Unordered List

24 டிசம்பர் 2021

தொடரும் தொன்மங்கள் - எழுத்தாளர் சுஷில்குமாரின் சிறுகதைகள் பற்றி சில எண்ணங்கள்

சமீபத்தில் வந்த ஸ்பைடர் மேன் படம் Spider-Man: No Way Home, இந்தப் படத்தின் முக்கிய ஆரம்பக்காட்சியைப் பார்க்கும்போது  சுஷில் குமாரின் ஒரு கதை நினைவுக்கு வந்தது.  சுஷில்குமாருக்கும் ஸ்பைடர்மேனுகும் என்ன சம்பந்தம் என பார்ப்பதற்குமுன், எழுத்தாளர் சுஷில்குமார் இந்த வருட விஷ்ணுபுரம் விழாவின் ஒரு விருந்தினராகவும் இருப்பதால் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "மூங்கில்" மற்றும் சில கதைகள் வாசித்தவரை எனது தற்போதைய எண்ணங்களை தொகுத்துக்கொள்கிறேன்.

ஒரு கதையில் கல்யாண வீடுகளில் எச்சில் இலை எடுப்பது வரை பிழைப்புக்காக பல வேலைகள் செய்து பிழைக்கும் ஒருவன் அதில் ஒரு வேலையாக ஒருமுறை செண்டை மேளம் அடிக்கும்போது அவனைப்பார்த்து பார்த்து காதல்வயப்பட்டு திருமணமும் செய்துகொள்கிறாள் ஒருத்தி. அவன் பிழைப்புக்காக பல தொழில்கள் செய்தாலும், அவள் அவனை மிகவும் விரும்புவது என்றால் அவன் நேருக்கு நேர் நின்று பன்றி வேட்டையாடும்போது தான், அதைச் செய்யவே அவனை அவள் ஊக்குவிக்கிறாள். பன்றியென்றால் நாம் சாதாரணமாகப் பார்க்கும் பன்றியல்ல ஒரு காட்டெருமை அளவுக்கு பெரிய மற்றும் பன்றிக்கேயான கடும் மூர்க்கம் என ஆக்ரோஷமான மிருகம் அது என்று இந்தக் கதையில் காட்டப்படுகிறது. அந்த வேட்டையில் தான் அவன் முழுவதுமான வெளிப்படுகிறான், இதில் என்ன சோகம் என்றால் அவன் ஆளுமை வீழ்வதும், அவனை நினைத்து அவள் பயப்படவும் வெறுக்கவும் ஆரம்பிப்பதும் அதே பன்றி வேட்டையில் தான்.

வேட்டை என்பது ஒரு கொலைத்தொழிலாக இருந்தாலும் அங்கு வேட்டையாடுபனும் வேட்டையாடப்படுவதும் சமமாக இருந்து விளையாடும் வரை அது ஒரு விளையாட்டாக இருக்கிறது. மனிதன் மிருகங்களை கொல்லவே கூடாது என்பது மிக மேலோட்டமான பார்வை, மனிதனும் ஒரு உயிரிதான் என்ற முறையில் தன் உணவுக்காக பிழைப்புக்காக அந்த வேட்டையாடும் மிருகத்தின் சமநிலையும் குறையாத அளவுக்கு செய்யும் வரை அதுவும் இயற்கை தான். மீன்களை அவற்றின் இனப்பெருக்கக்காலத்தில் பிடிக்ககூடாது என்பது  போல குட்டிகளுடன் இருக்கும் தாய் மிருகங்களைக் கொல்வதும் சமநிலையைக் குலைத்து அந்த இன அழிவுக்கு வழிகோலும் என்பதால் தவிற்கப்படவேண்டும் என்பதெல்லாம் தர்க்கத்தின் வழியாக வரும் கருத்துக்கள்.

ஆனால் அவன் பலநாட்களாக வேட்டை எதுவும் கிடைக்காத ஒரு விரக்தி நேரத்தில், குட்டிகளோடு இருக்கும் தாய்ப்பன்றியை கொன்றது மிகப்பெரிய தவறென அவள் உணர்வது எந்த தர்க்கத்துக்கும் கட்டுப்பட்டல்ல. அது அவள் வளர்ந்த நிலம் அவளுக்குக் அவளறிந்த தொன்மங்கள் வழியாகக் கையளித்திருக்கும் அறம் வழியாக. இந்தக் கதையின் முடிவில் அதுவே அவர்களது மகனை இந்த விஷச்சூழலில் இருந்து மீட்கிறது. அன்றாட பலன்கள் சுயநலம் தாண்டி அவளை இயக்குவது இவையே.

எழுத்தாளர் சுஷில் குமாரின் மூங்கில் தொகுப்பில் பல கதைகளின் மையச்சரடாக இந்தத் தொன்மங்கள் மனித மனத்தில் கொண்டுள்ள ஆளுகையின் விளைவான விளையாட்டுகளை நான் காண்கிறோம். பல கதைகள் இந்த விளையாட்டின் எல்லையைச் சோதிக்கின்றன.

பட்டுப்பாவாடை என்ற கதை கோரானா நேரத்தில் கிட்டத்தட்ட தங்கள் உணவுக்கே வழியில்லாத நிலையில் இருக்கும்போது, தான் அம்மனுக்கு செய்யவேண்டிய கடமையை தன் உயிருக்கும் மேலாகக் கருதும் அதற்காக கொள்ளையில் கூட இறங்கும் அதற்கும் மேலாக, தன் உயிரையே விடத் துணியும் மனநிலையைக் காட்டுகின்றது. இப்படி உயிரையே தியாகம் செய்து அவர்கள் கடத்துவது எதை என்ற கேள்வியை வாசகனுக்குக் கடத்துகின்றது.

பல கதைகளில் நாஞ்சில் நாட்டு தொன்மங்கள் இருக்கும்போது அதே நிலத்தில் நடக்கும் புத்துயுர்ப்பு கதையில் கிட்டத்தட்ட இதற்கு இணையாக பைபிள் சொல்லப்படுவதையும் கவனிக்கமுடிகிறது.


நாஞ்சில் நிலத்தைத் தவிர இந்தக் கதைகளில் ஆரல்வாய்மொழி ஒட்டிய வறண்ட நிலத்தின் கதைகள், வெளிநாட்டில் நடக்கும் கதைகள் ஆகிய்வையும் உள்ளன. இந்த நிலங்கள், அந்தச் சூழல் மற்றும் காலநிலைகூட மனிதர்களின் மனநிலைகளில் உருவாக்கும் மாற்றத்தையும் காட்டுகின்றன.

இன்னொரு பார்வையில் வறண்ட நிலத்தில் நடக்கும் "சுருக்குக்கம்பி", பாம்பே வாழ்கையைக் காட்டும் "இருகோடுகள்", நாஞ்சில் நிலத்தின் "விதை" ஆகிய கதைகளில் இனிமேல் இழப்பதற்கு ஒன்றும் என்ற நிலையில் இருந்து மரணத்தின் விளிம்பைத் தொட்டபின் மீழும் புது நம்பிக்கை எந்த நிலத்துக்கும் பொதுவாக இருக்கின்றது.



இந்தக் கதைகளைப் தொகுத்துப்பார்க்கும்போது  இவற்றுக்கு நேரடி சம்பந்தம் இல்லையென்றாலும் என் நினைவுக்கு வருவது டிஜிடல் சர்வைலன்ஸ் அல்லது இப்போதைய தொழில்நுட்ப கண்காணிப்பு.

டிஜிடல் சர்வைலன்ஸ்  என்பது இன்றைய உலகத்தின் மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கின்றது என்பதை முன்பே இங்கு விவாதித்திருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக, "ரகசியமாக" வளர்ந்துகொண்டிருந்த இந்தப் போக்கு, கோரோனா சமயத்தில் அதற்கான "தேவை" இருக்கிறது என்ற காரணத்தை முன்வைத்து மிக வேகமாகவும் வெளிப்படையாகவும் அரசுகளாலும், பெருநிறுவனங்களாலும் செயல்படுத்தப்படுவதை கவனிக்கிறோம். இனிமேல் பின்னால் செல்லவே முடியாத அளவுக்கு நம்மைச் சுற்றி இவை இருக்கின்றன.

இந்த டிஜிடல் சர்வைலன்ஸ் உலகில் தனிமனித சுதந்திரத்தை மதிக்கும் சிலரின் உரிமைக்குரலாக The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை எழுப்பப்பட்டது. ஒருவர் இணையத்தில் சில விஷயங்கள் செய்திருக்கலாம், பின்னர் அவர் நினைத்தால் அதை நீக்கும் உரிமை அவருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு அடிப்படை உரிமையாகப் கோரப்படுகிறது. ஏனென்றால் கடந்தகாலத்தின் சுமைகளில் இருந்து விடுபட்டு மனிதர்களுக்கு தங்களை மாற்றிக்கொள்வதற்கான உரிமை தேவை. இது டிஜிடல் உலகில் மிக நியாயமான கோரிக்கை தான்.


ஆனால் மனிதமனம் அவ்வளவு எளிதான கருப்புவெள்ளையானது அல்ல, அது குற்றத்தைப் பதிவு செய்யும், தண்டனையளிக்கும் முறை வேறானது. இங்கு The right to be forgotten (RTBF) அதாவது மறக்கப்படுவற்கான உரிமை மிக எளிதல்ல.  பல கதைகளின் மையச்சரடாக இருக்கும் குற்றவுணர்வு,  சாபம் அல்லது கடந்தகாலத்தின் தண்டனையில் இருந்து மீள்தல் என்பதாக இருக்கின்றது. உண்மையில் நாம் நம் செயல்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்களா அல்லது இந்தச் சுமை நாம் பிறப்பதற்கு முன்பே தொடங்கிவிடுகிறதா என்ற கேள்வியை பச்சைப்பட்டு என்ற கதை எழுப்புக்கிறது.  இதன் பல பரிணாமங்களை பல கதைகளில் காணமுடிகிறது. இதில் சாபம் கதை மட்டும் இதன் எதிர் எல்லையை கொஞ்சம் நகைச்சுவையுடன் கையாள்கிறது.


திறமையான, பிறருக்கு உதவி செய்யும், ஆனால் தன் மேட்டிமைத்தனத்தை சுமக்கும் கௌரவம்,  அக்னி போன்ற கதைகள் மனித உணர்வுகளின் நுட்பங்களைக் காட்டுகின்றன.


பெரும்பாலும் நாஞ்சில் நாட்டு பண்பாடும் மாயங்களும் பல கதைகள் இருந்தாலும் அதிலேயே சமூகத்தின் பலநிலைகளில் இருக்கும் மனிதர்களை துல்லியமாக சித்தரிப்பது எழுத்தாளர் சுஷில் குமாரின் தனித்தன்மையாக சொல்லலாம். நாஞ்சில் பகுதிக்கு வெளியில் ஐடி, கல்வித்துறை, வெளிநாடுகள் என பல களங்களில் இருக்கும் கதைகளும் எழுத்தாளரின் பன்முக கலாச்சர அறிமுகத்தைக் காட்டுகின்றன.


ஸைபைடர்மேன் படத்தில் தன்னைச் சார்ந்தவர்கள் படும் துயரத்தை தாங்கமுடியாமல் காலத்தையே மாற்றியெழுதும் காட்சியை எழுத்தாளர் சுஷில் மூரையும் பொன்னும் கதையில் நாஞ்சில் தொன்மங்கள் வழியாகத் தொட்டிருக்கிறார். அவர் கையில் இருக்கும் இந்த வளமான தொன்மங்களும், அவரது கதைசொல்லல் பாணியும், பன்முக காலாச்சார அறிமுகமும் அவர் வரும்காலத்தின் முக்கிய படைப்பாளியாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.