியை துஷ்பிரயோகம் செய்யாத வித்தியாசமான அமைச்சரைச் சுற்றிவரும் கதையே இவன் வேற மாதிரி.

அவர் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவோ, சட்டத்தை மீறியதாகவோ எந்த ஒரு காட்சியும் இல்லை.  அமைச்சர் தம்பியும் தான் செய்த தவறுகளுக்கு சட்டத்தின்முன்   தண்டனையை அனுபவிக்கிறார்.
ஆனால் ஹீரோ சிறிய சட்ட மீறல்களில் ஆரம்பித்து கொலைகள் வரை செய்தாலும் எந்த தண்டனையும் அவருக்கு இல்லை. எந்த மனசாட்சி உறுத்தலும் இன்றி அவர் சிரிக்க படம் முடிகிறது.

இவன் வேறு மாதிரி -  உண்மையிலேயே ஒரு வித்தியாசமான படம், திருந்த நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம்.

09 டிசம்பர் 2013

திருடுபோய்க் கொண்டிருப்பது

"டேய்ய்ய்....."

சென்னை சாந்தி தியேட்டர் வளாகத்தில் இருக்கும் சரவணபவனில் சாவகாசமாக ஒரு  மதிய உணவை முடித்துவிட்டு, நானுண்டு எனது செல்போனுண்டு என  நடந்து  வந்துகொண்டிருந்த நான் அந்தக் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

அவருக்கு ஒரு நாற்பத்தைந்து வயது இருக்கலாம். கையிலிருந்த கருப்புப்பை அவர் ஒரு விற்பனைப்  பிரதிநிதியாக இருக்கலாமென  சொல்லியது, அவரது முகத்தில் கோபம் பரவியிருந்தது.

அவர் பார்த்த திசையில் நானும் பார்த்தேன். ஒரு பத்து பையன்கள் ஓடிக்கொண்டிருந்தனர். எதோ பள்ளி சீருடையில் இருந்தனர்.  அவர் மறுபடியும் கோபமாக குரல்கொடுக்க ஓடிக்கொண்டிருந்த இரு பையன்கள் நின்று நிதானமாகத் திரும்பினர், "என்ன" என்பது போல் தெனாவெட்டாக  அவரைப் பார்த்தனர்.

அதுவரை கோபமாக இருந்த அவர் முகம் கொஞ்சம் மாற்றமடைந்தது, அதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று தோன்றியது. ஒரு அடி பின்னல் வைத்தார். அருகிலிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனரைப் பார்த்து
"பட்டப்பகல்ல இப்படி எடுத்துட்டு ஓடுறாங்க.. எலோரும் பார்த்துகிட்டு இருக்கீங்களே.." என்று குமுறினார். இப்பொது குரல் மிகவும் மட்டுப்பட்டே இருந்தது, இருந்தாலும் இழப்பின் வலி அந்தக் குரலில் இருந்தது. எனக்கு நிலைமை கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.



இப்படி ஒரு அனுபவத்தைப் பற்றி எனது நண்பன் ஒருமுறை சொல்லியிருந்தான்.

பஸ்ஸில் சென்ற அவனது செல்போன் திருடப்பட்டு விட்டதை கவனித்து இருக்கிறான். உடனடியாக ஒரு கும்பல் இறங்குவதையும் கவனித்துவிட்டு, உடனடியாக அவனும் இறங்கியிருக்கிறான்.பேருந்து புறப்பட்டுவிட, ஐந்தாறுபேர் இருந்த அந்த கும்பலும் அவனும் மட்டும் அந்த பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறார்கள்.

இவன்  கவனித்ததைக் கவனித்த அவர்களில் வாட்டசாட்டமான   ஒருவன் "என்ன" என்று கேட்க. இவன் ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு திரும்பியிருக்கிறான். வேறென்ன செய்ய?

அவர் அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். இழப்பும் கையறு நிலையும் அவரது முகத்தில் தெரிந்தது.  இங்கே திருடு போயிருக்கிறது என்றும் அதற்குக் காரணம் யாரென்றும் தெரிந்தாலும் திருடுபோனது என்ன என்று எனக்கு தெரியவில்லை.



ஓடிக்கொண்டிருந்த அந்த பையன்கள் இப்போது மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள். எங்களைப் திரும்பி பார்த்த அவர்களின் கண்களிலும் ஏளனம் கைகளில் கரும்பு.

ஆம், அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் கரும்பு இருந்தது. அப்போது தான் கவனித்தேன். அருகிலிருந்த அந்த கரும்பு ஜூஸ் எந்திரத்தின் அருகே சாக்கில் கட்டப்பட்ட ஓரிரு கரும்புகள் மட்டும் இவர்கள் எடுத்தது போக எஞ்சியிருந்தன. ஆளில்லாத கரும்பு ஜூஸ் வண்டியிலிருந்து எடுத்துகொண்டு அதாவது திருடிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். 
அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அங்கே இல்லாததால், அங்கு நடந்தது யாருக்கும் ஒரு இழப்பாகத் தெரியவில்லை.

அவரை மீண்டும் கவனித்தேன். கண்டிப்பாக அவருக்கும் அந்த கரும்புகளுக்கும் எந்த தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை, பிறகு ஏன் இவர் இவ்வளவு கோபமடைகிறார், இதனால் அவருக்கு என்ன இழப்பு  என்று யோசித்தேன்.

“விடுங்க சார்..கவனிக்காம அப்படியே விட்டுட்டு அப்புறம் போன பின்னாடி ஆத்திரப்பட்டு என்ன சார் பண்ண முடியும். கவனிச்சு வச்சிருந்துக்கணும்” என்று யாரொ அந்தக் கரும்புச்சாக்கை பார்த்தபடிகூற

"படிக்கிற பசங்க சார்"  என்று முனுமுனுத்தபடி அவர் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

07 டிசம்பர் 2013

ரயிலிரவு

மதியம் எக்ஸ்பிரஸ் அவென்யுவில் பாதுகாப்பு சோதனைகள் பலமாக இருந்தது. உள்ளே வரும் கார் டிக்கியை எல்லாம் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சோதனை செய்வதிலும் ஏதோ ஒரு லாஜிக் இருக்கிறது போல. எனக்கு  முன்னால் இருந்த ஹோண்டா காரை சோதித்த அளவுக்கு எனது காரை சோதிக்கவில்லை என்பது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். இந்தக் காருக்கெல்லாம் இவ்வளவுதான்  வொர்த்  நினைத்து விட்டார்களா என்று யோசித்தேன். அடுத்த வருடத்துக்குள் இதற்காகவாவது ஒரு ஹோண்டா கார் வாங்க முடியுமா  என்று பார்க்கவேண்டும்.

இரவு எக்மோர் ரயில்  நிலையத்திலும் பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்தன. அப்போது தான் ஞாபகம் வந்தது, அது டிசம்பர் 6 அல்லவா, இவ்வளவு சோதனைகள் கூட இல்லாவிட்டால் எப்படி. ஆனால் ரயில் நிலையத்தில் ஒரு கூடுதல் வசதி இருப்பதை அப்புறம் தான் கவனித்தேன்.  நீங்கள் விருப்பப்பட்டால் சோதனைக்கு உள்ளாகலாம். அல்லது சோதனை இல்லாமலே உள்ளே பிரவேசிக்கலாம். இப்படி இரு ஏற்பாடுகள்  இருந்தன அங்கு.

வழக்கமான வழியில் சென்றபோது மெட்டல் டிடெக்டர் உட்பட சோதனைகள் எல்லாம் பலமாக இருந்தது நடந்தது. சரி, ரயிலுக்கு கொஞ்சம் இருக்கிறதே என்று வெளியே வெளியேவந்து சாப்பிட்டேன்.  ரயில் நிலையம் ஓரமாக இருக்கும் ஆனந்தபவனில் இனிப்புகள் வாங்கிக்கொண்டு அந்த வழியாக உள்ளே சென்றால், அங்கே எந்த ஒரு சோதனையும் இல்லை. மிக நல்ல ஏற்பாடுதான்.


இன்னும் நேரம் இருந்ததால் நிலையத்தினுள் இருக்கும்  ஹிக்கின்பாதம்ஸ் புத்தக கடையில் நின்று புத்தகங்களை மேய்ந்தேன். கையோடு ஒரு புத்தகம் படிக்க கொண்டுபோயிருந்தாலும் சிலசமயம் சில நல்ல  இப்படி சும்மா பார்க்கும்போது கிடைப்பதுண்டு. அதுமட்டுமில்லாமல்  பொதுவாக கூட்டத்திலிருந்து தப்பிக்கும் வழியாக நான் நினைப்பது புத்தகக் கடைகள் தாம்.  நெரிசலான அந்த ரயில் நிலையத்தில் அதிக கூட்டமில்லாத இடம்  அது தான்.

