Unordered List

05 டிசம்பர் 2015

சென்னை - வரலாறு காணாத மழையில் நான் கண்டவை - 1

சென்னை, போரூர் சிக்னல். 3 டிசம்பர் 2015

"டேய் **.. என்னடா வண்டிய ஓட்டுற” என்று அவன் சொன்னதுதான் தாமதம்

“யேய்..” என்று ஒரு இருபது குரல்கள் அவனை அடக்கின. இதை எதிர்பார்க்காத அந்த குடிமகன் இடம் விட்டு அகன்றான். ஓட்டுனர் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். இதுபோன்ற அர்ச்சனைகளை ரோட்டோர குடிமகன்களிடமிருந்து அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பெறுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால்  ஓட்டுனருக்கு ஆதரவாக பொதுமக்கள் குரல்கொடுப்பது புதிது.

போரூருக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். எனது ஹன்க் பைக்கில் பயணத்தைத் தொடங்கினேன். எனக்குப் பிடிக்காத ஆற்காடு சாலை தவிர்த்து கிண்டி வழியாகச்செல்லலாம் என அசோக்நகர் நோக்கிச்சென்றேன்.  வடபழனியிலிருந்து அசோக்நகர் செல்லும் சாலை தடுக்கப்பட்டிருந்தது. லக்‌ஷ்மன்ஸ்ருதி சந்திப்பில் கே கே நகர் வழியாக  திரும்பினேன். அந்த சாலையிலும் முழுவதும் தண்ணீர். அங்கிருந்த ஒருவர் சொன்ன யோசனைப்படி வலதுபுறம் திரும்பி ஆற்காடு சாலையில் சேர்ந்தேன்.

ஆற்காடு சாலை முழுவதும் ஆறு போல தண்ணீர். இருந்தாலும் போக்குவரத்து இருந்தது. சில பெரிய கார்களும் பைக்குகளும் மற்றும் அரசுப்பேருந்துகளும் சென்றன.

சென்னைக்கு உயிர் பயத்தைக்காட்டிக்கொண்டிருக்கும் மழையில் பல சாலைகள் மூழ்கிவிட்டன. இங்கு மிகப் பிரபலமாக இருந்த ஓலா போன்ற டாக்சி நிறுவனங்கள் பதுங்கி விட்டன. ஆனால் எதிர்பாராத நாயகனாக அரசுப்பேருந்துகள் இயங்குகின்றன. இதில் ஓலா டாக்சி படகு விடுகிறேன் என்பது சரியான டகால்டி என நினைக்கிறேன். அவர்களின் வேலையான டாக்சியை சேவையை மிகவும் தேவையான நேரத்தில் செய்யாமல் தட்டிக்கழித்துவிட்டு படகு விடுகிறேன் என விளம்பரம் செய்வது என்ன லாஜிக் என்று தெரியவில்லை. ஆனால் அரசுப் பேருந்துகள் ஒரு நாளும் தவறவில்லை. எந்த நிலையிலும் தொடர்ந்து இயங்கிவரும் அரசுப்பேருந்துகள் மீது மக்களுக்கு பெரிய மரியாதை வந்துவிட்டது. அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான் இப்போது மக்கள் மத்தியில் ஹீரோக்கள்.

ஆற்காடு ரோடு பிடிக்காது என்று சொன்னேன் இல்லையா? வட பழனியிலிருந்து போரூர் வரை மிகக் குறுகலான சாலை இது. மிக மோசமாக பராமரிக்கக்படுவதும் இது தான். பல குழிகளையுடைய மோசமான சாலை, அதனால் உருவாகும் போக்குவரத்து நெரிசல், அதனால் உருவாகும் சச்சரவுகள் என எப்போதுமே அந்தச்சாலையில் பயணம் மிக எரிச்சலான பயணமாக இருக்கும். அதனால் சில கிலோமீட்டர்கள் சுற்றினாலும் பரவாயில்லை மாற்று வழிகளில் செல்வது வழக்கம். ஆனால் இன்று வேறு வழியே இல்லை.

சாதாரண நிலையிலேயே இந்தச் சாலையில் செல்ல முடியாது, இதில் தண்ணீர் வடியவேண்டி பல இடங்களில் சாலை வெட்டப்பட்டும் இருந்தது. கண்டிபாக ஆபத்தான பயணம்தான். ஆனால் முன்னால் செல்லும் ஏதாவது வாகனத்தைத் தொடருந்து சென்று விடலாம் என நினைத்து ஒரு காரைத் தொடர்த்தேன்.

நடுச்சலையில் தண்ணீருக்குள் ஒருவர் நின்றிருந்தார். எனக்கு முன்னால் சென்ற கார் டிரைவரிடம் சென்று,“ரெம்ப டீப்பா பள்ளம் இருக்கு சார். லெஃப்ட் ஓரமாப் போங்க” என்றார். அங்கே ஒருவர் நின்று இப்படி என்று காருக்குக் கையைக்காட்டினார். “டூ வீலர். நீங்க ரைட்ல ஏறி போங்க என்று என்னை அனுப்பினார். அங்கும் ஒருவர் எனக்கு வழிகாட்ட ஒருவர் நின்றிருந்தார்.

