Unordered List

24 டிசம்பர் 2021

தொடரும் தொன்மங்கள் - எழுத்தாளர் சுஷில்குமாரின் சிறுகதைகள் பற்றி சில எண்ணங்கள்

சமீபத்தில் வந்த ஸ்பைடர் மேன் படம் Spider-Man: No Way Home, இந்தப் படத்தின் முக்கிய ஆரம்பக்காட்சியைப் பார்க்கும்போது  சுஷில் குமாரின் ஒரு கதை நினைவுக்கு வந்தது.  சுஷில்குமாருக்கும் ஸ்பைடர்மேனுகும் என்ன சம்பந்தம் என பார்ப்பதற்குமுன், எழுத்தாளர் சுஷில்குமார் இந்த வருட விஷ்ணுபுரம் விழாவின் ஒரு விருந்தினராகவும் இருப்பதால் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "மூங்கில்" மற்றும் சில கதைகள் வாசித்தவரை எனது தற்போதைய எண்ணங்களை தொகுத்துக்கொள்கிறேன்.

ஒரு கதையில் கல்யாண வீடுகளில் எச்சில் இலை எடுப்பது வரை பிழைப்புக்காக பல வேலைகள் செய்து பிழைக்கும் ஒருவன் அதில் ஒரு வேலையாக ஒருமுறை செண்டை மேளம் அடிக்கும்போது அவனைப்பார்த்து பார்த்து காதல்வயப்பட்டு திருமணமும் செய்துகொள்கிறாள் ஒருத்தி. அவன் பிழைப்புக்காக பல தொழில்கள் செய்தாலும், அவள் அவனை மிகவும் விரும்புவது என்றால் அவன் நேருக்கு நேர் நின்று பன்றி வேட்டையாடும்போது தான், அதைச் செய்யவே அவனை அவள் ஊக்குவிக்கிறாள். பன்றியென்றால் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பன்றியல்ல ஒரு காட்டெருமை அளவுக்கு பெரிய மற்றும் பன்றிக்கேயான கடும் மூர்க்கம் என ஆக்ரோஷமான மிருகம் அது என்று இந்தக் கதையில் காட்டப்படுகிறது. அந்த வேட்டையில் தான் அவன் முழுவதுமான வெளிப்படுகிறான், இதில் என்ன சோகம் என்றால் அவன் ஆளுமை வீழ்வதும், அவனை நினைத்து அவள் பயப்படவும் வெறுக்கவும் ஆரம்பிப்பதும் அதே பன்றி வேட்டையில் தான்.

வேட்டை என்பது ஒரு கொலைத்தொழிலாக இருந்தாலும் அங்கு வேட்டையாடுபனும் வேட்டையாடப்படுவதும் சமமாக இருந்து விளையாடும் வரை அது ஒரு விளையாட்டாக இருக்கிறது. மனிதன் மிருகங்களை கொல்லவே கூடாது என்பது மிக மேலோட்டமான பார்வை, மனிதனும் ஒரு உயிரிதான் என்ற முறையில் தன் உணவுக்காக பிழைப்புக்காக அந்த வேட்டையாடும் மிருகத்தின் சமநிலையும் குறையாத அளவுக்கு செய்யும் வரை அதுவும் இயற்கை தான். மீன்களை அவற்றின் இனப்பெருக்கக்காலத்தில் பிடிக்ககூடாது என்பது  போல குட்டிகளுடன் இருக்கும் தாய் மிருகங்களைக் கொல்வதும் சமநிலையைக் குலைத்து அந்த இன அழிவுக்கு வழிகோலும் என்பதால் தவிற்கப்படவேண்டும் என்பதெல்லாம் தர்க்கத்தின் வழியாக வரும் கருத்துக்கள்.

ஆனால் அவன் பலநாட்களாக வேட்டை எதுவும் கிடைக்காத ஒரு விரக்தி நேரத்தில், குட்டிகளோடு இருக்கும் தாய்ப்பன்றியை கொன்றது மிகப்பெரிய தவறென அவள் உணர்வது எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்பட்டல்ல. அது அவள் வளர்ந்த நிலம் அவளுக்குக் அவளறிந்த தொன்மங்கள் வழியாகக் கையளித்திருக்கும் அறம் வழியாக. இந்தக் கதையின் முடிவில் அதுவே அவர்களது மகனை இந்த விஷச்சூழலில் இருந்து மீட்கிறது. அன்றாட பலன்கள் சுயநலம் தாண்டி அவளை இயக்குவது இவையே.

எழுத்தாளர் சுஷில் குமாரின் மூங்கில் தொகுப்பில் பல கதைகளின் மையச்சரடாக இந்தத் தொன்மங்கள் மனித மனத்தில் கொண்டுள்ள ஆளுகையின் விளைவான விளையாட்டுகளை நான் காண்கிறோம். பல கதைகள் இந்த விளையாட்டின் எல்லையைச் சோதிக்கின்றன.

பட்டுப்பாவாடை என்ற கதை கோரானா நேரத்தில் கிட்டத்தட்ட தங்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கும்போது, தான் அம்மனுக்கு செய்யவேண்டிய கடமையை தன் உயிருக்கும் மேலாகக் கருதும் அதற்காக கொள்ளையில் கூட இறங்கும் அதற்கும் மேலாக, தன் உயிரையே விடத் துணியும் மனநிலையைக் காட்டுகின்றது. இப்படி உயிரையே தியாகம் செய்து அவர்கள் கடத்துவது எதை என்ற கேள்வியை வாசகனுக்குக் கடத்துகின்றது.

பல கதைகளில் நாஞ்சில் நாட்டு தொன்மங்கள் இருக்கும்போது அதே நிலத்தில் நடக்கும் புத்துயுர்ப்பு கதையில் கிட்டத்தட்ட இதற்கு இணையாக பைபிள் சொல்லப்படுவதையும் கவனிக்கமுடிகிறது.


நாஞ்சில் நிலத்தைத் தவிர இந்தக் கதைகளில் ஆரல்வாய்மொழி ஒட்டிய வறண்ட நிலத்தின் கதைகள், வெளிநாட்டில் நடக்கும் கதைகள் ஆகிய்வையும் உள்ளன. இந்த நிலங்கள், அந்தச் சூழல் மற்றும் காலநிலைகூட மனிதர்களின் மனநிலைகளில் உருவாக்கும் மாற்றத்தையும் காட்டுகின்றன.

இன்னொரு பார்வையில் வறண்ட நிலத்தில் நடக்கும் "சுருக்குக்கம்பி", பாம்பே வாழ்கையைக் காட்டும் "இருகோடுகள்", நாஞ்சில் நிலத்தின் "விதை" ஆகிய கதைகளில் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் என்ற நிலையில் இருந்து மரணத்தின் விளிம்பைத் தொட்டபின் மீழும் புது நம்பிக்கை எந்த நிலத்துக்கும் பொதுவாக இருக்கின்றது.



இந்தக் கதைகளைப் தொகுத்துப்பார்க்கும்போது  இவற்றுக்கு நேரடி சம்பந்தம் இல்லையென்றாலும் என் நினைவுக்கு வருவது டிஜிடல் சர்வைலன்ஸ் அல்லது இப்போதைய தொழில்நுட்ப கண்காணிப்பு.

டிஜிடல் சர்வைலன்ஸ்  என்பது இன்றைய உலகத்தின் மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதை முன்பே இங்கு விவாதித்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக, "ரகசியமாக" வளர்ந்துகொண்டிருந்த இந்தப் போக்கு, கோரோனா சமயத்தில் அதற்கான "தேவை" இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்து மிக வேகமாகவும் வெளிப்படையாகவும் அரசுகளாலும், பெருநிறுவனங்களாலும் செயல்படுத்தப்படுவதை கவனிக்கிறோம். இனிமேல் பின்னால் செல்லவே முடியாத அளவுக்கு நம்மைச் சுற்றி இவை இருக்கின்றன.

இந்த டிஜிடல் சர்வைலன்ஸ் உலகில் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் சிலரின் உரிமைக்குரலாக The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை எழுப்பப்பட்டது. ஒருவர் இணையத்தில் சில விஷயங்கள் செய்திருக்கலாம், பின்னர் அவர் நினைத்தால் அதை நீக்கும் உரிமை அவருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகப் கோரப்படுகிறது. ஏனென்றால் கடந்தகாலத்தின் சுமைகளில் இருந்து விடுபட்டு மனிதர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்வதற்கான உரிமை தேவை. இது டிஜிடல் உலகில் மிக நியாயமான கோரிக்கை தான்.


ஆனால் மனிதமனம் அவ்வளவு எளிதான கருப்புவெள்ளையானது அல்ல, அது குற்றத்தைப் பதிவு செய்யும், தண்டனையளிக்கும் முறை வேறானது. இங்கு The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை மிக எளிதல்ல.  பல கதைகளின் மையச்சரடாக இருக்கும் குற்றவுணர்வு,  சாபம் அல்லது கடந்தகாலத்தின் தண்டனையில் இருந்து மீள்தல் என்பதாக இருக்கின்றது. உண்மையில் நாம் நம் செயல்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்களா அல்லது இந்தச் சுமை நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறதா என்ற கேள்வியை பச்சைப்பட்டு என்ற கதை எழுப்புக்கிறது.  இதன் பல பரிணாமங்களை பல கதைகளில் காணமுடிகிறது. இதில் சாபம் கதை மட்டும் இதன் எதிர் எல்லையை கொஞ்சம் நகைச்சுவையுடன் கையாள்கிறது.


திறமையான, பிறருக்கு உதவி செய்யும், ஆனால் தன் மேட்டிமைத்தனத்தை சுமக்கும் கௌரவம்,  அக்னி போன்ற கதைகள் மனித உணர்வுகளின் நுட்பங்களைக் காட்டுகின்றன.


பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு பண்பாடும் மாயங்களும் பல கதைகள் இருந்தாலும் அதிலேயே சமூகத்தின் பலநிலைகளில் இருக்கும் மனிதர்களை துல்லியமாக சித்தரிப்பது எழுத்தாளர் சுஷில் குமாரின் தனித்தன்மையாக சொல்லலாம். நாஞ்சில் பகுதிக்கு வெளியில் ஐடி, கல்வித்துறை, வெளிநாடுகள் என பல களங்களில் இருக்கும் கதைகளும் எழுத்தாளரின் பன்முக கலாச்சர அறிமுகத்தைக் காட்டுகின்றன.


ஸைபைடர்மேன் படத்தில் தன்னைச் சார்ந்தவர்கள் படும் துயரத்தை தாங்கமுடியாமல் காலத்தையே மாற்றியெழுதும் காட்சியை எழுத்தாளர் சுஷில் மூரையும் பொன்னும் கதையில் நாஞ்சில் தொன்மங்கள் வழியாகத் தொட்டிருக்கிறார். அவர் கையில் இருக்கும் இந்த வளமான தொன்மங்களும், அவரது கதைசொல்லல் பாணியும், பன்முக காலாச்சார அறிமுகமும் அவர் வரும்காலத்தின் முக்கிய படைப்பாளியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.

16 டிசம்பர் 2021

கோலி எனும் இலக்கில்லாத துப்பாக்கி

2015 வருடம் அப்போது இந்திய க்ரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனிக்கு சின்ன சோதனைக் காலம், அதைப்பற்றி அப்போது பவுலராக இருந்த் அஸ்வினிடம் கேள்வி கேட்கப்பட்டது. "ஒரு போரில் தலைவன் பின் தான் வீரர்கள் நிற்கவேண்டும், என் தலைவர் சொன்னால், நான் களத்தில் உயிரைக்கொடுக்கத்தயார் என்றார்"

அப்போது சில அதிர்வலைகளை உருவாக்கிய பேட்டி அது. நன்றாக கவனித்தால் தோனி எந்த அளவு ஜூனியர் வீரர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தார் என்பதை இது காட்டுகிறது. 

இது இப்படியென்றால சிஎஸ்கே அணி அமைக்கப்பட்டபோது அப்போது ஜூனியராக இருந்த ரவீந்திர ஜடேஜா  பெரும் விலைக்கு வாங்க்கப்பட்டது பல புருவங்களை உயர்த்தச் செய்தது. அப்போது அவர் "சர் ஜடேஜா" என அன்பு கடந்த கிண்டலுடன் அழைப்பட்ட காலம். ஒரு கிசுகிசுவாக இருந்த அந்தப் பட்டப் பெயரை அப்போது கேப்டனாக இருந்த தோனி பேட்டிகளிலும் டிவிட்டரிலும் பேசி ஜடேஜாவை நம்ம வீட்டுப்பையன் என்று நினைக்க வைத்தார்.

இதை விட முத்தாய்ப்பாக தனக்கு அடுத்த கேப்டனையும் உருவாக்கினார் தோனி, ஒரு மேட்சில் விராத் கோலி சிறப்பான ஆட்டத்தால் ஜெயிக்கும் நிலைக்கு வர, அந்த ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்த தோனி நினைத்திருந்தால் வின்னிங் ஷாட் அடித்திருக்கலாம். ஆனால் அதை தக்கவைத்து கோலிக்கு வின்னிங் ஷாட் அடிக்க வாய்ப்பு கொடுத்தார். அது சும்மா இல்லை, கோலிக்கு அந்த தகுதி இருக்கிறது என்று நினைத்துதான் கொடுத்தார். 



அப்படி தோனியால் கைகாட்டப்பட்ட கோலி எங்கே ஒரு கேப்டனாக வெற்றி பெறமுடியவில்லை? முன் சொன்ன சம்பவங்களை மறுபடி யோசியுங்கள் கோலி கேப்டனான பின் எத்தனை ஜூனியர் வீரர்கள் கோலிக்காக "உயிரைக்கொடுக்க" தயாராக இருக்கிறார்கள்.

அப்படியென்றால் தோனியால் கைகாட்டப்பட்ட கோலி தகுதி இல்லாதவரா? இந்தக் கேள்விக்கு பதில் தேடும்முன் இந்திய க்ரிக்கெட் போர்டில் மாநிலங்களின் ஆதிக்கத்தை மனதில் வைக்கவேண்டும். இந்திய க்ரிக்கெட் போர்டில் மூன்று மாநிலங்கள் தான் பெரிய அளவில் சக்தியானவை மும்பை, கர்நாடகா அடுத்து சென்னை. விளையாடும் 11 பேரில் சில காலகட்டங்களில் இந்த மாநில வீரர்கள் நான்கு,ஐந்துபேர் என இடம் பிடித்து தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய காலங்கள் உண்டு. 

