Unordered List

15 ஜூன் 2020

சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் யுத்தம்

பொதுவாக மக்கள் அதிகம் பேசுவது அரசியலும் சினிமாவும். மக்களிடம் இவை பேச எளிது என்பதால் சமுதாயத்தில் உரையாடலுக்கு இவற்றின் கொடை மிகப்பெரியது. ஆனால் ஒன்று கவனம் கொள்ள வேண்டும், பொதுவாக மீடியாவில் உருவாக்கப்பட்ட கருத்துகளையும், கடந்த ஓரிரு நாட்களில் பரபரப்பாக இருக்கும் விஷயங்களையும் மட்டுமே பேச வேண்டும். உங்களுக்கு என்று தனியாக ஒரு கருத்து இருந்தால் அவற்றை பேசுவது புயலுக்கு முன்னால் பொறிகடலை சாப்பிடுவது போல. மீடியா உருவாக்கும் புயலுக்கு முன் நாம் தனியாகப் பேசுவது என்றும் செய்யக்கூடாதது.


அப்படி கருத்து சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் தனது அனுபவம் தனது வாசிப்பு என்று பேசுவதும் எழுதுவதும் நல்லது ஏனென்றால் மக்களுக்கு மீடியா செய்திகள் இவற்றில் இல்லாததால் நாம் பேசுவதை கவனிக்க கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இப்போது சென்னைவாசிகளுக்கு தங்கள் அனுபவங்களைச் சொல்வதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

கோவிட் புயல் சீனா, டெல்லி என பல மையங்களைக் கடந்து சென்னையை மய்யம்கொண்டுள்ளது, பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஊடுருவிய இருபதாயிரம் பேர் என சன் டிவி பரபரப்பு செய்தி ஒளிபரப்புகிறது. சென்னையில் இருந்து மூன்று மாதத்துக்கு முன் வந்தவர்கள் கடைக்கு வரதீர்கள் என கடைகளில் அறிப்புகள் தொங்கவிடப்படுகின்றன. பல கிராமங்களில் சென்னை மக்கள் மீது கடும் வெறுப்பு உருவாகியுள்ளது.சென்னையை செய்திச் சேனல்கள் சார்ஜ் எடுத்துக்கொண்ட இந்நிலையில் சென்னையில் இருப்பவர்கள் தங்களைப் பற்றி என்ன சொல்வது என்ற சிக்கலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆர்வத்துடனும் அக்கறையுடனும் வெளியூர்களில் இருந்து கேட்பவர்களிடம் என்ன சொல்வது. மீடியா சொல்வதை திரும்ப நாம் சொல்வோம் என்று எதிர்பார்க்கும் மக்களிடம் அதற்கு மாறாக சென்னால் ஏமாற்றம் அடைவதோடு அதை அவர்கள் நம்பவும் தயாராக இருப்பதில்லை.  அவர்கள் படித்த பார்த்த செய்திகளை ஆமோதிக்கும் வகையில், ஆமாங்க எங்க பக்கது தெருவுல அதே மாதிரி என்று ஒரு கூடுதல் தகவல் சொன்னால் மட்டுமே நிறைவாக இருக்கும் அந்த உரையாடல்.

இது எப்போதுமே இப்படித்தானா என்றால் இதற்கும் ஒரு விதிவிலக்கு இருந்தது. அது சென்னை வெள்ளம்.

இந்த கான்டெக்ஸ்டில் சென்னையின் பொற்காலம் என்றால் அது சென்னை வெள்ளம் தான். அந்த நேரத்தில் மீடியா கிட்டத்த செயலிழுந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் எல்லாம் கண்டுகொள்ளாத நிலையில் சென்னையைப் பற்றி அறிந்துகொள்ள மக்களுக்கு இருந்த ஒரே சோர்ஸ் சென்னை மக்கள் தான். அப்போது சென்னையைப் பற்றி சென்னை மக்களே சொல்லமுடிந்த ஒரு நிலை இருந்தது. அப்போது நம்மால் சொல்ல முடிந்தது, சென்னை என்பது மிகப்பெரிய பகுதி. ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கியபோது கோடம்பாக்கம் போன்ற இடங்களில் பவர்கட்கூட இல்லாத பகுதிகள் இருந்தன என்றெல்லாம்.

அரசு கூட அவ்வளவாக செயல்படமுடியாத நிலையில் மக்கள் காட்டிய மனிதாபிமான முகம் ஆச்சர்யமானது. பண உதவி, செய்திகளை கொண்டு செல்லும் உதவி எல்லாம் தாண்டி பலர் தங்கள் வீடுகளில் கூட அடைக்களம் கொடுத்தது எதிர்பாராதது. அவை மீடியாக்களால் பெரிதும் சொல்லப்படாதவை.

இயல்புநிலை திரும்பி பத்திரிகைகள் நிகழ்வுகளைச் சொல்லும் பொறுப்பெடுத்துக்கொண்டதும், மக்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்காமலாகினர் என்பதும், அப்படியே அந்த மனிதாபிமான முகங்கள் மாயமாக மறைந்ததும் வரலாறு. பத்திரிகைகளின் பணி வரலாற்றில் மிக முக்கியமானது தான் என்றாலும் அவையும் வழக்கமான லாபமீட்டும் தொழில் என்பதும்,  முன்னணி செய்தி நிறுவங்கள் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதும் கவனிக்கத்தக்கது. அவற்றை விட மனிதர்கள் நேரடியாக அறிவதை விட மூன்றாம் நபர் மூலம் அறிவதை விரும்புபவர்கள் என்பதும் முக்கியமானது.

இயற்கை கொடுக்கும் சோதனைகள் ஒவ்வொருமுறையும் வெவ்வேறானவை, ஒருமுறை பயன்படுத்திய முறைகள் மற்றோருமுறை பயன்படுத்த முடியாதவை. அவற்றை நாம் ஒவ்வொருமுறையும் ஒவ்வொருமாதிரி எதிர்கொள்ள வேண்டும். ஆனால் எப்போதும் மாறாதது மீடியாவின் பரபரப்பு. எனவே சென்னைவாசிகள்  இந்நிலையைப் பற்றி பேச நேரம் இருக்கிறது, மீடியா வெளிச்சம் அடுத்த விஷயத்துக்கு செல்லும்வரை சென்னை மக்கள் நெட்பிளிக்க்சஸுக்கு மாறுவதாக செய்திகள் வருகின்றன.