Unordered List

24 பிப்ரவரி 2011

தணிக்கை தேவையா?

கௌதம் மேனனின் புதிய படம் மூலம் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதில் பலவற்றை வழக்கம் போல choice-இல் விட்டுவிட்டு சில கேள்விகளை ஆராயும் முழுமையான(?) ஆய்வு.


.....................


சினிமா மக்களைக் கெடுக்கிறது என்ற ஒரு கருத்து சினிமா கண்டுபிக்கப் படுவதற்கு முன்பிருந்தே உருவாகிவிட்டது என்பது எப்போதோ உருவாகிவிட்ட ஒரு நம்பிக்கை.


சினிமாவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எப்போதும் உண்டு.




இந்தப் பொறுப்பை முழு நேரமாகவும், அல்லது பகுதிநேரமாகவும் (பிடிக்காத நடிகரின் படத்துக்கு மட்டும் விமர்சனம் :)) செய்யப் பலருண்டு. எனினும் தணிக்கைத் துறையே இதற்காக எப்போதும் இயங்கிவரும் அமைப்பு. சமுதாயத்தை மாசுபடாமல் காப்பதில் இவர்களுக்கு முக்கிய கடமை இருந்ததுண்டு.




மசாலாப் படங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் அவர்களை வேலையும் நன்றாகத் போய்கொண்டு இருந்தது.



தமிழில் ஹீரோயிசப் படங்கள், கிராமத்துப் படங்கள், குறைந்தபட்சம் இரு கதாநாயகிகளுக்கு உத்திரவாதமளிக்கும் தெலுங்கு டப்பிங் படங்கள், மலையாள மற்றும் ஆங்கிலப் படங்கள் எனது வந்துகொண்டிருந்தபோது வகைப் படுத்துவதும் விமர்சனம் செய்வதும் கொஞ்சம் எளிதாக இருந்தது.



சினிமா எடுப்பவர்கள் வியாபாரிகள் என்றும், திட்டுபவர்கள் அறிவாளிகள்(அறிவு ஜீவிகள்) என்றும் பொதுவாக பத்திரிக்கைகளால் அடையாளம் காட்டப்பட்டனர்.
இவர்கள் திட்டினாலும் சினிமா ஓடுவதில் பதிப்பு இல்லையென்பதாலும், திட்டுவதினால் ஒரு அறிவுஜீவி இமேஜ் கிடைப்பதனாலும் எல்லாத் தரப்புக்கும் ஒரு சமன்பாடு இருந்தது.



சமன்பாடுகள் சாய்க்கப் படுவதுதான் காலத்தின் நீதி அல்லவா?



அதனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. யதார்த்தப் படங்கள் இப்போது பெருகிவிட்டது.


இதில் பெரிய மாற்றம் என்னவென்றால், சினிமா எடுப்பவர்கள் அறிவுஜீவிகள் என்றும், விமர்சனம் செய்பவர்கள் சாமானியர்கள் என்றும் இப்போது மாறிவிட்டது.



தெரியாமல் ஒரு யதார்த்தப் படத்தை விமர்சனம் செய்தால் சாமானியர் பட்டம் வந்துவிடலாம். எனவே இந்த வகை படங்களை விமர்சனம் செய்யும் முன் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.


சரி, எப்படி யதார்த்தப் படத்தை எப்படி அடையாளம் காண்பது?



முதல் அடையாளம் கமல்ஹாசன். இவர் நடித்த படங்கள் எல்லாமே அறிவுஜீவி யதார்த்தப் படங்கள் தான். இதில் எதாவது மாற்றுக் கருத்து இருந்தால் உங்கள் ரசனையில் எதோ பிரச்சனை. வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.



அவர் இல்லாத மற்ற அறிவுஜீவிப் படங்களை எப்படி அடையாளம் காண்பது?



அதுவும் எளிதே..



இந்த எதார்த்தப் படங்களுக்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. பொதுவாகவே இவை எல்லாம் ஏதாவது ஒரு (அல்லது சில) உலகப் படத்தின் காப்பி என நிறுவப்படவேண்டும். அப்படி இல்லாத படங்கள் யதார்த்தப் படம் இல்லை என்று கருதப்படும். இதன் மூலம் நம் படைப்பாளிகளின் படைப்பு உலகப் பட வரிசையில் இடம் பிடிக்கிறது. ஒவ்வொரு படத்தின் வெளியீடு சமயத்திலும் "உலகப்பட" DVD விற்பனை சூடுபிடிக்கிறது எனபது பர்மாபஜாரில் இருந்து வரும் கூடுதல் தகவல்.




இன்னொரு முக்கிய கடமையும் இருக்கிறது. படம் எடுத்த நடிகர் அல்லது இயக்குனர் தொலைகாட்சியில் வந்து அந்தப் படத்தினால் சமுதாயத்தில் உடனடியாக நடக்கப்போகும் மாற்றங்களைப் பற்றி விளக்குவார்கள்.




தீவிரவாதத்தைப் பற்றி கமலும், பெண்களுக்கு எதிரான குற்றம் பற்றி மிஷ்கினும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை பற்றி கௌதம்மேனனும் விளக்கியதை  தொலைக்காட்சியில் கண்டு பொதுமக்கள் பயன் பெற்றார்கள் என்பது வரலாறு.




இதன் பரிணாம வளர்ச்சியாக அடுத்தடுத்த  யதார்த்தப் படங்களை விளக்க கடற்கரையில் "கொள்கை விளக்க மாநாடு" நடத்தப் போவதாக தகவல் கசிந்தவண்ணம் உள்ளது.



இப்போது தணிக்கையின் பாடுதான் திண்டாட்டமாக ஆகிறது. சாதாரண மசாலா/மலையாள படங்களின் ஆபாச காட்சிகளை எளிதாக வெட்டிவிடும் தணிக்கையால், மிகத் திறமையான இயக்குனர்களால் எடுக்கப்படும் படங்களை அப்படி எளிதாக வெட்டிவிட முடிவதில்லை. மிகத் திறமையான காட்சியமைப்புகளினால் தணிக்கையின் அனைத்து தடைகளும் தாண்டப்படுகின்றன. எனவே தணிக்கை அதன் வேலையே செயாகச் செய்யவில்லை என்று சாமானியர்களால் குற்றம் சாட்டப்படுகிறது.




சரி. இது பெரியவர்களுக்கான படம் என்று முத்திரை பதித்தாலும், பெரிய பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவில்லை. மக்கள் கவனிப்பது நடிகர், இயக்குனர் மற்றும் படம் வெளியிடப் படும் திரை அரங்கங்களும் தான். தணிக்கை அல்ல. எனவே தணிக்கை தரம்பிரித்தல் எனபது நடைமுறையில் எந்த பலனும் இல்லை என்பதும் பொது ரசிகர்களின் வாதம்.  எனவே தணிக்கைத்துறை இந்தப் படங்களை அனுமதிக்கவே கூடாது என்பதும் ஒரு அதிரடி வாதம்.




அனால் இதற்க்கு அறிவு ஜீவிகள் பதில் கொடுக்காமல் இல்லை.
சமுதாயத்தைக் காப்பது தான் தணிக்கையின் நோக்கமென்றால், அதே சமுதாயத்தைக் காக்க அறிவுரை சொல்ல எடுக்கப்படும் இந்தப் படங்களுக்கு எதற்கு தணிக்கை என்ற கேள்வியும் பல அறிவுஜீவிகளால் தொடர்ந்து எழுப்பப்பட்டே வருகிறது.



எனவே எப்படிப் பார்த்தாலும் தணிக்கையின் எதிகாலம் ஒரு கேள்விக்குறிதான்..




தணிக்கை எப்படியோ போகட்டும். நாம் எப்படி இதை சமாளிப்பது?



படத்தை விமர்சித்தால் நமது முற்போக்கு பார்வைக்கு பங்கம் வர வாய்ப்புள்ளது. படத்தைப் பார்த்தாலும் கஷ்டம். எனவே.
"அருமையான படம். ஆனா மக்களுக்கு புரியாது. மக்கள் இன்னும் வளரனும் சார்" என்று சொல்லிவிட்டு படம் பார்க்காமலேயே எஸ்கேப் ஆகிவிடுவதுதான்.




படங்களைப் பாராட்டும் பலரும் இதுபோலத்தான் பார்க்காமலேயே தான் அடித்து விடுகிறார்கள் என்பதும் ஒரு அனுபவசாலி சொன்ன தகவல்!!

08 பிப்ரவரி 2011

முயல் ஆமை போட்டி - நடந்தது என்ன?

போட்டியில் தோற்றது முயல் தான்.


இந்த முடிவு யாருக்கு ஆச்சர்யமாக இருந்ததோ தெரியாது. ஆனால் முயலுக்கு சிறிதளவும் ஆச்சர்யம் இருக்கவில்லை.



இந்தப் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே முடிவு முயலுக்குத் தெரிந்திருந்தது. முயல் போட்டியிட்டு தோற்கவில்லை. போட்டியால் தோற்றது.



ஆமையுடன் போட்டி என்பதே முயலுக்குத் தோல்விதான்.