அப்போது  ஒரு பெண்   அவசரமாக அங்கு வந்தாள். நான் அவளைக் கவனித்ததேன் என்று சொல்லிவிட்டபிறகு அவள் ஒரு அழகானப் பெண் என்று வேறு தனியாகக சொல்லத் தேவையில்லை. ஜீன்ஸ் போட்ட மாடர்ன் அழகி அவள். என்ன புத்தகம் வாங்குகிறாள்  என்று லேசாக  கவனித்தேன். அவள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை, சட்டென இரு புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள், பார்த்து கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். அவை  குமுதமும் நக்கீரனும். அடப்  பாவமே!  இவள் திருமணமான பெண்ணாக இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


எனது வழக்கப்படி ரயில் நகர ஆரம்பித்ததும் கடைசி நிமிடத்தில்  ஏறினேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இன்னொருவர்  இருந்தார், அது எதிர்பார்த்தது தான். குளிர்சாதன பெட்டி முன்பதிவு  செய்திருந்ததில், அப்பொது  ஆர்.ஏ.சி. யில் இருந்தது.  எனவே  வேறு இருக்கை  கிடைக்கும்வரை நாங்களிருவரும் அந்த இருக்கையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

செங்கல்பட்டு தாண்டியவுடன் ஆள் வராத காலியிருக்கை இருந்தால் கொடுப்பதாக டீ.டீ .ஆர் வாக்களித்துச் சென்றார். 
நல்ல சிஸ்டம் தான். நாங்களிருவரும் ஆள் வராமல் காலியிருக்கை ஏற்படவேண்டுமென விரும்பிக்கொண்டு அமர்ந்திருந்தோம். இன்னொருவர் ரயில்லைத் தவறவிட்டு அப்படி இருக்கைக் வேண்டும் என விரும்ப ஆரம்பித்ததை கவனிக்க ஆச்சர்யமாக இருந்தது. அமர்ந்தபடியே கையிலிருந்த வெள்ளையானை புத்தகத்தைப் படிக்க ஆரம்பிதேன்.

"ஆச்சர்யமே இல்லை" என்றான் ஏய்டன்.     "உலகம் முழுக்க நான் பஞ்சங்களைப் பார்த்துவிட்டேன். எந்தப் பஞ்சத்திலும் சாகும் மனிதனுக்கு வாழும் மனிதன்  உதவிசெய்ததில்லை.பஞ்சத்தில் ஒருவன் சாவதக் கண்டதும் மற்ற அத்தனைபேரும் பதற்றமாகிவிடுகிரார்கள். அந்த நிலை தங்களுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.... மனிதர்களின் இயல்பான சுயநலம் கிளம்பிவரும். - வெள்ளை யானை நாவலிலிருந்து

26 ஆகஸ்ட் 2013

செத்தவன் சொன்னது


அவனை எனக்கு முன்பே தெரியாதென்பதில்லை, அவன் செத்துவிட்டான் என்பதில் யாருக்கும் சந்தேகமேதுமில்லை, ஆனால் அவன் மரணத்தில் ஒரு சந்தேகம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே அவனே பேச ஆரம்பித்ததும் ஒரு வகையில் நல்லதே.

எல்லோரையும் போலவே சிறுவயதில் அவனுக்கும் அந்த பயம் இருந்திருக்கிறது, சிறுவயதில் தான் பயம் என்று சொன்னதும், விவரம் தெரிந்தபின் அந்த பயத்தைக்கடந்துவிட்டான் என்று பொருளல்ல. விவரம் தெரிவதென்பது பயங்களை சிறப்பாக ஒளித்துவைப்பது என்பது தானே. பயத்தை ஒழிப்பது கடினமே தவிர ஒளிப்பது இல்லையே.

ஆனால் எலோருக்கும் இருக்கும் அந்த மரண பயத்தை அவன் எப்படிக்கடந்தான் எனக்கேட்டேன். மரண பயத்தை வெல்ல ஒரே வழி மரணம்தான் என்றான். நல்ல பதிலாகத்தான் தோன்றியது. அதை எப்படி நிகழ்த்திக்கொண்டான் எனக்கேட்டேன்.

சில திருமணங்கள் தானாக நடப்பது போலத் தோற்றமளித்தாலும், எல்லாமே நடத்தி வைக்கப்படுபடுபவைதான். சில வெளிப்படையாகத்தெரியும் சில தெரியாது, மற்றபடி வித்தியாசமேதுமில்லை. அதுபோலத்தான் மரணங்களும். மற்ற மரணங்களைப்பற்றி அவன் பேச அவனது தார்மீகம் இடம்கொடுக்கவில்லையென்றாலும், அவனது சொந்த மரணத்தைப் பற்றி பேச அவனை யார் தடுப்பது. தற்கொலைதான் இங்கே குற்றம், மரணமல்ல.

அவனது மரணத்துகாக தங்கள் உயிர், பொருள் ஆவியனைத்தும் கொண்டு உழைத்தவர்கள் பலர். அதனால் யாரால் வந்தது வந்தது அந்த மரணம் என்று யாருக்கும் தெளிவாகத்தெரியவில்லை. அதுவே அவனது மரணத்தின் மர்மம். மரணத்தை அவன் மிக விரும்பியேற்றுக்கொண்டான் என்றாலும், மரணத்தைவிட அந்த மர்மம் அவனுக்கு மிக விருப்பமாக ஆனதாகத்தெரிவித்தான். இதில் என்ன வேடிக்கையென்றால், இன்னும் பலர் அவனது மரணத்துக்காக முயற்ச்சிசெய்து கொண்டிருப்பதுதான். ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டவனை இன்னும் பலர் கொல்ல முயற்சிப்பதைப்பார்பதே அவனது வேடிக்கை. இதுவே அவன் பேச ஆரம்பித்ததின் நிமித்தமுமாகக்கூட இருக்கலாம்.

(இன்னும் சொல்வான்)

16 ஆகஸ்ட் 2013

அதிகாலை வெளிச்சம்

அறையில் இருள் பரவியிருந்தது, போர்வையினுளிருந்து அனிச்சையாக கையை நீட்டி இருளுக்குள் துழாவி, எனது செல்பேசியை எடுத்தேன். அறையில் பரவியிருந்த இருளின் ஒரு துளியே அதிலும் இருந்தது. சரிதான் அதில் சார்ஜ் இல்லை என்று நினைத்துக்கொண்டு மீண்டும் அதை இருளுக்குள் புதைத்துவிட்டு, நான் போர்வைக்குள் புதைந்தேன். அது நள்ளிரவாகயிருந்திருக்கவேண்டும்.

எனக்கு எப்போதுமே கடிகாரம் பயன்படுத்தும் பழக்கமில்லை. கைக்கடிகாரம் தான் மனித நாகரிகத்தின் கண்டுபிடிப்புகளில் மிகப்பெரிய அபத்தம் என்பது எனது கருத்து. பள்ளி, அலுவலகம் செல்வதற்கு மணி பார்த்தால் கூட பரவாயில்லை. ஆனால் மனிதர்கள் சாப்பிடுவதையும் தூங்குவதையும் கூட அது தான் தீர்மானிக்கிறது எனபதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. மனிதர்கள் இயற்கையின் கடிகாரத்தை புறக்கணிப்பதே பல பிரச்சனைகளுக்குக் காரணம் எனபதும் எனது துணிபு. இதற்கான தார்மீக எதிர்ப்பாகவே நான் கைக்கடிகாரத்தை துறந்தது. இப்போதெல்லாம் செல்பேசி உடலின் பகுதியாகவே ஆகிவிட்டிருக்கிறபடியால் உண்மையில் தனியாக கைகடிகாரம் இல்லாதது ஒரு பிரச்சனையாகவும் இருப்பதில்லை.

முழு விழிப்படைந்து எழுந்தபோது காலைப்புத்துணர்ச்சியை உணர்ந்தேன். அந்த ஐந்துமணி வெளிச்சம் கண்களுக்கு இதமாக இருந்தது. ஒன்பது மணிக்குத்தான் அலுவலகத்துக்குச் செல்ல புறப்பட வேண்டுமென்றாலும், காலையில் ஓட்டப்பயிற்சிக்காக வழக்கப்படுத்திக்கொண்டது இந்த ஐந்து மணி பழக்கம். தாமதமாகத் தூங்கினால் காலையில் இருக்கும் கண்ணெரிச்சல் அறவே இல்லாதது கொஞ்சம் ஆச்சர்யமளித்தது. அந்த ஆச்சர்யத்துக்கு ஜன்னல் வழியாக வந்த மழைச் சத்தமும் மெல்லிய குளிரும் பதில்களாக அமைந்தன. குளிர்நேரங்களில் மக்கள் அதிக புத்துணர்ச்சியோடு இருப்பது இயல்பு தானே. இயற்கை எப்போதுமே சரியான பதில்களைத் தந்துகொண்டு தான் இருக்கிறது. நாம்தான் சரியாகக் கேட்பதில்லை என நினைத்துக்கொண்டேன்.

அணைந்திருந்த செல்பேசியை மின்னிணைத்துவிட்டு பல்துலக்க ஆரம்பித்தேன். காலைகடன்களை முடித்து குளியலறையிலிருந்து வந்து செல்பேசியை எடுத்து உயிர்ப்பிக்க உடனே அது கதறியது.

என் நண்பனின் அழைப்பு அது.

"ஏண்டா உனக்கு எவ்ளோ நேரம் ட்ரை பண்ணுறது. உன் வீட்டுக்கு வெளியேதான் நிக்கிறேன். சீக்கிரம் வா" என்றான்.

சில சமயங்களில் இவனது கடமை உணர்ச்சிக்கு இப்படிதான் வெளிப்படும். இந்த மழையிலும் வழக்கமாகச் செல்லும் ஜாக்கிங் செய்தே ஆகவேண்டும் என்று நினைக்கும் அவனது கடமை உணர்வு கண்டு நெஞ்குருக்கொண்டே காலை ஓட்டப்பயிற்சிக்குத் தயாரானேன். அவன் ஆர்வத்துக்கும் காரணம் இல்லாமலில்லை. மழையை எதிர்பார்த்து மழைக்கான ஜெர்க்கின்களை நேற்றுதான் நானும் அவனும் வாங்கியிருந்தோம், அது உடனே பயன்பாட்டுக்குவருவதில் ஒரு மகிழ்ச்சி. மழை நேரத்திலும் அதிகாலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றே ஆகவேண்டும் என்கிற அவனது ஆர்வத்துக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும்.

