Unordered List

08 டிசம்பர் 2019

தர்பார் பாடல்கள் - கார்த்திக் சுப்புராஜ் ப்ரோ, இது நியாயமா

அடிமை முறை பழக்கத்தில் இருந்த காலம் அது, கப்பினத்தைச் சேர்ந்த ஹுரோவுடன் ஒரு உணவகத்துக்குள் செல்கிறார் டெண்டல் டாக்டர் என்ற கேரக்டர், அதைப்பார்த்து பதறும் உணவக உரிமையாளர் அந்த ஊரின் ஷெரீபை அழைத்து வரப்போவதாக மிரட்டுகிறார்,  அழைத்துவர ஓடுகிறார். ஷெரீப் வரும்வரைவரை சாகவாசமாக பீர் குடிக்கும் டெண்டல் டாக்டர் அவர் வந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் அவரை சுட்டுக்கொல்கிறார். ஊரே அதிர்ச்சியில் உறைகிறது. மீண்டும் சாகவாசமாக சாப்பிட அமர்கிறார் ஹீரோ.

மறுபடி அந்த ஊரின் மொத்த காவல்துறை படையும் அந்த உணவகத்தைச் சுற்றி வளைக்க வெளியே வரும் டெண்டல் டாக்டர் கொடுப்பது ஒரு ஷாக். சுடப்பட்ட அந்த ஷெரீப் உண்மையில் காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி, அவனைக் கொன்றதுக்கு தண்டனை இல்லை, மாறாக அறிவிக்கப்ப்ட்ட பணப்பரிசை காவல்துறைதான் தனக்குத் தரவேண்டும் எனச் சொல்ல, மொத்த ஊரும் ஆச்சர்யப்படுகிறது. திறமையாக நடிகரான க்ரிஸ்டோப் வால்ட்ஸ் நடித்திருந்த இந்த ஸ்டைலான காட்சி ஜாங்கோ அன்செயின்ட் என்ற படத்தில். கொஞ்சம் வயதான இந்த ஸ்டைலான காரக்டரில்  ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது.

அதே படத்தில் வில்லன் அறிமுகமாகும்வரை தான் அதுவும். லியனார்டோ டிபாகாப்ரியோ நடித்திருந்த அந்த கேரெக்டர் ஸ்டைலின் உச்சம். அவர் செய்வது எல்லாம் தரமான சம்பவங்கள். டொராண்டினோ இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் இதுபோன்ற அருமையாக காட்சிகள் கொண்டது.இவற்றைப் பார்க்குன்போது நம்ம ரஜினிக்கு இதுபோன்ற காட்சிகள் அமைந்தால் கலக்குவாரே என்று யோசித்திபோம். அது போன்று யோசித்த இன்னொருவர் கார்த்திக் சுப்புராஜ், ஆனால் ரசிப்பது மட்டுமல்லாமல் அவர் திறமையான இயக்குனரும் கூட.

பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியும் இதுபோன்ற புத்திசாலித்தனமாக ஸ்டைலான காட்சிகள், ஆனால் பொதுவாக நம்ம ஊரில் மற்ற நடிகர்கள் இயக்குனர்கள் உலக படங்களை அப்படியே காப்பி அடிப்பது போல் இல்லாமல் அந்த அழகியலை மட்டும் எடுத்தாள்வது கார்த்திக் சுப்புராஜின் சிறப்பு. ரஜினியின் நடிப்பு, தனது கதை சொல்லும் திறமை, கொஞ்சம் டொடாண்டினோவின் அழகியல் சேர்த்து கதையின் ஆழத்தையும் சேர்த்து உருவாக்கியதால் பேட்ட மாபெரும் வெற்றி. அது இன்னும் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது.

கபாலி, காலாவுக்குப் பிறகு ரஜினி வயதான கேரக்டரில் நடிக்கும் முடிவில் இருந்ததாகவும் ஆனால் கார்த்திக் சுப்புராஜ் 90s லுக் வேண்டும் என்றதாகவும் ரஜினி தர்பார் இசை வெளியீட்டு விழாவில் சொல்கிறார். பேட்ட ரிலீஸ் ஆகி மூன்றாம் நாள், இது எனக்குத் தெரியாதா நானும் 90 லுக் கதை செய்ய்வேன் என்று முருகதாஸ் சொன்னதாகவும் அதுதான் தர்பார் என்றும் சொல்கிறார்.


பேட்ட படத்தில் கார்த்திக் செய்த ஒரு வேலை கவனிக்கத்தக்கது. என்னதான் புது ஐடியாவில் படம் எடுத்தாலும், பழைய ரஜினி படங்களை நினைவு படுத்தும் சில வசனங்கள் மற்றும் காட்சிகளை வைத்திருந்தார். அந்தப் பாடல்களில் கூட அதைப் பார்க்கமுடியும். புதிதாக அநிருத் ஸ்டைலில் இருந்த அந்த பாடலில் சும்மா எஸ்பிபியை இரண்டு வரி பாட வைத்து அந்த பழைய பாட்டு போல ஒரு தோற்த்தை உருவாக்கியிருந்தார்கள்.

வரலாறு என்பது எப்போதுமே முன்னோக்கி நகர்வது மட்டுமே என்பது வரலாற்றாசிரியர்கள் எப்போதும் சொல்லி வருவது. பொன்னுலகத்தை கடந்தகாலத்தில் தேடுவது எந்த முன்னேற்றமும் அளிக்காது என்பது வரலாறு சொல்லும் பாடம். இருந்தாலும் உலக அளவில் டொனாண்ட் ட்ரெம்ப் வைகையறாவில் இருந்து உள்ளூர் அரசியல்வாதிகள் வரை பேசுவது அதைத்தான்.

தர்பாரிலும் அதுதான் நடக்கிறது. தேவா ஸ்டைலில் ஆட்டோக்காரன் பாட்டுபோல முயற்சித்து ஒரு தேவா பாட்டையே தந்துவிட்டார்கள்


என்னதான் இசையமைப்பாளர் திறமையாக இருந்தாலும் இயக்குனரும் படத்தின் கான்செப்டும் தான் முக்கியம்.


வழக்கமான மொக்க மசாலா அரைக்கும் சிறுத்தை சிவா அடுத்தபடம் என்ற அறிவிப்பு வந்ததும் கொஞ்சம் வருத்தம் வந்தது,  புதிதாக எதுவுமே இல்லமல் அநிருத் ஸ்டைல் கூட இல்லாமல் இந்த தர்பார் பாட்டு கேட்கும்போது இதுதான் பேர்டர்ன் எனப் புரிகிறது..

நல்லா படம் எடுத்தா மட்டும் போதாது கார்த்திக் சுப்புராஜ், அந்த ரகசியத்தை மற்றவர்களுக்கும் சொல்லவேண்டாமா. பேட்ட போன்ற சிறப்பான படத்தைத் தொடர்ந்து  ஏர்.ஆர்.முருகதாஸ் 90 படம் என்ற பெயரிலும் , அடுத்து  சிறுத்தை சிவா 80 என்ற பெயரிலும் எடுக்கப்போகும் கொடுமைகளுக்கும்  நீங்களே பொறுப்பு..

06 டிசம்பர் 2019

ப்ரியங்கா ரெட்டி கொலையும் ப்ரோக்கன் விண்டோவும்

தெலுங்கானாவில் ப்ரியங்கா ரெட்டிக்கு நடந்துள்ள கொடுமை மற்றும் கொலை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த பெரிய ஆபத்தில் சிக்க அவர் ஏதும் வழக்கத்துக்கு மாறாகச் செய்யவில்லை, தன் அன்றாட வாழ்க்கையில் அவர் செல்லும் இடத்திலேயே அவ்வளவு பெரிய ஆபத்து காத்திருந்திருக்கிறது. தினசரி வாழ்க்கையில் பார்க்கும் மனிதர்களாலேயே ஆபத்து என்பது அனைவருக்கருகிலும் எப்போதும் அருகிலிருக்கும் ஆபத்து இருக்கின்றது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது, இது திகிலானது.

இதுபோன்ற சமயங்களில் மக்கள் கோபப்படுவதும் கொதிநிலையடைவதும் உடனடியாக கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும் என வேண்டுவதும் இயல்பானது, நமக்கு உணர்வு இருக்கின்றது என்பதற்கான அடையாளம் அது. ஒரு சிவில் சமூகத்தில் அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மொத்தமாகவே பாதுகாப்பாற்ற கைவிடப்பட்ட மனநிலையில் இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

இது சம்பதமான ஒரு செய்தி கவனிக்கவைக்கிறது.  இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளி இரண்டு வருடங்களாக லைசென்ஸ் கூட இல்லாமல் லாரி ஓட்டி இருக்கிறார், இந்த சிறிய குற்றத்துக்காக போலீஸ் பிடியில் சிக்கி தப்பித்திருகிறார்.


முன்பு படித்த ஒரு சம்பவம் இப்போது நினைவுக்கு வருகிறது, நியூயார்க் நகரத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துகொண்டிதுந்த 80களில் மேயராக தேரிந்தெடுக்கப்பட்டவர் Rudy Giuliani, அவர் William J. Bratton என்பவரை போலீஸ் தலைவராக நியமித்தார். ஆட்சி கையில் இருந்த மேயரும், அதிகாரம் கையில் இருந்த போலீஸ் தலைவரும் நம்பியது சிந்தனையாளார்களின் வழிகாட்டலை. அவர்கள் ஆலோசித்தது
ப்ரோக்கன் விண்டோ தியரியை உருவாக்கியவர்கள் George L. Kelling மற்றும் James Q. Wilson. ஆகிய சிந்தனையாளார்களை.

George L. Kelling



ப்ரோக்கன் விண்டோ தியரி (Broken Window Theory) என்பது, ஒரு தெருவில் கவனிக்கப்படாத ஒரு வீட்டில் ஒரு ஜன்னல் உடைந்திருந்தால் சில கொஞ்சம் நாட்களிளேயே இன்னொரு ஜன்னலும் உடைய வாய்ப்பிருக்கிறது. அதைத்தொடந்து கொள்ளை கூட நடக்க வாய்ப்புண்டு என்பது. ஏனென்றால் அது கவனிப்படாத இடம் என்ற எண்ணம் குற்றத்தை வரவழைப்பது. சுத்தமான இடத்தில் குப்பைபோட மக்கள் தயங்குவார்கள். ஆனால் முதலில் ஒருவர் சின்ன குப்பை போட்டால் சிறிது நேரத்தில் அது பெரிய குப்பை மேடாகிவிடும். அதைப் போல.


ப்ரொக்கன் விண்டோ தியரியை உருவாக்கிய கெல்லிங்க்கை ஆலோசாகராகக் கொண்டு, நியூயார்க் நகரத்தின் பெரும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பித்தது.ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது.

இந்தக் கூட்டணி முதலில் குறி வைத்தது எளிய சிறிய குற்றங்களை. பொதுவெளியில் சிறுநீர் கழிப்பது, பொதுவெளியில் குடித்தல், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தல் இவற்றில் ஆரம்பித்து அனுமதியற்ற இரவு விடுதிகள் உள்ளிட்டவை தடுக்கப்பட்டன.  இவற்றால் தோன்றும் நேரடி மாற்றங்கள் சாதாரணமாகத் தெரிந்தாலும். இதனால் ஏற்பட்ட ஒழுங்கின் காரணமாக பொது மனநிலையில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் வந்தது.  ஆச்சர்யகரமாக விரைலேயே கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற பெரும் குற்றங்கள் கட்டுக்குள்வந்தன.

