சட்டசபை பழைய கட்டடத்திலேயே நடப்பதினால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பல குரல்கள்.
அரசு செலவழிப்பது மக்களின் வரிப்பணம் தான் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு வந்துகொண்டிருப்பது பற்றி மகிழ்ச்சி.
மக்களின் வரிப்பணம் வேறு எப்படியெல்லாம் வீணாகிறது..
தமிழில் பெயர் இருந்தால் சினிமாவுக்கு கேளிக்கை வரிவிலக்கு. இப்போதெல்லாம் எல்லா படங்களுமே தமிழ் பெயரில் தான் வருகின்றன. அப்படிஎன்றால் தமிழ் நாட்டில் சினிமாவுக்கு வரி இல்லை.
இந்தியாவில் நடத்திமுடிக்கப் பட்ட உலகக் கோப்பைக்கு வரி எதுவும் இல்லை. நமது அரசு அதை அத்தியாவசியமாக நினைத்து வரி விலக்கு அளித்துள்ளது. இதனால் அரசுக்கு எத்ததனை கோடி வருமான இழப்போ?
அப்படியென்றால் அரசு சலுகைகளே காட்டக் கூடாதா என்று கேட்டால், கண்டிப்பாகச் செய்யலாம். பொது நன்மை உள்ள விஷயங்களில் சலுகைகள் காட்டட்டும். விவசாயம், அடிப்படைத் தொழில்கள் போன்றவற்றில் சலுகைகள் அவசியம் தான்.
வருமானம் குறைவானவர்களுக்கு அரசு தரும் இலவச அரிசி போன்றவை இப்படிப் பட்டவை. உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லா மக்களுக்கும் கிடக்கச் செய்யவது எந்த ஒரு அரசின் கடமை.
ஆனால் சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் எதற்கு இந்தச் சலுகைகள்?
நானும் எனக்குப் பிடித்த படங்களை முதல் நாளே சென்று ரசிக்கும் சினிமா ரசிகன் தான், மணிக்கணக்காக கிரிக்கெட் பார்ப்பவன் தான். ஆனால் இவை கண்டிப்பாக விவசாயம் போல அத்தியாவசிய பொருள் அல்ல. இவற்றுக்குக் கண்டிப்பாக எந்தச் சலுகையும் தேவை இல்லை.
இவையிரண்டும் கண்டிப்பாக இந்தியாவில் வெற்றிகரமான தொழில்கள் தான். இந்தச் சலுகைகள் மூலம் பலன் பெறுவது வரிகட்டும் நம்மைவிட பெரிய புள்ளிகள் தான்.
இந்த சட்டசபை கட்டிடம் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பாகப் பேசப்படுகிறது? உண்மையில் இன்னொரு கட்டிடம் கட்டினால் தானே உண்மையில் வரிப்பணம் வீணாகிறது எனச் சொல்லமுடியும்? இருப்பதே பயன்படுத்திக் கொள்கிறோம் எனச்சொல்வது எப்படி வீண் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
இது போன்ற கட்டமைப்பு துறைகளில் வீணாவதை விட, இது போன்ற சலுகைகளால் தான் அதிகம் நமது வரிப்பணம் தொடர்ச்சியாக வீணாகிறது என்ற எண்ணம் மக்களிடமும், அரசின் செலவவுகளுக்கு மக்களிடம் கணக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களிடமும் வரும் என எதிர்பார்க்கலாம்.