நல்ல வேலையாக அப்போது  அதைச்  செய்தேன். வெளியே செல்ல கதவைத் திறக்கும் முன்பாக ஜன்னல் வழியாக அவனைப்பார்த்தேன், மழைக்கு அவன் எப்படி தயாரகியிருக்கிறான் என்று பார்க்க.

அவன் தயாராகத்தான் இருந்தான். குடையைப்பிடித்தபடி, என் வீட்டுக்கதவை பார்த்துக்கொண்டு.  அலுவலகம் செல்லும் உடைகளுடன். 

29 ஜூலை 2013

மனிதகுல மானமும் சில குருவிகளும்

அந்தக் குருவியை அதற்குமுன் அங்கே நான் கவனித்து இல்லை, அதுவும் என்னை அந்த அதிகாலை நேரத்தில் கவனித்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அன்று காலை அந்த சந்திப்பு நடந்தது.

அந்தக் குருவி துயிலெழுந்த நேரமோ அல்லது அதன் நிமித்தமோ நானறியேன். ஆனால் நான் எழுந்தது காலை சுமார் நாலறை மணி. அதற்கான காரணம் சமீபத்தில் வெளிவந்துள்ள சிங்கம் 2 திரைப்படம், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் அந்தத்திரைப்படத்தின் விளம்பரங்கள்.

தற்போதைய நிலைமையில் நகரில் பயணம் செய்யும் எவரும் கடுமையாக முறைக்கும் சூர்யாவின் பார்வையிலிருந்து தப்ப முடியாது, எந்தப் பக்கம் திரும்பினாலும் சூர்யா நம்மைப் பார்த்து முறைத்தபடியிருக்கிறார், அவருக்குப் பின் அனுஷ்கா பட்டாசாக சிரித்தபடி இருப்பது கொஞ்சம் ஆறுதல்.

உண்மையில் அந்த விளம்பரம் என்னைக் கவர்ந்ததுக்குக் காரணம் சூர்யாவின் முறுக்கேறிய தோற்றமா அல்லது, அனுஷ்கா பற்றிய எண்ணமா என்று சொல்ல முடியாவிட்டாலும், கொஞ்சம் நாட்களாகவே உடற்பயிற்சியைத் தொடர்வதைப் பற்றி யோசித்துகொண்டிருந்த எனக்கு உடனடி காரணமாக இருந்தது அந்த விளம்பரம் தான் என்று  உறுதியாகவே சொல்ல முடியும்.

பக்கத்திலிருக்கும் பூங்காவில் அதிகாலையில் ஓட்டம், பின்னர் கொஞ்சம் உடற்பயிற்சிகள் என திட்டம் உருவானது.

அதிகாலையில் எழுந்து வீட்டுக்கு வெளியே வந்தவனை வரவேற்றது ஒரு குருவியின் குரல். நான் வருவேன் என்று எதிர்பார்த்து அது அங்கே இருக்கவில்லை என்பதும் என்னை வரவேற்பது அதன் உத்தேசமில்லை என்பதும் தெளிவு. இருந்தாலும், அதன் இனிமையான குரல் அந்த அதிகாலைவேளையில் எனக்கு மிகச் சிறப்பான வரவேற்பாக அமைந்தது என்பது உண்மை.


இது வேற குருவி


அந்த வரவேற்பை மனதுள் ரசித்துக்கொண்டே பூங்கா செல்ல எனது பைக்கை உயிர்ப்பிக்க முயற்சிசெய்தேன். பலநாட்கள் எடுக்கப்படாததாலும் கடந்த இரு நாட்களாக பெய்த மழையாலும் பைக்கின் ஸெல்ப் ஸ்டார்ட் வேலை செய்ய மறுத்தது. பிறகென்ன உதைத்து உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். மூன்றாவது உதையில் பைக் உயிர்பெற்று அந்த அதிகாலை அமைதியை கிழித்து உறுமியது. சொல்லிவிட்டுப்போகலாம் என குருவியைப் பார்க்க அங்கே அது இல்லை. இந்த பைக் களேபரத்தில் பயந்து பறந்துவிட்டது போல.

அட என்ன  செய்துவிட்டேன். அதிகாலை காலை வேளையில் ஒரு குருவியை மிரளச் செய்துவிட்டேனே, அதுவும் எனக்கு வரவேற்பாக அமைந்த குரலுக்கு சொந்தமான குருவியை. குருவியின் சத்தம் எனக்கு வரவேற்பாக அமைய, நான் உருவாக்கிய சத்தம் அதற்கு மிரட்டலாக அமைந்துவிட்டதே என்ற குற்ற உணர்வுடன் வண்டியைக் கிளப்பினேன்.

இதே நினைப்புடன் பூங்காவை அடைந்து ஓட்டத்தை தொடங்கினேன். காலையின் மெல்லிய வெளிச்சமும், லேசானக் குளிரும், நேற்றைய மழையின் ஈரமும் அந்த இடத்தை ரம்யமாக ஆக்கிகொண்டிருந்தன. அதிகாலையில் எந்த ஒரு இடமும் நாம் பார்க்காத  இன்னொரு பரிணாமத்தில் இருக்கிறது. 

லேசான ஈரம் கொண்ட பாதையில் இருந்த சரளைக்கற்களில் ஷூ அணிந்து ஓடும்போது ஒரு சீரான ஓசையை உருவாக்கிக்கொண்டிருந்தது. தூரத்தில் தவளைகளின் ஒலிகளும் பின்னணி போல வந்து கொண்டிருந்தன.  ஆனால் இந்த எல்லா ஓசைகளுக்கும் சிகரம்போல இருந்தது அங்கிருந்த குருவிகளின் ஒலிகள்.

குருவிகளை கவனித்த தருணத்தில் மீண்டும் அந்தக் குருவியின் நினைவு. என்ன இருந்தாலும் காலையில் என்னை வரவேற்ற குருவியை மிரளச்செய்தவன் தானே நான். இன்னா செய்தவனுக்கும் இனிமையை அள்ளி வளங்கிகொண்டிருந்த  குருவியினத்தைப்பார்கையில் உண்மையில் சந்தோஷத்தை விட ஒரு மனிதனாக ஒரு குற்ற உணர்ச்சியே தோன்றியது.

பலவிதமான குருவிகளின் சப்தங்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு அற்புத இசைவெளி அங்கே உருவாகிக்கொண்டிருந்தது. அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில் மழையில் புத்துணர்ச்சியடைந்த பசேலென்ற மரங்கள் பார்க்கும்  கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. அந்த மரங்களுக்கு உயிர்கொடுப்பது போலிருந்ததும் அவற்றின் மீது பறந்து விளையாடிய குருவிகளின் நடனங்கள்தான். சப்தம் கேட்டு அருகே இருந்த நீர்த்தேக்கதைக் கவனித்தேன், கரையோர மரத்திலிருந்து  நீரை உரசியபடி சென்ற அந்தக் குருவி  அப்படியே  நீரில் மிதக்க அதைச் சுற்றி வட்ட வட்டமாக அலைகள் உருவானது,  அமைதியாக இருந்த தண்ணீரும் துயிலெலுந்ததுபோல சிலிர்த்துக்கொண்டது.

காலைவேளை குருவிகளின் வேளைபோலும், அனைத்தையும் உயர்ப்பிப்பது குருவிகளின் கடமை,  இவ்வேளையில் குருவிகளைத் தவிர்த்து ஒரு அனுபவம் இல்லை,  நாளின் எல்லா விஷங்களையும் குருவிகள் தான் ஆரம்பித்து வைக்கின்றன என்று தோன்றியது.   இந்தக் குருவியினத்துக்கு நான் மட்டுமல்ல மனிதர்கள் உட்பட ஒட்டுமொத்த சூழலும் கடன்பட்டிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் அவர்களைக் கவனித்தேன், மூன்று இளைஞர்கள். ஜிம்மில் இருக்கும் திரட்மில்லில் ஓடும் பாவத்துடன் தீவிரமாக ஓடிக்கொண்டிருந்தனர்.  மூவரின் காதுகளிலிருந்தும் வயர்கள் புறப்பட்டு அவர்களின் சட்டைகளுக்குள் மறைந்தன. இன்னும் கவனித்ததில்  பெண்கள் நடைப்பயிற்சிக்கு வந்தால் ஐபாட் உடன் தான் வரேவேண்டும் என்று தீர்மானம் இருப்பது தெரியவந்தது.

இசையைப் பற்றி அப்போது ஒரு ஆச்சரியம் தோன்றியது.  ஒரு மழைக்கால அதிகாலையில் உருவாகும் குருவிகளின் ஒலிகளைகூட துச்சமென மதித்து புறக்கணிக்கும் அவர்களிடம் அதைவிட அரிதான எதோ இசை இருக்கிறது என்பதே மிகவும் ஆச்சர்யமூட்டும் சிந்தனையாக இருந்தது. அந்த இசை என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் எழாமல் இல்லை.

வேறு சிலர், அவர்களுக்கு ரகசியத்தில் நம்பிக்கை இல்லை. தங்களிடம் இருந்த மொபைல் போன் மூலம், தங்களுக்கான இசையைத் தங்களைச் சுற்றி வளையம் போல அமைந்து நடந்து சென்றனர்.  ஐபாடு, மொபைல் போன் அல்லது ஒரு சைனா செட்டாவது இல்லாமல் இவர்கள் வெளியே வருவது இல்லை, பிறகெப்படி குருவி அவர்களிடம் நெருங்குவது.

இன்னொருவர், இவரிடம் ஹெட்போன் இல்லை. பொதுவாக நாம் அரசு அலுவலகங்களில் காணக் கிடைக்கும் இறுகிய  அதிகார முகத்துடன் நடந்துகொண்டிருந்தார், அங்கே அவர் எழுந்தளியிருப்பதே அவ்விடத்துக்குப் பெருமை என்ற தோரணையுடன். இவருடன் அவர் நடக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்தபடி இருவர் கூடவே ந்டந்துகொண்டிருந்தனர். அந்த இருவரின் ”ஆமாம்” சத்தங்களைத்தாண்டி குருவியின் சத்தம் அவரை அடைவது சந்தேகம் தான்.

தனது இனிமையால் எல்லோரையும் வென்றுவிடலாம் என நினைக்கும் குருவியினத்தை, தங்கள் புறக்கணிப்பாலேயே  மனிதர்கள் வென்றுவிடுகிறார்கள் என்றறிந்த திகைப்புடன் திரும்பிய நான், என் பைக்கின் கண்ணாடியில் தன்முகம் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்துக்கொண்டு நின்றேன்.

"அப்பா...இங்க சூப்பரா எவ்வளவு குருவி இருக்கு!!.."  எனக்குப் பின்னால் குருவியைக் கவனிக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன். அந்தச் சிறுவன் தன் அப்பாவிடம் கேட்டான்.

 "இதை நம்ம வீட்டுக்குப் பிடிச்சுக்கிட்டுப் போகலாமா?"

02 ஜூலை 2013

இலக்கிய தீபாவளி 2013

"நீங்க சொல்லுங்க” என்று ஜெயமோகன் என்னைப் பார்த்தார். அதை எதிர்பார்த்துதான் கையுயர்த்தியிருந்தேன் என்றாலும், வாய்ப்பு வந்தவுடன் சட்டென கொஞ்சம் பதட்டமும் தோன்றியது. அப்போது விவாதத்திலிருந்த கதையைப் பற்றி எனது கருத்தை ஒரு கேள்வியாக முன் வைத்தேன்.

விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் படைப்புகள் பங்கேற்பாளர்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டிருந்ததால், தகுந்த தயாரிப்புகளுடனேதான் நான் சென்றிருந்தேன். அப்போது விவாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது பாரதியின் துள்ளல் நடையில் மொழிபெயர்க்கப்பட்ட தாகூரின் ஆசாபங்கம். படித்தவுடனே பிடித்த மிகவும் பிடித்த படைப்பு. சமீபத்தில் வாசித்த சுஜாதாவின் ’ரத்தம் ஒரே நிறம்’ கொடுத்த ஆர்வத்தில் சிப்பாய்க் கலகம் பற்றி மேலதிகமாகப் படித்த தரவுகளையும் சேர்த்து எனக்கு இந்தக்கதையைப் பற்றிய ஒரு கருத்து உருவாகியிருந்தது.

பொறுமையாகக் கேட்ட ஜெயமோகன், “இது இக்கதையின் மிக குறுக்கப்பட்ட வாசிப்பு. இதில் இந்தச் சம்பவங்கள் இருக்கலாம் ஆனால் கதையின் மையம் வேறு” என்றபடி விவாதத்தை வேறுதிசை நகர்த்தினார். எனது அம்பு சுட்டு வீழ்த்தப்பட்டது என்றுண்ர்ந்தேன். விவாதம் செல்லும் திசையை இன்னும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தேன். விவாதத்தின் போக்கில் இன்னும் பலரின் கருத்துக்களும் சில கட்டுரைகளும் கூட சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்க்க கொஞ்சம் மகிழ்ச்சியடைந்தேன்.

வருடாந்திர விஷ்ணுபுரம் இலக்கிய நிகழ்வு மிகவும் எதிர்பார்க்கப்படும் இலக்கிய தீபாவளி போலாகிவிட்டிருக்கிறது. இருந்தாலும் இந்த வருடம் fireworks கொஞ்சம் அதிகம் தான்.



சென்ற வருடம் சில மூத்த படைப்பாளிகளின் படைப்புகள் பற்றிய வாசிப்பு மற்றும் விவாதம் என்று அதிகரித்த வாசகர் பங்களிப்பு இந்த வருடம் இன்னும் வளர்ந்து கால வரிசையில் வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில படைப்புகளைப் பற்றிய விவாதம் என்று வளர்ந்துள்ளது. கொடுக்கப் பட்ட காலத்தின் முக்கிய படைப்பு என்று தாங்கள்  கருதுவதை ஒரு காலகட்டத்துக்கு ஒருவர் என்ற முறையில் பங்கேற்பாளார்களே தேர்ந்தெடுத்து, அதன் நியாயங்களை விளக்கி திறனாய்வை வழங்கினர். அதன் பின் அப்படைப்புகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

சில கட்டுரைகள் வரவேற்கப்பட்டன, சில அவதானிப்புகள் பாராட்டப்பட்டன. கட்டுரைகளோ அல்லது கருத்துக்களோ, கொஞ்சம் வலுவில்லாமல் இருந்தாலும் சந்தேகமின்றி நிராகரிக்கப்பட்டன. இருப்பினும் எப்போதும் நகைச்சுவைக்கும் வெடிச்சிரிப்புகளுக்கும் இடம் இருந்துகொண்டேயிருந்தது. எல்லோருமே படைப்புகளைப் படித்திருந்தாதால் அனைவருக்குமே சொல்ல ஏதாவது இருந்தது, எல்லாக் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டன. படைப்புகள் அதிகம் இருந்ததினால் நேரம் மிகக் கச்சிதமாக கையாளப்பட்டது.

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வாசகர்களின் தரம் பற்றி நம்பிக்கை அதிகரித்து வருவதின் அறிகுறியாகவே இந்தக் கறாரான அணுகுமுறையைப் பார்க்கிறேன். அடுத்தமுறை பங்கேற்பாளர்கள் இன்னும் அதிக தாயாரிப்புகளுடனும் தரவுகளுடனும் வரவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது, கூடவே உண்மையை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும்.

இந்தக் கூடலின் முக்கிய அடையாளமாகிவிட்ட கம்பராமாயண வாசிப்போடு துவங்கியது கூடல். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் ஜடாயு இருவரும் கம்பராமாயணத்தின் மிக சுவையான மற்றும் ஆழமான வாசிப்பை வழங்கினர். ஜெயமோகன் அவ்வபோது தொட்டுக்காட்டும் உச்சங்கள் செரிவைக் கூட்டின. பிறகு நடந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைப் பற்றிய விவாதம்.

கடைசிநாள் பேராசிரியர் ஞானசம்பந்தன், வில்லிபாரதம் பற்றி ஒரு சொற்பொழிவை வழங்கினார். ஒரு பாடலை எடுத்துக்கொண்டு அதை திறனாய்வு செய்யும் இந்தக் கூட்டத்தின் முறைக்கு நேரெதிராக பல கருத்துக்களை ஒன்றுடோன்று இணைத்து நகைச்சுவை கலந்து சரவெடி போல் பேசும் முறை அவருடையது. இருப்பினும் இதுவும் மிகவும் ரசிக்கும்படிதான் இருந்தது.

முதல்நாள் கூட்டத்தின் ஆரம்பத்தில் மைக் வேலை செய்ய மறுத்தது. அதை சரிசெய்ய முயற்சியும் நடந்தது. ஆனால் அது சரியாகிவிடக்கூடாதே என்று நினைத்தபடி இருந்தேன். அதன் படியே கடைசிவரை அது ஒத்துழைத்தது. விவாதங்களையும் வாசிப்புகளையும் நேரடிக்குரலில் கேட்பது ஒரு privileged experience. உரையாடல்களுக்கு இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை அது தந்தது. மாலையில் நடந்த இசை நிகழ்ச்சிகளும் அப்படியே. நேரடியாக பாடும் குரலை மைக் இல்லாமல் நேரடியாகப் கேட்பது ஒரு வரம். இளையராஜாவே பாடினாலும், நமது அனுபவம் நமது ஸ்பீக்கரின் தரத்தை பொருத்ததுதான் இல்லையா, மனித குரலை விட சிறப்பான ஸ்பீக்கர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றுதான் நான் நம்புகிறேன். அந்தக் குளிர் இரவில் நெருப்பு வெளிச்சத்தில் சில உன்னத குரல்கள் தரும் உணர்வில் இருந்த நேரத்துக்கு நன்றி சொல்லி முடியாது.


இந்த முறை சென்ற கூட்டங்களைவிட அதிகமான வாசகர்கள் பங்கேற்றனர். கூட்டம் மிக நேர்த்தியாக நடந்தது. அருமையான சூழல், உணவு மற்றும் மிக நட்புணர்வோடு நண்பர்கள் என மூன்று நாட்களும் மிக அருமையாக நடந்தன. ஈரோட்டில் நடந்த அறம் வெளியீட்டு விழாவில் விஜயராகவன் சாரை முதலில் சந்தித்தேன். ஒவ்வொரு முறையும் அவர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு வெற்றிகரமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னாலும் அவரது நல்லெண்ணம் கொண்ட உழைப்பு இருக்கிறது. ஆரம்பம் முதல் நிறைவுவரை அவரே தொகுத்து வழங்கினார், கூடவே ஒரு சிறப்பான திறனாய்வையும். இம்முறை நண்பர்  சேலம் பிரசாத் எடுத்துக்கொண்ட பொறுப்புகளும் குறிப்பிடத்தக்கது.

விஷ்ணுபுரம் குழுவின் ஒரு முக்கிய அம்சம் அதன்  diversity. புதிய நட்புகளும் உருவாகவும், வெவேறு துறைகளிலிருந்து வந்திருந்த பலரின் கருத்துகளை பகிர்ந்துகொள்ளவும் இடைவெளிகளும் நடைகளும் மிக உதவியாக இருந்தன.

வாழ்க்கையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தாலும், இந்த வாய்ப்பை தவற விடக்கூடாது என கலந்துகொண்டேன். இது நல்ல முடிவாக அமைந்துவிட்டது.  எல்லா முறையிலும் புத்துணர்ச்சியளித்த நாட்கள் இவை.

சில படைப்புகளைப் பற்றி நான் எடுத்த குறிப்புகளையும், விவாத்தில் நான் எடுத்துக்கொண்ட அவதானிப்புகளையும் சேர்த்து குறிப்புகளாக எழுதவேண்டும் என்ற திட்டம், படிக்கவேண்டிய சில புத்தகங்கள், தொடரவேண்டிய சில விவாதங்கள் என இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவை உற்சாகமாக உருவாகிவந்தவண்ணம் இருக்கின்றன.

14 ஜூன் 2013

குப்பைவண்டி காக்கை

ஒரு  நெரிசலான சாலையில் வாகனங்கள் பிதுங்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தன, கடுமையான போக்குவரத்து நெரிசல். அதில் நிரம்பிவழியும் குப்பைகளோடு ஊர்ந்துகொண்டிருந்தது ஒரு குப்பைலாரி. அந்த லாரியின் மீதுதான் அந்த காக்கை அமர்ந்திருந்தது.
தாளமுடியாத  சோகத்தில் இருந்தது  காக்கை. பக்கத்திலிருக்கும் காக்கை தனது சோகம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறதே என்ற கோபம் வேறு.
யாரும் கண்டுகொள்ளாததால், தனது சோகங்களைப் பற்றி தானே பேச ஆரம்பித்தது.
"இவ்ளோ பெரிய ஊருக்கு இந்த ரோடு எப்படி தாங்கும். இதைக்கூட ப்ளான் பண்ணாம இருக்காங்களே, சரி அப்படியே  ரோடு இருந்தாலும் எல்லோரும் இந்த நேரம் தான் வரணுமா.. சரி அப்படியே வந்தாலும் இப்படித் தான் ட்ராபிக் சென்ஸ் இல்லாம ஓட்றதா.. இதையெல்லாம் மாத்துறது இருக்கட்டும், கேக்கக் கூட யாருமே இல்லையே.. இந்த வேகத்துல இந்த வண்டி போனா இன்னும் எவ்ளோ நேரம் போகும்..."
பொறுமையாகக் கேட்டது பக்கத்திலிருந்த காக்கை. லாரியின் ஓட்டுனர் இருக்கையில் வியர்வை வெள்ளத்தில் அமர்ந்திருந்த மனிதனையும் பார்த்தது அது. பிறகு புலம்பிய காக்கையைப் பார்த்து,
"நீ சொல்லுறதெல்லாம் சரியான பிரச்சனையா இருக்கலாம், ஆனா இதுல உன்னோட பிரச்னை என்ன?" என்று சொல்லியபடி பறந்து சென்றது.
கதையின் நீதி:
சரியான பிரச்சனையெல்லாம் நம்முடைய பிரச்சனையாக இருக்கவேண்டியது இல்லை.

24 மே 2013

B2 - 54, Coach 6

CNF B2 - 54 Coach 6

எழுந்து மெதுவாக நடக்கத் தொடங்கினேன்

பேரோலத்துடன் ரயில் வந்துகொண்டிருந்தது

நடந்துகொண்டிருந்த என்னை ரயிலெஞ்சின் கடந்து சென்றது

நானும் B2-வும் ஒரேநேரத்தில்   அங்கே நின்றோம்

08 ஏப்ரல் 2013

பாக்கிஸ்தான் இல்லாத IPL, ரசிகர்கள் கோபம் - கிரிக்கெட் பரபரப்பு


கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத மேட்ச்  என்று ஒன்று இருக்கும். அது இந்தியா ஆஸ்திரேலியாவுடனோ அல்லது பாக்கிஸ்தானுடனோ ஜெயித்த விளையாட்டாக இருக்க வாய்ப்பு அதிகம். அதிலும் பாகிஸ்த்தான் என்றால் இன்னும் சிறப்பு. அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் கிரிக்கெட் தொடர்பு அப்படிப்பட்டது.

என்னதான் பிரச்சனை இருந்தாலும் அந்த நாட்டுடன் நமக்கு இருக்கும் தொடர்பை அவ்வளவு எளிதாக மறந்து விடமுடியாது. பாக்கிஸ்தான் அரசுகளும் இந்தியாவை எப்பொதுமே மறப்பதில்லை. அப்படியே நாம் மறந்தாலும் குண்டுவெடிப்பு, கடத்தல் என்று ஏதாவது செய்து நம் கவனத்தை ஈர்க்கத்தவறுவதும் இல்லை.

இப்படியிருக்கையில் கிரிக்கெட்டின் உலகத்திருவிழாவாக நடக்கும் ஐ.பி.எல்- பாக்கிஸ்தானை மட்டும் மறந்துவிட்டு நடப்பது என்ன நியாயம் என்று தெரியவில்லை. அரசியல்ரீதியாக நமக்கு அந்த நாட்டோடு பிரச்சனை இருப்பது உண்மைதான். ஆனால் அதை விளையாட்டோடு கலப்பது விளையாட்டு அல்ல.

தமிழர்களைப் பார்த்து இந்தியர்கள் அனைவரும் பாடம் கற்க வேண்டிய நேரம் இது. நமக்கு இலங்யையுடன் எந்த வருத்தம் இருந்தாலும் அதை போராட்டத்தோடு விட்டுவிட்டு ஐ.பி.இல் ஜோதியில் கலந்து நமது விளையாட்டு உணர்வை எப்படிக்காட்டுகிறோம் என்பதை அனைவரும் காணவேண்டும்.

ஆனால் இலங்கை அணியினர் சென்னையில் விளையாடவில்லையே என சிலர் வருந்தலாம். ஆனால் இந்த அவமானத்தைத் துடைக்க,  இலங்கையின் சங்கக்காரா தலைவராக இருக்கும் “உதயசூரியன்” அணியும், அதனுடன் நமது ஸ்ரீகாந்த்தும் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.  இந்த போட்டிகளை அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள் என்பதையும் மறுக்கமுடியாது.

தயவு செய்து நம்மைபோல மற்ற இந்தியர்களும் விளையாட்டை விளையாட்டாக நினைத்து பாக்கிஸ்தான் அணியையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே கிரிக்கெட்டை உயிராக நினைக்கும் ரசிகர்களின் குரலாகும். வேண்டுமானால் அந்த அணியினர் காஷ்மீரில் நடக்கும் போட்டிகளில் மட்டும் கலந்துகொள்ள தடை விதித்துக்கொள்ளலாம் என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியா, பாக்கிஸ்தானை இப்படி தனிமைப் படுத்திவந்தால், அது சீனாவுடன் கிரிக்கெட் விளையாடப்போய்விடும் வாய்ப்பும் இருப்பதாக சில ராஜதந்திர நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக சீனாவில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படுவதாகவும் மலிவு விலை பேட் மற்றும் பந்துகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

24 மார்ச் 2013

தமிழ் மனத்தின் கதறல் - பாலாவின் பரதேசி

ஹாலிவுட்டில் முன்னரே வெளியாகியிருந்தாலும் இயக்குனர் டராண்டினோவின் “ஜாங்கோ அன்செயிண்ட்” (django unchained) இந்த இந்த வாரம் தான் இந்தியாவில் வெளியாகிறது.  பாலாவின் “பரதேசி” உடன் இந்தப் படம் வெளியாவது ஒரு ஆச்சர்யமான coincidence தான்.

வரலாற்றில் இருப்பது பெருமிதம் மட்டும் அல்ல. அதில் இருப்பது  நமது முன்னோர்களின் கண்ணீரும் தான் என்பதை புரிந்துகொண்டு, மற்றவர்கள் பேசக்கூட தயங்கும் வரலாற்றின் சில கருப்பு பக்கங்களைப் புரட்டுபவை  என்பதே இந்த இரு படங்களுக்கு இடையே உள்ள பொது அம்சம்.

அமெரிகாவின் கருப்பு சரித்திரமான அடிமைமுறைபற்றி அதிரடியாகப் பேசும் படம் “ஜாங்கோ அன்செயிண்ட்”.   இதில் ஒரு முக்கிய பாத்திரம் வில்லன் வீட்டில் தலைமை அடிமையாக இருக்கும் கருப்பின ஸ்டீபன்.  சாமுவேல் ஜாக்சன் மிக சிறப்பாக நடித்திருப்பார்.   அடிமைத்தனத்தின் முழு வடிவமான அவர் அடிமை முறைக்கு எதிரான ஒரு சிறிய செயலைக்கூட பொருத்துக்கொள்ள முடியாதவராக இருப்பார்.



கதையின் படி  கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரொ, வெள்ளைக்கார வில்லனின் விருந்தாளியாக தங்க வருவார். வெள்ளையர்களுக்கும் அதில் சங்கடம் இருந்தாலும், வியாபார நிமித்தமாக அதை சகித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த ஸ்டீபனால் அதை சகித்துக்கொள்ளவே முடியாது.  வெள்ளையர்களை விட அவரது பதட்டம் மிக அதிகமாக இருக்கும். ஒரு கருப்பினத்தைச் சேர்ந்தவன் எப்படி விருந்தாளியாக இருக்க முடியும் என தனது வெள்ளைக்கார முதலாளியிடன் சண்டையிடும் அளவுக்குச் செல்வார். 

பரதேசி படத்தின் மத மாற்ற காட்சிகள் பற்றி பொங்குபவர்களைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. இவர்களது பதட்டம் ஆசர்யமளிக்கிறது.  மற்றவர்கள் சொல்ல முடியாத வரலாற்றைச் சொல்ல ஒருவருக்கு தைரியம் இருக்கும்போது அதைப் பார்ப்பதற்கு எதற்கு நமக்கு இந்தப் பதட்டம்.

கொஞ்சம் நகைச்சுவையுடன் வரும் அந்தப்பகுதிதான் உண்மையில் மிக சோகமான செய்தியைத் தருகிறது.  தமிழ் சினிமாவில் குத்துப்பாட்டு என்று இருக்கும் இலக்கணத்தையே மாற்றியெழுதியிருக்கிறார் பாலா. அந்தப் பாடலில் காட்டப்படும் மக்களின் நிலையும் பாடலின் முடிவாக நீளும் சோக இசையும் மனத்தை உலுக்குபவை. தன் தாய் நோயால் இறக்கும் தருவாயில் ஏதும் புரியாமல் பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தையின் கையில் இருப்பது ஒரு புதிய பொம்மை.



”ஒரு வக்கீலாக இருந்த்துகொண்டு காந்தி ஏன் சட்டத்தை மீறுகிறார்?” என ஆச்சர்யப்படுவார் ஒரு வெள்ளையர். ஆளும் வர்க்கத்தின் தரப்பை இந்த காட்சியே சொல்லிவிடுகிறது.  

கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து செல்லும் ஆரம்பக்காட்சியிலேயே நாம் அந்தக்கால கட்டத்துக்குச் சென்று விடுகிறோம். நமது சந்தோஷம், துக்கம், பேராசை, ஏமாளித்தனம், கோழைத்தனம், சோகம் என அனைத்தையும் அனுபவிக்கிறோம். 

அந்த எளிய மக்களும், வறண்ட பூமியும், அந்த பஞ்ச காலத்திலும் மக்களின் இயல்பான குறும்பும் கொண்டாட்டமும் கலந்த வாழ்க்கையும் நம் கண்முன் விரிகின்றன.

இந்த மக்கள் கூட்டம் ஒரு கங்காணியிடம் ஏமாந்து, தன் கூட்டத்தில் ஒருவன் சாகும் தருவாயில்கூட குரலெழுப்பமுடியாமல் செல்வது தான் நமது நாடு அடிமைப்பட்டிருந்ததின் வரலாறு.

எவ்வளவு கொடுமைகள் நடந்தாலும், நல்லது எதுவும்  நடக்காது என்று தெரிந்திருந்தாலும் கணக்கு தீர்க்கும் அந்த நாளை ஒவ்வொரு வருடமும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் மக்கள் உணர்த்துவது எதை?

பேரனையும் அவனது காதலியையும் அவர்களது குழந்தயையும் கூட பாதுகாக்கும் அந்தபாட்டி, அந்த அடிமை வாழ்விலும்கூட தனது குழந்தையுடன் தன்மானத்துடன் வாழும் பெண், தனது மனைவி பாதிக்கப்பட்டாலும் அவளை விரும்பும் கணவன் என மனித மனத்தின் உயரங்களையும் பார்க்கிறோம்.

மனத்தைக் கனக்கச்செய்யும் இந்தப் படத்தை ஏன் பார்க்கவேண்டும் என நான் கூட யோசித்ததுண்டு.  ஆனால் உண்மையில் இந்தப்படம் பார்த்தபின் தான் மன பாரம் குறைந்ததுபோல இருக்கிறது. கூட்டம் கூட்டமாக பக்கத்து நாட்டில் தமிழர்கள் கொல்லப்படும்போதும் ஏதும் செய்யமுடியாமல், அதைப் பற்றி பேசக்கூட முடியமல் இருந்த நமக்கும், இந்த படத்தின் பத்திரங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

கடைசியில் பரதேசியின் அந்தக்கதறல், நமது கதறல்.  நமக்காக பேச, நமக்காக வருத்தப்பட, நமக்காக கதற வந்தவன் இந்தப் பரதேசி.

11 மார்ச் 2013

அழித்தலில் ஆரம்பம்

தன்னைப் பார்க்க பல தர்க்கக் கேள்விகளுடன் வந்திருந்த அந்த ஞான யோகிக்கு சிவன் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்  

அந்த மந்திரத்தை அங்கே சென்றுகொண்டிருந்த ஒரு புழுவை நோக்கி சொல்லச் சொன்னார். யோகியும் சிவன் சொல்லியபடி செய்ய அந்த புழு அங்கேயே செத்துவிழுந்தது. அதிர்ந்தார்  யோகி.   

கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிய சிவன், மீண்டும் அந்த மந்திரத்தை அங்கே பறந்துகொண்டிருந்த ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து சொல்லச்சொன்னார். ஏற்க்கனவே புழுவுக்கு அந்த மந்திரத்தால் ஏற்பட்ட நிலையைப் பார்த்திருந்த யோகி கொஞ்சம் தயங்கினார் இருந்தாலும் சிவனின்  சொற்படி அந்த மந்திரத்தை  வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து சொல்ல அதுவும் உடனடியாக இறந்தது.  

யோகி கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.  

"சிவனே என்ன இது"  என கதறினார்.  

சிரித்த சிவன் அடுத்து பார்த்தது அங்கு வந்த ஒரு மான்குட்டியை.  

"யோகியே அந்த மான்குட்டியை நோக்கி மந்திரத்தை சொல்லுக" என்றார்.

பலமுறை மறுத்த யோகி கடைசியில் சிவனின் சொல்லை மீறமுடியாமல் அந்த மானைப் பார்த்தும் மந்திரத்தைச் சொல்ல அதுவும் இறந்தது. ஒன்றும் புரியாமல் யோகி தவித்துக்கொண்டிருக்க ஒரு பெரியவர் கைக்குழந்தையுடன் சிவனிடம் ஆசிவாங்க வந்தார்.  

இப்போது சிவன் மந்திரத்தை சொல்லச் சொன்னது அந்த குழந்தையை நோக்கி. யோகியால் அதற்குமேல் முடியவில்லை. இதை என்னால் செய்ய முடியாது. இன்னொரு அழிவை என்னால் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார்.  

அப்போது அந்த அதிசயம் நடந்தது. அந்த குழந்தை யோகியை நோக்கி பேச ஆரம்பித்தது.  

"தயவு செய்து அந்த மந்திரத்தை சொல்லுங்கள்" என்றது.  

"புழுவாக இருந்த நான், வண்ணத்துப்பூச்சியானேன், பின்னர் அதிலிருந்து மான்குட்டியானேன், அதிலிருந்து மனிதனாகிவிட்டேன். இன்னொரு முறை நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நான் மனிதனிலிருந்து புனிதனாகிவிடுவேன்" என்றது அந்தக் குழந்தை.

யோகிக்கு அப்போதுதான் தான் செய்தது புரிந்தது. அழிவு என்று நினைப்பதெல்லாம் அழிவல்ல, அது இன்னும் மேலான ஒன்று பிறப்பதற்கான வழியாகவும் இருக்கலாம் என்று.  

----  

நேற்றைய மகா சிவராத்திரி இரவில் ஜக்கி வாசுதேவ் சொன்ன இந்தக் கதை நாம் நவீன  மேலாண்மைத் துறையில் அன்றாடம் பேசும் பல "comfort zone" போன்ற பல   கருத்துகளை எளிதாகத் தொட்டுச் செல்கிறது. யோசிப்பவர்களுக்கு இன்னும் அதிக அர்த்தங்களைக் கொடுக்கிறது இந்தக் கதை.  

சிவன் அழிப்பவன் தான். தான் என்று நாம் நினைக்கும் அனைத்தையும் ஒவ்வொரு கணமும் அழித்துக்கொண்டேயிருப்பவன். அழிவை நினைத்து அஞ்சாதவனுக்கு, தன்னுள் சிவன் இருப்பதை உணர்ந்தவனுக்கு நேற்றைய சுமையை சுமந்துசெல்லும் கட்டாயம் இல்லை. அவன் நித்தமும் புது மனிதன்.

04 பிப்ரவரி 2013

காலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற


எறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.

வனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்கும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.

மற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்

”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.
காலில் அட்டை 

இதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும்.  மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான்  செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.

ஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.

--

மென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.

எப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது? காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.

சரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு  என்பதை எப்படிப்புரியவைப்பது.

என்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.

அட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.

சரி, அது எறும்புதானா? வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.

02 பிப்ரவரி 2013

கடல் - அலைகளைக்கடந்து ஆழம்


”எனக்கு நிம்மதியா இருக்குறதை விட உஷாரா இருக்குறதுதான் பிடிக்கும்” 


”சாத்தான் யேசுவோட அண்ணன். அப்படின்னா அவனுக்கு யேசுவோட நிறைய தெரியும். என்னோட சேத்து இங்க இருக்குற 12 பேரு சைத்தானுக்க ஆளுங்க”

என்று பேசும் பெர்க்மான்ஸ்(அர்ஜுன்) தான் இந்த படத்தின் அச்சு. தான் தான் மிகுந்த அறிவாளி, சைத்தானின் பிரதி என நினைக்கும் அவரை, தான் எதிரியாக நினைக்கும் அனைவரையும் அவர்கள் யோசிக்க இடம் கொடுக்காமல் தனது திறமையால் தோற்கடித்துக்கொண்டே வரும் அவரை, தன் அறிவால் யோசிக்க கூட முடியாத ஒரு சிறு பெண், எளிய அன்பினால் வெற்றி கொள்வதே இந்தக் கடல்.

--


அர்ஜுனின் பாத்திரம் எந்த ஒரு ஹீரோவும் விரும்பும் ஒரு வில்லன் பாத்திரம், பெர்க்மான்ஸ். ஃபாதரான அரவிந்த் சாமியுடனான ஆரம்ப வார்த்தைப் போர்கள் மிகக் கூர்மையானவை. மிகத் திறமையான அவர் ஒரே  சறுக்கலினால்  புகழிலிருந்து வீழும் ஒரு Fallen Angel.  ஒரு முறை தோற்கும் பெர்க்மான்ஸ், அதன்பின் ஒரு முழு வில்லனாக மாறுவது அதிரடி.

அர்ஜுனைப் (பெர்க்மான்ஸ்) பற்றி தெரிந்திருந்தாலும், தனது நல்லியல்பால் மீண்டும் மீண்டும் ஏமாறும் ஃபாதர் அரவிந்த்சாமியும் சரியான எதிர் பாத்திரம்.

ஃபாதர் வளர்க்கும் கைவிடப்பட்ட பையனாக ஹீரோ தாமஸ், கெளதம்

ஃபாதரால் பெர்க்மான்ஸ் திருந்த ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அது நடக்கவில்லை. ஃபாதர் ஜெயிலுக்குப்போனபின், அதற்குக்காரணமான அனைவரையும் அடித்து நொறுக்கும் தாமசால் பெர்க்மான்ஸ்க்கு ஒரு பிரச்சனை வர வாய்ப்பு வருகிறது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.  ஹீரோ வில்லனை பழிவாங்குவான் என்ற எதிர்பார்ப்பைத் தகர்த்து, அவனும் விரும்பி பெர்க்மான்ஸ் உடன் சேரும்போது, சாத்தானின் முழு வெற்றி. அடுத்தது என்ன என்ற ஒரு திகைப்பு உருவாகிறது.

ஃபாதரின் திறமையாலும் வெல்ல முடியாத, தாமசின் சக்தியாலும் வெல்ல முடியாத பெர்க்மான்ஸ் யாரால் தான் வெல்லப் பட முடியும் என்ற கேள்விதான் இந்தப் படத்தின் முடிச்சு.


அறிவு வளர்ச்சி சிறு வயதிலேயே நிற்க, அந்தக் குறையை, தனது அன்பாலும், மருத்துவ சேவையாலும் இட்டு நிரப்பும் பெண்ணாக பியா என்ற பீட்ரைஸ்(துளசி).

நான் ஒரு பாவி என்று கதறும் தாமசிடம், பியா கொஞ்சமும் புன்னகை குறையாமல், “நான் யார்கிட்டையும் சொல்ல மாட்டேன், நீ இனிமே அப்படி பண்ணாத சரியா” என்று கூறுவதும், அந்த பரிபூரண மன்னிப்பை தாங்க முடியாமல் தாமஸ் கதறுவதும் கவிதை.

பயத்தைக் காட்டியும், அதிகாரத்தின் மீது ஆசையைக் காட்டியும், தனது அப்பாவைக் கொல்லும்போது கூட தாமசை எதிர்த்துப்பேச முடியாமல் தாமசைக் கட்டிப்போட்டிருக்கும் பெர்க்மான்ஸ், பியாவின் எளிய அன்புக்கு முன்னால் பதறுவது, அவள் தாமசை மீட்டுச் செல்வதைப் பார்த்து கையறு நிலையடைவது பின்னர் படு தோல்வியடைவது படத்தின் உச்சம்.

---

கடலோர மக்களின் மொழியை மிக இயல்பாக கேட்க முடிகிறது. சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், அந்த சூழ்நிலை மூலம் அர்த்தம் புரிந்துகொள்ள முடிகிறது. இது படத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

துணை நடிகர்களின் பங்களிப்பு அபாரம். ஃபாதருக்கு உதவியாக வருபவர்(யேசுவையே நேருல பார்த்தவரு), மீன் விற்கும் பெண் என பலர்.

பல பாத்திரங்கள் சில நிமிடங்களே வந்தாலும், அவர்களுக்குப் பின்னால் ஒரு கதை இருக்கும் சாத்தியங்களை தொட்டுக் காட்டிச் செல்கின்றன.  அர்ஜுனின் காதலியாக வருபவர் போல. பார்வையாளர்கள் தங்கள் கற்பனையால் இட்டு நிரப்பிக்கொள்ள.

முக்கிய நடிகர்களின் தேர்வு இந்தப்படத்தின் மிகப்பெரிய ஏமாற்றம். துளசி, கெளதம் இருவருமே இந்தப் படத்தின் பிரச்சனைகள். இவர்களிருவரும் வரும் காட்சிகள் பல ஸ்கூல் டிராமா மாதிரி இருக்கிறது. அதனாலேயெ பல முக்கிய காட்சிகள்  போதுமான இம்பாக்ட் கொடுக்க முடியவில்லை. அரவிந்த் சாமியும் பரவாயில்லை ரகம் தான். மணிரத்னத்துக்கா நடிகர்கள் பஞ்சம். அந்தக்கால ரஜினி-கமல் நடிக்க வேண்டிய கதை இது.

எப்படியும் இன்னும் ஒரு அரைமணிநேர கதை கத்தரிக்கு பலியாகிவிட்டது என எண்ணத் தொன்றுகிறது. பின்பாதி, தவ்வி தவ்விச் செல்கிறது. பல இடங்களில் தொடர்ச்சி இல்லை. இந்தக் கத்திரிரிக்குக் காரணம், நாயகியின் ‘திறமையான’ நடிப்பாகத் தான் இருக்கும் என்பது எனது எண்ணம்.

---

சில குறைகளை மீறியும் படத்தின் பேசுதளத்தாலும், ஆழமான கதையாலும் இது ஒரு முக்கியமான படம்.

அலைகளைக்கடந்து ஆழம் அறிபவர்களுக்கானது இந்தக் கடல்.

14 ஜனவரி 2013

புத்தகக் கண்காட்சி - ஓர் எச்சரிக்கை மற்றும் சில தகவல்கள்

புத்தகக்கண்காட்சிக்கு உடற்பயிற்சிக்கல்லூரி பொருத்தமான இடம்தான். புத்தகக் கண்காட்சிக்கு போவதற்க்கு முன்னால் கொஞ்சம் நாள் நடைப்பயிற்சி செய்துவிட்டு போவது உத்தமம். அவ்வளவு பெரிய அரங்கை சுற்றி வருவதற்கு உங்கள் கால்களில் கொஞ்சம் தெம்பு அவசியம். காலில் தெம்பு இல்லாமல் உட்கார இடம்தேடி பொறியில் சிக்கியவர்கள் பலர். அதில் ஒரு மிகப்பெரிய சதியும் இருக்கிறது. நான் சென்றது போன சனிக்கிழமை. இரண்டு மணிநேரம் சுற்றி, களைத்த கால்களுடனும், வாங்கிய புத்தக சுமையுடனும்(அப்படித்தான் சொல்லணும்) கொஞ்சம் இளைப்பார இடம் தேடினால் எங்கும் இடம் இல்லை. சில இடங்களில் ஸ்டாலில் உள்ளவர்களே இருக்கை இல்லாமல் நாள் முழுவதும் நிற்பதையும் கவனிக்க முடிந்தது.

இன்னிலையில் பாலைவனச் சோலை போல கிடைத்தன வசதியான இருக்கைகைகள். உட்கார்ந்த அப்புறம் தான் கவனித்தேன் அது ஒரு கவி அரங்கு என்று. பீதியுடன் கவனித்தால் அதில் நடுவர் ‘வாலிபக்கவிஞர்’ வாலி. புத்தகக் கண்காட்சிக்கு செல்பவர்களுக்கு எனது எச்சரிக்கை இதுதான். ஒன்று உட்காராமலே சுற்றும் அளவுக்கு காலில் தெம்புடன் செல்லுங்கள், அல்லது வாலிபக் கவிஞர் போன்றவர்களின் அரங்குகளை தாங்கும் அளவுக்கு மனத் தெம்புடன்.


  • புதிய இடம் வசதியாகத் தான் இருக்கிறது. வாகன நிறுத்ததிலிருந்து நடக்க வேண்டிய தூரம் தான் கொஞ்சம் அதிகம். இருந்தாலும் நடக்கும் தூரம் தெரியாமலிருக்க, போகும் வழிக்கு சுண்டல் வாங்கி சாப்பிட்டபடியே செல்லலாம். அப்படி ஒரு வசதி செய்யப்படிருக்கிறது. இந்த சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.