இந்த மாநிலங்களைத்தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வந்து கேப்டனாக ஜெயிக்க பெரும் வல்லமையும் கரிஷ்மாவும் வேண்டும். கபில்தேவ்,கங்குலியில் இருந்து தோனி வரை அப்படிப்பட்ட போர் வீரர்கள் தான். அந்த வழியில் கோலி கேப்டனானதும் தனது அந்த அசாத்திய திறமை மற்றும் போர்குணத்தால் தான். தோனி தனது தொடர்ச்சியாக கோலியை நினைத்ததும் இந்தக் காரணத்தால் தான்.

ஆனால் கோலியின் போர்க்குணம் எங்கே குறி தவறியது என்பது தான் பிரச்சனையாக ஆகிறது. கபில்தேவ் சச்சின் போன்றவர்கள் சின்ன டீம்களுடம் விளையாடும் போது மிக நட்பாக இருப்பதை கவனிக்கமுடியும். ஆனால் பாகிஸ்தான்,ஆஸ்திரேலியா, இங்கிலாந்துபோன்ற சவால்களின்போது மிக கடுமையாக போராடுவதை கவனிக்கமுடியும். கேப்டன் கூல் எனப்படும் தோனி கூட பாகிஸ்தான்/ஆஸ்திரேலியா போட்டிகளில் அதிக ஆக்ரோஷம் காட்டுவதை கவனிக்கமுடியும். 

ஆனால் ஐபில் போன்ற போட்டிகளில் கூட பொங்கும் கோலி சமீப பாகிஸ்தான் போட்டியின் தோற்றதையும் அதை மிக ஜாலியாக எடுத்துக்கொண்டதும் மக்களால் ரசிக்கப்படாது என்பதை அவர் உணரவில்லை என்று படுகிறது. நீ அவ்வளவு நல்லவன்(கூல்) இல்லையே என கிண்டலடிக்கப்ப்ட்டது. தற்போது மீடியாவில் இருக்கும் அரசியல் சரிநிலைக்காக தன் க்ரிக்கெட் பாரம்பர்யத்தை விட்டுக்கொடுத்துவிட்டார் என விமர்சிக்கப்பட்டார். முக்கிய போட்டிகளில் சச்சின் கபில் போன்றவர்கள் தோற்றால் அவர்கள் சோக முகமே நமக்கு ஆறுதலாக அமையும் என்பதையும் கவனிக்கமுடியும்

தன் எதிரிகளை கையாள்வதிலும் இதே குறி தவறிய நிலை தான் கோலி எடுத்துக்கொண்டிருந்தார். சமீபத்தில் சரியாக விளையாடாத ரோஹித்துக்குப் பதில் ஏன் பார்மில் இருக்கும் இஷாத் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என கேள்வி கேட்கப்ப்பட்டபோது "அய்யோ ரோஹித்தை தொடுவதா என பதறினார்". சரியாக விளையாடாத ரஹானே, புஜாரா ஆகியோரை தொட பயப்படும் அவர், ஜூனியர் வீரர்களுக்கு தோனி செய்ததுபோன்ற அந்த நம்பிக்கையை அளிக்கவில்லை. அதுவே அவருக்கு பிரச்சனையானது.

கோலியின் வெற்றி சதவீதம் பழைய கேப்டன்களை விட நன்றாக இருக்கிறதே என்று சொல்பவர்கள் கடந்த பத்து வருடமாக இந்திய க்ரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதவர்கள் என்று சொல்லலாம். 2007 உலகக் கோப்பையில் டிராவிட் தலைமையிலான இந்திய அணி மிக பரிதாபமான தோல்வியைடந்தது. கிட்டத்தட்ட க்ரிக்கெட் மீதே இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில் தான்  கபில் ஆரம்பித்த ஐ,சி,ல் தொடர்ச்சியாக வந்த் ஐ,பி.ல் அந்த நிலையை மாற்றியது, இப்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. அந்த நிலையில் கேப்டனாக தோனியும் அப்போது வீழ்ந்திருந்த கேப்டன் என்பதன் பெருமையை மீட்டெடுக்க உதவினார்.

இப்போது இந்தியாவில் இருக்கும் திறமையான வீர்களைன் காரணமாக, சரியான அணி தேர்வு செய்தாலே இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நிலைமை தான் இருக்கின்றது. எனவே இயல்பாக வெற்றி சதவீதம் அதிகம் இருக்கும். ஆனால் அதிக கேப்டன்ஸி தேவைப்படும் ஐ.சி.சி தொடர்க்களை ஜெயிப்பதே இப்போது சவால். அதில் கோலி தொடர்து தோற்க முன்சொன்ன இரணடு காரணங்கள் தான் காரணமாக அமைகின்றன.

எனவே கோலி சாதாரண ஆள் இல்லை, தோனி கைகாட்டிய பவர்புல் துப்பாக்கி, ஆனால் ஒரு கேப்டனாக அது இலக்கின்றி எதிராளிகளை விட்டுவிட்டு எளியவர்களையும் தன்னை நம்பியிருப்போரையும் சுட்டு இலக்கில்லாத துப்பாக்கியானது தான் சோகம்.

06 ஆகஸ்ட் 2021

எம்ஜியாரும் கமலும் - சர்பேட்டா பரம்பரை ஒரு யுடியூப் பார்வை

இந்த ஊரடங்கு ஆரம்பித்த காலத்தில் சினிமாக்கள் சீரியல்கள் எல்லாம் பரபரப்பாக மக்கள் பார்த்தாலும் சில மாதங்களிலேயே பலருக்கும் அது போரடித்துவிட்டது. ஆனால் யுடியூப் அப்படி போரடிப்பதில்லை, ஏனென்றால் இதில் இருப்பது நிஜ மக்களின் பங்களிப்பு.

நீங்கள் ஏ.ஐ முதல் கோழி வளார்ப்பு வரை எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையின் வல்லுனர்களின் கருத்துக்கள் அதில் இருக்கின்றன. கற்றுக்கொள ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு அது ஒரு பெரிய புதையலாக இருக்கிறது. நான் நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர் இல்லை, ஆனால் யுடியூப் ப்ரீமியம் பணம் கட்டுகிறேன். ஏனென்றால் புனைவை விட நிஜம் பல சமயங்களில் ஆச்சர்மளிப்பது.

சர்பேட்டா பரம்பரை சமீபத்தில் பார்த்த நல்ல தரமான சினிமா. அதிக சிக்கல்கள் இல்லாமல் பீல் குட் சினிமா விரும்பும் என்னைப்போன்றவர்களுக்கு இன்னும் அதிகமாகப் பிடித்திருக்கிறது என்பதில் ஆச்சர்யம் இல்லை.

அந்த சர்பேட்டா படம் பற்றி இந்த டியூப் வழியே ஒரு பார்வை.

---

சார்பேட்டா பரம்பரை படம் ஒரு வாழ்க்கையை இயல்பாகக் காட்டியிருந்தாலும் சில இடங்கள் கொஞ்சம் ஓவர் டோஸாக இருப்பதும் கவனிக்கமுடிந்தது.

இந்தப் படத்தில் ரங்கன் வாத்தியார் திமுகக்காரராகக் காட்டப்படுவதும் படத்தின் ஒரு முக்கியப்புள்ளியில் ஆட்சிக்கலைப்பு வருவதும் அரசியல் அந்தக் கால வாழ்க்கையில் இருந்தது இயல்பாக இருக்கின்றது.

இன்னொரு காட்சி. ஜெயிலில் இருந்து வெளியே வரும் ரங்கன் வாத்தியாரிடம் ரிக்‌ஷாக்காரர், ரங்கன் வாத்தியாரின் மகனான வெற்றி அதிமுகவில் சேர்ந்ததைக் காட்டி அங்கலாய்க்கிறார், அடுத்து அவர் வீட்டிலும் அவரது மகனின் அறையில் எம்ஜியார் புகைப்படத்தில் இருக்கிறார். அதிமுக - திமுக போட்டியும் இதில் சரியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அளவில் அரசியல் உறுத்தலாகத் தெரியாமல் இருந்தாலும் பின்வரும் காட்சிகள் அப்படியில்லை.

உதாரணமாக இந்தக் காட்சியை இன்னொரு முறை கவனியுங்கள். ஆட்சிக்கலைப்பு நடந்து ரங்கன் வாத்தியாரை கைதுசெய்ய போலீஸ் வருகிறது.

யாருக்கும் பயப்பட மாட்டேன், இங்கே தான் இருப்பேன் என்கிறார் ரங்கன் மாஸ்டர். ஆனால் அதற்கு முன் ஒரு வசனம் சொருகப்பட்டிருக்கிறது.

"கழகத்தோட உடன்பிறப்பு நான்" என, அப்போது ரங்கன் வாத்தியார் தெரிவதில்லை, மேடையில் ஆர்யா நிற்கும் காட்சியை வைத்து வாய்ஸ் ஓவரில், கொஞ்சம் கவனித்துப்பார்த்தால் இந்த உடன்பிறப்பு வசனமும், அடுத்து வரும்வசனமும் குரலில் கூட நல்ல வித்தியாசம் இருக்கிறது. இந்த இரு வசனங்களும் கண்டிப்பாக ஒரே சமயத்தில் பேசப்படவில்லை என்பதை கவனிக்கமுடிகிறது. அந்த உடன்பிறப்பு வசனம் தனியாக நிற்கிறது. 

அடுத்து கருணாநிதி மகன் ஸ்டாலினையே கைது செய்துவிட்டார்களாமே என அதுவும் மிக எளிதாக வாய்ஸ் ஓவரில் இருப்பதும் 

இதில் இன்னொரு ஆச்சரியம் படத்தில் இவ்வளாவு பேசினாலும் கடைசியில் காட்ட எம்ஜியார் படங்கள் தான் இருக்கின்றன, ஒரு கலைஞர் படமும் இல்லை. அதாவது படத்தின் வசனங்களில் திமுக பங்களிப்பு அதிகம் சொல்லப்பட்டு அதிமுக பங்களிப்பு எதுவும் சொல்லப்படாத நிலையில் அதே படத்தில் கடைசியில் காட்டப்படும் நிஜ புகைப்படங்களில் கலைஞர் இல்லாமல் எம்ஜியார் குத்துச்சண்டை வீரர்களுடன் நிற்கும் இரு படங்கள் இருப்பது ஒரு நகை முரணாக இருக்கிறது. 

இங்கே தான் யுடியூப் களத்துக்கு வருகிறது

இந்தப் படத்தின் சிகை வடிவமைப்பளார் பேட்டியில் எம்ஜியார் போல ஒருவருக்கு மேக்கப் போட்டதாக்ச் சொல்கிறார். அந்த மேக்கப் மிகச் சரியாக அமைந்து அவரோடு தான் விரும்பி செல்பி எடுத்துகொண்டதாகக் கூட சொல்கிறார். ஒருவேளை இந்தப்படம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வந்திருந்தால் படத்தில் கூட எம்ஜியார் இருந்திருப்பாரோ என்பது சுவாயஸ்யமான சாத்தியமாக இருக்கிறது.

---

இந்தப் படத்தின் ராமன் கேரக்டர் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம். திறமை அழகு வசதி எல்லாமும் தனக்கு இருந்தும் திடீர் என பின்னால் நின்ற ஒருவன் தன்னை வென்று  முன்னேறிச் செல்வதை நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பாத்திரம். அந்த புதியவனும் தனது குருவையே ஆரிசியராகச் சொல்கிறான் என்பதும் ராமனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த நடிகரின் யுடியூப் பேட்டியின் கீழே இந்தக் கமெண்ட்.




அதாவது படத்தில் இந்த ராமன் கேரக்டர் வரும்போதெல்லாம் கமல்ஹாசன் நினைவுக்கு வருவதாக சொல்லியிருக்கிறார்.

வெளியூர்க் கோச் எல்லாம் வைத்து பயிற்சி எடுக்கும் ராமன் கேரக்டரின் இன்ஸிபிரேஷன் கமல்ஹாசன் தானோ என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான சாத்தியமாக இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாது







அந்த யுடியூப் இணைப்புகள்:

'கமல்' நடிகரின் பேட்டி

https://www.youtube.com/watch?v=hMLrlWGRab8&t


சார்பேட்டாவில் எம்ஜியார் பற்றி பேட்டி

https://www.youtube.com/watch?v=M8l8YwXHe70&t=1560s

27 மே 2021

நமது உரிமை, நமது வாட்ஸாப் ப்ரைவஸி

 வாட்ஸாப் ப்ரைவஸி பற்றி பேசலாம் என்று ஆரம்பித்தாலே நம் மக்கள் அதீர தீவிரத்துடன் பேசுவதை கவனிக்கமுடிகிறது. ஆனால் அது வாட்ஸாப்புக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா என்பதை சில மாத இடைவெளி தான் முடிவு செய்கிறது.


சில மாதங்களுக்கு முன் வாட்ஸாப் இரு ப்ரைவஸி பாலிஸியை அறிமுகப்படுத்தியதில் தொடங்க்கியது ஒரு புரட்சி. அந்த பாலிஸி வாட்சாப் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் வாசிக்கக்கிடைத்தது என்றாலும் அதை அமெரிக்கைப் பத்திரிகைகள் எதிர்த்தது தான் நம் புரட்சிக்கு காரணமாக அமைந்தது.  உடனடியாக வாட்ஸாப் ஒழிக என்ற குரல்கள் எங்கும் கேட்டன. சரி, அதற்காக என்ன செய்யப்போகிறீர்கள் என்ற கேட்டபோது டெலிகிராம், சிக்னல் என மேலும் சிலபல ஆப்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்போகிறோம் என்றனர். அதாவது வாட்ஸாப்பை பயன்படுத்திக்கொண்டே.. ரைட்டு என நின்னைத்துக்கொண்ட்டோம்.


வாட்ஸாப் என்ற தகவல் தொடர்பு மென்பொருள் உரிமை வைத்திருக்கும் நிறுவனம் தான் பேஸ்புக் எனும் சமூக ஊடக ப்ளாட்பார்ம் வைத்திருக்கிறது. எனவே அவற்றுக்க்குள் டேட்டா ஷேரிங் இருக்க முடியும் என்பதற்கே பெரும் அதிர்ச்சியடையவேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டதால் பலரும் அதிர்ச்சியடந்ததாகச் சொல்லிக்கொண்டிருந்தனர்.


நீங்கள் ஆறாம் வகுப்புப் படித்தபோது பார்த்து பின்னர் முகமே மறந்த சில நண்பர்களை உங்கள் முகநூல் நண்பராக பரித்துரைத்ததைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் படிக்கும் புத்தகம் படித்த ஒருவரை சோஷியல் மீடியாவில் அறிமுகமாகி அறிவை வளர்த்திருக்கிறீர்களா? இது எல்லாம் இந்த டேட்டா ஷேரிங்க் வழியாகத்தான் சாத்தியமானது. உங்களுக்குத் தெரிந்த, தினமும் பார்க்கும் நாலு பேரைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கு சோஷியல் மீடியாவே தேவையில்லை. 


