Unordered List

05 டிசம்பர் 2015

சென்னை - வரலாறு காணாத மழையில் நான் கண்டவை - 1

சென்னை, போரூர் சிக்னல். 3 டிசம்பர் 2015

"டேய் **.. என்னடா வண்டிய ஓட்டுற” என்று அவன் சொன்னதுதான் தாமதம்

“யேய்..” என்று ஒரு இருபது குரல்கள் அவனை அடக்கின. இதை எதிர்பார்க்காத அந்த குடிமகன் இடம் விட்டு அகன்றான். ஓட்டுனர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதுபோன்ற அர்ச்சனைகளை ரோட்டோர குடிமகன்களிடமிருந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பெறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால்  ஓட்டுனருக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பது புதிது.

போரூருக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனது ஹன்க் பைக்கில் பயணத்தைத் தொடங்கினேன். எனக்குப் பிடிக்காத ஆற்காடு சாலை தவிர்த்து கிண்டி வழியாகச்செல்லலாம் என அசோக்நகர் நோக்கிச்சென்றேன்.  வடபழனியிலிருந்து அசோக்நகர் செல்லும் சாலை தடுக்கப்பட்டிருந்தது. லக்‌ஷ்மன்ஸ்ருதி சந்திப்பில் கே கே நகர் வழியாக  திரும்பினேன். அந்த சாலையிலும் முழுவதும் தண்ணீர். அங்கிருந்த ஒருவர் சொன்ன யோசனைப்படி வலதுபுறம் திரும்பி ஆற்காடு சாலையில் சேர்ந்தேன்.

ஆற்காடு சாலை முழுவதும் ஆறு போல தண்ணீர். இருந்தாலும் போக்குவரத்து இருந்தது. சில பெரிய கார்களும் பைக்குகளும் மற்றும் அரசுப்பேருந்துகளும் சென்றன.

சென்னைக்கு உயிர் பயத்தைக்காட்டிக்கொண்டிருக்கும் மழையில் பல சாலைகள் மூழ்கிவிட்டன. இங்கு மிகப் பிரபலமாக இருந்த ஓலா போன்ற டாக்சி நிறுவனங்கள் பதுங்கி விட்டன. ஆனால் எதிர்பாராத நாயகனாக அரசுப்பேருந்துகள் இயங்குகின்றன. இதில் ஓலா டாக்சி படகு விடுகிறேன் என்பது சரியான டகால்டி என நினைக்கிறேன். அவர்களின் வேலையான டாக்சியை சேவையை மிகவும் தேவையான நேரத்தில் செய்யாமல் தட்டிக்கழித்துவிட்டு படகு விடுகிறேன் என விளம்பரம் செய்வது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் ஒரு நாளும் தவறவில்லை. எந்த நிலையிலும் தொடர்ந்து இயங்கிவரும் அரசுப்பேருந்துகள் மீது மக்களுக்கு பெரிய மரியாதை வந்துவிட்டது. அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான் இப்போது மக்கள் மத்தியில் ஹீரோக்கள்.

ஆற்காடு ரோடு பிடிக்காது என்று சொன்னேன் இல்லையா? வட பழனியிலிருந்து போரூர் வரை மிகக் குறுகலான சாலை இது. மிக மோசமாக பராமரிக்கக்படுவதும் இது தான். பல குழிகளையுடைய மோசமான சாலை, அதனால் உருவாகும் போக்குவரத்து நெரிசல், அதனால் உருவாகும் சச்சரவுகள் என எப்போதுமே அந்தச்சாலையில் பயணம் மிக எரிச்சலான பயணமாக இருக்கும். அதனால் சில கிலோமீட்டர்கள் சுற்றினாலும் பரவாயில்லை மாற்று வழிகளில் செல்வது வழக்கம். ஆனால் இன்று வேறு வழியே இல்லை.

சாதாரண நிலையிலேயே இந்தச் சாலையில் செல்ல முடியாது, இதில் தண்ணீர் வடியவேண்டி பல இடங்களில் சாலை வெட்டப்பட்டும் இருந்தது. கண்டிபாக ஆபத்தான பயணம்தான். ஆனால் முன்னால் செல்லும் ஏதாவது வாகனத்தைத் தொடருந்து சென்று விடலாம் என நினைத்து ஒரு காரைத் தொடர்த்தேன்.

நடுச்சலையில் தண்ணீருக்குள் ஒருவர் நின்றிருந்தார். எனக்கு முன்னால் சென்ற கார் டிரைவரிடம் சென்று,“ரெம்ப டீப்பா பள்ளம் இருக்கு சார். லெஃப்ட் ஓரமாப் போங்க” என்றார். அங்கே ஒருவர் நின்று இப்படி என்று காருக்குக் கையைக்காட்டினார். “டூ வீலர். நீங்க ரைட்ல ஏறி போங்க என்று என்னை அனுப்பினார். அங்கும் ஒருவர் எனக்கு வழிகாட்ட ஒருவர் நின்றிருந்தார்.

அப்போதுதான் கவனித்தேன் தண்ணீரில் மூழ்கிய சாலை முழுவதும் இவர்கள் நின்றிருந்தனர்; இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்; கிட்டத்தட்ட ஐந்தடிக்கு ஒருவர். பெரிய பள்ளங்கள், வெட்டப்பட்ட இடங்களில் முக்கியமாக நின்றனர்.மிக பொறுப்புடன் வழிகாட்டினர். பஸ், கார் மற்றும் பைக் எப்படி ஓட்ட முடியும் என்று தெரிந்து சரியாக வழிகாட்டினர். இடையில் நின்ற பைக்குகளைத் தள்ளிச்செல்ல கூட சிலர் உதவிக்கொண்டிருந்தனர்.

சில இடங்களில் லேசான தண்ணீர், பல இடங்களில் மிகச் சவாலான பள்ளங்கள். அப்போது இன்னொன்றையும் கவனித்தேன். அந்த சாலையில் செல்லும்போது வழக்கமாக இருக்கும் ஹார்ன் சத்தம் இல்லை. அந்த சவாலான சேரத்திலும் ஒவ்வொருவரும் மற்றவர் வண்டிகளும் சரியாக வருகிறதா என்று பார்த்தபடியே வந்தனர். முன்னால் செல்பவர், பின்னால் வருபவருக்குத்தேவையான தவவல்களைத்தந்தவிதம் சென்றனர்.

ரோட்டில் நின்றவர்கள் அனைவருமே தன்முனைப்பால் வந்து நின்றவர்கள். எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை. அடிடாஸ் டீசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் நின்றவன் என்னப்போல ஒரு  கணிப்பொறிக்காரன் தான். கொட்டும் மழையில் நடுத்தெருவில் தண்ணீருக்குள் நிற்கிறான். உதவி என்பது எங்கோ யாருக்கோ செய்ய முடியவில்லை என்றாலும், பிரச்சனையான சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கதில் உதவி செய்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.  அந்தந்த பகுதி மக்கள் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உதவுவதை வெளியே சென்ற அனைவருமே உணர்ந்திருக்கமுடியும்.

எங்கள் பகுதியில் மின்சாரம் வந்தே பல நாட்கள் ஆகிவிடிருந்தது. செல்போன் சிக்னல் இல்லை.  மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் எனப் பேசிப்பார்த்தேன்.

என்னைப்பார்த்ததும் பக்கத்து வீட்டு தாத்தா மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார். குழந்தைகள் ரோட்டிலிருந்த தண்ணீரில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இன்னும் எவ்வளவு மழை வந்தால் நம் தெருவுக்கு போட் வரும் என்று  குழந்தை அவரைக் கேட்டுக்கொண்டிருந்தது. இது ஏரித்தண்ணீர் தானே, அப்படின்னா மீன் இருக்கனுமே அதெல்லாம் எங்க என்று பக்கத்து வீட்டு பெண் கேட்டுக்கொண்டிருந்தார். பிரச்சனையை புன்ன்கையால் எதிர்கொள்வது இதுதானா?

தினமும் தேவைப்படும் காய்கறி, பால் போன்ற பொருட்களை தெருவில் இருக்கும் ஒருவரே அனைவருக்கும் வாங்கி வந்து விடுகிறார். மின்சாரம் இல்லாததான் டேங்கில் யாருக்கும் தண்ணீர் இல்லை. பிரச்சனை இல்லை; எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து பக்கத்து வீட்டு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள். தொடர் மழை என்பதால் தண்ணீர் பக்கத்திலேயே கிடைப்பது அதை எளிதாக்குகிறது. பள்ளி அலுவலகம் விடுமுறை என்பதால் பயணம் செய்யத்தேவையில்லை. எட்டு மணிக்கெல்லாம் மக்கள் தூங்கி சீக்கிரம் எழ பழகிவிட்டனர்.

பக்கத்திலிருக்கும் நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் பேசியபின் ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக மக்கள் பேசும் திமுக/அதிமுக அரசியல், சினிமா அரசியல் ஏதுமில்லாமல் இவ்வளவு நேரம் மக்களிடம் பேசமுடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. மக்களிடம் இருந்த எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் எங்கே போனது என யோசித்தேன். பல வசதிகள் குறைந்தது போல டிவி மற்றும் செய்தித்தாளும் அங்கு கிடைக்கவில்லை, இது தான் காரணமா என முடிவாகத் தெரியவில்லை.

16 ஜூன் 2015

அவருக்கு என்ன பிரச்சனை?

"அவரா, நல்ல மனுஷன். பாவம். ச்சு" என்றார்.

எனக்கே ஏன் அவரைப்பற்றி கேட்டோம் என்று ஆகிவிட்டது. "அவருக்கு என்ன பிரச்சனை?" என்றேன்.

"பிரச்னையல்லாம் ஏதும் இல்லை. ரெம்ப நல்ல மனுஷன்" என்றார். இந்தமுறை அவர் முகபாவம் இன்னும் பரிவோடும் சோகமாகவும் இருந்தது.  

சரி பேச்சை மாற்றலாம் என்று நினைத்து

"அவர் தம்பியும் அந்த ஊர்ல தான் இருக்கார், அவர தெரியுமா " என்றேன்

"அட அவரா, நல்ல தெரியுமே. சின்னவரு தான், ஆனா ஆளு செம திருடன். ஹா ஹா " என்றார்.

31 மார்ச் 2015

நேர்மையின் விளக்கம் - உதவி கேப்டன் கோலி

[சும்மா காமெடிக்கு]

என்னடா திடீர்னு புது போன் என்று கேட்டேன். ஆறு மாதம் முன் தான் அவன் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கியிருந்தான்.

"இது டிஸ்ப்ளே பார் அஞ்சு இஞ்ச்சு" என்றான்.

"அப்போ பழைய போன்?"

"அதுவும் 5 இன்ச் தான். ஆனா இது நெட் கனெக்ட் பண்ணலாம்"

"பழசுல?"

"அதுலையும் பண்ணலாம் டா.. ஆனா இது ஆண்ட்ராய்ட்" 

"அப்படியா.. அப்போ ஏற்கனவே இருக்கிற போன் ஆண்ட்ராய்ட் இல்லையா.." என்றேன்.

"அதுவும்  ஆண்ட்ராய்ட் " தான் என்றான்.

"டேய்.....!!!"

கோலியிடம் பேசிய டோனி மாதிரி ஆகிப்போச்சு என் நிலைமை.

ஆஸ்திரேலியவுக்கு எதிரான காலிறுதிக்கு முன் ஒரு அணி ஆலோசனை நடந்திருக்கிறது. ஒன் டவுன் முக்கியமான இடம். யாரவது நன்றாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று சொல்லியிருகிறார் தோணி.

அதற்கு  நான் ஒன் டவுன் தான் இறங்குவேன். மற்ற இடங்களில் விளையாட மாட்டேன் என்று சொல்லிருக்கிறார் கோலி. அதை "நம்பி" தோணியும் அவரை ஒன் டவுன் அனுப்பியிருக்கிறார். ஆனால் உலகமே பார்த்தபடி அங்கும் சொதப்பி விட்டார்.

ஆனால் கோலியின் நேர்மையைப் பாராட்ட வேண்டும்.

"ஆனால் அங்கே விளையாட மாட்டேன் என்று தானே சொன்னார். அதனால் இங்கே விளையாவார்  நீங்கள் நினைத்துக்கொண்டால் அவரா பொறுப்பு"  :)


இதையும் படிங்க:


30 மார்ச் 2015

நம்புவது போல ஒரு கொடூர விபத்து

தரையிலிருந்து மேலேறி பறக்கும்வரை கேப்டனின் பொறுப்பில் தான்  இருந்திருக்கிறது. சீராக சீறிப் பய்ந்துகொண்டிருந்திருக்கிறது. எல்லாம் சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கையில்  கட்டுப்பாடு உதவி கேப்டனின் கைக்குச் சென்று விட்டது.

இந்த சமயத்தில் தான் அந்த உதவி கேப்டன் வேலையைக் காட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள்.ஏற்கனவே பல மன சம்பந்தமான பிரச்சனைகளை கொண்ட அந்த உதவி கேப்டன் தானும் சேர்ந்துதான் வீழப் போகிறோம் என்று தெரிந்தும் நோஸ் டைவ் செய்து விட்டார் எனச் சொல்கிறார்கள். அதை கவனித்த கேப்டன் வெளியிலிருந்து கதறியும் பலனில்லை என்கிறார்கள். உதவி கேப்டன் செய்த நோஸ் டைவ் வேலையால், திறமை வாய்ந்த கேப்டனாலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று விட்டது.

அந்த உதவிக் கேப்டன் அவர் பலமுறை தனது மன சம்பந்தமான பிரச்சனைகளுக்குகாக கண்டிக்கப்பட்டவர் எனவும் செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன.  பலர் நம்பியிருக்கும் ஒரு பணியில் இப்படிப்பட்டவரை அமர்த்தலாமா என உலகம் கொதித்துக் கொண்டிருக்கிறது. என செய்வது நடந்த இழப்பு இழப்பு தான்.

என்ன கதை இது  என்று கேட்கிறீர்கள் தானே, 

இது தான் கடந்த வாரம் பிரான்சில் நடந்த விமான விபத்தின் பின்னணி. அந்த கேப்டனின் பெயர் 
Patrick Sondheimer, உதவி கேப்டனின் பெயர்  Andreas Lubitz, நடந்தது ஜெர்மன்விங்க்ஸ் விமானத்தில். என்னதான் ப்ளாக் பாக்ஸ் ஆதாரங்கள் வந்தாலும், நம்புவது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கிறது.  இப்படி இவன் செய்வானா என. 

அப்படிஎன்றால் இன்னொரு வபத்தைப் பற்றிச் சொல்கிறேன்.. அது கிட்டத்தட்ட நாம் எல்லோரும் பார்த்த விபத்து தான். கேப்டன் பெயர் தோணி, உதவி கேப்டன் பெயர் விராட் கோலி. நடந்த இடம் சிட்னி. இப்போது இந்த கதையை மறுபடி வாசித்துப் பாருங்கள்.  கண்டிப்பாக நம்பவது மாதிரி இருக்கும். 




விபத்து 1:




விபத்து 2

11 ஜனவரி 2015

சென்னையில் ஜெயமோகன் விழா

தமிழிலக்கிய உலகின் கவனம் இன்று குவிந்திருக்கும் இடம் சென்னை. இன்று மாலை விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் நடத்தும் விழா நடக்கவிருப்பது தி நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கில்.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளார் பூமணிக்கு பாராட்டு விழா. அஞ்ஞாடி நாவலுக்காக விருது பெற்றபின் பூமணி கலந்து கொள்ளும் விழா. எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொள்ளும் விழா. எனவே செறிவான இலக்கிய அனுபவத்துக்கு உத்திரவாதம்.

