Unordered List

10 டிசம்பர் 2011

போராளி - கலகலப்பு, கம்பீரம்

நாம் செய்ய நினைப்பதை திரையில் செய்பவன் தான் நமக்கு பிடித்த நாயகன். அப்படி நம்மைக் கவர்ந்துவிடுகிறான் இந்தப் போராளி.

ரசிகர்களுக்குப் பிடிக்கவேண்டுமே என யோசித்து வசனம் வைப்பவர்கள் பலர். ஆனால் பேசுவதெல்லாம் ரசிகர்களுக்குப் பிடிக்கும்படி அமைவது சிலருக்குத் தான். சசிகுமாருக்கு இந்தப் படத்திலும் அப்படியொரு வரவேற்பு கிடைகிறது.

படத்தின் முக்கிய பலம் வசனங்கள், முக்கியமாக சசி பேசும் வசனங்கள். சில வசனங்கள் நானே எப்போதோ பேசியது போல இருந்தது. பல வசனங்கள், நாம் பேச நினைப்பதை அவர் பேசுவது போல இருந்தது. அரங்கத்தில் கிடைக்கும் கைதட்டல்களைப் பார்க்கும்பொழுது எல்லோருக்கும் இது பிடிகிறது எனது தெரிகிறது


போராளி என்ற பெயரையும், விளம்பரங்களில் சசிகுமாரின் டெர்ரர் பார்வையையும் பார்த்து கொஞ்சம் பயந்துகொண்டுதான் போகவேண்டியிருந்தது, ஆனால் படத்தில் கலகலப்புக்குக் கொஞ்சமும் பஞ்சம் இல்லை. இடைவேளைவரை சிரிப்பிலும் கைதள்ளளிலும் அரங்கம் அதிர்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் ரணகளங்கள் இருந்தாலும் இடையிடையில் கலகலப்புக்கும் பஞ்சமில்லை.

தீமைக்கும் நன்மை செய்யும் நாயகனாக வரும் சசி, தன்னைச் சுற்றி நடக்கும் சதிகளை ஜஸ்ட் லைக் தட் சமாளிக்கும் பாத்திரத்தில் ஜொலிக்கிறார். தன்னை விரட்டும் மக்களிடமிருந்து மனநல மருத்துவமனைக்கு, அங்கிருந்து சென்னைக்கு எனச் சொல்லும் இடமெல்லாம் தன் நேர்மையான பாசிடிவ் திங்கிங் மூலம் நண்பர்களை சேர்த்தபடி செல்கிறார். அந்த "விதியே போற்றி.." வரும் இடங்கள் அருமை.

உண்மையில் நமக்குத் தீமை செய்பவர்களை தண்டிப்பதில் எந்த பலனும் இல்லை. கீழான எண்ணங்களில் உழலும் அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

வெற்றி என்பது தீமை செய்பவர்களை தண்டிப்பதில் இல்லை. தீமை செய்பவர்களால் நம்மை அணுகமுடியாதபடி நம்மை வலுப்படுத்திக் கொள்வதே உண்மையான வெற்றி. இதை இந்தக் கதை அருமையாகச் செய்கிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் சூரி காமடியில் கலக்குகிறார். அவரது வசன உச்சரிப்பு இயல்பான காமெடியாக அமைந்துவிடுகிறது. கொஞ்சம் நேரமே வரும் வசுந்தராவும் படத்துக்கு மிகப் பெரிய பலம்.

ஒவ்வொரு பாத்திரமும் தங்கள் பங்கை நிறைவாகச் செய்துள்ளனர். பேராசிரியர் ஞானசம்பந்தம் ஒரு சந்தோஷமான ஆச்சர்யம். மிக நிறைவாகச் செய்துள்ளார்.

கேரளா பின்புலத்தில் வரும் மனநல காப்பக காட்சிகள் படத்துக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கின்றன. இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள்.

கலகலப்பான கம்பீரமான ஒரு படம் இந்தப் போராளி!

சசி மற்றும் சமுத்திரக்கனிக்கு ஒரு கேள்வி. அடுத்த கலக்கல் படம் எப்போ?

09 டிசம்பர் 2011

வாளெடுத்து

துன்பம் நேர்கையில் வாளெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?

இதுவும் சரி தான்!

05 டிசம்பர் 2011

ஜெயமோகனின் அறம் வெளியீடு - ஈரோடு -பயண அனுபவம்

"திருக்குறள் ஒரு நீதிநூல் அல்ல. அதிலிருப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, கவிதை" என்றார் ஜெயமோகன். நேரடியாகச் சொல்லப்படும் அறிவுரைகள் ஒரு பரிமாணமுடையது என்றால், கவிவழியாக உணர்த்தப்படும் நீதி பல பரிமாணமுடையது. வாசகன் எண்ணுத்தோறும் அவன்மனத்தில் விரியக்கூடியது.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு"

"இதிலுள்ள ஒரு கவித்துவம் மணற்கேணி. மணற்கேணி என்பதன் முக்கியத்துவம் அறிந்ததுமே வாசகன் மனதில் பல பரிணாமங்கள் விரிவதை உணரலாம்." மெல்லிய தூறலுடன் சென்ற காலை நடையில் இப்படி தொட்டுக் காட்டினார். இப்போது இந்தக் குறள் யோசிக்க யோசிக்க விரிவடையக்கூடியது.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுவதைக் கேட்பது எப்போதுமே ஒரு உற்சாகமான விஷயம். வாய்ப்பு கிடைக்கும்பொழுது தவறவிடுவதில்லை. ஆனால் இந்த "அறம்" வெளியீட்டு விழாவுக்குச் செல்ல அழைப்பு கிடைத்தபொழுது, அதிக ஆர்வம் கொண்டேன். காரணம் இந்தக் கதைகள் முதலில் அவரது தளத்தில் வெளிவந்தபோழுதே படித்த கதைகள், சட்டென மனதுக்கு மிக நெருக்கமாக வந்த கதைகள்.


ஆனால் இந்தக் கதைகள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதைக் கேள்விப்படும்போது, மகிழ்ச்சியாக இருந்தபோதும் சின்னக் கேள்விகளும் வராமலில்லை. எல்லோருக்கும் பிடிப்பதால் தான் இது எனக்கும் பிடிகிறதா? எல்லோருக்கும் கிடைத்த அனுபவம் தான் எனக்கும் கிடைத்ததா? அல்லது எனக்குக் கிடைத்த அதே அனுபவம் எல்லோருக்கும் கிடைத்ததா? அல்லது இவை எல்லோருக்கும் ஒரே eமாதிரியிருக்கும் எளிய கதைகளா?


இந்தக் கதைகளை வாசித்த நண்பர்களுடன் இதை விவாதிக்கத் தவறியதில்லை. ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்தியஇந்த வெளியீட்டு நிகழ்ச்சி இதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.


....................................................................................................................................................................

விழாக் காட்சிகள் (Click on picture for bigger image)



சனிக்கிழமைக் காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம்.

தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

வாசகர்கள் வந்தபடியே இருந்தனர். அந்தக் கூட்டம் இயல்பாக, உற்சாகமாக இருந்தது. பலதரப்பட்ட கேள்விகள் வந்தபடியே இருந்தன. கிருஷ்ணன், சீனு போன்ற தேர்ந்த வாசகர்கள், இப்போதுதான் அவரை முதல் முறையாகச் சந்திக்கும் பல புதிய வாசகர்கள். எல்லோருக்கும் சமமாகத் தன் கவனத்தை அளித்தபடி உரையாடினார் எழுத்தாளர். மிக உற்சாகமான பேச்சு அது.

ஈரோட்டில் இதனை இலக்கிய வாசகர்களா என ஆச்சர்மளித்தனர். ஆழமான இலக்கியக் உரையாடல், விருந்தோம்பல், விழா அமைப்பு என ஒவ்வொன்றிலும் அவர்களின் நேர்த்தி வெளிப்பட்டது.

மாலையில் விழா. சொன்ன நேரத்தில் ஆரம்பமானது. வெளியிடப் படும் புத்தகத்தில் இருக்கும் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்ததால், விழா பேச்சாளர்கள் இந்தக் கதைகளை எப்படி அணுகிறார்கள் என்று கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.விழாவை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கும் இதே ஆர்வம் இருந்திருக்கும் போல, அது அவர்களால் பேச அழைக்கப் பட்டவர்களைப் பார்க்கும்பொழுது தெரிந்தது, ஒவ்வொருவரும் வெவ்வேறு தளத்தில் இயங்கி வருபவர்கள்.


இந்த விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலோர் இந்தக் கதைகளை ஏற்கனவே படித்தவர்கள். எனவே பேச்சாளர்களுக்கு நூலை உண்மையில் அறிமுகப் படுத்தவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அனைவரும் கதைகளைப் பற்றிய தங்கள் அனுபவத்தை அழகாகப் பேசினர்.

விழாவில் பேசியவர்கள் (Click on picture for bigger image)



எளிமையாகப் பேசிய இடதுசாரியான தலைமை வகித்த தோழர்.வி.பி. குணசேகரன் ,கதையின் உச்சத்தை ஒரு சினிமா போல விவரித்த கல்லூரி தாளரான வாசகர் எஸ்.கெ.பி. கருணா, யானை டாக்டர் கதையின் நாயகரை நேரில் அறிந்த டாக்டர் ஜீவா, அறம் கதை தன்னை ஆட்கொண்டதை உணர்சிகரமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் மிஷ்கின், இன்னும் பல கதைகளோடு ஒப்பிட்டு, இந்தக் கதைகள் தனக்கு அளித்த அனுபவத்தை கதையாகச் சொன்ன எழுத்தாளர் பவாசெல்லத்துரை, கதைகளின் பல நுட்பங்களை தொட்டுக் காட்டிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன், ஒரு புன்சிரிப்புடன் கவிதையாகப் பேசிய மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன என ஒவ்வொருவரும் தனித் தனி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



தேர்ந்த வாசகர்கள் தங்களுக்குள் வாசக அனுபவத்தை பரிமாறிக்கொள்வது போலிருந்தது அந்த விழா.