அப்போதுதான் கவனித்தேன் தண்ணீரில் மூழ்கிய சாலை முழுவதும் இவர்கள் நின்றிருந்தனர்; இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்; கிட்டத்தட்ட ஐந்தடிக்கு ஒருவர். பெரிய பள்ளங்கள், வெட்டப்பட்ட இடங்களில் முக்கியமாக நின்றனர்.மிக பொறுப்புடன் வழிகாட்டினர். பஸ், கார் மற்றும் பைக் எப்படி ஓட்ட முடியும் என்று தெரிந்து சரியாக வழிகாட்டினர். இடையில் நின்ற பைக்குகளைத் தள்ளிச்செல்ல கூட சிலர் உதவிக்கொண்டிருந்தனர்.

சில இடங்களில் லேசான தண்ணீர், பல இடங்களில் மிகச் சவாலான பள்ளங்கள். அப்போது இன்னொன்றையும் கவனித்தேன். அந்த சாலையில் செல்லும்போது வழக்கமாக இருக்கும் ஹார்ன் சத்தம் இல்லை. அந்த சவாலான சேரத்திலும் ஒவ்வொருவரும் மற்றவர் வண்டிகளும் சரியாக வருகிறதா என்று பார்த்தபடியே வந்தனர். முன்னால் செல்பவர், பின்னால் வருபவருக்குத்தேவையான தவவல்களைத்தந்தவிதம் சென்றனர்.

ரோட்டில் நின்றவர்கள் அனைவருமே தன்முனைப்பால் வந்து நின்றவர்கள். எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை. அடிடாஸ் டீசர்ட் மற்றும் ஷார்ட்ஸ் உடன் நின்றவன் என்னப்போல ஒரு  கணிப்பொறிக்காரன் தான். கொட்டும் மழையில் நடுத்தெருவில் தண்ணீருக்குள் நிற்கிறான். உதவி என்பது எங்கோ யாருக்கோ செய்ய முடியவில்லை என்றாலும், பிரச்சனையான சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து பக்கதில் உதவி செய்தாலே அது பெரிய உதவியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.  அந்தந்த பகுதி மக்கள் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உதவுவதை வெளியே சென்ற அனைவருமே உணர்ந்திருக்கமுடியும்.

எங்கள் பகுதியில் மின்சாரம் வந்தே பல நாட்கள் ஆகிவிடிருந்தது. செல்போன் சிக்னல் இல்லை.  மக்கள் எப்படி சமாளிக்கிறார்கள் எனப் பேசிப்பார்த்தேன்.

என்னைப்பார்த்ததும் பக்கத்து வீட்டு தாத்தா மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார். குழந்தைகள் ரோட்டிலிருந்த தண்ணீரில் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இன்னும் எவ்வளவு மழை வந்தால் நம் தெருவுக்கு போட் வரும் என்று  குழந்தை அவரைக் கேட்டுக்கொண்டிருந்தது. இது ஏரித்தண்ணீர் தானே, அப்படின்னா மீன் இருக்கனுமே அதெல்லாம் எங்க என்று பக்கத்து வீட்டு பெண் கேட்டுக்கொண்டிருந்தார். பிரச்சனையை புன்ன்கையால் எதிர்கொள்வது இதுதானா?

தினமும் தேவைப்படும் காய்கறி, பால் போன்ற பொருட்களை தெருவில் இருக்கும் ஒருவரே அனைவருக்கும் வாங்கி வந்து விடுகிறார். மின்சாரம் இல்லாததான் டேங்கில் யாருக்கும் தண்ணீர் இல்லை. பிரச்சனை இல்லை; எங்கள் வீட்டு கிணற்றில் இருந்து பக்கத்து வீட்டு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள். தொடர் மழை என்பதால் தண்ணீர் பக்கத்திலேயே கிடைப்பது அதை எளிதாக்குகிறது. பள்ளி அலுவலகம் விடுமுறை என்பதால் பயணம் செய்யத்தேவையில்லை. எட்டு மணிக்கெல்லாம் மக்கள் தூங்கி சீக்கிரம் எழ பழகிவிட்டனர்.

பக்கத்திலிருக்கும் நண்பர்களையும் சந்தித்தேன். ஒரு நாள் முழுவதும் பேசியபின் ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக மக்கள் பேசும் திமுக/அதிமுக அரசியல், சினிமா அரசியல் ஏதுமில்லாமல் இவ்வளவு நேரம் மக்களிடம் பேசமுடியும் என்பதே ஆச்சரியமாக இருந்தது. மக்களிடம் இருந்த எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் எங்கே போனது என யோசித்தேன். பல வசதிகள் குறைந்தது போல டிவி மற்றும் செய்தித்தாளும் அங்கு கிடைக்கவில்லை, இது தான் காரணமா என முடிவாகத் தெரியவில்லை.