Unordered List

24 பிப்ரவரி 2012

கொலைக் குற்றமும், குற்றமும் கொலையும்

சென்னையில் ஒரு பெண் ஒரு டீன் ஏஜ் பையனால் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால் இது ஒரு கொலையாகக் கருதப்படப் போவதில்லை என்பது செய்திகளையும், அறிவுஜீவிகளின் கருத்துக்களையும் படிக்கும்போது உணரமுடிகிறது. காரணம், அந்தக் கொலையாளி பள்ளியில் மாணவனாகவும் இருந்தது தான்.
ஒரு மாணவன் செய்த கொலையை, வழக்கமான கொலையாகப் பார்க்கக்கூடாது. (கொலையில் என்ன வழக்கமான?) அதை காரண காரியங்களையும், கல்விமுறையின் எல்லா பிரச்சனைகளையும் பேசி முடித்தபின்னே தான் இதை கொலையா அல்லது தேச சேவையா என்று முடிவுசெய்யவேண்டும் என அறிவிஜீவிகள் எண்ணுவதாகத் தெரிகிறது.
மாணவர்களாக இருக்கும் சிலர் பேருந்துகளில் தினமும் செய்யும் தொந்தரவுகளையும், பொது இடங்களில் செய்யும் பிரச்சனைகளையும் காவல்துறை கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, இப்போது கொலையைக்கூட அப்படி பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும்போல இருக்கிறது. அறிவுஜீவிகள் இப்போதே அந்த மனநிலைக்கு நம்மை தயார்ப்படுத்தி வருகிறார்கள் எனத் தெரிகிறது.
மாணவர்கள்  மீதுமட்டும் ஏன் அந்த ஒளிவட்டம், அவர்கள் மட்டும் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாமா எனக் கேட்டீர்களென்றால் அப்படியல்ல,   ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கூட்டத்துக்கும் இந்த சலுகை உண்டு. ஒரு தனிமனிதன் தவறு செய்யதால் மாபெரும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவனே ஏதாவது ஒரு கூட்டத்தோடு அவனை சம்பந்தப் படுத்திக் கொண்டால் போதும். கொலையே செய்தாலும் அதற்கு விளக்கம் கூற, நியாயப்படுத்த ஒரு கூட்டமே வந்துவிடும். அப்புறம் எது தண்டனை. சிறிதுநாள் கழித்து பாராட்டுவிழா வேண்டுமானால் நடக்கலாம். 
---
இதை எழுதினாலும் பதிவேற்றாமல் இருந்தேன். ஆனால் இப்போது நடந்துள்ள என்கவுன்ட்டர் கொலைகளையும் அதற்கான அதிரடியாய எதிர்ப்புகளையும் பார்க்கும்பொழுது இதை சொல்லவேண்டும் எனத்தோன்றியது.
சட்டத்தை மீறி நடக்கும் எந்தக் கொலைகளுமே நமக்கு உடன்பாடு இல்லை.
இருந்தாலும் ஒரு ஆசிரியை கொல்லப்பட்ட செய்தியை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மாணவர் தரப்பு  நியாயம் பேசிய நமது அறிவுஜீவிகள்  இந்த என்கவுன்ட்டர் விஷயத்தில் காட்டும் எதிர்ப்பு நமக்கு வியப்பாக இருக்கிறது.
ஆசிரியர் கொல்லப்பட்டதை விட கொள்ளைக்காரர்கள் என சந்தேகிகப் படுபவர்கள் கொல்லப்படுவது நமது சமுதாயத்தில் அதிக அதிர்ச்சியை விளைவிக்கிறது என்பதே ஒரு அதிர்ச்சிதான்.