விஷ்ணுபுரம் விருது என்று ஒன்று உருவானபோதே தமிழிலக்கிய உலகில் அது பெரும் சலசலப்பை உருவாக்கியது. விருதுகள் பற்றிய அவநம்பிக்கையும் விமர்சனங்ளும் மட்டுமே விரவியிருந்த சூழலில் அதற்க்குத் ஒரு தீர்வாக ஒரு நம்பகமான விருதை அளிப்பதாக விஷ்ணுபுரம் அமைப்பு அறிவித்தபோது பல அதிர்வலைகளை உருவாக்கியது, கூடவே பெரும் நம்பிக்கையையும்.இந்த வருடம் சாகித்ய அடாடமி பெரும் எழுத்தாளார் பூமணி 2011 ஆண்டே விஷ்ணுபுரம் விருது பெற்றிருகிறார் என்பதும் ஒரு கூடுதல் தகவல்.

இன்று மாலையில் செறிவான ஒரு இலக்கிய கொண்டாட்டம். சென்னை வாழ் வாசகர்கள் தவற விடக்கூடாத நிகழ்வு.

http://www.jeyamohan.in/69258

நாள் 11- 1-2015 ஞாயிறு
இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம்
ஜி என் செட்டி சாலை, தி நகர்
, சென்னை
நேரம் மாலை ஐந்துமணி

09 ஜனவரி 2015

அஞ்சலக அட்வென்சர்

எதிர்பார்த்ததை விட பரபரப்பாகவே இருந்தது தபால் அலுவலகம். அத்தனைக் கவுண்ட்டர்களிலும் வாடிக்கையாளர்கள். ஒரு அரசுத்துறை அலுவலகத்தில் பரபரப்பாக வேலை நடப்பதை பார்பதும் ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் அது மட்டும் போதாதே, நான் வந்த வேலையும் நடக்க வேண்டும் அல்லவா.

நான் ஒவ்வொரு கவுண்டராக பார்த்துக்கொண்டே சென்றேன், எங்கு நான் கேட்கவேண்டுமென பார்த்துக்கொண்டே. எதிலுமே நான் வந்த வேலை முடியாது என்று தெரிந்தது. சரி நான் எதற்கு அந்த தபால் அலுவகத்துக்கு வந்தேன். ஒரு அஞ்சல் உறை வாங்கத்தான். 

ஆனால் அந்த அலுவலகத்தில் அஞ்சல் சம்பத்தமான பணிகளைத்தவிர மற்றவற்றில் அனைவரும் மூழ்கியிருந்தனர். சற்று நேரத்துக்குப்பிறகு ஒரு ஊழியரிம் கேட்டு அஞ்சல் சம்பந்தமான விஷயங்கள் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் கூண்டு மாதிரி இருக்கும் ஒதுக்குப்புறமான ஒரு அறையக்காட்டினார். 

என்னடா இது அஞ்சல் அலுவலத்தில், அஞ்சல் துறைக்கு வந்த சோதனை என்று நினைத்துக்கொண்டு அந்தக் கூண்டுக்குள் எட்டிப்பார்த்தால் யாரும் இல்லை. 

என்ன செய்வதனத் தெரியாமல் சற்று நேரம் சுற்றியபிறகு ஒருவரைக் கண்டுபிடித்தேன். ஒரு உயரதிகாரி தோற்றத்தைக்கொண்டிருந்தார். நான் அஞ்சல் உறையக்கேட்டதும் சற்று யோசித்துவிட்டு அதே கூண்டைக்காட்டி அதில் யாரும் இல்லையென்றும் தெரிந்துகொண்டார். 

இங்கு வந்து ஏன் இவன் இதைக்கேட்கிறான் என அவரது முக பாவனை சொன்னலும் அவரே வந்து எடுத்துக்கொடுக்க தவறவில்லை. உயரதிகாரிக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு கிளம்பினேன். வேலை இனிதே நிறைவடைந்தது.

நான் போனது மதிய உணவு நேரமாக இருந்ததால் அங்கிருந்தவர் சாப்பிடப்போயிருக்கலாம், சென்னை அண்ணா சாலையில், அவ்வளவு முக்கியமாக இடத்தில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்திலியே, சேமிப்புத் துறைக்கு இடையே  இருக்கும் அஞ்சல் துறையக் கண்டு பிடித்தது ஒரு நிஜமான சாகசம் தான்.