Unordered List

08 செப்டம்பர் 2011

பினாயக் சென் - ஒரு தண்டனை, பல கண்டனங்கள், சில கேள்விகள்


பினாயக் சென்!


ஒரு சிறந்த மருத்துவர். சட்டிஸ்கர் மக்களுக்காக பல சேவைகளைச் செய்தவர். சட்டிஸ்கர் அரசு தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றவர். அவரது ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் மீண்டும் முக்கிய இடம் பெற்றுள்ளன.


தண்டனையும் பெரியது, தேசத் துரோகம். கண்டனமும் பெரியது, சர்வதேசக் கண்டனங்கள்.


ஏன் இந்த தண்டனை? எதற்கு இந்தக் கண்டனம்? கொஞ்சம் காலமாக இது தொடர்பான செய்திகளை தேடி வாசிக்கும்போது, பின்வரும் செய்திகள் கிடைக்கின்றன.


யார் இவர்? பினாயக் சென் ஒரு நல்ல மருத்துவராக பணியாற்றியுள்ளார். சட்டிஸ்கர் அரசை விமர்சனம் செய்துவந்துள்ளார்.


என்ன குற்றம்? அவருக்கு நக்சல் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஆராதங்களின் அடிப்படையில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


யாருடைய கண்டனம்? மனித உரிமை அமைப்புகள், பல சர்வேதேச அமைப்புகள் மற்றும் நமது ஊடகங்கள் எல்லாம் இந்தத் தீர்ப்பை கடுமையாக கண்டனம் செய்துள்ளன.


-----------


நான் சென்னையில் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பேச்சாளர் ஒருவர் இந்தக் தண்டனையை கண்டிப்பதாகக் கூறினார். அரங்கு நிறைந்த கைதட்டலோடு அனைவரும் அதை ஆதரித்தனர். ஆனால் அதைப் பற்றி அங்கு தொடர்ந்து பேசாததால் அவர்கள் எந்த அடிப்படையில் கண்டனம் தெரிவித்தார்கள் எனத் தெரியவில்லை.


சட்டிஸ்கர் மாநில பிரச்சனைக்கு சென்னையில் இருக்கும் விழிப்புணர்வு மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. நானும் அங்கு கைதட்டிக் கொண்டிருந்தாலும் எந்த அடிப்படையில் இந்தக் கண்டனம் என்ற கேள்வி எழாமல் இல்லை.


பழங்குடியினர் பிரச்சனை, சுரண்டப் படும் வளங்கள், தீவிரவாதம் மற்றும் தேச பாதுகாப்பு என பலமுகங்கள் கொண்ட இந்தப் பிரச்சனை இந்தியர்கள் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய பிரச்சனை தான்.


இந்தத் தீர்ப்புக்கு வரும் கண்டனங்களை, அவரின் விடுதலைக்கான கோரிக்கைகளை இந்த மூன்று விதமாக பிரிக்கலாம்.


1 . இது சட்டத்திற்கு புறம்பான கைது. அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்கு. பினாயக் சென் மாவோயிச தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லாதவர்.


2 . அவர் சில நக்சல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தது உண்மை தான். ஆனால் இந்தச் சட்டமே தவறானது. எனவே சட்டம் திருத்தப் பட வேண்டும் .


3 .மற்றதைப் பற்றி கவலை இல்லை. இவர் நல்லவர். மக்களுக்கு நன்மை செய்தவர். பிரபலமானவர். எனவே இவரை விடுதலை செய்யவேண்டும். (அவர் செய்ததது சட்டப் படி தவறாக இருந்தாலும்.)


முதல் காரணமாக இருந்தால் கண்டிப்பாக அவர் தகுந்த விசாரணைக்குப் பின் விடுதலை செய்யப்படவேண்டும். நக்சல் அமைப்போடு தொடர்பு இல்லாதவரைக் கைது செய்வதால் அரசுக்கும் எந்த பலனும் ஏற்படப்போவது இல்லை. தகுந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு நடத்தப் படவேண்டும். கண்டிப்பாக கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்.


ஆனால் விடுதலைக் கோரிக்கையின் காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது சொல்லப்பட்ட விஷயமாக இருந்தால், கண்டிப்பாக கண்டனங்கள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்தக் கண்டனத்தின் மூலம் சட்ட மீறலும் தீவிரவாதமும் ஆதரிக்கப் படுகின்றனவா என்பதை யோசிக்கவேண்டும்.



நாம் படிக்கும் பல செய்திகள் எந்த அடிப்படையில் வருகின்றன என்பதே குழப்பமாக இருக்கிறது.


பார்க்கலாம்.. தீர்ப்பு எந்த அடிப்படையில் வருகிறது என்று!!!


Related links: