Unordered List

19 ஜூன் 2012

அழகு அறிவு மூடநம்பிக்கை

உங்களுக்கு புத்தகங்களின்மீது ஆர்வமிருந்தால்,இது உங்களுக்கான நிகழ்ச்சி என்ற அறிவிப்புடன் தொடங்கியது அந்த வானொலி நிகழ்ச்சி. புத்தகம் படிப்பதே அருகிவரும் நிலைமையில் இப்படி ஒரு நிகழ்ச்சியா என்று சற்று ஆர்வமடைந்தேன்.Hello FM என்று நினைக்கிறேன். நடத்தியவர் தீபா வெங்கட். அருமையான குரலுடன் கூடிய அழகான பெண். ஒரு பெண் நடத்தும் அறிவார்ந்த நிகழ்ச்சி என்பதே ஒரு ஆச்சர்யம்  தானே.
 
இருந்தாலும் இவர்கள் புத்தகம் புத்தகம் என்று சொல்வது ஆனந்தவிகடனைத் தானா என்ற பீதி லேசாகத் தலைதூக்கியது. "யாராவது பரிந்துரைத்து நீங்கள் ஏதாவது புத்தம் படித்தீர்களா?  அந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்று கேள்வியைத் தொடங்கினார். சுவாரஸ்யமான கேள்விதான்.
 
இது நேயர்கள் தொலைபேசி உரையாடும் நிகழ்ச்சி. முதலில் ஒரு பெண் அழைத்தார்.
 
"நானெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் படித்து விடுவேன்" என்று அதிரடியாக ஆரம்பித்தார்.
 
"தினமும்  ஒரு புத்தகமா?அப்படின்னா வீட்லயே ஒரு சின்ன லைப்ரரி இருக்கணுமே" என்றார் தீபா
 
"லைப்ரேரி வீட்ல இல்லை. வீட்டு பக்கத்துல இருக்கு!!"
 
இதை கேட்டதும் எனக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது, புத்தகங்களைப் பற்றி உரையாடும் 'அறிவார்ந்த' ஒரு வானொலி நிகழ்ச்சி. அதை நடத்தும் ஒரு பெண். அதில் பங்குகொள்ளும் தினமும் படிக்கும் ஒரு பெண். இது உண்மை தானா என்று.
 
பெண்கள் எல்லாம் தொலைகாட்சியின் ஆபாசமான மெகா தொடர்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே நடப்பது என்ன?
 
"சரி உங்களுக்கு புத்தகங்கள் பரிந்துரை செய்தது யாருங்க.."
 
"அதாவது நான் எப்போதுமே டீவீல பட்டி மன்றம் தவறாமல் பார்ப்பேன். அதுல சொல்ற புக்கெல்லாம் தவறாம படிப்பேங்க என்றார்.."
 
டிவியில் வரும் பட்டிமன்றங்கள் மூலம் அறிவு வளர்கிறதா. இது இவ்வளவு நாள் நமக்குத் தெரியாமல் போச்சே.  அட ஆண்டவா..
 
இதற்க்கு தீபா வெங்கட்டின் பதில்.. "ரெம்ப நல்ல சொன்னீங்க..ரெம்ப நல்ல பழக்கம். இதை இப்படியே தொடருங்கள்.  இப்போ இந்த பாட்டைக் கேளுங்க.."
 
அடுத்து அவர் ஒலிபரப்பிய பாடல்.. எவண்டி உன்னைப் பெத்தான்... பெத்தான்..
 
--
 
புத்தகம் படிப்பதே ஒரு அறிவார்ந்த விஷயம் என்று பரவிவரும் மூடநம்பிக்கையை தகர்க்க சேவைசெய்யும் முறையில், இதுபோன்ற நிகழ்சிகளின் சேவை நாட்டுக்குத் தேவைதான்.