ஜெயமோகன் பேச்சு மிக உணர்சிகரமானது. இலட்சிய வாழ்கையை விரும்புமொருவனின் மனப் போராட்டத்தை, இந்தக் கதைகள் உருவாக சூழலை, விளக்கினார்.

மனதிலிருக்கும் லட்சியவாததுக்கும், நாமைச் சுற்றி எங்குமிருக்கும் யதார்த்தவாதத்துக்கும் நடக்கும் ஓயாத போராட்டத்தில், அறம் மேலெழும் தருணங்கள் இந்தக் கதைகள். இந்தக் கதைகளின் வெற்றி லட்சியவாததுக்கு இன்னும் வரவேற்ப்பு இருப்பதை உணர்த்தும் விஷயமாக இருக்கிறது.

விழாவில் பேசியவர்கள் மற்றும் வாசர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது ஒன்று புரிந்தது. ஒவ்வொருவருக்கும் இந்தக் கதைகள் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை அளித்துள்ளன.


டாக்டர் ஜீவா பேசியபொழுது சொன்ன ஒரு கருத்து நினைவுகூரத்தக்கது. யானை டாக்டரான கிருஷ்ணமூர்த்தியை தனக்கு நன்றாகத் தனிப்பட்ட முறையில் தெரியுமெனக் குறிப்பிட்ட ஜீவா, அதை கதையாக எழுதியதின் மூலம், அவரது பெருமை பலபேரை சென்றடையச்செய்ததற்காக ஜெயமொனைப் பாராட்டினார்.

ஆம் அது தகவலாக இருந்திருந்தால் ஒரு அது ஒரு பரிணாமத்துடன் இருந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் அளித்திருப்பது உண்மைத் தகவல்கள் கலந்த ஒரு புனைவு உலகம். அது வாசக மனத்துக்கு எல்லையில்லா பரிணாமங்களை தந்துகொண்டேயிருக்கிறது.



---------------------------------------------------------------------------------------------

ஜெயமோகனுடன் நண்பர்கள் (Click on picture for bigger image)



விழா சிறப்பாக நிறைவு பெற்றாலும் ஜெயமோகனை அவ்வளவு எளிதாக விடவில்லை வாசகர்கள். தொடர்ந்தன கருத்துரையாடல்கள்.


அடுத்தநாள் நடந்த வன சுற்றலா ஒரு மறக்க முடியாத அனுபவம். இலக்கியத்தில் நனைந்துகொண்டே சென்ற அறுபுதமான பயணம் அது. கூடுதலாக மழையும் கொஞ்சம் நனைத்தது.


இயற்கை காட்சிகள் (Click on picture for bigger image)


ஈரோடு - 26 நவம்பர் 2011


அறம்சிறுகதைத் தொகுப்பு



02 டிசம்பர் 2011

நல்லா சொல்றாங்க செய்தியை

ஒரு ஊர்ல மிக ஒற்றுமையான கணவன் மனைவி இருந்தாங்களாம். கணவன் ஒரு நாள் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கப் போயிருக்கான். அப்போது ஒரு அச்சிடன்ட். அவன் இறந்து போயுட்டான். மக்கள் எல்லாம் ரெம்ப வருத்தப் பட்டு அந்த மனைவிகிட்ட போய் இதச் சொன்னாங்களாம். அதாவது டிக்கெட் எடுக்கப் போன இடத்துல அவன் டிக்கெட் வாங்கிட்டான் என்று.
 
மனைவியும் ரெம்ப பீல் பண்ணிட்டு அப்புறம் கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டு சொன்னாங்களாம்  டிக்கெட் போனா பராயில்லை. DVD வாங்கி படம் பாத்துக்கலாம் என்று.
 
 
 
இதை ஏன் இப்போ சொல்றேன்?  தினமலர் ல வந்து ஒரு செய்தி.
 
 
300 வருஷ மரம் விழுந்துவிட்டது. இதில் இவர்களுக்கு முக்கியக் கவலை  சில மணிநேரம் டிராபிக் ஆனது தான். இது தான் முக்கிய செய்தி.
300  வருஷ மரம் விழுந்ததுல எந்த வருத்தமும் இல்ல. அது சரி..
 
நல்லா சொல்றாங்க செய்தியை

24 நவம்பர் 2011

கரப்பான் பூச்சியின் உயிர்



கரப்பான் பூச்சியின் உயிர்
========================
கால்கள் துடித்துக்கொண்டிருந்த கரப்பான்பூச்சியை  
இழுத்துச் செல்லும் எறும்பைப் பார்த்துக் கேட்டேன்,
உயிரிருக்கும் உடலை உணவாக்கலாமா என்று.
எறும்பு சொன்னது,
அந்த உடலின் உயிர் தான்தானென்று.

20 நவம்பர் 2011

டின்டின் - சூப்பர் ஹீரோ

நடுக்கடலில் கவிழ்ந்த படகின்மேல் ஹீரோ எந்த உதவியுமின்றி இருக்கிறார். அப்போது விமானத்திலிருந்து எதிரிகள் மெசின் கன் மூலம் சரிமாரியாகச் அவரை நோக்கி சரமாரியாகச் சுடுகிறார்கள். தப்பிக்கிறார். அவருக்கு எதுவும் ஆகவில்லை. எதிரிவிமானம் மறுபடி சுட வருகிறது. அப்போதுதான் நமது ஹீரோ தன்னிடம் இருக்கும் ஒரு குட்டித் துப்பாக்கியை கவனிக்கிறார். அதில் இருப்பதும் ஒரே ஒரு குண்டு. ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறுகிறது. என்ன செய்யப்போகிறார் அவர். விமானம் மறுபடி அவரை நோக்கை சரமாரியாகச் சுட்டபடியே வருகிறது. எதிரி விமானத்தின் மெசின் கன் -லிருந்து தப்பிப்பதுடன் மட்டுமலாமல் அந்த ஒரே குண்டில் அந்த விமானத்தை வீழ்த்துகிறார் நம்ம ஹீரோ. அவர் தான் டின்டின்.

இப்போது புரிந்திருக்குமே. டின்டின் ஒரு சூப்பர் ஹீரோ!!

காமிக்ஸ் கதைகளில் இருந்த டின்டின், இயக்குனர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் மற்றும் 3D உபயத்தில் உயிர்பெறுகிறார்.




ஹீரோ டின்டின், புத்திசாலியான அவரது நாய் ஸ்னோயி, 'சரக்குப் பார்ட்டியான' கேப்டன் ஹாடாக், என எல்லாப் பாத்திரங்களும் நமக்கு வெகு எளிதாக நம்மக் கவர்கிறார்கள். புதையலை தேடும் வில்லன், இடையில் வரும் ஹீரோ என்ற கதை தான். ஆனால் சுவாரயமான திரைக்கதையாலும் பிரம்மாண்டமான காட்சிகளாலும் அருமையான 3D உத்தியாலும் மற்றும் சுவையான வசனங்களாலும் மிகவும் ரசிக்கும் விதமாக உள்ளது இந்தப்படம்.

இது என்ன திரவம் வித்தியாசமான சுவையாக இருக்கிறதே என்று தண்ணீரைக் குடித்துவிட்டு கேட்கும்போது சிரிக்கவைக்கும் "சரக்கு பார்ட்டி" கேப்டன் ஹாடாக், கடைசிக் காட்சியில் தங்கக் காசுகளைக் கொட்டிவிட்டு, அது இருந்த தொப்பியை பெருமையுடன் அணியும்போது கலக்குகிறார்.

இதுபோன்ற ஒரு சுவாரஸ்யமான படத்தைத் தந்த ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் ஒரு ஆச்சர்யம் தான். அவரது முதல் படமான DUEL-இல் இருந்து எந்தவிதமாக களத்தை எடுத்தாலும் அதில் தன் முத்திரையைப் பாதிக்கும் அவர் நம்மை இந்தமுறையும் ஏமாற்றவில்லை.

சிரித்து ரசிக்க ஒரு படம் இது.

19 நவம்பர் 2011

ஒரு குட்டிக் கவிதை

சினிமாவைப் பற்றி எடுக்கப்படும் சினிமாக்களும்,
கதையைப் பற்றி எழுதப்படும் கதைகளும்,
பாட்டைப் பற்றி பாடப்படும் பாட்டுகளும்,
கடுப்படிக்கின்றன.

இந்தக் கவிதையைப் போல!


09 நவம்பர் 2011

சென்னையில் ஒரு மழை நாள் - படங்களுடன்

மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது.
தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள்,
ஈரத்திலேயே நடக்கிறார்கள்.
ஈரத்திலேயே படுக்கிறார்கள்.
ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.

மழையிலும் கடமையில் ஆட்டோக்காரர்கள்

சாலை முழுவதும் தண்ணீர்



இரவில் மழைநாள்

நொய்ந்த வீடு,
நொய்ந்த கதவு,
நொய்ந்த கூரை,
நொய்ந்த மரம்,
நொய்ந்த உடல்,
நொய்ந்த உயிர்,
நொய்ந்த உள்ளம்
-இவற்றைக் புடைத்து நொறுக்கிவிடுவான்.

வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம்.
உடலை உறுதி கொள்ளப் பழகுவோம்.
உயிரை வலிமையுற நிறுத்துவோம்.
உள்ளத்தை உறுதி செய்வோம்.
நமக்குத் தோழனாகிவிடுவான்

மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான்.
அவன் தோழமை நன்று.



நான் கிளிக்கிய படங்கள். பாரதியின் வரிகளோடு

07 நவம்பர் 2011

குருவிக் கதை

சென்னை மெட்ரோ ரயில் வேலைக்காக மிச்சமிருந்த அந்த மரமும் வெட்டப் பட்டபோது தான் அந்தக் குருவி யோசிக்க ஆரம்பித்தது.

அந்தக் குருவி மட்டும் என்ன ஸ்பெஷல் என்று தானே யோசிக்கிறீங்க? அந்தக் குருவிக்கு மட்டும் மனிதர்கள் பேசுவதை புரிந்துகொள்ளும் சக்தி இருந்தது.

குருவி புது இடத்துக்கு குடிபோக முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் அவன் பேசுவதை கவனித்தது. அவனுக்கு குருவிஎன்றால் மிக இஷ்டமாம். அப்போது முடிவுசெய்தது போனால் அவன் வீட்டுக்குத் தான் குடிபோவது என்று. அடுத்தநாள் மாலை அவன்வீட்டு அடுப்பில் வெந்துகொண்டிருந்தது.

குருவிக்குத் தெரியவில்லை. அவன் குருவிஎன்றால் தனக்கு இஷ்டம் என்று சொன்னதின் உண்மையான அர்த்தம்.


கதையின் நீதி:

யாருக்கு எது எவ்வளவு தெரியணுமோ அவ்வளவு தெரிஞ்சாப் போதும். அதுக்கு மேல தெரிஞ்சா டண்டணக்கா தான்.



இன்னொரு கதை:
முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

03 நவம்பர் 2011

கடாபி மரணம் - பகீர் உண்மைகள்

லிபியாவில் நடந்துவரும் பரபரப்பான நிகழ்வுகள் உலகத்தின் அதாவது உலக ஊடகங்களின் பார்வையை அதன் பக்கம் திருப்பியுள்ளன. லிபியாவில் மனித உரிமைகளை மீட்கும்பொருட்டு உலகின் ஜனநாயக நாடுகளால் ஆதரிக்கப் படும் போராட்டம் வெற்றியடைந்து வருவதை உலகமக்கள் யாவரும் கவனித்து வருகின்றனர். சமகாலத்தில் இப்படியொரு ஜனநாயகப் புரட்சியை மேற்கு நாடுகள் நடாத்திக்காட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து நடுநிலையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துப்பாக்கி சண்டை, கட்டடிட்டங்கள் தகர்ப்பு மற்றும் குண்டு வெடிப்பு போன்ற லிபிய ஜனநாயக ஆதரவுப் படையின் ஜனநாயக செயல்பாடுகளைக் காட்டிவந்த ஊடகங்களுக்கு சென்ற வாரம் முத்தாய்ப்பு வைத்ததுபோல் ஒரு படக்காட்சி கிடைத்தது.



கடாபியை தெருவில் பலர் தாக்கி அடித்துக் கொல்லுவதுபோன்ற காட்சி உலகமெங்கும் உள்ள எல்லாத்தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து வெளியானது. பிறகு அவர் இறந்துவிட்டதாக செய்தியும் வந்தது. இணையம் மூலமும் அக்காட்சி தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது.

இந்தக் காட்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என ஒபாமா அறிவித்தார். இதன் மூலம் ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என உலகெங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அறிந்துகொண்டனர்.

இது இப்படி இருக்க, கடாபியின் மனதில் உள்ள மர்மங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. அவரின் கார் மீது பிரான்ஸ் விமானம் குண்டு வீசியிருந்தாலும் பலர் அவரை தாக்கியிருந்தாலும், அவரது மரணத்துக்கு காரணம் என்னவென்பது புதிராகவே இருந்துவந்தது.

கடாபி மரணத்துக்குக் காரணம் என்ன அல்லது யார் எனபதே உலகின்முன் உள்ள மில்லியன் டாலர் கேள்வி. போர்க்குற்றங்கள் செய்தார் என அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளால் எதிர்க்கப்பட்ட கடாபி இதுபோல் நிராயுதபாணியாக இருக்கும்போது மேற்குநாடுகள் ஆதரவுபெற்ற புரட்சிப்படையால் கொல்லப்பட்டது சரியா என்ற கேள்வியும் எழுந்தது. இது ஒரு போர்க் குற்றம் இல்லையா என சிலர் கேள்விஎழுப்பினர்.




இதற்குப் பதிலளித்த ஒரு முக்கிய 'நடுநிலை' ஊடக ஆய்வாளர் சில உண்மைகளை விளக்கியுள்ளார்.

அந்தப் படத்தை உற்றுநோக்கினால் ஆரம்பத்திலிருந்தே அவர் முகத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்க்கமுடியும். எனவே ரத்தம் புரட்சிப் படையினர் அடித்ததினால் வந்தது என சொல்ல முடியாது.

ஆனால் புரட்சி படையினர் அவரை அடிப்பது அந்த படக்காட்சியில் தெரிகிறதே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் அடி கூட ரத்தம் வருவதற்கு உண்மைக் காரணம் இல்லை. உடம்பில் ரத்தம் இருப்பதே அது வருவதற்குக்காரணம் என்று விளக்கியுள்ளார்.

ரத்தம் இல்லாத ஒரு உடம்பிலிருந்து யாராலும் ரத்தம் வரவைக்க முடியாது என்று தன்னால் நிருபிக்க முடியும் என்றும் அந்த ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் பல இதுவரை வெளிவராத பல உண்மைகள் தெளிவடைகின்றன.

கடாபி உயிரிழந்ததுக்குக் காரணம் கூட அவரிடம் உயிர் இருந்தது தான் என இதன் மூலம் தெரிந்துள்ளது. புரட்சிப் படையினர்வசம் சிக்குவதற்கு முன்னரே அவர் இறந்திருந்தால் அவர் புரட்சிப் படையினரிடம் மாட்டிக்கொண்டபின் இறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அதே ஆய்வாளர் கூறியுள்ளார்.

இதன் மூலம் கடாபியின் மரணத்துக்குக்காரணம் அவரிடம் உயிர் இருந்ததே, அதாவது அவரது மரணத்துக்கு பொறுப்பு அவரே என்று ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது.

29 செப்டம்பர் 2011

சமவாய்ப்பெல்லாம் சமமா?

சச்சின் ஒரு புயலைக் கிளப்பியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் அணிக்கு இரண்டு இன்னிங்க்ஸ் மூலம் மொத்தம் நான்கு இன்னிங்க்ஸ் வைத்துக் கொள்ளும்படி மாற்றம் தேவையென்று. காரணம்? விளையாடும் இரு அணிகளுக்கும் சமவாய்ப்பு போல தெரிந்தாலும் உண்மையில் சமவாய்ப்பு இருப்பதில்லை. டாஸ் தான் பல போட்டிகளின் முடிவை தீர்மானிக்கிறது.

சரி. இதன் மூலம் சமவாய்ப்பு கிடைத்துவிடுமா? அதெப்படி அதிலும் கண்டிப்பாக டாஸ் மூலம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கத் தான் செய்யும். என்ன இப்போது 50 ஓவர் வித்தியாசம் 25 ஓவர் வித்தியாசமாகக் குறையும்.

இதைகேட்ட நமக்கு தோன்றுவது என்ன? ஏன் 25 ஓவர்? பத்து பத்து ஓவராக 10 இன்னிங்க்ஸ் விளையாடினால் இன்னும் நன்றாக இருக்கும் அல்லவா? அதிக நேரம்.. அதிக விளம்பரம்.. அதிக பணம். :)



இன்னும் கூட இன்னும் யோசிக்கலாம் ஐந்து ஐந்து ஓவராக 20 இன்னிங்க்ஸ் கூட விளையாடலாம். ஒவ்வொரு ஓவராக? அல்லது ஒவ்வொரு பந்தாக?

----


கிரிக்கெட்டில் அவர்களுக்கு சமவாய்ப்பு கிடைப்பது இருக்கட்டும். உண்மையில் நமக்கு எல்லா இடத்திலேயும் சமவாய்ப்பு கிடைகிறதா? இதைப் பற்றி யாரவது யோசித்ததுண்டா? இதற்கு என்ன செய்யலாம்?

  • ரயிலில் சொல்லும்போது எல்லோருமே விரும்புவது லோயர் பெர்த் தான். சைடு லோயர் அல்லது சைடு அப்பர் யாருக்குமே பிடிப்பதில்லை. அப்படியென்றால் சைடு பெர்த் எல்லாம் விலை குறைவா? கண்டிப்பாக இல்லை. எல்லோரும் செலுத்துவது ஒரே அளவு பணம். அனால் சிலருக்கு வசதி, சிலருக்கு அவதி. ஏன் சைடு பெர்த் பயணக் கட்டணத்தைக் குறைக்கக் கூடாது?
  • பேருந்துகளில் வசதியாக உட்கார்ந்து வருபவர்களுக்கும், கடைசி சீட்டில் வருபவர்களுக்கும் அல்லது நின்றுகொண்டு வருபவர்களுக்கும் ஒரே கட்டணம்.

  • திரையரங்குகளில் நல்ல இடத்திற்கும் ஒரே கட்டணம். ஓரமாக இருக்கைகளுக்கும் ஒரே கட்டணம்.

  • ஒரு மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது சரியான நேரத்தில் பார்ப்பவருக்கும் அல்லது காத்திருந்து பார்ப்பவர்களுக்கும் ஒரே கட்டணம்.
இதற்கெல்லாம் ஏன் வசதியை வைத்து கட்டணம் நிர்ணயிக்கக் கூடாது?

அதிகம் படிக்கிற பசங்களுக்கு வாங்கும் அதே கட்டணத்தை கொஞ்சமாகப்படிக்கும் பசங்களிடமும் வாங்குவதும் ஒரு அநியாயம் தான் என்கிறார் எனக்குத் தெரிந்த ஒரு கலூரி மாணவர்.

எது மக்கள் கொஞ்சம் யோசித்தால் சரிதான்!

08 செப்டம்பர் 2011

பினாயக் சென் - ஒரு தண்டனை, பல கண்டனங்கள், சில கேள்விகள்


பினாயக் சென்!


ஒரு சிறந்த மருத்துவர். சட்டிஸ்கர் மக்களுக்காக பல சேவைகளைச் செய்தவர். சட்டிஸ்கர் அரசு தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர். அவரது ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் முக்கிய இடம் பெற்றுள்ளன.


தண்டனையும் பெரியது, தேசத் துரோகம். கண்டனமும் பெரியது, சர்வதேசக் கண்டனங்கள்.


ஏன் இந்த தண்டனை? எதற்கு இந்தக் கண்டனம்? கொஞ்சம் காலமாக இது தொடர்பான செய்திகளை தேடி வாசிக்கும்போது, பின்வரும் செய்திகள் கிடைக்கின்றன.


யார் இவர்? பினாயக் சென் ஒரு நல்ல மருத்துவராக பணியாற்றியுள்ளார். சட்டிஸ்கர் அரசை விமர்சனம் செய்துவந்துள்ளார்.


என்ன குற்றம்? அவருக்கு நக்சல் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஆராதங்களின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


யாருடைய கண்டனம்? மனித உரிமை அமைப்புகள், பல சர்வேதேச அமைப்புகள் மற்றும் நமது ஊடகங்கள் எல்லாம் இந்தத் தீர்ப்பை கடுமையாக கண்டனம் செய்துள்ளன.


-----------


நான் சென்னையில் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் இந்தக் தண்டனையை கண்டிப்பதாகக் கூறினார். அரங்கு நிறைந்த கைதட்டலோடு அனைவரும் அதை ஆதரித்தனர். ஆனால் அதைப் பற்றி அங்கு தொடர்ந்து பேசாததால் அவர்கள் எந்த அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை.


சட்டிஸ்கர் மாநில பிரச்சனைக்கு சென்னையில் இருக்கும் விழிப்புணர்வு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நானும் அங்கு கைதட்டிக் கொண்டிருந்தாலும் எந்த அடிப்படையில் இந்தக் கண்டனம் என்ற கேள்வி எழாமல் இல்லை.


பழங்குடியினர் பிரச்சனை, சுரண்டப் படும் வளங்கள், தீவிரவாதம் மற்றும் தேச பாதுகாப்பு என பலமுகங்கள் கொண்ட இந்தப் பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய பிரச்சனை தான்.


இந்தத் தீர்ப்புக்கு வரும் கண்டனங்களை, அவரின் விடுதலைக்கான கோரிக்கைகளை இந்த மூன்று விதமாக பிரிக்கலாம்.


1 . இது சட்டத்திற்கு புறம்பான கைது. அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கு. பினாயக் சென் மாவோயிச தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லாதவர்.


2 . அவர் சில நக்சல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டமே தவறானது. எனவே சட்டம் திருத்தப் பட வேண்டும் .


3 .மற்றதைப் பற்றி கவலை இல்லை. இவர் நல்லவர். மக்களுக்கு நன்மை செய்தவர். பிரபலமானவர். எனவே இவரை விடுதலை செய்யவேண்டும். (அவர் செய்ததது சட்டப் படி தவறாக இருந்தாலும்.)


முதல் காரணமாக இருந்தால் கண்டிப்பாக அவர் தகுந்த விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்படவேண்டும். நக்சல் அமைப்போடு தொடர்பு இல்லாதவரைக் கைது செய்வதால் அரசுக்கும் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. தகுந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு நடத்தப் படவேண்டும். கண்டிப்பாக கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்.


ஆனால் விடுதலைக் கோரிக்கையின் காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது சொல்லப்பட்ட விஷயமாக இருந்தால், கண்டிப்பாக கண்டனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தக் கண்டனத்தின் மூலம் சட்ட மீறலும் தீவிரவாதமும் ஆதரிக்கப் படுகின்றனவா என்பதை யோசிக்கவேண்டும்.



நாம் படிக்கும் பல செய்திகள் எந்த அடிப்படையில் வருகின்றன என்பதே குழப்பமாக இருக்கிறது.


பார்க்கலாம்.. தீர்ப்பு எந்த அடிப்படையில் வருகிறது என்று!!!


Related links:



20 ஆகஸ்ட் 2011

அண்ணா வழி


அண்ணா ஹசாரே ஆதரவு கட்சி, எதிர்ப்புக் கட்சி, அவரை சந்தேகப் படும் கட்சி என்று இந்த மூன்றில் ஒரு கட்சியில் இல்லாத யாருமே இப்போது இல்லை போலிருக்கிறது.

எங்கும் அவர் பற்றிய பேச்சுதான்

ரஜினி படம் வரும் பொது எல்லோரும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பிடித்தவர்கள் ஒரு மணிநேரம் பேசினால், பிடிக்காதவர்கள் பலமணிநேரம் பேசுவார்கள். அதுபோல ஒரு பரபரப்பு ஆகிவிட்டது நம்ம அண்ணா ஹசாரே கதை.



இவர் விஷயத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால். இவர் ஒரு மிகப்பெரிய விவாதத்தை நமக்கெல்லாம் மறு அறிமுகம் செய்து வைத்துவிட்டார் .அரசியல் கட்சி சார்பில்லாத ஒருவரால் மக்களை ஒரு விவாதம் நோக்கி திருப்பமுடியும் என்பதே ஒரு ஆச்சார்யமான நிகழ்வு தான்.

நாமெல்லாம் இவர் பெயரை கேள்விப்பட்டே கொஞ்சம் நாள் தான் ஆகிறது. அதற்குள் நமது தினசரி அரட்டையில் (அல்லது விவாதத்தில்) இவர் ஒரு முக்கிய இடம் பிடித்துவிட்டார் என்பதே அவரது வெற்றி தான்.

சரி.. அண்ணா ஹசாரே சொல்லும் லோக்பால் உனக்கு முழு சம்மதமா என்று யாராவது என்னைக் கேட்டால் அல்லது யாருமே கேட்காவிட்டாலும், உண்மையில் பிரதமரை இந்த வரம்புக்குள் கொண்டுவருவது சரியல்ல என்பதே எனது கருத்து. நாட்டின் தலைவருக்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கவேண்டும். மற்றும் சில கருத்துக்களிலும் கொஞ்சம் கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியென்றால் நானும் அவரை சந்தேகப் படும்கட்சியா? கண்டிப்பாக இல்லை.

ஊழலை நாமெல்லாம் நமது அன்றாட வாழ்கையில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டு பலகாலமானநிலையில், ஊழல் ஒரு குற்றமே என இவர் புதிதாக சொல்வது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது, நாமும் பங்குகொள்ளக் கூடியது என்பது தான் எனது கருத்து.

அவரைப் பற்றி கேலி செய்து திட்டிக் கொண்டாவது அவரைப் பிடிக்காதவர்களும் ஊழலைப் பற்றி விவாதிக்கட்டும். வேறு வழியில்லை. உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணா உங்கள் சிந்தனையில் வந்துவிட்டார். அண்ணா ஹசாரே பற்றி பேசுபவர்கள் எல்லோரும் கண்டிப்பாக ஊழல் பற்றி யோசித்தே ஆக வேண்டும். இது தான் புதிய அண்ணா வழி.



---------------------------------------------



ஒரு பன்ச் உடன் முடிக்கலாம் என்று யோசித்ததில் பல பன்ச்கள் இலவசமாகவே கிடைத்தன.

அண்ணா ஹசாரே பற்றியும், காந்திய போராட்டங்கள் பற்றியும் இந்தப் பரபரப்புகெல்லாம் முன்பிருந்தே தொடர்ந்து எழுதிவருபவர் ஜெயமோகன். அவரது பஞ்ச் சில..


" அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்."

"காந்தியப்போராட்டம் என்பது எதிரிக்கு எதிரானது அல்ல. நம்முடைய உள்ளே உள்ள பலவீனத்துக்கு எதிரானது."

"போராட்டத்தின் வெற்றி என்பது உண்மையில் அதன் மூலம் மக்களிடம் உருவாகும் ஆழமான கருத்தியல் மாற்றமேயாகும்."

"சத்தியாக்கிரக போராட்டத்தின் படிமம் மலை ஏறுவதுதான். எவரெஸ்டில் ஏற வேண்டுமென்றால் முதலில் வீட்டுக்கு முன்னால் உள்ள முதல் மேட்டை ஏறியபடித்தான் ஆரம்பிக்க வேண்டும். ஏறும் ஒவ்வொரு மலையும் அதைவிட பெரிய மலையில் ஏறுவதற்கான படியாகவே இருக்கிறது."

கடைசியாக..

"காந்திய வழி வெற்றிகரமானதா என்பதை நாம் விவாதிக்கலாம். ஆனால் அதைவிட்டால் வேறு வழியே இல்லை என்பதில் மட்டும் விவாதிப்பதற்கே ஏதுமில்லை"



சில இணைப்புகள்:

அண்ணா ஹசாரே-1
அண்ணா ஹசாரே-2

19 ஆகஸ்ட் 2011

கேணி சந்திப்பு - வண்ணநிலவன்

"நீங்களெல்லாம் என கதைகளைப் பற்றி பேசுகிறீர்கள், புகழ்கிறீர்கள். ஆனால் அதில் அப்படி ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அந்தப் பாராட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு கூச்சமாகவே இருக்கிறது.." என்ற ரீதியில் சகஜமாகப் பேசிக்கொண்டுபோனார் வண்ண நிலவன். தன் படைப்புகளை பற்றி இப்படி சொல்லும் ஒரு படைப்பாளியைப் பார்ப்பது ஒரு ஆச்சர்யம் தான்.


வண்ணநிலவன் என்ற பெயரைத் தெரிந்திருந்தாலும் நான் அவரது படைப்புகள் எதையும் படித்ததில்லை. ஞாநியின் இந்த கேணி இலக்கியக் கூட்டம் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. ஞாநி ஒரு தைரியமான பத்திரிக்கையாளர் என்ற மரியாதை இருந்தாலும், அவரது கருத்துக்களை எப்போதுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு ஆர்வம் இருந்தது. நேரமும் இருந்தது. எதிர்பார்த்ததை விடவே மிகவும் சுவையான ஒரு கூட்டமாக அமைத்தது.
தனக்கு அவ்வளவு சுவையாகப் பேசத் தெரியாது என்று ஆரம்பித்தார் வண்ணநிலவன். ஆனால் அவரது எளிமையும் நேர்மையும் அவரது பேச்சை இயல்பாகவே சுவையாக்கின.
பல ஏற்ற இறக்கங்களை, பல பொருளாதார நெருக்கடிகளைக் கண்ட தன் வாழ்கையை, சற்றும் கசப்பிலாமல், தான் கண்ட ஒரு நாடகத்தின் கதையைச் சொல்வதுபோல அவரால் சொல்ல முடிகிறது.
வண்ணதாசன், விக்ரமாதியன், பாலகுமாரன்,சோ,வல்லிக்கண்ணன் என தனது வாழ்கையில் வந்த பல ஆளுமைகளைப் பற்றியும் பேசினார்.
இவ்வளவு மென்மையாக இருக்கும் உங்களால் எப்படி துர்வாகர் என்ற பெயரில் துக்ளக்கில் அதிரடி விமர்சனம் செய்யமுடிகிறது பலர் ஆச்சர்யப் பட்டனர்.
ஆனால், அவரின் அதிரடி அவரது சுயவிமர்சனமும் எளிமையும் தான்.
தன் படைப்புகளைப் பற்றி பெருமையாக பேசுவதை அவர் தவிர்த்தாலும், அவரின் படைப்புகளை படித்த வாசகர்களின் கேள்விகளுக்கு நன்றாகவே பதிலளித்தார்.
தான் கிறித்துவனாக "கொஞ்ச காலம்" மாறிய கதை, எஸ்தர், கடல்புரத்தில் போன்ற படைப்புகள் உருவாக சூழல் என்று அவரது வாசகர்களுக்கும் பல வித்தியாசமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இப்போதைய இலக்கியத்திலும் தனக்குப் பிடித்த, மற்றும் பிடிக்காத சில போக்குகளைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
பொதுவாக அவரது பேச்சு கூட்டத்தில் புன்முறுவலையும் கரவொலியையும் எழுப்பியபடியிருந்தாலும்
சமீபத்தில் வந்த திரைப்படத்தைப் பற்றி ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கு கூட்டத்தினர் எழுப்பிய பலத்த கரவொலி பார்த்து எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாயிருந்தது.
சினிமாவைப் பற்றி எதுசொன்னாலும் மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பு அது.

எழுத்தாளர் எஸ்ரா, இயக்குனர் பாலுமகேந்திரா ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஞானியும் எஸ்ராவும் பல கேள்விகளைக் கேட்டு தங்களை வாசகர்களாகவே காட்டிக்கொண்டது இன்னும் சிறப்பு.
வண்ணநிலவனை கலந்துரையாடலுக்கு அளித்த ஞாநி பாராட்டுக்குரியவர்.
கூட்டத்தை சிறப்பாக நடத்தியது மட்டுமலாமல், இனிப்பு,காரம், சுண்டல், தேநீர் என விருந்தோம்பலிலும் அக்கறை காட்டினார் ஞானி. அவருக்கு நன்றிகள்.
சில துர்வாசகர் கட்டுரைகளை துக்ளக்கில் படித்ததைத் தவிர இவரது படைப்புகளை நான் படித்ததில்லை என்றாலும், தனது இயல்பான கலந்துரையாடல் மூலம் ஒரு சிறப்பான மலைப் பொழுதை அளித்தார் வண்ணநிலவன்.
வண்ணநிலவனின் இலக்கியத்தை வாழ்கையை நாடகம் போல் எளிதாகப் பார்க்கும் அவரது இயல்பே தீர்மானிக்கிறது என நினைக்கிறேன்.
சில காலமாக ஏன் எழுதவில்லை என்ற கேள்விக்கு, தான் எழுதுவதற்கு சில விஷயங்களை யோசித்து வைத்திருப்பதாகச் சொன்னார் வண்ணநிலவன். எழுதினால் சிறப்பாக எழுதவேண்டும் என்பதற்காகவே இன்னும் தொடங்காமலிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இருந்த உற்சாகம், அவரது புதிய படைப்புகள் வர வழிசெய்யட்டும்.

22 ஜூன் 2011

ரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்!

ஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை காப்பியடித்த ஒரு ஆங்கிலப் படம் நமது கவனத்திற்கு வந்துள்ளது.
தமிழ் படத்தை காப்பியடித்த அந்த ஆங்கிலப் படம் இதுதான். A History of Voilence (https://en.wikipedia.org/wiki/A_History_of_Violence).
இது நமது பாட்சா படத்தின் அப்பட்டமான காப்பி. உலகப் புகழ் பெற்ற "உள்ளே போ" காட்சிகூட அப்படியே உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். :)
இந்தக் கதையைக் கேளுங்கள்..
ஒருஊரில் ஒருவன் அமைதியாக ஒரு ஹோட்டல் நடத்திவருகிறான். பாட்சவில் ஆட்டோ..
அப்போது சில ரௌடிகள் வம்பிழுக்க அமைதியாக இருக்கிறான். பின் வேறு வழியின்றி அவர்களை அடிக்கிறான். முதல் பிரச்சனை..
பின்னே என்ன? ரௌடிகள் அவன் வீட்டின்முன்னே வருகிறார்கள். அவர்கள் கடத்தி வருவது அவனது மகனை. (பாட்சாவில் தங்கச்சியை) அவனை வைத்து மிரட்டுகிறார்கள். ஹீரோ அங்கு வருகிறார். ஹீரோவின் மனைவியும் பையனும் வில்லன்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அப்போது ஹீரோவின் பார்வையில் ஒரு மாற்றம்..
பிறகு என்ன? அதே தான்.. "உள்ளே போ!!".
நம்பமுடியாமல் அவர்கள் வீட்டின் மாடியில் நின்று பார்க்க ஹீரோ வில்லன்களை பந்தாடுகிறார்..
இப்படிப் போகிறது இந்தப் படம்.
பாட்சா வந்தது 1995 -இல், இந்தப் படம் வந்தது 2005 இல்.
தலைவர் படத்தை இப்படி காப்பியடித்து வைத்திருக்கிறார்களே இதையெல்லாம் யாரும் கேட்பதில்லையா?
யாராவது இந்தப் படம் பார்த்திருக்கிறீர்களா?
--------
இது இப்படி இருக்க இப்போது வந்துள்ள "KUNG FU PANDA 2" கூட ரஜினி படத்தின் காப்பி என்பதுதான் இப்போதுள்ள பரபரப்பான பேச்சு.
இது எந்த ரஜினி படம் என்று நான் சொல்லப்போவதில்லை. நீங்களே தான் கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்
இந்தக் கதை என்னவென்றால்..
ஊரில் பன்ச் டைலாக் பேசிக்கொண்டு ஜாலியாக திரியும் ஹீரோவுக்கு திடீரென தன்னை வளர்த்தது தன் உண்மையான அப்பா இல்லை என்று தெரிகிறது. எனவே அவனது உண்மையான பெற்றோர் யாருன்று தேட ஆரம்பிக்கிறார்.
அப்போது பக்கத்து ஊரில் பிரச்சனை செய்யும் வில்லனைப் பார்க்கிறார். அந்த வில்லன்தான் ஹீரோ அவரது பெற்றோரைப் பிரிய காரணமானவர். சட்டென பிளாஷ்பாக் அவருக்கு ஞாபகம் வருகிறது..
பிறகென்ன.. பழிக்குப் பழி..
இடையிடையில் ஆன்மீக தத்துவ வசனங்கள், வில்லன் எரியும் வெடிகுண்டை கையில் பிடித்து மறுபடி வில்லன் மீதே எறியும் காட்சிகள் என ஒரே பரபரப்புதான்
இது என்னபடம் என்று யோசித்தால் பல ரஜினி படங்கள் ஞாபகம் வருகிறதல்லவா? படம் பார்க்கையில் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை நினைவூட்டுகிறது.
எனக்குத் தெரிந்து ரஜினி இதுபோன்ற கதையில் ஒரு பத்து படத்திலாவது நடித்திருப்பார் என நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்தனை படங்கள் ஞாபகம் வருகிறது?
-- இதன் மூலம் நாம் சொல்லவருவது என்னவென்றால்,எத்தனை பேர் காப்பியடித்தாலும் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதை ஹாலிவூட்-க்கும் சொல்லிக்கொள்கிறோம். :)

20 ஜூன் 2011

பயணம் - ஏலகிரி

திடீரென முடிவெடுத்து செய்த பயணம் அது. சென்னையிலிருந்து ஏலகிரிமலைக்கு, ஒரு வாரயிறுதி நாளில்.

சென்னை வெயில், வழக்கமான இடங்கள் இவற்றிலிருந்து ஒருநாளாவதுதப்பிக்கலாமே என்ற திட்டம்.


சென்னையிலிருந்து பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், வேலூர் ஒரு இருநூற்றைம்பதுகிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தமலை. சாலைகள் மிகவும் நன்றாகவேஉள்ளன. சாலையில் தெளிவான வழிகாட்டி பலககைகள் உள்ளதால் வழிகண்டுபிடிப்பது மிக எளிது. அதிகாலையில் கிளம்பினால் பகல் உணவுக்குசென்றுவிடலாம்.

வாணியம்பாடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பயணித்தால்சற்றுநேரத்தில் இடதுபுறத்தில் ஏலகிரி பலகையைக் காணலாம். முதல்முறையாக மலைச் சாலையில் ஒட்டுவதால் எனக்கு சின்ன பதட்டம்இருந்தது . ஆனால் ஏற ஆரம்பித்ததுமே அது எளிதாகவே தோன்ற ஆரம்பித்தது. மலைச் சாலை மிகவும் நன்றாகவே பராமரிக்கப்படுகின்றன. நல்ல அகலமானசாலைகள் மற்றும் தேவையான அறிவுப்புப் பலகைகள். கொண்டைஊசிவளைவுகள் கார் ஓட்டுவதில் ஒரு நல்ல அனுபவம் தான்.


நல்ல இயற்கைக் காட்சிகள், தமிழ் புலவர்கள் பெயர்களில் இருக்கும் வளைவுகள்மற்றும் காட்சி முனைகள் அப்புறம் முக்கியமாக ஏராளமான குரங்குகள்வழியெங்கும் உள்ளன.

எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கங்கு நின்று ரசித்து படம் எடுத்துக்கொண்டே சென்றேன். இரண்டு இடங்கள் கடந்து, தொலைநோக்கு மையம்வந்தது. சரி..போகும்போதே நேரம் செலவழிக்க வேண்டாம், அதை திரும்பவரும்வழியில் பார்த்துக்கொள்ளலாம் என மேலே சென்றேன். அது ஒரு நல்ல முடிவுதான் அது.

உண்மையில் ஏலகிரி பயணத்தில் மலைப்பாதையில் போதுமான நேரம்செலவிடவேண்டும் என்று ஏலகிரியை அடைந்ததுமே நினைத்தேன். இல்லையெனில் நாம் அங்கு சட்டென வந்துவிடுகிறோம்.

ஏலகிரியை அடைந்ததுமே ஒரு ஏமாற்றம். அவ்வளவுதானா என்று. ஊர்வந்ததுமே, இருமருங்கிலும் நாம் பார்ப்பது தங்குமிடங்கள் மற்றும்தங்குமிடங்கள் மட்டுமே. இது பெங்களூரிலிருந்து பக்கம் என்பதால் இந்ததங்குமிடங்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குகின்றன.

நல்ல வெயில் காலத்திலும் இங்கு ஒரு நல்ல வானிலை உள்ளது. மற்றபடி படகுசவாரியைத் தவிர சுற்றிப் பார்ப்பதற்கு என்று இடங்கள் எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. நிறைய பலாப் பழங்கள் கிடைக்கின்றன.

உண்மையில் இதை ஒரு சுற்றுலாத் தளமாக நினைக்க முடியவில்லை. ஒருநல்ல தங்கும் விடுதியில் தங்கி ஓய்வு எடுப்பதற்கு ஏற்ற இடம். ஆனால் இங்குநல்ல விடுதிகளில் கட்டணம் கொஞ்சம் அதிகம் தான்.

திரும்பிவரும்போது மறக்காமல் தொலைநோக்கியைப் பார்க்க காரைநிறுத்தினேன். அடுத்த ஆச்சர்யம்.

அங்கு தொலைநோக்கிஎல்லாம் ஒன்றும் இல்லை. உண்மையில் அங்கு இருப்பதுதொலைநோக்கிக்கான இடம். நாம் நாமே தொலைநோக்கி கொண்டு சென்றால்அங்கு நின்று பார்த்துக் கொள்ளலாம் போல. ஆனால் இந்த காலி கட்டிடத்திற்குவேலை நேரம் எல்லாம் போட்டு ஒரு அறிவுப்பு வைத்திருப்பது கொஞ்சம் ஓவர்தான்.

மலை என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமல் ஒரு பயணம் சென்று வர, ஓய்வெடுக்க அல்லது முதன்முதலில் பிரச்சனை இல்லாத ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிப் பார்க்க ஒரு நல்ல இடம்தான் ஏலகிரி.

ஏலகிரி.. "சும்மா" ஒரு பயணத்திற்கு ஏற்ற இடம்.

25 மே 2011

யாரோட காசு, இது நம்ம காசு!!

சட்டசபை பழைய கட்டடத்திலேயே நடப்பதினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பல குரல்கள்.

அரசு செலவழிப்பது மக்களின் வரிப்பணம் தான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்துகொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி.

மக்களின் வரிப்பணம் வேறு எப்படியெல்லாம் வீணாகிறது..


தமிழில் பெயர் இருந்தால் சினிமாவுக்கு கேளிக்கை வரிவிலக்கு. இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரில் தான் வருகின்றன. அப்படிஎன்றால் தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வரி இல்லை.


இந்தியாவில் நடத்திமுடிக்கப் பட்ட உலகக் கோப்பைக்கு வரி எதுவும் இல்லை. நமது அரசு அதை அத்தியாவசியமாக நினைத்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் அரசுக்கு எத்ததனை கோடி வருமான இழப்போ?


அப்படியென்றால் அரசு சலுகைகளே காட்டக் கூடாதா என்று கேட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். பொது நன்மை உள்ள விஷயங்களில் சலுகைகள் காட்டட்டும். விவசாயம், அடிப்படைத் தொழில்கள் போன்றவற்றில் சலுகைகள் அவசியம் தான்.

வருமானம் குறைவானவர்களுக்கு அரசு தரும் இலவச அரிசி போன்றவை இப்படிப் பட்டவை. உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் கிடக்கச் செய்யவது எந்த ஒரு அரசின் கடமை.

ஆனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் எதற்கு இந்தச் சலுகைகள்?

நானும் எனக்குப் பிடித்த படங்களை முதல் நாளே சென்று ரசிக்கும் சினிமா ரசிகன் தான், மணிக்கணக்காக கிரிக்கெட் பார்ப்பவன் தான். ஆனால் இவை கண்டிப்பாக விவசாயம் போல அத்தியாவசிய பொருள் அல்ல. இவற்றுக்குக் கண்டிப்பாக எந்தச் சலுகையும் தேவை இல்லை.

இவையிரண்டும் கண்டிப்பாக இந்தியாவில் வெற்றிகரமான தொழில்கள் தான். இந்தச் சலுகைகள் மூலம் பலன் பெறுவது வரிகட்டும் நம்மைவிட பெரிய புள்ளிகள் தான்.


இந்த சட்டசபை கட்டிடம் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது? உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும்? இருப்பதே பயன்படுத்திக் கொள்கிறோம் எனச்சொல்வது எப்படி வீண் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை.


இது போன்ற கட்டமைப்பு துறைகளில் வீணாவதை விட, இது போன்ற சலுகைகளால் தான் அதிகம் நமது வரிப்பணம் தொடர்ச்சியாக வீணாகிறது என்ற எண்ணம் மக்களிடமும், அரசின் செலவவுகளுக்கு மக்களிடம் கணக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் வரும் என எதிர்பார்க்கலாம்.

20 மே 2011

சொன்னபடி வந்த தேர்தல் முடிவுகள்..

தேர்தல்நாளைவிட முடிவுகள் வந்த நாளில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். வேலை பார்ப்பதைவிட வேடிக்கை பார்ப்பது சுவையானது.

முடிவுகள் இப்படி வந்ததற்குக் காரணம் என்னவென்று கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும், எல்லாப் பதிவர்களும் சொல்லிவிட்டார்கள். நமக்குப் புரியாதது என்னவென்றால் இவர்கள் எல்லோருக்கும் முன்னரே தெரிந்திருந்தும் ஏன் இந்த தீர்க்கதரிசிகள் அப்போதே சொல்லவில்லை என்பது தான்.

போராட்டங்கள் மறியல்கள் என பல கலவரங்களை உருவாக்கி மம்தா பானர்ஜி வங்காளத்தில் வென்றிருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிதாக எந்த பிரச்சனையும் அல்லது போராட்டமும் செய்யாத ஜெயலலிதாவும் வென்றிருக்கிறார். யோசிக்க வேண்டிய விஷயம்..

பிரசாரத்தின் பொது அப்போதைய ஆளும் கட்சியால் அதிகம் முன்னிறுத்தப்பட்டவர் வடிவேலு தான். அவர் அதிகம் முன்னிறுத்தியது விஜயகாந்தை தான். அதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் மக்கள் அதிகம் பேசியது வடிவேலு பற்றி தான். எப்படியோ விஜயகாந்த் முன்னுக்கு வந்துவிட்டார்.

வடிவேலு தி.மு.க வின் பிரசார பலத்தை விஜயகாந்த் மீது திருப்பிவிட்டார் என்று தோன்றுகிறது. சன் டிவி உள்ளிட்ட அதன் பலம் வாய்ந்த ஊடகங்கள் விஜயகாந்தை மீது தான் அதிகம் நேரம் செலவழித்தன.

திருநீறு, குங்குமம் வைத்த அமைச்சர்களும், அவர்கள் ஆண்டவன் மீது ஆணையாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பார்பதற்கு கொஞ்சம் இயற்கையாக இருந்தது. (முந்தைய அரசு இயற்கை மீது ஆணையாக பிரமாணம் எடுத்துக் கொண்டது அவ்வளவு இயற்கையாக தோன்றவில்லை)

பழைய சட்டமன்றமே போதும் என ஜெயலலிதா தனது பாணி அதிரடியை ஆரம்பித்துள்ளார். அப்படியே தமிழ் புத்தாண்டையும் பழையபடியே சித்திரைக்கு மாற்றுவார் என எதிர்பார்க்கலாம். (விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி அறிவை பயன்படுத்தி பண்டிகை தினங்களை மாற்றுவது பற்றி சிந்திப்பதற்கும் தடை வரும் என எதிர்பார்க்கலாம். )

வாக்குப் பதிவு எந்திரத்தில் செயற்கை இதயம் உள்ளது என நம்பவேண்டியிருக்கிறது. தலைவர்களுக்கு பிரச்சனை என்றால் (தோற்கும் நிலையில்) இருந்தால் மட்டும் அவை வேலை நிறுத்தம் செய்கின்றன. (பத்திரிக்கைக்காரர்களுக்கு இல்லாத இதயம் எந்திரத்துக்கு இருக்கிறதே !!)

கருணாநிதியின் படைப்புகளுக்காக இனிமேல் பாராட்டு விழாக்கள் நடந்தால் அது சரியானதாக இருக்கும். அவரது தமிழால் கவரப்பட்டவர்கள் இனிமேல் அதைச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

10 மே 2011

தண்டனையா அல்லது தண்ட செலவா.. ஒரு பார்வை

உலகளாவிக கொண்டாட்டங்கள். பல அரசாங்ககளின் நிம்மதிப் பெருமூச்சுக்கள், மகிழ்ச்சி அறிக்கைகள், மற்றும் எண்ணிலடங்கா சர்ச்சைகள்.

ஒரு 54 வயது மனிதர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிரான குற்றங்களுக்காக இந்தத் தண்டனை என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இது அமெரிக்கா பாதுகாப்புத் துறைகளின் மிகப்பெரிய வெற்றியாகப் பாராட்டப் படுகிறது.



ஒசாமா மிக கடுமையான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக பல வருடங்கள் முன்பே செய்திகள் வந்திருந்தன. அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததாகத் தெரிகிறது. உடலின் பல பகுதிகளில் பல கடுமையான காயங்கள் இருந்துள்ளன.

அந்தச் செய்திகளை உண்மையென எடுத்துக் கொண்டால் இந்த தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் அவரது மரணம் சமீபத்தில் தான் இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு மனிதரைக் கொல்ல ஏன் அமெரிக்க இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்? ஏன் இவ்வளவு செலவளித்திருக்க வேண்டும்?

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் உடல் நிலையோடுதான் அவர் இருந்தாரா என்பதும் ஒரு பதிலறியமுடியாத ஒரு கேள்வி. அவர் அப்படி அறியமுடியாத மன/உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தத் தண்டனை என்பதே கேள்விகுறியதாய் ஆகிவிடாதா?

இணையம் மற்றும் தொடர்பு கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து அவர் இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தாரா என்பதும் நம்முன் இருக்கும் அடுத்த கேள்வி.

அப்படியென்றால், இதில் ஒரு சிலரின் மரணம் என்பதைவிட பெரிய விஷயம் ஒன்றும் இல்லையென்று முடிவுசெய்துவிடலாமா?

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு தேவையில்லாத நடவடிக்கை எனலாமா?


அப்படி செய்யமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏன்.

இதற்கு கிடைத்துள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு இரண்டையும் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. இருவரும் அவரை ஒரு தனி மனிதராகப் பார்க்கவில்லை.

அவர் ஒரு உணர்ச்சியின், ஒரு இயக்கத்தின் குறியீடு. அவரே ஒரு இயக்கம். அவர் தனிமனிதன் என்ற நிலையை எப்போதோ கடந்துவிட்டார்.

மனிதர்கள் சித்தாந்தங்களை உருவாக்குகிறார்கள். சித்தாந்தங்களுக்கு சீடர்கள் உருவாகிறார்கள். உருவாக்கியவர் ஒரு அமைப்பாக/ குறியீடாக ஆகிறார். அந்தக் குறியீடு உருவாக்கியவரைவிட பெரிதாக ஆகிறது.

இனிமேல் அவர் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் பெயரே போதும் எல்லா செயல்களும் செய்ய. உண்மையில் அவரே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

எனவே அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, அந்த அமைப்பின் மீதுதான்.

இந்த அளவில் அமெரிக்க தண்டனை கொடுத்தது அமெரிக்காவுக்கு வெற்றிஎனவே கொள்ளவேண்டும், தண்டனை பெற்றவர் அதை முழுவதும் அறியும் நிலையில் இல்லாமல் இருந்திருந்திருந்தாலும்.

20 ஏப்ரல் 2011

நம்ம டீம்.. விசில் போடு..

ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு சின்ன கேள்வி கேட்டதற்காக என் நண்பன் என்னை கசமுசாவெனத் திட்டிவிட்டான்!


"இன்னிக்கு மேட்ச்ல நாம கண்டிப்பா ஜெயிக்கிறோம்டா.." என்றான் என் நண்பன்.


அவனின் நம்பிக்கை எனக்கு சந்தோஷமாக இருந்தாலும், நான் எதுவும் எனக்குச் சின்ன சந்தேகம். நானா? விளையாடவா? விளையாடி ஜெயிக்கவா? ஹ.. ஹ.. ஹே...



"நாம ரெண்டுபேரும் ஏதாவது விளையாடப்போகிறோமா? எங்கேடா? நாம ஜெயிக்கிற அளவுக்கு யாருடா அந்த டுபாகூர் டீம் " உண்மையிலேயே ஆர்வத்துடன் தான் கேட்டேன்.



அதற்குத்தான் அவ்வளவு பிரச்சனை! கண்டபடி திட்டிவிட்டான். நான் நாட்டு நடப்பு தெரியாமல் இருக்கிறேனாம்.






ண்மையில் அவன் சொன்னது ஐ பி எல் கிரிக்கெட் பற்றியாம். நாம விளையாடுகிறோம் என்று சொன்னால் அது சென்னை டீம் விளையாடுவது என்று அர்த்தமாம். ஹ்ம்ம்



இவர்களை என்ன நாமா தேர்ந்தெடுத்தோம்? உண்மையில் இதில் பாதிக்குமேல் தமிழ்நாட்டு பசங்களே இல்லை. இதை சென்னை டீம் என form பண்ணிவிட்டார்கள். இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நம்மைத் திட்டுகிறார்கள். என்ன கொடுமை சார்.



"தோனியை எல்லாம் சென்னை கேப்டனாக ஏற்றுக்கொள்ள முடியாது" என்றேன்.



"அப்படின்னா ஆனால் முதலமைச்சர், பிரதமர் எல்லாம் நீ பிடிச்சா செலக்ட் பண்ணின?" என்றான்.



பிரதமர், முதலமைச்சர், கலெக்டர், போலீஸ் இவர்களெல்லாம் நம்முடைய பிரதிநிகள், நமது வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்று நமக்காக வேலை செய்பவர்கள். இவர்களைப் பிடிக்கிறதோ இல்லையோ, இவர்கள் நம்ம ஆட்கள் தான்.



நேரடியாகவோ அல்லது மறைமுகவாகவோ நாம் தான் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம்.



இதையும் விருப்பத்திற்காக பார்க்கும் விளையாட்டையும் ஒப்பிடமுடியாது என்றேன்.



"அப்படியா? அப்படின்னா இந்த கிரிக்கெட்டில் இவ்வளவு பணம் விளையாடுகிறதே? இதெல்லாம் யாரு பணம்" என்றான்.



யோசிக்கவேண்டிய விஷயம் தான்.





கிரிக்கெட் இவ்வளவு பெரிய விஷயமானதற்கும் இந்தியா கிரிகெட்டின் தலைநகரமாக ஆனதற்கும் ஒரு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளின் வளர்ச்சி.



இந்திய தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமையே இப்போது கிரிகெட்டின் பொருளாதாரமாக உள்ளது.



எனவே இந்த சேனல்களுக்கு நாம் செலுத்தும் பணம் மற்றும் அதிலிருக்கும் விளம்பரங்கள் ஆகியவையே கிரிக்கெட் அரசாங்கத்தின் முக்கிய வரி வருமானம்.



அப்படிப்பார்த்தால் இவர்களும் நமது பிரதிநிதிகள் தான். இதுவும் ஒரு ஜனநாயகம் தான்.







விளக்கம் எல்லாம் சரிதான்.



"அப்படியென்றால் எல்லாமே என் விருப்பப்படிதான் நடிக்கிறதா? "



"ஆமா அதுதானே ஜனநாயகம். நீயும் மக்களில் ஒருவன்தானே. "



"எல்லாம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கிறது. ஆனால் எதோ தப்பு நடக்குறமாதிரி ஒரு உறுத்தல்
இருந்துகிட்டே இருக்கே?"



"ஹா ஹா.. அப்படின்னா கண்டிப்பா இது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் தான்." என்றான் உறுதியாக.


என்ன சொல்றீங்க?

16 ஏப்ரல் 2011

ரஜினி ரசிகனுக்கு சோதனை

பத்திரிக்கைச் சுதந்திரம் இருப்பது நல்லது தான். ஆனால்..

நமது பத்திரிக்கையாளர்கள் அந்தச் சுதந்திரத்தை வேறு யாருக்கும் கொடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார்கள் போல.


ரஜினி ஓட்டுப் போட்டதைக்கூட உள்ளேசென்று எட்டிப்பார்த்துப் படம்பிடித்த பத்திரிக்கைகளின் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஒரு புதிய முன்னுதாரணத்தை உருவாகியுள்ளது.


அவர் ஓட்டுப்போட்டதை எட்டிப்பார்த்துவிட்டு அதற்கும் பல கருத்துக்கள் சொல்லலும் பத்திரிக்கைகளை என்ன சொல்வது?


பத்திரிக்கை சுதந்திரம் என்பது மற்றவர்களின் சுதந்திரத்தை பறித்து உருவாவது தான் போல..





........................


காதல் கல்யாணம் செய்துகொள்வது ஒன்றும் தப்பு இல்லை. நல்லது தான். ஆனால்..


காதல் கல்யாணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வம்பிழுத்துக் கொண்டாலும்கூட பரவாயில்லை.


ஆனால் காதலித்துக் கல்யாணம் செய்தபின் மானாரை டார்ச்சர் செய்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.


ரஜினிபட ரீமேக், ரஜினி பாடல்கள் ரீமிக்ஸ், ரஜினிபட பெயர்கள் என தனுஷ் பண்ணும் அட்டகாசம் நிஜமாகவே தாங்கமுடியவில்லை.


"என்னோட ராசி நல்ல ராசி" என்ற ரஜினியின் பாடலில் தனுஷ்!!


ரஜினி ரசிகனுக்கு சோதனைமேல் சோதனை!!

14 ஏப்ரல் 2011

தேர்தலில் முதல் வெற்றி..

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், தமிழக தேர்தலில் முதல் வெற்றியாளர் யாரென்று தெரியவந்துள்ளது.

அந்த வெற்றியாளர் யார். வேறு யார்? அது தேர்தல் ஆணையம் தான்.

தேர்தல் நேர்மையாகத்தான் நடக்கிறது என்ற நம்பிக்கைதான் மக்கள் ஜனநாயத்தில் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்தும். அந்த நோக்கத்தில் தேர்தல் ஆணையம் சிறப்பாகவே செயல்படுவதாகத் தெரிகிறது.



சில குறைபாடுகள் இருந்தாலும், இன்னும் சில தேர்தல்களில் இன்னும் பல முன்னேற்றங்கள் வரலாம் என்றும் நம்பிக்கை வருகிறது.

கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் சொந்தஊருக்கு சென்று வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள்.


ஆனால் சொந்த ஊருக்குச் சென்றால் தான் வாக்கு என்ற நிலைமையை மாற்ற தேர்தல் ஆணையம் முயற்சிக்குமா?

வாக்குப் பதிவு எந்திரம், வெப் காம் கண்காணிப்பு, SMS tracking என தொழில்நுட்பத்தில் விளையாடும் ஆணையத்திற்கு இதுஒன்றும் பெரிய வேலை இல்லை.

பாஸ்போர்ட், வருமான வரி என்று பல விஷயங்களை நாம் இருக்கும் இடத்திலேயே செய்யமுடியும்போது ஒட்டு மட்டும் ஏன் முடியாது?

இதன்மூலம் வாக்கு சதவீதமும் அதிகமாகும், போக்குவரத்து செலவுகளும் குறையும்.

இதுபோன்ற பல முன்னேற்றங்கள் நமது தேர்தல் முறையில் வந்து நமது பங்களிப்பையும் நம்பிக்கையையும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கையோடு நாம்.

06 ஏப்ரல் 2011

உலகக் கோப்பை எங்கே?

இந்திய அணி உலக கோப்பையை வென்றதில் பலருக்கு ஏமாற்றம் தான். தோல்வியில் இருக்கும் பரபரப்பு வெற்றியில் இல்லை!


செய்தி தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிகிறது.


இந்தியா மட்டும் தோற்று இருந்தால், தோனியை கேப்டன் பதவியிலிருந்து தூக்கியிருக்கலாம். சச்சினை அணியிலிருந்தே தூக்கியிருக்கலாம். பலரை பந்தாடியிருக்கலாம். எல்லாம் போச்சு..


இப்போது வரும் செய்தியெல்லாம் அவருக்கு ஒரு கோடி, இவருக்கு ரெண்டு கோடி என்பது தான். ஆடி கார், பெர்ராரி கார் என மற்றும் பல செய்திகள். இதில் என்ன சந்தோசம் நமக்கு?


யாருக்கு வேண்டும் இந்த செய்திகள்? கேட்கவே வெறுப்பாய் இருக்கிறதல்லவா?



இப்படிப் பட்ட நிலைமையில் வந்தது ஒரு பரபரப்பு..


கொடுக்கப் பட்டது உண்மையான உலகக் கோப்பையே அல்ல என்பது தான் செய்தி.


அப்படியென்றால் உண்மையான கோப்பையை வைத்திருப்பது யார்?


உண்மையான உலகக்கோப்பை மும்பை சுங்கத்துறை அலுவலகத்தில் உள்ளது எனவும் கொடுக்கப்பட்டது மாதிரி கோப்பை எனவும் செய்திகள் சொல்கின்றன.


கொடுக்கப் பட்டது தான் உண்மையான கோப்பை எனவும் சுங்கத்தில் இருப்பது தான் மாதிரி கோப்பை எனவும் ஐ சி சி சொல்லுகிறது. போலி பெட்டியை வில்லனிடம் சிக்க வைத்துவிட்டு கடத்தல் தங்கம் இருக்கும் பெட்டியுடன் எஸ்கேப் ஆகும் அந்தக்கால சினிமா போல ஹீரோ போல ஐ சி சி செய்துள்ளதாக சொல்லிக்கொள்கிறது. ஆனாலும் யாரும் நம்புவதாகத் தெரியவில்லை.




எனவே உண்மையான உலகக் கோப்பை எங்குள்ளது என மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பரபரப்பான தகவல்கள் வந்தபடி உள்ளன.

இதைப் பற்றி தமிழக தலைவர்கள் பலரும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்..

இரண்டு கோப்பைகளுமே போலிதான் என தலைவர் கூறியுள்ளார். வடஇந்திய ஊடகங்களின் மாயையில் தமிழன் மயங்கிவிடக்கூடாது என்றும் அவர் எழுதிய கடிதத்தில் கூறியிள்ளார். தொலைந்த கோப்பையைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை என்று கூறிய அவர், தான் மறுபடி ஆட்சிக்குவந்தால் அனைவருக்கும் ஒரு கிரிக்கெட் உலகக் கோப்பை இலவசமாக தரப்படும் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் பிடிக்காதவர்கள் கால்பந்து உலகக் கோப்பையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

இது நாட்டுமக்களுக்கு மிகவும் தேவையான அறிவிப்பு. வெற்றி நிட்சயம் என்று கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தலைவரின் இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் சதி என எதிர் தலைவி கருத்துகூறியுள்ளார். கிரிக்கெட் உலகக் கோப்பை கொடுக்கும் அவர் ஹாக்கி உலகக் கோப்பையை கொடுக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஆட்சிக்கு வந்தால் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் கால்பந்து உலகக் கோப்பை இரண்டுமே கொடுக்கப்படும் என கூறியுள்ளார். அதனுடன் ஹாக்கி உலகக் கோப்பையும் கொடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.


ஹாக்கி உலகக் கோப்பை அறிவித்ததன் மூலம் தலைவியின் தேசபக்தி நிருபிக்கப் பட்டுள்ளது என மூத்த அரசியல் பத்திரிக்கையாளர் கருத்துக் கூறியுள்ளார்.


கோப்பைப் பற்றி புது கட்சி தலைவரிடம் தான் கேட்கவேண்டும் என சிரிப்பு நடிகர் கூறினார். அவர் கோப்பையை பல ரவுண்டுகளுக்கு பயன்படுத்துவார் எனக் கூறினார்.

கேப்டன் என்றால் அது ஒருவர் மட்டும் மட்டும் தான். எனவே தோணியே ஒரு போலி கேப்டன் என்று கேப்டன் கட்சியினர் கருத்துக் கூறியுள்ளனர். எனவே டோனி வாங்கிய கோப்பை செல்லாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். தமிழ் நாட்டு தேர்தலின் முடிவே தங்களுக்கு உண்மையான உலகக் கோப்பை என்று கூறினார்.



இது இப்படியிருக்க மும்பையில் இருந்து ஒரு அவசர செய்தி வந்துள்ளது..



"செல்லாது செல்லாது... எல்லாத்தையும் நிறுத்துங்க.. நான் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறேன்..." என்று சச்சின் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சர்ச்சை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் மேற்க்கண்டவாறு பதிலளித்தார்.


2015 இல் நடக்கும் உலகக் கோப்பையை வென்று உண்மையான கோப்பையை கைப்பற்றுவேன் என அவர் பேட்டியளித்துள்ளார். இதனால் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரரப்பு ஏற்பட்டுள்ளது..