  • ஜெயமோகன் வழிகாட்டுதலில், கடலூர் சீனுவை பதிப்பாளராகக் கொண்டு உதித்துள்ள சொல்புதிது பதிப்பகம் ஸ்டால் 504-இல் எழுத்துப் பதிப்பகத்தில் இயங்கி வருகிறது. தீவிர இலக்கிய வாசகரான சீனு, வாசகர்களுக்கு பொதுவாக புத்தகங்கள் பற்றி தகவல்கள் சொல்வதையும் கவனித்தேன். 


  • தமிழினி பதிப்பகத்தில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் இருந்தார். புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு எழுத்தாளர்களின் வருகை இன்னும் மகிழ்சி தரும் விஷயம். இந்த வருகைகள்தான் இந்த கண்காட்சியை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகின்றன.

  • மதி நிலையத்தில் இருந்த ‘நாலாயிர திவ்யப்ப்ரபந்தம்’ இருநூறு ரூபாய்தான். பதம் பிரித்து கொடுக்கப்படுள்ள பாடல்கள், விளக்கம் இல்லாமலே புரியும்படி உள்ளன. அப்படியே புரியாத சில வார்த்தைகள் இருந்தாலும் இருக்கவே இருக்கிறது கூகிள்.

  • காலச்சுவடு பதிப்பகத்தில் புதுமைப்பித்தன் கதைகளை வாங்கச் சென்றேன். அது நானூற்று ஐம்பது ரூபாய். அவர்கள் அவரது முழுத்தொகுப்பே தொள்ளாயிரம் ரூபாய் தான் என்று ஒரு டீல் தந்தார்கள். சிறப்பு தான்.

  • புத்தகக் கண்காட்சியின் இன்னொரு அம்சம் அங்கே எதிர்பாரமல் சந்திக்கும் நண்பர்கள். அப்படி சிலரை சந்திக்க முடிந்த்தது.

  • அதெல்லாம் சரி, புத்தகக் கண்காட்சிக்கு உள்ளே எதற்கு அந்த அப்பளக் கடை என்று தெரியவில்லை. அப்பளமும், வத்தல்களும் பரபரப்பாக விற்பனை ஆகிறது. இது எதாவது இலக்கிய குறியீடொ என்னவோ தெரியவில்லை. 

இன்னொரு முறையாவது செல்லவேண்டும். இந்த இருநாட்களாக காலையில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்துவிட்டேன். இன்னொரு கவியரங்கத்தை தாங்க முடியாது என்பதால். புத்தகங்களால் ‘உடனடி’ நல்ல பழக்கம் வாரது என்று யார் சொன்னது.

11 ஜனவரி 2013

சென்னையில் ஜெயமோகன் உரை - விழா படங்கள்


ஒரு ஞாயிறு மாலை. சென்னையில் ஜெயமோகன் உரை என்று அந்த விழாவுக்கு ஆஜரானேன். அது உயிர்மை பதிப்பகம் நடத்திய ஒன்பது புத்தகங்களுக்கான வெளியீட்டு விழா.

இலக்கியம் மற்றும் பதிப்பகத் துறைக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும் உயிர்மை தனது அக்கறையினால் புத்தக வெளியீடு மற்றும் விழாக்கள் என நடத்தி வருவதாக தனது வரவேற்பு உரையில் மனுஷ்யபுத்திரன் கூறினார்.  புத்தகத்தை வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை அறிமுகப்படுத்த விழா எடுத்து, வாசகர்கள் முக்கிய ஆளுமைகளின் பேச்சைக் கேட்க தளம் அமைத்து தரும் அவரின் சேவை பாராட்டத்தக்கது.

மூன்று அமர்வுகளாக நடந்தது அந்த விழா. ஒரு அமர்வுக்கு மூன்று புத்தகங்களாக ஒன்பது புத்தகங்கள் வெளியீடு. முதலில் நடந்த கவிதை புத்தகங்கள் வெளியீட்டுக்குப் பின்னர் நாவல்கள் வெளியீடு நடந்தது. சிவகாமி எழுதிய 'உண்மைக்கு முன்னும் பின்னும்" என்ற நாவல் பற்றி  ஜெயமோகன் அறிமுக உரை வழங்கினார்

புத்தகம் வெளியீடு

ஜெயமோகன் பேச எழுந்ததும் அரங்கில் கொஞ்சம் சலசலப்பு. சட்டென கூட்டம் அதிகரிப்பதை கவனிக்க முடிந்தது. பலர் வெளியே நின்றிருந்தனர் போல.  பலத்த எதிர்பார்ப்பு இடையில் அவரது பேச்சு ஆரம்பித்தது.

அரசு, அது செயல்படும் முறை, அந்த அரசை இயக்கும் உண்மையான விசை, அந்த விசையின் இயல்பு என்று அறிமுகப்படுத்தியவர், இதைப்பற்றி இதுவரை வந்துள்ள முக்கிய படைப்புகளையும் தொட்டுக்காட்டி பேசியபோது, இந்த நாவலின் தளம், இலக்கிய வரிசையில் இதன் இடம் எனத் தெளிவாகத் தெரிந்தது.

பின்னர் இந்த நாவல் எந்த வகையில் கவனிக்கத்தக்கது என்று சுட்டிக்காட்டிய அவர் நாவலின் சில உச்சங்களையும் தொட்டுக்காட்டினார்.  அது பார்வையாளர்களுக்கு நாவலைப்பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை அளித்ததுடன், இந்த துறையில் இருக்கும் பல படைப்புகளைப் பற்றிய ஒரு திறப்பாகவும் அமைந்தது.

முழு உரை இங்கே.. மாபெரும் இயந்திரம்

----

ஆறு மணிக்கு விழா என நினைத்து ஐந்தரை மணிக்கெல்லாம் நான் அரங்குக்கு சென்றுவிட்டேன், ஆனால் அங்கு இருந்தது ஓரிருவர் மட்டுமே. ஞாயிறு மாலை சென்னையில் இலக்கியத்துக்கு அவ்வளவுதான் கூட்டம் வரும் போல என எண்ணினேன். ஆனால்.  ஆனால் கூட்டம் தொடங்கியபோது நிறைந்த அரங்கு, ஜெயமோகன் பேச்சின்போது உச்சகட்ட எண்ணிகையை அடைந்தது. அவர் பேசிய அரைமணிநேரமும் அந்த அரங்கின் கவனம் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருந்தது.

பழ.நெடுமாறன், இயக்குனர்கள்   ஞானராஜசேகரன், லிங்குசாமி, தங்கர் பச்சான் என பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

இயக்குனர் லிங்குசாமி, இப்போதுள்ள வேளைகளின் நெருக்கடியினால் தான் படிக்கும் நேரம் குறைந்து வருவதாக வருத்தப்பட்டார், எனினும் சமீபத்தில் தான் படித்த ஜெயமோகனின் "அறம்"  சிறுகதைத் தொகுப்பின் சில கதைகளை சொல்லி அது தனக்குத் தந்த  அனுபவத்தை பரவசத்துடன் பகிந்துகொண்டார்.



இந்தக்கூட்டமும், கவனிப்பும் புத்தக கண்காட்சி தொடங்கும் நேரத்தில் ஒரு முக்கியமான தொடக்கமாக அமைந்தது, அரசு மற்றும் வேறு ஆதரவுகள் இல்லாவிட்டாலும், தரமான வாசகர்கள் ஆதரவு இருந்தால் இலக்கியம் தானாக வளரும் என்ற நம்பிக்கையுடன்.

சென்னை - 6-1-2013

03 ஜனவரி 2013

நடுவுல கொஞ்சம் நண்பர்களைக் காணோம்

ஒவ்வொரு வகையான நண்பர்களுக்கும் ஒவ்வொரு பாடி லாங்குவேஜ் உண்டு. தெரு நண்பர்கள், பள்ளி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், நண்பர்களில் அலுவலக நண்பர்கள் என. இவற்றை அப்படியே திரையில் பார்க்கும்போது பரவசமாகத் தான் இருக்கிறது.  இதில் எல்லா வகையிலுமே நெருக்கமான நெருக்கடியில் தோள்கொடுக்கும் நண்பர்கள் அமைவதுண்டு.

நண்பனின், அல்லது ஒரு நண்பனின் அலுவக நண்பனின் வீட்டில் படுத்துக்கொண்டு வெட்டிபேச்சு  பேசுவது, 2 வீலரில் சுற்றுவது, விளையாடுவது, சட்டென வரும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளவது என இந்தப் படத்தில் பார்த்தது என்னையும் எனது சில நண்பர்களையும். யப்பா.. பேய் மாதிரி எடுத்திருக்காங்க இந்தப்படம்

இன்று இரவு தூங்கமுடியாது என நினைக்கிறேன். வீட்டிலிருந்து படித்த காலத்தில் கிடைத்த  பள்ளிக்கூட நண்பர்கள் ஒருவகை என்றால், கல்லூரி காலத்தில் கூட தங்கிப்  படித்த நண்பர்கள் இன்னொருவகை. எனது வாழ்க்கையில் நடந்த எல்லா முக்கிய நல்ல விஷயங்களின் பின்னாலும் நல்ல நண்பர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவ்வளவு நினைவுகளையும் இனிமையாக கிளறுகிறது இந்தப்படம்.

நண்பர்களின் உண்மையான மதிப்பு, அவர்கள் செய்திருக்கக்கூடிய ஒரு செயலை மற்றவர்கள் செய்யும்போது தெரிந்துவிடுகிறது.

" நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். எனது முக்கியமான, இப்போது காணாமல் போந  பல நண்பர்களை மீண்டும் தொடர்புகொள்ள வைத்ததற்கு.