அதுவாவது பரவாயில்லை, இந்த அமெரிக்க வாட்ஸாப் வேண்டாம் என்றால்  அதற்கு பதிலாக நாங்கள் ரஷ்ய அல்லது இந்திய மென்பொருள் பயன்படுத்துவோம் என்றது இன்னும் பெரிய முரணாக இருந்ததை நடுநிலையார்கள் சுட்டிக்காட்டினர். 


காலச் சக்கரம் சுழல்கிறது.. இப்போது தலைகீழாகிறது


இந்தியாவில் செயல்படும் சமூக ஊடங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவங்களுடையவை, அதில் இந்திய அரசின் கட்டுப்பாடு தேவை என்ற நோக்கத்தில் சில கட்டுப்பாடுகள், லகான்களுடன் ஒரு சட்டத்தை இந்தியா கொண்டுவருந்திருக்கிறது. இதற்கு எதிராக வாட்ஸாப் நீதிமன்றம் சென்றிருக்கிறது. ஏற்கனவே இந்திய அரசுக்கும் ட்விட்டர், வாட்ஸாப் போன்ற ஊடகங்களுக்கும் பல பிரச்சனைகள் இருந்துவரும் நிலையில் இது முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. 


முதல் விஷயத்தில் வாட்சாப் ஒழிக என்ற பலரும் இப்போது வாட்ஸாப் வாழ்க என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்க்ள். இதற்காக முன்னர் வாட்ஸாப் எதிர்ப்புக்காக தங்கள் போனில் இன்ஸ்டால் டெலிகிராம், சிக்னல் மற்றும் அரட்டை உள்ளிட்ட ஆப்களை நீக்குவார்கள் என்றும் பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.


அரசுக்கும் பெருநிறுவங்களுக்கும் இடையே பிரச்சனை இருக்க,  மக்கள் கண்ணோட்டத்தில் இது எப்படிப் பார்க்கப்படவேண்டும். நாம் அரசின் பக்கமா அல்லது நிறுவங்களின் பக்கமா?


யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அதுவே அரசு. அந்த அதிகாரம் குவிக்கப்படுகையில் வெளிப்ப்படைத்தன்மை இருக்கிறதோ இல்லையோ நம்பகத்தன்மை தேவைபடுகிறது. தவறுகள் நிவர்த்தி செய்ய ஸிஸ்டம் தேவைப்படுகிறது. ஒருசிலரின் சார்பில் இருப்பதை விட பொதுவான பார்வை கொண்ட அமைப்பாக தேவைப்படுகிறது. இப்போது நடக்கும் பிரச்சனை கிட்டத்தட்ட இந்த விஷயத்தில் யார் அரசாக செயல்படுவது என்ற போட்டி தான்.


வாட்ஸாப்பின் முதல் பிரச்சனையில் சொன்னது போல இந்திய, ரஷ்ய நாடுகள், இங்குள்ள சமூகம் இந்த வெளிப்படைத்தன்மையில் அமெரிக்காவை விட பல படிகள் பின் தங்கியுள்ளதையும் பார்க்க முடிகிறது.


சமீபத்தில் அமெரிக்க அரசுக்கும் கூகிளுக்கும் நடந்த சில சம்பவங்கள் இவற்றில் யார் அப்படி நம்ப்பகத்தன்மை உடைவர் என்ற விவாதத்தையே உருவாக்கியிருக்கிறது. ஆனால் கூகிளுடன் ஒப்பிடுகையில் பேஸ்புக்,வாட்ஸாப் இந்த விஷயத்தில் சந்தேகக் கண்ணுடன் பார்க்கக்கூடியதாக்வே இருக்கிறது.


எனவே இந்திய அரசுக்கும் வாட்ஸாப்புக்கும் நடக்கும் இந்த சண்டை நடுநிலையாளர்களுக்கு மிக சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது.

05 ஏப்ரல் 2021

மெஷின் கன்னும் கொடிபறக்கும் காரும்

நீங்கள் காரில் சென்றுகொண்டிருக்கும்ப்போது மெஷின்கன்னுடன் ஒருவர் வழியை மறித்து நிறுத்தச்சொன்னால் எப்படி இருக்கும், நின்றவுடன் இன்னும் நாலுபேர் நம் காரை நோக்கி வந்தால்? நீங்கள் எப்படி சமாளிப்பீர்கள் என்று தெரியவிலை ஆனால் சென்ற வாரத்தில் மட்டும் மூன்று முறைக்குமேல் இந்த சூழ்நிலையை எளிதாகக் கையாண்டேன் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

மெஷின்கன்னுடன் இருபவர் பொதுவாக தமிழ்தெரியாத துணைராணுவ வீரர் என நினைகிறேன். உடனே ஒரு போலீஸ், ஒருவர் கேமராவுடன் என காரை சோதனை செய்கிறார்கள். தேர்தலுக்கான ஏற்பாடு அது. எத்தனையோ அரசியல்வாதிகள் பெரிய பெரிய கார்களில் செல்வார்கள், இதில் நம்மைப் போய் சோதனை செய்கிறார்களே என கொஞ்சம் யோசித்தேன், அப்போது தான் ஒன்றை கவனிக்கமுடிந்தது. சாலையில் செல்லும் கார்களில், பிரச்சார வாகனங்கள் தவிர எதிலுமே கட்சிக்கொடிகள் இல்லை. 


இந்த தேர்தல் சமயத்தில் பொதுமக்களான நம்மை விட  கட்சியினர் தீவிர தான் பயணங்களில் இருப்பார்கள் கொடிகளோ, கொடிகள் கட்டக்கூடாது என ஏதாவது விதி இருந்தாலும் கட்சி அடையாளாத்தை வெளியில் காட்டிக்கொள்ளும் எந்த விஷயமும் இல்லாமல் பயணம் செய்வதால் வித்தியாசம் தெரியவில்லை.

இது தேர்தல் சமயம் என்பதால் என் நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. எங்கள் எம் எல் ஏ தேர்தல் சமயத்தில் தான் தென்படுவார்,  பிறகு அடுத்த தேர்தல் சமயத்தில் தான் பார்க்கமுடியும் என என் நண்பர் ஒருவர் சொன்னார், அப்படியா மிக நல்லவராக இருக்கிராரே என்றேன், பிறகுதான் தெரிந்தது நண்பர் அதை ஒரு விமர்சனமாக சொல்லி இருக்கிறார் என்பது. ஆனால் அப்படி ஒரு வேட்பாளர்,அதாவது ஜெயித்தபிறகு தான் இருப்பதையே காட்டிக்கொள்ள மாட்டேன், என வாக்குறுதி கொடுத்தால் அவருக்கே ஓட்டுப்போட பெரும்பாலான மக்கள் விரும்புவார்கள் என்பதே உண்மை.

பொதுமக்களான நமது எதிர்பார்ப்பு என்ன? நமக்குத் தேவையான அனைத்தும் அந்தந்த அரசு அலுவகக்ஙள் வழியாக இயல்பாக நடக்கவேண்டும் என்பது தானே. ஒரு மாநகராட்சி அலுவகத்துக்கோ, தாலுகா ஆபீஸுக்கோ அல்லது ஏதோ ஒரு எதிர்பாரத காரணங்கத்துக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கோ நீங்கள் செல்லும்போது அங்கு எந்த தலையீடும் இன்றி உங்களுக்கான சேவை கிடைப்பது தானே நீங்கள் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். 

எம் எல் ஏ உட்பட அரசியல் கட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் சேவையை குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கு அடையாளம் அவர்கள் தொகுதியில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் நாம் அரசு அலுவலங்கள் செல்லமுடியும் என்ற நம்பிக்கையைத் தருவது தான். அதாவது அவர்கள் ஜெயித்தபின்னரும் தீவிர்மாக அரசியல் பயணம் செய்யவ்வேண்டும், ஆனால் கொடிகட்டிக்கொள்ளாமல்.

தேர்தல் சமயத்தில் எல்லாக் கட்சிகளும் மிக தீவிரமாக செயல்படுறார்கள். நம்மை விட அவர்கள் கார்கள் தான் சாலைகளில் பயணம் செய்கிறது ஆனால் அவர்கள் அரசியல்வாதிகள் என்று காட்டிக்கொள்ளாமல் பயணிக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்தபின்னரும் மக்கள் பிரதிநிதிகள் கொடியில்லாத கார்கள் போல சிறப்பாக பயணித்து அரசை சிறப்பாக்கி மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு

28 மார்ச் 2021

ஓட்டு யாருக்கு

பிடித்த நடிகர் படம் என்றால் முதல் நாள் பார்த்து அதையும் பேஸ்புக்ல ஸ்டேடஸ் வைக்கிற ஆளுதானே, அரசியல் ஆதரவு ஸ்டேடஸ் வைத்தால் மட்டும் என்ன பிரச்சனை என்று என்று கேட்கிறார்கள் சில நண்பர்கள். நம் வீட்டுக் குழந்தைகள் சினிமா பாடல்கள் எல்லாம் பார்க்கத்தானே செய்கிறார்கள், அப்படியே அவர்கள் அரசிலையும் ஆதரித்தால் என்ன என்றும் கேட்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சோஷியல் மீடியாவில் ரசிக விவாதம் செய்பவர்கள் பொறுப்பற்ற தற்குறிகளாகவும் அரசியல் சண்டை போடுபவர்கள் பொறுப்பான அறிவுஜீவிகளாவும் பார்க்கப்படுவதாகவும் தெரிகிறது

சரி, என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.

சின்ன வயதில் க்ரிக்கெட் பார்க்கும்போது சொல்வார்கள், நீ க்ரிக்கெட் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க, அங்க சச்சின் விளையாடி கோடி கோடியா சம்பாரிக்கிறான் என. எனக்கு க்ரிக்கெட் பார்க்கபிடிக்கிறது அதனால் பார்க்கிறேன், சச்சின் பணக்காரராக இருப்பதில் எனக்கு பொறாமை ஏதும் இல்லை என்று நினைத்துக்கொள்வேன். 

சினிமாவுக்கும் இது பொருந்தும். இப்போ கூட கேட்கிறார்கள், நீ டிக்கெட் வாங்கி படம் பார்த்து நடிகர்கள் கோடி கோடியா சம்பாதிக்கிறார்களே என்று. நான் கவனிப்பது அந்த டிக்கெட் பணம் கஷ்டப்படாமல் செலவளிக்கமுடிகிறதா மற்றும் க்ரிக்கெடோ சினிமாவோ பார்க்க நன்றாக இருக்கிறதா என்பது மட்டுமே.  அவர்கள் சம்பாதிப்பதில் நமக்கு கமிஷன் கிடைக்கிறதா என்று அல்ல. 

ஆனால் அரசியல் கட்சி ஆதரவு நிலையே வேறு, அங்கு ஆதரவளிப்பவர்களுக்கு பணம் கொடுப்படுகிறது என்பது கிட்டத்தட்ட எல்லோருக்கும் தெரிந்த ரகசியமாக இருக்கிறது. நேரடியாக ஓட்டுக்குப் பணம் என்பதைத்தாண்டி தேர்தல் அறிக்கைகளில் பணம் என்பதும் புதிய இயல்பாக இருக்கிறது.

ஆனால் அரசியலில் முக்கிய பிரச்சனை பணமாக கொடுக்கப்படுவது அல்ல, அதைவிட முக்கிய பிரச்சனை அதிகாரமாகவும் செல்வாக்காகவும் கொடுக்கப்படுவது. தான் ஆதரிக்கும் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் அதற்குக் கிடைக்கும் அதிகாரத்தில் தனக்கும் பங்கு இருக்கிறது என்ற நம்பிக்கை பலருக்கும் இருப்பதை கவனிக்க முடிகிறது.

நீங்கள் ரஜினி அல்லது விஜயின் சினிமாவை பார்த்தாலோ அல்லது கோலி ரோஹித் ரசிக சண்டை போட்டாலோ அவர்களின் வருமானமோ அல்லது சொல்வாக்கோ உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆனால் அரசியலில் அந்த வாய்ப்பு என்றும் இருக்கிறது. சினிமா ரசிகர்களிலும் சிலர் மன்றப் பொறுப்பாளார்களாக இருப்பவர்கள் பொதுமக்கள் அல்ல, அவர்கள் கட்சி நிர்வாகிகள் போலத்தான்.

மார்கெட்டிங்கில் ஒரு விஷயம் இருக்கிறது.இன்னொருவர் நமக்கு நேரடியாக உதவுவது எளிது ஆனால் நமக்காக பிறரிடம் பேசுவது கடினம்,

உங்கள் நெருங்கிய நண்பரிடம் பணம் உதவியாகக் கேட்டால் கூட தந்துவிடுவார்கள். ஆனால் உங்களுக்காக ஒன்னொருவரிடம் பேசவேண்டும் என்று அழைத்தால் பலர் தவிர்த்துவிடுவர். நீங்கள் தயாரிக்கும் பொருளை உங்கள் நண்பரிடம் வாங்கச்சொன்னால் பணம் கொடுத்துக்கூட வாங்கிவிடுவார், ஆனால் இன்னொருவருக்கு பரிந்துரைக்கச் சொன்னால் தயங்குவார், இரண்டாவதில் அவருக்கு செலவு இல்லை என்றால் கூட.

ஏன் என்றால் இங்கு அவர்களில் ரெபுடேஷன் கவனிக்கப்படுகிறது. அதை பணயம் வைக்கும் அளவுக்கு நாம் வெர்த்தா என்ற கேள்வி தான் முதலில் எழும்.  ஆனால் அரசியல் விஷயத்தில் நம் மக்கள் மிக எளிதாக தங்கள் ரெபுடேஷனை பணயம் வைத்து பிரச்சாரத்தில் இறங்குவதுதான் ஆச்சர்யமானது.

ஆனால் இதிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. அரசியலை பொதுமக்களாக பார்பதற்கும் அரசியல் கட்சியில் வெளிப்படையாக தங்களை இணைத்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்க்கிறது. அப்படி இணைத்துக்கொண்டவர்கள், கட்சியில் தங்களது செல்வாக்கை விசுவாசத்தை வெளிப்படையாக முன்வைப்பவர்களுக்கு நண்பர்களிடம் ஓட்டுக்கேட்க முழு உரிமை இருக்கிறது. அவர்கள் மீது நமக்கு எந்த விமர்சனமும் இல்லை. தான் தொண்டராக இருக்கும் கட்சிக்காக ஒருவர் ஓட்டுக்கேட்பது மிக நேர்மையானது.

அப்போ பொதுமக்களின் அரசியல் ஆதரவு நிலைப்பாடு தவறா, நட்ட நடுநிலைதான் சரியா என்று கேட்கலாம், அப்படியல்ல. நானும் இந்த தேர்ததில் ஓட்டுப்போடுவேன், எதற்கு அப்படி போடுகிறேன் என்பதற்கான காரணமும் என்னிடம் உண்டு ஆனால் அதை பொதுவெளியில் பிரச்சாரமாக வைக்கமுடியாது என்பது மட்டுமே எனது கருத்து.

தேர்தல் சமயத்தில் பணம் வாங்கும் எளிய மக்களை குறைசொலவது எளிது. ஆனால் கட்சிகளால் செல்வாக்காகவோ அதிகாரமாகவோ நமக்கு ஒரு கட்சியால் பலன் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்வதும் பணம் வாங்குவதற்கு குறைவானதல்ல என்பதை மட்டும் நினைவில் வைப்பது நல்லது.

21 பிப்ரவரி 2021

ஒரு அதிசயம், ஜெயிச்சமேட்ச் ரிவியூ

இரண்டாவது டெஸ்ட் மேட்ச் ஜெயிச்சாச்சே, அதுக்கு எங்கே ரிவியூ என மக்கள் கேட்டுக்கொண்டதால், அந்த மேட்ச் பற்றி நம்ம வியூ இங்கே

பொதுவா விளையாட்டுகளே ஹீரோக்களால் ஆனது தான். இந்த மேட்ச்ல ஹீரோக்கள் பலபேர் இருந்தாலும் ஒருத்தரோட முகம் மட்டும் முதன்மையா நிற்கிறது. முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு மேலே எடுத்து ஒரு சாலிட் ஸ்கோர்  உருவாக்கிய ரோஹித் சர்மா சூப்பர் தான், ஆனால்  செகண்ட் இன்னிங்சில் அவ்வளவு கஷ்டமான பிட்ச் கண்டிஷன்ல விராட் கோலி இன்னிங்ஸ் அதை விட ஸ்டைலா இருந்தது, அவர் அப்படினா 5 விக்கெட்டும் எடுத்துட்டு அதே செகண்ட் இன்னிங்சில் சென்சுரி போட்ட அஸ்வின்  என்ன சாதாரணமா, இவங்க எல்லாரும் இந்த மேட்ச் விட ஹீரோக்கள்தான் இருந்தாலும்  அந்த மேட்ச்ல் மனதில் நிற்கும் முகம் என்றால் அது முகமத் சிராஜ்.


அஸ்வின் சென்சுரி அடித்தபோது அஸ்வினுக்கு சமமாகவே, சொல்லப்போனால் அதைவிட அதிகம் கொண்டாடியது முமகது சிராஜ், அது கொஞ்சம் வேடிக்கையாகக்கூட தோன்றியது, ஆனால் அந்த செஞ்சுரி அவனுடையதும் தான்.


மகிழ்ச்சி... முகமது சிராஜ்



கொஞ்சம் ரன் எடுத்து நானூறுக்குப் பக்கத்தில் கொண்டுவந்துவிட்டால் இந்தியாவின் வெற்றி உறுதி என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது இந்திய அணி. நமது பேட்ஸ்மேன்கள் இந்த பிட்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தது அவுட் ஆக, விராத் கோலி தான் ஏன் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன் என தனது நிதானமான மற்றும் ஸ்டைலான ஆட்டத்தால் காட்டினார், சரிந்துகொண்டிருந்த மறுமுனையை அஸ்வின் நிலை நிறுத்தினார். 


ஃபிப்டி அடித்து விராட் அவுட் ஆகும்போதே அது ஒரு ஜெயிக்கக்கூடிய ஸ்கோர் தான். அப்படியே டிக்ளேர் செய்திருந்தால் இந்தியா ஜெயிப்பதோடு தானும் டாப் ஸ்கோரில் இருந்திருக்கலாம். ராகுல் ட்ராவிட் போன்ற ஒரு கேப்டன் இருந்திருந்தால் டிக்ளேர் செய்திருப்பாரோ என்னவோ ஆனால் கோலி டிக்ளேர் செய்யாததற்குக் காரணம் அஸ்வினுக்கு இருந்த செஞ்சுரி வாய்ப்பு.


நல்லவேளையா ட்ராவிட் கேப்டன் இல்லை :)


எட்டாவது விக்கெட்டில் இருந்த இஸாந்த் சர்மா ஃபோர், சிக்ஸர் என தேவையில்லாமல் சுற்றி அவுட் ஆனார், கடைசி பேட்ஸ்மேனாக வந்த சிராஜ் செய்தது ஆச்சர்யம்.


மிக தன்னம்பிக்கையுடன் விளையாடிய அவர் எந்த ரிஸ்கும் எடுக்கவில்லை, இங்கிலாந்தின் மிகச்சிறந்த பந்துவீச்சை மிக எச்சரிக்கையாக கையாண்டார். ஒவ்வொரு பந்தையும் அவர் டெபென்ஸ் விளையாடியபோது சென்னை கூட்டம் ஆராவாரித்து மகிழ்ந்தது. அவர் செய்வதின் அருமையை உணர்ந்த கூட்டம் அது.


நிலைமையை உணர்ந்த அஸ்வினும் தனது வாய்ப்பில் வேகமாக சிக்ஸர் ஃபோர் என மிக விரைவாகவே செஞ்சிரி அடித்தார். அந்த வெற்றி அஸ்வினுக்கு உரியது என்றாலும் முகமது சிராஜுக்கும் ஒரு மகிழ்ச்சியான பங்கு இருக்கிறது.


இந்த செஞ்சுரியில் சிராஜ் பங்குபோலவே, அஸ்வினின் சமீபத்திய வெற்றிகளில் அவரது யுடியூப் சேனலுக்கும் பெரிய பங்கு இருக்கிறத. அது அஸ்வினுக்கு ஒரு 'நல்ல' பேட்டிங் பார்ட்னர் கொடுக்கும் நம்பிக்கையை கொடுக்கிறது என்றே தோன்றுகிறது


ஐபியல் போன்ற ஒரு பரபரப்பான டோர்னமன்ட் நடக்கும் சமயத்தில் அஸ்வின் யுடியூபில் கருத்து பேசிக்கொண்டிருப்பது பெரிய ரிஸ்க்காக பார்க்கப்பட்டது. கடும் விமர்சனங்கள் கூட வந்தன.


கருத்து மாஸ்டர் அஸ்வின்



ஆனால் அதன் பின்னர் அவரது தன்னம்பிக்கை இன்னும் வளர்ந்ததை கவனிக்க முடிகிறது.பைனல் வரை வந்த  மிகச்சிறப்பான ஐபில், ஆஸ்திரேலியாவில் அதிரடி என்ற வளர்ந்து இப்போது சென்னையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அணியினரின் நம்பிக்கையும் பெற்றிருக்கிறார்.


இதனால் உலகம் அறியும் நீதி என்னவென்றால், கருத்து என்று ஒன்றிருந்தால் அதை சொல்பவனே ரியல் மாஸ்டர்.






கோலி காலியா? - சென்னை டெஸ்ட் ரிவியூ


09 பிப்ரவரி 2021

கோலி காலியா? - சென்னை டெஸ்ட் ரிவியூ

நம்ம தளத்தில் ரிவியூ வரலையே என பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் சுடச்சுட ஒரு கிரிக்கெட் ரிவியூ.

நாம் வழக்கமாக கிரிக்கெட் ரிவியூ செய்வதில்லை, எனவே எப்படி செய்வது என சின்ன யோசனை, சரிதான் என வகைக்கொன்றாக எல்லா வகை ரிவியூவும் செய்துவிடலாம் என இறங்கிவிட்டோம்.


அறிவுஜீவி ரிவியூ

நடுநிலை அறிவுஜீவிகள் என்ன செய்யவேண்டும் என்பதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது, அதை மட்டும் சரியாகச் செய்தால் ஸ்கோர் செய்துவிடலாம். அதாவது எந்தத் துறை எடுத்தாலும் அதில் முதன்மையாக இருப்பவரை மக்களுக்குப் பிடிக்கும், இயல்பாக அவர் மிகத் திறமையானவராக இருப்பார். இருந்தாலும் மக்களுக்குப் பிடிப்பதை நாமும் சொன்னால் எப்படி நடுநிலை ஸ்டாம்ப் கிடைக்கும், எனவே அவர்களை எப்போதும் திட்ட முடியாவிட்டாலும் சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் தட்டிவைக்கவேண்டும்.

இளையராஜா நல்ல இசையமைப்பாளார் தான் இருந்தாலும் அவர் கொஞ்சம் நாம் சொல்றபடி நடக்கப்பழகினால் நல்லா இருக்கும், ஹூம், என்ற தொனியில் எழுதினால் ஒரு அறிவுஜீவி தோரணை வந்துவிடும். 

இது க்ரிக்கெட் என்பதால் கோலிக்கு ஒரு அட்வைஸ். சரி. கோலி நல்ல பேட்ஸ்மேன் தான், ஆனால் அவரை நம்பியா ஒரு டீம் இருப்பது, அவர் டீமில் இல்லாமல் இருந்தால் மற்றவர்கள் நல்லா விளையாட ஒரு வாய்ப்பு கிடைக்கிறது பாருங்கள். எனவே கோலியை அடுத்தமேட்சில் தூக்கினால் சிறப்பா இருக்கும் என எழுதினால் ஒரு அறிவுஜீவி ரிவியூ ரெடி.


நல்லியில்பு ரிவியூ

யாரை சப்போர்ட் செய்தால் நமக்கு ஒரு நல்ல நல்லியல்பு இமேஜ் கிடைக்கும் என்பதை யோசிக்கனும். விராட் கோலியையோ அல்லது சச்சினையோ சப்போர்ட் செய்தால் அவர்கள் தொடர்ந்து ஜெயித்து பல கோடிகளை சம்பாதிச்சிட்டு போயுடுவாங்க, அதில் நமக்கு என்ன இருக்கிறது. 

அதனால் இருப்பதிலேயே பரிதாபமான, ஜெயிக்க வாய்ப்பில்லாத ஒருவரை தேர்ந்தடுக்கவேண்டும். 

கேப்டன்சிய நம்ம ரஹானேட்ட கொடுத்துட்டா சிறப்பா இருக்குமே என ஒரு பிட்டைப் போட்டு வைக்கலாம். இதில் தவறி ரோஹித் பெயரைச் சொல்வதில் ஆபத்து இருக்கிறது, அவன் டெஸ்ட் இல்லாவிட்டாலும் டி20 மேட்சிலாவது ஜெயித்துவிடுவான். ஜெயிப்பவனை ஆதரிப்பதில் என்ன நல்லியல்பு இருக்கு சொல்லுங்கள்.

இப்போது நம்ம நல்லியில்பு ரிவியூவர்ஸ் ஆதரிப்பதற்காகவே அளவெடுத்து செய்தவர் தான் ரஹானே. அவரை கேப்டனாக ஆக்குங்கள் என்று சொல்வதில் நம்ம இமேஜ் எகிற வாய்ப்பிருக்கிறது.

அவ்வளவு சேலஞ்சிங்கான இரண்டாவது இன்னிங்ஸில் கோலி அடித்த அரை சதத்தையோ, நாம் சப்போர்ட் செய்யும் ரஹானே முதல் இன்னிங்கில் ஒரு ரன் இரண்டாவது இன்னிங்கிஸ் முதல் பாலில் எல்.பி.டபிளயூ தப்பித்து அடுத்த பந்திலேயே ஸ்டம்ப் இழந்து பரிதாபமா முட்டையில் அவுட் ஆனதோ நினைவில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. நமக்குத் தேவை ரஹானே மாதிரி  ஒரு பரிதாபமான ஜெயிக்க வாய்ப்பில்லாத ஆள், கருத்து சொன்ன மாதிரியும் ஆச்சு நமது நல்லியில்பை காட்டிக்கொண்டமாதிரியும் ஆச்சு.




அரசியல் ஆக்டிவிஸ்ட் ரிவியூ

அரசியல் தலைவர்கள் பிரபல வீரர்களுடன் நட்புடன் இருக்கலாம். ஆனால் அரசியல் ஆக்டிவிஸ்டுகளுக்கு அது ஆகாது. கடும் கோபத்துடன் யாரையாவது திட்டிக்கொண்டே இருப்பது தான் காலால்படையினரின் சீக்ரெட் ஆப் எனெர்ஜி.

இந்த ரிவியூ தான் ரெம்ப எளிது. நாம் சப்போர்ட் செய்யும் கட்சிக்கு ப்ளேயர்ஸ் சப்போர்ட் செய்து ட்வீட் போடல இல்லை, இந்த டீம் ஜெயக்க வாய்ப்பில்லை என சொல்லிட்டு போயுட்டே இருக்கலாம்.  பத்து இருபது வருடம் நாம் ரசித்த ஒரு ப்ளேயர் என்றாலும் அவரின் ஒரே அரசியல் நிலைப்பாடு பிடிக்கவில்லை என்றால் மொத்தமாக அவரை நிராகரிக்கும் மனம் வேண்டும். அதாவது க்ரிக்கெட் முதல் சினிமா வரை எதையும் தான் வேலைபார்க்கும் கட்சிக்கு ஓட்டு வருமா என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கும் ஸ்பெஷல் கண்ணாடிதான் போட்டால் இந்த ஸ்டைல் ரிவியூ வரும். 

இந்த ஸ்டைல் சினிமா ரிவியூ இன்னொரு சமயம் பார்க்கலாம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் டெனெட் படம் கதை புரியாவிட்டால் என்ன க்ரிஸ்டோபர் நோலன் எந்தக் கட்சிக்கு ஆதர்வு என்று தெரிந்தால் போதும், ஒரு ரிவியூ எழுதிவிடலாம் என கூகிள் செய்துகொண்டிருந்தது இப்போது நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.


இந்த எல்லா ரிவியூவிலும் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் இருக்கு. எல்லா ரிவியூவும் நம்ம டீம் எப்படியாவது ஜெயிக்கனும்னு ஆசைப்படுவது போல தோன்றும், ஆனால் உண்மையில் டீம் ஜெயித்தால் இந்த வகை ரிவியூக்கள் எதுவும் வருவதில்லை எனபதையும் கவனிக்கவேண்டும். டீம் ஜெயித்தால் டீமுக்கு வருமானம், அதற்கு ரிவியூ மனுஷன் சொல்வானா, அல்லது அதைத்தான் யாரும் கவனிப்பார்களா என அவர்கள் கேட்பதும் நியாயமான கேள்வி தான்.