இது இரு வகைகளில் செயல்படுகிறது. மொத்தமாக ஒரு ஒழுங்கு இருப்பதால் குற்றம் செய்யும் மனநிலை தடுக்கப்படுகிறது. பல சமயங்களில் பெரிய குற்றம் செய்யவிருப்பவர்கள் இதுபோன்ற சிறிய விஷயங்களில் சிக்கி விடுகின்றனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலையில் முக்கியக் குற்றவாளி சில தினங்களுக்குமுன் போலீஸில் சிக்கி இருந்தாலோ, அல்லது இது போன்ற ஒழுங்கின் காரணமாக பொறுப்பாக லைசென்ஸ் எடுத்து விதிகளை மதித்து நல்ல வெற்றிகரமான ஓட்டுனராக வாழ்ந்திருந்தாலோ இந்த குற்றம் நடந்திருக்காதே என்று நினைக்கவும் தோன்றுகிறது.

நம் சமுதாயத்தில் கட்டற்ற குடியும் கவனிப்பட்டாத அது தொடர்பான 'சிறிய' வன்முறைகளும் நீருபூர்த்த நெருப்பாக இருந்ததையும் அதனால் மக்கள் தொடர்ந்து பெரிய குற்றங்களுக்குச் செல்வதையும் முன்பே ஒருமுறை விவாதித்திருந்தோம். (கீழே லிங்க்)

இதை பலவழிகளில் யோசிக்கலாம், சரியான நேரத்துக்கு வரும் அலுவலகத்தில் சரியான வேலை நடக்க வாய்ப்பிருக்கிறது. காலையில் சரியான பழக்கவழக்கம் கொண்ட மாணவர்கள் சரியாக படிக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்கு ஒரு மாற்றுக்கருத்து எழலாம். இந்த முறை குற்றமே இல்லாமல் செய்துவிடுமா என்று. திட்டமிட்டு செய்யும் குற்றவாளிகள் வேறு, அவற்றை கையாள வேறு முறைகள். ஆனால் இந்த ப்ரோக்கன் விண்டோ தடுப்பு முறையின் மூலம் குற்றம் உருவாகும் வாய்ப்பை தடுக்க முடியும் என்பதே கருத்து.  அணுகக் கூடியதாக இருக்கவேண்டிய காவல்துறை, அதில் வெளிப்படைத் தன்மை எல்லாம் கூடவே செய்யக்கூடிய விஷயங்க்கள்.


ஒரு நவீன அரசு என்பது அதிகாரத்தில் இருப்பவர்களையும் கட்டுப்படுத்தும் அரசிலமைப்பு உடையது. அதுபோல ஒரு அதிகாரம் என்பது ஒரு நல்ல சிந்தனையாளரின் சிந்தனையை செயலாக்க முடியும்போது நல்ல விளைவுகளைத் தருகிறது. இந்த ப்ரோக்கன் விண்டோ நிகழ்வு இதற்காக சாட்சியாக இருக்கிறது.

வரலாற்று நோக்கில் பார்க்கும் சிந்தனையாளர்கள் தீர்வுகளைத் தரமுடியும், அவற்றை கையாளத் தெரிந்த அதிகாரிகள் வெற்றியடைய முடியும், அந்த அதிகாரிகளை பயன்படுத்தும் ஆட்சியாளர்கள் நல்ல ஆட்சியைத் தரமுடியும்.



Links:
2 வருடமா நோ லைசென்ஸ்; போலீஸ் கோட்டைவிட்ட அந்த நிமிடம்! - விகடன்

குடி வன்முறையின் வரலாற்றுத் தருணம்

01 டிசம்பர் 2019

உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா அல்லது பெஸிமிஸ்ட்டா

சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று. அமெரிக்க ஹைவே ஒன்றில் வழக்கமான சோதனைக்காக ஒரு காரை போலீஸ் நிறுத்தச் சமிக்கை செய்ய, அந்தக் கார் நிற்கவில்லை, கொஞ்சம் சமோயோசிதமான போலீஸ்காரர் காரின்முன் தன் காரை மெதுவாக ஓட்டிச்சென்று அந்தக் காரின் வேகத்தைக் குறைக்கவைத்து நிறுத்தினார், அங்கே ஒரு ஆச்சர்யம். அந்தக் காரின் ஓட்டுனர் அதீத குடிபோதையில் இருக்க அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தது காரின் செல்ப் ட்ரைவிங்க் அல்காரிதம்.


தானியங்கி கார் 

இதில் இருக்கும் சட்ட விஷயங்களை ஒருபுறம் இருக்க, இது சில தார்மீகக் கேள்விகளை எழுப்புகிறது. காரை ஓட்டியது அல்காரிதம் தான் என்றால் மனிதருக்கு பொறுப்பில்லை என்றாகிவிடுமா? இன்னும் இந்தத் தொழில் நுட்பம் வளரஎல்லாக் கார்களையுமே இந்த அல்காரிதங்கள் ஓட்ட ஆரம்பித்தால் மனிதர்களுக்கு அதில் என்ன பங்கு? 

இளைஞன், வயதானவர், அவசரக்காரர், நிதானமானவர், அவசரமாக வேலைக்குச் செல்பவர், ஊர் சுற்றிப்பார்க்கும் ஒருவர், விட்டுக்கொடுப்பவர், அடித்துச் செல்லும் மன நிலை கொண்டவர் அனைவரின் வாகனங்க்களும் ஒரே மாதிரி சாலையில் செல்லும் நிலை எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிலையை நாம் ஒப்புகொள்வோமா,அதை மனித இயல்பு ஏற்றுக்கொள்ளுமா? அல்லது நமக்கேற்றபடி செயல்படும் அல்காரிதங்களை (தானியங்கிக் கார்களை) எதிர்பார்ப்போமா? 

அப்படி தனிப்பட்ட குணத்துக்கேற்ப செயல்படும் தானியங்கிக் கார்களை நாம் எதிர்பார்த்தால் கார் தயாரிப்பாளர்கள் கார் எஞ்சின்களை ஆராய்வது ஒருபுறமிருக்க மனித மனஆராய்ச்சி வேறு செய்யவேண்டியிருக்கும்.

இவையெல்லாம் புதிய டெக்னாலஜி உலகத்தின் கேள்விகள். ஆனால் இவற்றின் அடிப்படைகள் மனித அதாவது சேப்பியன்ஸின் இயல்பில் இருந்து வருபவை. என்ன தான் தானியங்கி கார்கள் தொழில்நுட்ப சாதனையால் உருவானாலும் அவை சாலையில் செல்லும்போது அங்கு நடக்கும் மனிதர்களின் இயல்பை புரிந்துகொள்ளாமல் வெற்றியடைய முடியாது இல்லையா.


...


கொஞ்சம் வாசிப்பு பழக்கம் இருக்கும் யாருக்குமே சேப்பியன்ஸ் உட்பட அவரது மூன்று புத்தகங்க்களிலும் யுவால் ஹஹாரி சொல்வது எதுவும் புதிய தகவல்கள் இல்லை என்று தெரியும். ஆனால் அவர் அவற்றை ஒரு மிகப்பெரிய சித்திரம் அளிக்கிறார் என்பதே அவரது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதை சிலர் தகவல் களஞ்சியமாக படிப்பதும், தீர்க்கத் தரிசனமாகப் பார்ப்பதும் அவர்களின் புரிதலில் சிக்கலுக்கு வழிகோலுகிறது.  இதில் சொல்லப்படும் தகவல்கள் இந்தப் மனிதனின் பயணத்தை காட்டுவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகிறது. அந்த இயல்பை வைத்து நாம் இப்போது சந்திக்கும் பல பிரச்சனைகள் செல்லும் போக்கு கணிக்கப்படுகிறது.

பெருமழை அல்லது புயல் வரும் என்று ஒருவர் கணித்தால் அதற்கான முன்னெச்செரிக்கை செய்துகொள்ள முடியுமே தவிர அதைத் தடுக்க முடியாது, மாறாக ஷேர் மார்க்கெட்லோ, தேர்தலிலோ செய்யப்படும் கணிப்புகள் அவற்றை மாற்றக் கூடியவை. இறுதி முடிவுகள் அல்ல. இந்த வகை சரியான கணிப்புகளை மனதில்கொண்டு செயலாற்றி அவற்றை மாற்ற முடியும். யுவால் விவாதிப்பது இரண்டாம் வகை கணிப்புகள். இவற்றை பெஸிமிஸ்ட் என்று சிலர் வகை செய்வது அவரிடம் 'நல்ல' தீர்க்கதரிசனத்தை அவர்கள் எதிர்பார்ப்பதால் விளைவது.


சென்ற வாரத்தில் மட்டும் நடந்த சில நிகழ்வுகள் இவை

1. சென்னையைச் சேர்ந்த ஒரு சினிமாதியேட்டரின் உரிமையாளர் வருத்தத்துடன் ஒரு ட்விட் போட்டிருந்தார். மக்கள் தாங்கள் ரசிப்பதிலும் கைதட்டுவதும் விட அதை போட்டோ எடுத்து ஷேர் செய்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள் என்று. 

பார்ப்பதை விட பகிர்வதே மகிழ்ச்சி 
2. இப்போது பிரபலமாக இருக்கும் போன் ரிவியூ செய்யும் ஒரு யுடியூப் சேனலில் வழக்கத்துக்குமாறாக நிறைய பெண்கள் ஐடிகளில் பின்னூட்டம் இருந்திருக்கிறது, அவை எல்லாமே அந்த போன் பற்றி புகழ்ந்து சொல்லப்பட்டவை. அதில் சந்தேகம் கொண்டு கொஞ்சம் ஆராய்ந்ததில் அவை எல்லாம் தானியங்க்கி கமெண்ட்கள் என தெரியவருகிறது. அவை அந்த போன் நிறுவனம் தன் பொருளை விளம்பரப்படுத்த செய்யும் தந்திரமாக இருக்கலாம்.  (https://www.youtube.com/watch?v=kaDYbYWV7hI&t=1s)

3. இதை நம்புவது கொஞ்சம் கஷ்டம் தான். சென்னையில் இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு ஒருவர் ரிவியூ எழுதியிருக்கிறார். ஒரு நாள் 'உள்ளே' இருந்த ஒரு இளைஞன் கராராக 4 ஸ்டார் ரேட்டிங்க் கொடுத்திருந்தாலும், அதை மஸ்ட் விசிட் ப்ளேஸ் என்கிறார். :)

 அனுபவம் என்பது எல்லாம் பகிர்வதற்கே 



இவற்றில் வியக்க ஏதுமில்லை, நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் இது. கடவுள் கொள்கையில் இருந்து, மனிதமைய சிந்தனைக்கு வந்து இப்போது டேட்டாயிஸத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். டேட்டாவே நமது முடிவுகளில் பங்காற்றுகிறது, அந்த பெரும் டேட்டா உருவாக நாம் பங்காற்றுகிறோம்.

உடை மற்றும் பொருட்கள் ரிவியூ பார்த்து வாங்குவது ஏற்றுக்கொண்டவர்களுக்குக் கூட திருணம் போன்ற முக்கிய முடிவுகளும் அவர்களின் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்க்கள் பொருத்துதான் முடிவு செய்யப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ள இயலாததால இருக்கும். ஆனால் அது இப்போது நடைமுறையாகிவிட்டது.  நாம் ப்ரைவஸியைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிம்போது கிடைக்கும் வசதிகள் மிகப் பெரிதாக இருக்கின்றன. ஆனால் இதனால் வரும் பிரச்சனைகளும் புதியவை.

Invisible Hand of Market, அதாவது சந்தை தேவைக்கேற்ப தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும் என்று சொல்லப்படுவதைப் போல இப்போது டேட்டா அந்த வேலையைச் செய்கிறது என்று நம்பப்படுகிறது. நாமும் தினம்தோரும் கொடுத்துவாங்கிக்கொண்டிருக்கிறோம். நமது முடிவுகளை அது பார்த்துக்கொள்கிறது.

இதில் இவ்வளவு முக்கியத்துவம் இருப்பதை அறிந்த நிறுவனங்களும்  இயக்கங்களும் கட்சிகளும் இதில்  தீவிரமாக இயங்குகின்றன, பெரும் பணம் செலவளிக்கின்றன பல சமயங்களில் செயற்கையான மோசடிகளிளும் இறங்குகின்றன. Click Farm, Fake review எல்லாம் நாம் அறியாமல் நம் சிந்தனையை மாற்றும் மோசடிகள். சமூக வலைத்தளங்க்களில் ட்ரெண்ட் கவனிப்பது என்பதை ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் ட்ரெண்ட் செய்வோம் என்று செயல்படுவது டேட்டாயிஸத்தின் பலனை அழிக்கும் மோசடி, ஆனால் இதை எல்லாத்தரப்பும் வெளிப்படையாகச் செய்கின்றன என்பது நாம் பார்க்கும் தினசரிச் செய்தி.

இவற்றைப் புரிந்துகொள்ள ஒரு விசாலமான பார்வை தேவையாக இருக்கிறது. முன்னெப்போதையும் விட நமக்கு வரலாற்று உணர்வும் அதற்கு மனிதன் இந்த இடத்துக்கு எப்படி வந்தான் என்ற கதையும் தேவைப்படுகிறது.
டெக்னாலஜி வளர்ச்சியை எதிர்கொள்வது மனிதனின் கதையை தெரிந்துகொள்ளாமல் சாத்தியம் இல்லை.

யுவால் மட்டுமல்ல Francis Fukuyama, Jared Diamond  உள்ளிட்டோர் அந்த மிகப் பெரிய காலத்தின் கதையை நமக்குச் சொல்கிறார்கள். இவற்றை அப்படியே நம்பத் தேவையில்லை. ஆனால் கண்டிப்பாக இவர்கள் அளிக்கும் கருவிகளை குறைத்துமதிப்பிட முடியாது. யுவால் உருவாக்கும் விவாதங்களின் நோக்கம் கலகமோ அல்லது நல்லது கெட்டது சொல்வதோ இல்லை, ஒரு பெரும் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுவது மட்டுமே.

அமெரிக்காவில் இருந்த மிகப் பெரிய விலங்கினங்கள் எப்படி அழிந்தன, பொதுவாகவே உயிரிங்களுக்கு அவற்றின் எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள பரிணாம வளர்ச்சியிலேயே வழி இருக்கும். இருந்தும் எப்படி அழிந்தது என ஒரு கேள்வி எழுந்தது. மனிதனின் திடீர் அறிவு வளர்ச்சியும், பயணங்களால் அவர்கள் திடீரென அங்கு வந்ததும், அந்தப் பெரிய மிருகங்களுக்கு பரிணாம மாற்றத்துக்கு நேரம் இல்லாமல் செய்துவிட்டது. எதிர்பாராத இந்த எதிரியை அவை எதிர்கொள்ளமுடியாமல் அழிந்தன.

மனிதகுலத்தின் முன்னும் அப்படி திடீரென தொழில் நுட்பம் வளர்கிறது. இவற்றை எதிர்கொள்ள நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இங்கு வந்தோம் என்பது தெரிந்துகொள்வது அவசியம்.  ஏனென்றால் மனித குலத்தின் அதாவது சேப்பியனின் இயல்பு சவால்களில் ஆச்சர்யப்பட்டு நிற்பது அல்ல, அதன்மூலம் தன்னை மாற்றிக்கொண்டு அவற்றை எதிர்கொள்வது.




சுட்டி: