Unordered List

05 டிசம்பர் 2011

ஜெயமோகனின் அறம் வெளியீடு - ஈரோடு -பயண அனுபவம்

"திருக்குறள் ஒரு நீதிநூல் அல்ல. அதிலிருப்பது அறிவுரைகள் மட்டும் அல்ல, கவிதை" என்றார் ஜெயமோகன். நேரடியாகச் சொல்லப்படும் அறிவுரைகள் ஒரு பரிமாணமுடையது என்றால், கவிவழியாக உணர்த்தப்படும் நீதி பல பரிமாணமுடையது. வாசகன் எண்ணுத்தோறும் அவன்மனத்தில் விரியக்கூடியது.

"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு"

"இதிலுள்ள ஒரு கவித்துவம் மணற்கேணி. மணற்கேணி என்பதன் முக்கியத்துவம் அறிந்ததுமே வாசகன் மனதில் பல பரிணாமங்கள் விரிவதை உணரலாம்." மெல்லிய தூறலுடன் சென்ற காலை நடையில் இப்படி தொட்டுக் காட்டினார். இப்போது இந்தக் குறள் யோசிக்க யோசிக்க விரிவடையக்கூடியது.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுவதைக் கேட்பது எப்போதுமே ஒரு உற்சாகமான விஷயம். வாய்ப்பு கிடைக்கும்பொழுது தவறவிடுவதில்லை. ஆனால் இந்த "அறம்" வெளியீட்டு விழாவுக்குச் செல்ல அழைப்பு கிடைத்தபொழுது, அதிக ஆர்வம் கொண்டேன். காரணம் இந்தக் கதைகள் முதலில் அவரது தளத்தில் வெளிவந்தபோழுதே படித்த கதைகள், சட்டென மனதுக்கு மிக நெருக்கமாக வந்த கதைகள்.


ஆனால் இந்தக் கதைகள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே பிடிக்கிறது என்பதைக் கேள்விப்படும்போது, மகிழ்ச்சியாக இருந்தபோதும் சின்னக் கேள்விகளும் வராமலில்லை. எல்லோருக்கும் பிடிப்பதால் தான் இது எனக்கும் பிடிகிறதா? எல்லோருக்கும் கிடைத்த அனுபவம் தான் எனக்கும் கிடைத்ததா? அல்லது எனக்குக் கிடைத்த அதே அனுபவம் எல்லோருக்கும் கிடைத்ததா? அல்லது இவை எல்லோருக்கும் ஒரே eமாதிரியிருக்கும் எளிய கதைகளா?


இந்தக் கதைகளை வாசித்த நண்பர்களுடன் இதை விவாதிக்கத் தவறியதில்லை. ஈரோடு வாசிப்பு இயக்கம் நடத்தியஇந்த வெளியீட்டு நிகழ்ச்சி இதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.


....................................................................................................................................................................

விழாக் காட்சிகள் (Click on picture for bigger image)



சனிக்கிழமைக் காலை ஈரோடு வந்துசேர்ந்தோம். நண்பர் விஜயராகவன் இல்லத்தை 7 மணிக்கு அடைந்தபோது நாங்கள் வந்தது தாமதமோ என்று உணர்ந்தோம். ஏனென்றால் ஜெயமோகனின் குரல் அப்போதே கேட்டுக்கொண்டிருந்தது. இலக்கிய அரட்டை ஆரம்பமாகிவிட்டிருந்தது. உடனடியாக ஜோதியில் ஐக்கியமானோம்.

தமிழ், தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், சுற்றுச்சூழல் என்று பல கேள்விகள். அதற்கு அருமையான ஆழமான பதில்கள். தேர்ந்த வாசகர்களின் கருத்துப் பரிமாற்றங்கள்.

வாசகர்கள் வந்தபடியே இருந்தனர். அந்தக் கூட்டம் இயல்பாக, உற்சாகமாக இருந்தது. பலதரப்பட்ட கேள்விகள் வந்தபடியே இருந்தன. கிருஷ்ணன், சீனு போன்ற தேர்ந்த வாசகர்கள், இப்போதுதான் அவரை முதல் முறையாகச் சந்திக்கும் பல புதிய வாசகர்கள். எல்லோருக்கும் சமமாகத் தன் கவனத்தை அளித்தபடி உரையாடினார் எழுத்தாளர். மிக உற்சாகமான பேச்சு அது.

ஈரோட்டில் இதனை இலக்கிய வாசகர்களா என ஆச்சர்மளித்தனர். ஆழமான இலக்கியக் உரையாடல், விருந்தோம்பல், விழா அமைப்பு என ஒவ்வொன்றிலும் அவர்களின் நேர்த்தி வெளிப்பட்டது.

மாலையில் விழா. சொன்ன நேரத்தில் ஆரம்பமானது. வெளியிடப் படும் புத்தகத்தில் இருக்கும் கதைகளை நான் ஏற்கனவே படித்திருந்ததால், விழா பேச்சாளர்கள் இந்தக் கதைகளை எப்படி அணுகிறார்கள் என்று கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் இருந்தது.விழாவை ஏற்பாடு செய்திருந்த நண்பர்களுக்கும் இதே ஆர்வம் இருந்திருக்கும் போல, அது அவர்களால் பேச அழைக்கப் பட்டவர்களைப் பார்க்கும்பொழுது தெரிந்தது, ஒவ்வொருவரும் வெவ்வேறு தளத்தில் இயங்கி வருபவர்கள்.


இந்த விழாவில் கலந்துகொண்ட பார்வையாளர்களில் பெரும்பாலோர் இந்தக் கதைகளை ஏற்கனவே படித்தவர்கள். எனவே பேச்சாளர்களுக்கு நூலை உண்மையில் அறிமுகப் படுத்தவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. அனைவரும் கதைகளைப் பற்றிய தங்கள் அனுபவத்தை அழகாகப் பேசினர்.

விழாவில் பேசியவர்கள் (Click on picture for bigger image)



எளிமையாகப் பேசிய இடதுசாரியான தலைமை வகித்த தோழர்.வி.பி. குணசேகரன் ,கதையின் உச்சத்தை ஒரு சினிமா போல விவரித்த கல்லூரி தாளரான வாசகர் எஸ்.கெ.பி. கருணா, யானை டாக்டர் கதையின் நாயகரை நேரில் அறிந்த டாக்டர் ஜீவா, அறம் கதை தன்னை ஆட்கொண்டதை உணர்சிகரமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் மிஷ்கின், இன்னும் பல கதைகளோடு ஒப்பிட்டு, இந்தக் கதைகள் தனக்கு அளித்த அனுபவத்தை கதையாகச் சொன்ன எழுத்தாளர் பவாசெல்லத்துரை, கதைகளின் பல நுட்பங்களை தொட்டுக் காட்டிய எழுத்தாளர் நாஞ்சில்நாடன், ஒரு புன்சிரிப்புடன் கவிதையாகப் பேசிய மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன என ஒவ்வொருவரும் தனித் தனி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.



தேர்ந்த வாசகர்கள் தங்களுக்குள் வாசக அனுபவத்தை பரிமாறிக்கொள்வது போலிருந்தது அந்த விழா.

ஜெயமோகன் பேச்சு மிக உணர்சிகரமானது. இலட்சிய வாழ்கையை விரும்புமொருவனின் மனப் போராட்டத்தை, இந்தக் கதைகள் உருவாக சூழலை, விளக்கினார்.

மனதிலிருக்கும் லட்சியவாததுக்கும், நாமைச் சுற்றி எங்குமிருக்கும் யதார்த்தவாதத்துக்கும் நடக்கும் ஓயாத போராட்டத்தில், அறம் மேலெழும் தருணங்கள் இந்தக் கதைகள். இந்தக் கதைகளின் வெற்றி லட்சியவாததுக்கு இன்னும் வரவேற்ப்பு இருப்பதை உணர்த்தும் விஷயமாக இருக்கிறது.

விழாவில் பேசியவர்கள் மற்றும் வாசர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது ஒன்று புரிந்தது. ஒவ்வொருவருக்கும் இந்தக் கதைகள் ஒரு தனிப்பட்ட அனுபவத்தை அளித்துள்ளன.


டாக்டர் ஜீவா பேசியபொழுது சொன்ன ஒரு கருத்து நினைவுகூரத்தக்கது. யானை டாக்டரான கிருஷ்ணமூர்த்தியை தனக்கு நன்றாகத் தனிப்பட்ட முறையில் தெரியுமெனக் குறிப்பிட்ட ஜீவா, அதை கதையாக எழுதியதின் மூலம், அவரது பெருமை பலபேரை சென்றடையச்செய்ததற்காக ஜெயமொனைப் பாராட்டினார்.

ஆம் அது தகவலாக இருந்திருந்தால் ஒரு அது ஒரு பரிணாமத்துடன் இருந்திருக்கும். ஆனால் ஜெயமோகன் அளித்திருப்பது உண்மைத் தகவல்கள் கலந்த ஒரு புனைவு உலகம். அது வாசக மனத்துக்கு எல்லையில்லா பரிணாமங்களை தந்துகொண்டேயிருக்கிறது.



---------------------------------------------------------------------------------------------

ஜெயமோகனுடன் நண்பர்கள் (Click on picture for bigger image)



விழா சிறப்பாக நிறைவு பெற்றாலும் ஜெயமோகனை அவ்வளவு எளிதாக விடவில்லை வாசகர்கள். தொடர்ந்தன கருத்துரையாடல்கள்.


அடுத்தநாள் நடந்த வன சுற்றலா ஒரு மறக்க முடியாத அனுபவம். இலக்கியத்தில் நனைந்துகொண்டே சென்ற அறுபுதமான பயணம் அது. கூடுதலாக மழையும் கொஞ்சம் நனைத்தது.


இயற்கை காட்சிகள் (Click on picture for bigger image)


ஈரோடு - 26 நவம்பர் 2011


அறம்சிறுகதைத் தொகுப்பு